Sep 1, 2015

பசி தீராத மானுடம்

                                                        

பசியும் காமமும் மானுட இயக்கத்தின் உந்துவிசைகளாக இருக்கின்றன.இவற்றைத் தணித்துக்கொள்வதற்கான தேடலில் மனிதன் எதிர்கொள்ளும் போராட்டங்களும் தோல்விகளும் வெற்றிகளும் கலைவடிவங்களுக்கு பிரதானமான உள்ளடக்கமாக இருக்கின்றன. பசியைத் தணிப்பதற்கான போராட்டம் புறவயமானதாக இருக்கையில் காமத்தின் போராட்டம் அகவயமானதாக இருக்கிறது. மேலும் காமம் உள்ளூறுவதற்குப் பசிதணிந்த வயிறு தேவையானதாக இருக்கிறது. மானுட வாழ்வெனும் சுழற்சியின் ஆரக்கால்களாக இவையிரண்டும் இருக்கின்றன.

கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் பிரதானமாகக் காமத்தைப் பற்றிப் பேசுகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய தஞ்சைப் பிரதேசத்தைக் களமாகக் கொண்டு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்நாவலில் காலத்திற்கு மீறிய துணிச்சலோடு ஒருபாலுறவு குறித்த சில சித்தரிப்புகளையும் வைத்திருக்கிறார் கரிச்சான் குஞ்சு. இப்போது மாற்று பால்விருப்புகள் குறித்து தைரியமாகத் தமிழில் எழுதலாம். அதை முப்பதாண்டுகளுக்கு முன்னரே சாத்தியப்படுத்தியிருக்கிறார். கரிச்சான் குஞ்சு.

இந்த நாவலில் சுதந்திரப் போராட்டம் குறித்த சித்தரிப்புகள் பெரிதாக ஏதுமில்லை அல்லது தவிர்த்திருக்கிறார்.அகவயமான விஷயத்தைப் பேசுவதால் அது தேவையில்லை என்று நினைத்திருக்கக்கூடும். இக்கதையின் மாந்தர்கள் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்கள். மற்ற சமூகத்தைச் சார்ந்த ஒரிரு துணைப்பாத்திரங்களும் உண்டு. மெல்லிய வறுமை பேசப்பட்டாலும் அது சோற்றுக்கில்லாத வறுமையல்ல.

கணேசன்,கிட்டா இருவரும் நாவலின் மையக்கதாப்பாத்திரங்கள்.அனாதையான கணேசன் கைமாறி மாறி வளர்கிறான்.ஆனால் அழகன். தோப்பூரின் பெண்களையும் குழந்தைகளையும் ஆண்களையும் தன் அழகாலும் குணநலன்களாலும் வசீகரித்தவன். பாலாம்பிகையின் இளைய மகனான கிட்டா பொறுப்பற்று வளர்கிறான். போக்கிரித்தனம் மிகுந்த கிட்டாவால் தோப்பூர் ஜனங்களுடன் ஒட்ட முடிவதில்லை. எல்லோரிடமிருந்தும் கணேசன் பெறும் அன்பையும் பிரியத்தையுங் கொண்டு கிட்டாவிற்கு அவன் மீது ஒரு வெறுப்பு. பாலாம்பிகையின் மூத்த மகன் சாமா வீட்டைவிட்டு வெளியேறி அரைப் பைத்தியமாய் அலைகிறான்.அவள் மகள் சாவித்திரிக்கு மாச்சு ,அம்மு என்று பேரழகிகளாய் இரண்டு பெண்கள். பருவம் விழிப்புறும் காலத்தில் கணேசனுக்கும் மாச்சுவுக்கு ஒரு ”இது”.

கணேசன் மற்றும் கிட்டாவின் வாழ்வுப் பயணமே பசித்த மானிடம் நாவல்.இதில் கணேசன் பிறரால் துய்க்கப்படுபவனாகவும் கிட்டா பிறரைத் துய்ப்பவனாகவும் இருக்கிறார்கள். கொண்டாடப்படுபவனாகவும் தோப்பூரில் எல்லோராலும் விரும்பப்படுபவனாகவும் கணேசன் இருக்கிறான்.படிக்கப் போகும் இடத்தில் ஒரு செல்வந்தரின் கண்ணில் விழுந்துவிட அவரால் வளைக்கப்பட்டு பல ஆண்டுகள் இருவருக்குமான ”உறவு” தொடர்கிறது. ஒரு கட்டத்தில் அதிலிருந்து மீளுபவனை ஆசிரியை சுந்தரி துய்க்கிறாள். சுந்தரியின் மரணத்திற்குப் பின் அவளுக்கு வைத்தியமளித்த பெண் டாக்டர் கணேசனைத் துய்க்கிறாள்.கணேசனைக் குஷ்டரோகம் துய்க்க அவளால் துரத்தப்பட்டு தொழுநோயைக் குணப்படுத்தும் மருத்துவமனையில் அடைக்கலமாகிறான்.அங்கே பணிவிடை செய்யும் செவிலியச் சகோதரிகளின் மீது உணரும் காம உணர்ச்சியால் குற்றவுணர்வடைந்து அங்கிருந்து வெளியேறி திருச்சி அம்மா மண்டபம் பகுதியில் பிச்சையெடுக்கும் குருட்டுப்பெண்ணுடன் வாழத்தொடங்கி கடைசியில் வாழ்வின் நோக்கம் குறித்த கேள்விகளை அடைகிறான் கணேசன்.

பிழைத்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தில் தன் ஆளுமையை,அடையாளத்தை உருவாக்க வேண்டிய வேட்கையில் ஒரு கட்டத்தில் ஊரைவிட்டு வெளியேறும் கிட்டா டாக்ஸி டிரைவாக வாழ்க்கையைத் தொடங்கி சீமா சாஸ்த்திரிகளின் மூலம் மருந்துக்கடை தொழிலில் நுழைந்து செல்வந்தனாகிறான்.கிட்டாவின் பாலியல் வேட்கைக்கு மனைவி அம்மு போததவளாக இருக்க அம்முவின் மூத்த சகோதரி மாச்சு, சீமாவின் மனைவி பூமா போன்றவர்களோடு அவனுடைய உறவு ஒரு கட்டம் வரை தொடர்கிறது..

வாழ்வின் எதிரெதிர் திசையில் பயணிக்கும் கணேசனும் கிட்டாவும் எதை அடைந்தார்கள் என்ற தத்துவார்த்தக் கேள்விக்கான பதிலை பசித்த மானுடம் அலசுகிறது என்று சொல்லலாம். காமம் குறித்த சித்தரிப்புகளை அதனுடைய நுட்பங்களுக்குச் செல்லாமல் சாரமான வகையிலேயே சொல்லிச் செல்கிறார் கரிச்சான் குஞ்சு.மேலும் காமத்தை மறுக்காத, அதை இயல்பான உணர்ச்சியாய் ஏற்றுக்கொள்ளும் பெண்களே இந்த நாவலெங்கும் நிறைந்திருக்கிறார்கள். தங்கள் ஆதார வேட்கைகளை நீதியின் சுமையை ஏற்றி அழித்துக்கொள்ளாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். மாச்சுவும் பூமாவும் கிட்டாவின் மகன்கள் வளர்ந்துவிட்ட காலத்தின் பொருத்தப்பாடு கருதித்தான் அவனிடமிருந்து விலகுகிறார்கள். அந்தப் பெண் டாக்டர் கணேசனுக்கு குஷ்டரோகம் பீடித்ததால்தான் துரத்துகிறாள்.

நன்மை தீமை குறித்த ஒரு மரபான பார்வையை இந்த நாவலில் பார்க்க முடிகிறது. தன் பாலியல் கொண்டாட்டங்களே தனக்கு குஷ்டரோகத்தைக் கொண்டுவந்துவிட்டதாக துயரடைகிறான் கணேசன். ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு என்ற இயற்கைக்கு உட்பட்ட ஒன்றை மீறி ஒருபாலுறவில் ஈடுபடுவனாக அவன் இருப்பதால் ஒரு நீதிவகைப்பட்ட பார்வையை வலியுறுத்துவதற்காக கணேசனைக் குஷ்டரோகியாக மாற்றியிருக்கிறாரோ கரிச்சான் குஞ்சு என்ற சந்தேகம் தோன்றுகிறது. முறை தவறியவையென்றாலும் கிட்டா பாலுறவு கொள்ளும் பெண்கள் அனைவரும் ஏன் குடும்பத்து பெண்களாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற கேள்வியையும் இணைத்து இதை யோசிக்கலாம்.மேலும் மனிதன் காமத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு ஞானத்தை அடையவேண்டும் என்பதை கரிச்சான் குஞ்சு முன் வைக்கிறார்.ஆனால் அந்த ஞானத்தை அவர் எந்த மதத்தோடும் அதன் சடங்குகளோடும் பிணைக்காமல் அகவயமானதாகச் சித்திரிக்கையில்தான் இந்த நாவலின் நவீனத் தன்மை உருப்பெறுகிறது. மேலும் கதாமனிதர்களுக்கிடையேயான உணர்வுக் கணக்கு வழக்கில் எதுவும் பாக்கி வைக்கப்படாமல் சிறுசிறு கதாப்பாத்திரங்களுக்கும் ஒரு தர்க்கப்பூர்வமான இறுதியைக் கொடுக்கிறார் கரிச்சான் குஞ்சு.எனினும் எழுதப்பட்ட காலத்தைக் கணக்கில் கொள்ளும்போது உத்தி மற்றும் சொல்முறை சார்ந்த சில குறைபாடுகள் அனுமதிக்கத்தக்கவையே என்று தோன்றுகிறது.

No comments: