Nov 14, 2015

நாயகன்

                                        
        
பகற்கனவுகள் குறித்த புகழ்பெற்ற கதைகள் என்ற சொற்றொடரை உள்ளிட்டுக் கூகிளில் தேடிக்கொண்டிருந்தபோது ஏதேச்சையாக வால்டர் மிட்டியைப் பற்றி அறிந்துகொண்டான் கார்த்தி. உடனடியாக அக்கதையின் படவடிவக்கோப்பைத் தரவிறக்கம் செய்து வாசித்தபோது கதை என்ற வஸ்து இதில் எங்குமே புலப்படவில்லையே என்று குழம்பினான். பெண்ணுடலின் அங்கங்கள் ஆபாசமாக கவர்ச்சியாகத் தெரியுமாறு படங்கள் வரையப்பட்ட வாராந்தரிகளின் கதைகள் மற்றும் மர்ம நாவல்கள், குடும்ப நாவல்கள் போன்றவற்றில் ஏற்கனவே கொண்டிருக்கும் பரிச்சயத்தோடு தற்சமயம் நவீன தமிழ் இலக்கியத்தின் வாசகனாகும் முயற்சியிலும் பயிற்சியிலும் இருக்கும் அவன் உடனடியாக தன் நண்பரும் நவீன கவிஞருமான போர்ஹேப்ரியனிடம் விசாரித்தான். உலக இலக்கியத்தில் துறைபோகிய போர்ஹேப்ரியன் கங்கோத்ரி பாரில் ஒருமணி நேரம் அக்கதையைக் குறித்து அளித்த விரிவான விளக்கத்தை மெளனமாக சிகரெட் புகைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தான். பேசிப்பேசியே இவனுக்குத் தமிழமுது ஊட்டும் போர்ஹேப்ரியன் தமிழகத்திலிருந்து தன் இலக்கிய நண்பர்கள் யாராவது பெங்களூருக்கு வந்தால் இவனையும் கூப்பிட்டு விடுவார். புகையும் எச்சிலும் வாந்தியும் தெறிக்கத் தெறிக்க அதிகாலை வரை நடக்கும் உரையாடல்களைக் கேட்டுக் கேட்டு சிற்றிதழ் மொழி குறித்த அறிவை விருத்தி செய்துகொண்டான்.

போர்ஹேப்ரியனுடன் விவாதித்தபின்னர் வால்டர் மிட்டி கதையைக் குறித்து இணையத்தில் கிடைத்த அறிமுக மற்றும் விமர்சனக் கட்டுரைகளைக் கசடறக் கற்றபோது அவரைத் தனக்கு மிக நெருக்கமானவனாக உணர்ந்தான் கார்த்தி. மிட்டியுடன் கைகுலுக்கித் தான் சமீபத்தில் அவருடைய ரசிகனாய் மாறியிருப்பதைப் பரவசத்தோடு சொன்னான். வாழ்வின் பேரனுபவங்களால் பக்குவப்பட்ட பெருங்கிழவனின் சாந்தமான புன்னகையோடு அவனுடைய பரவசத்தை அங்கீகரித்த மிட்டி கீழைத்தேசமான இந்தியாவிலிருந்து ஒரு இளைஞன் இத்தனை ஆண்டுகளுக்குப்பின் தன்னைத் தேடி வந்திருப்பதில் தான் நிஜமாகவே மகிழ்ச்சியடைவதாகச் சொன்னார். உரையாடிக் கொண்டிருக்கும்போதே மிட்டியின் கண்கள் சொருகத் தொடங்கிவிட்டன. அச்சந்திப்புக்குப் பின்னர் எந்நேரமும் இவனுடைய மண்டைக்குள் விதவிதமான தாளலயத்தில் அச்சத்தம் ஒலிக்க ஆரம்பித்தது.

பொக்கீட்ட பொக்கீட்ட பொக்கீட்ட

மிட்டியின் பகற்கனவுகளைப் போலவே கார்த்தியின் பகற்கனவுகளும் சாகசத்தன்மை கொண்டவையாக இருந்தாலும் அவனுடையவை பெரும்பாலும் நிகழ்கணங்களின் எளிய நடப்புகளுடன் தொடர்புடையவை. சில சமயங்களில் கடந்தகாலத்தின் அனுபவங்களை மீட்டெடுத்து அவ்வனுபவங்களைக் கொடுத்த சம்பவங்கள் ஒருவேளை வேறுவிதமாக நிகழ்ந்திருந்தால் இப்போதைய தன் வாழ்க்கை எப்படியிருக்கும் என்ற கனவில் மூழ்கிவிடுவான். கடந்த காலத்தை எதிர்காலமாக மறு உருவாக்கம் செய்து பார்ப்பது மிகச்சுவாரசியமான விளையாட்டு. யதார்த்தத்தின் நிர்ணயிக்கப்பட்ட சாத்தியங்களை எல்லாம் அடித்து நொறுக்கி துவம்சம் செய்துவிட்டு தன் ரகசிய உலகில் எண்ணற்ற அவதாரங்களை எடுத்து மகிழ்ந்து கொண்டிருந்தான் கார்த்தி.

பல் துலக்கியவாறே டிவியைப் போட்டால் பிரதமர் ராஜ்யசபாவில் உரையாற்றிக் கொண்டிருப்பார். அக்காட்சியை ஆழ்ந்து வெறிக்கையில் பிரதமரின் தோற்றம் மறைந்துபோய் பல்வேறு தேசிய இனங்களின் நலன்குறித்த எண்ணங்கள் நெஞ்சத்தில் துடிக்க ஆவேசத்தோடு பிரதமர் கார்த்தி ராஜ்யசபாவில் உரையாற்றிக்கொண்டிருப்பார். இந்த நாடே பிரதமர் கார்த்தியின் வாழ்வு. நாட்டுக்குச் சேவையாற்றவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவர் திருமணங்கூட செய்துகொள்ளவில்லை. அவருக்கு முன்னிருந்தவர்களால் சாதிக்க முடியாத விஷயங்கள் பலவற்றை அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன் தனிச்சிறப்பான பண்பின் மூலம் தீர்வைக் கண்டடைந்து இந்த நாட்டை உலக அரங்கில் வல்லரசாக மாற்றியிருக்கிறார் பிரதமர் கார்த்தி.

அக்கனவின் சொக்கு சற்றே குறையும்போது விரல்கள் தன்னிச்சையாக சேனலை மாற்றிவிடும். கிரிக்கெட் ஹைலைட்ஸ். நான்கே பந்துகள். பதினெட்டு ஓட்டங்கள் வேண்டும். ஏற்கனவே எட்டு விக்கெட்டுகளை இழந்தாயிற்று. உலகின் முதல்நிலை மட்டையாளனும் அணியின் தொடக்க ஆட்டக்காரனுமான கார்த்தி இன்னும் களத்தில் இருக்கிறான். எதிர்முனையில் பந்து வீசுவது உலகின் முதல்நிலை பந்து வீச்சாளர். பேட்டல் ஆஃப் ராயல்ஸ்!

0-1-4

வர்ணனையாளர் பரவசத்தில் கூவுகிறார்.

0-1-4-4

அறுபதாயிரம் பேர் அடங்கிய அரங்கம் ஆர்ப்பரிக்கிறது.

0-1-4-4-4

மொத்த அரங்கமும் சாமியாடுகிறது. எதிரணியின் கேப்டன் நகத்தைக் கடித்தவாறு பவுலருடன் ஆலோசிக்கையில் எந்த சலனமுமின்றி கடைசிப் பந்துக்காகக் காத்திருக்கிறான். ஆஃப்டர் ஆல்…கிரிக்கெட் உலகில் அவனுடைய செல்லப்பெயரே கூல் கார்த்தி என்பதுதான். கடைசிப் பந்து வீசப்படுகிறது. இன்றைய தேதியில் யார்க்கரில் சிக்ஸர் அடிக்கும் திறமையுள்ள ஒரே வீரனான அவன் தன் திறமையை இன்னுமொருமுறை நிரூபிக்கிறான்.கடவுளே..கார்த்திதான் எப்பேர்ப்பட்ட கிரிக்கெட் ஆளுமை? இதய விம்முதலின் வேகத்தில் மொத்த நுரையெச்சிலையும் விழுங்கிவிட்டு கனவின் இதமான சூட்டோடு குளிக்கப்போவான்.

காலையில் அலுவலகப்பேருந்தில் செல்லும் ஒருமணிநேரம் ஒரு தினத்தில் அவனுக்கு மிகப்பிடித்த நேரம். அவன் தங்கியிருக்கும் அறைக்கு அருகாமையிலிருந்து கிளம்பும் அலுவலகப் பேருந்தில் தனக்கென்று ஒரு ஜன்னலோர சீட்டைத் தேர்ந்து வைத்திருப்பவன் அதில் அமர்வதற்காக தினமும் அனைவருக்கும் முன்னரே வந்துவிடுவான். உடன் பயணிக்கும் பெண்களின் அழகை ரகசியமாய் ரசிப்பது பயணத்தின் முதல் அங்கம். பல நிலவெளிகளிலிருந்தும் கலாச்சாரத்திலிருந்தும் தோன்றிய அவர்களுடைய அழகையும் வனப்பையும் கண்டு மனம் பலமொழிகளில் டூயட் பாடும். அப்படித் தொடங்கும் அப்பயணப் பொழுதில் மெல்ல வெளியே வேடிக்கைப் பார்க்கத் தொடங்குவான். மிக உயரமான கட்டடத்தை பேருந்து கடக்கும்போது சட்டென்று ஸ்பைடர்மேனாக மாறி தரையிலிருந்து உச்சிக்குப் பறந்துபோவான். பேட்மேனாக மாறி உச்சியிலிருந்து தலைகீழாக மிதந்து வருவான். அக்கற்பனைகளுக்கான பிரத்யேக காரணங்கள் என்று எதையும் சொல்ல முடியாது. அவன் அப்படித்தான்.அவன் கனவுகளுக்குத் தர்க்கம் கிடையாது.

ஒருநாள் அலுவலகம் செல்லும் வழியில் சாலையோரத் தொழிற்கூடத்தில் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகையை வெளியேற்றிக்கொண்டு நெருப்பு எரிந்தது. பேருந்து அவ்விடத்தைக் கடக்கையில் கார்த்தி ஒரு தீயணைப்பு வீரனாக உருமாறி உள்ளே சிக்கியிருந்த உயிர்களைக் காப்பாற்றிக்கொண்டிருந்தான். ஏதேனும் விபத்தைப் பார்த்துவிட்டால் அடிபட்டவனை மருத்துவமனைக்குக் கூட்டிப்போய் ரத்தம் கொடுத்து அவன் உயிரைக் காப்பாற்றிவிட்டதாக மானசீகக் கற்பனை செய்துகொள்வான். ஆனால் இறங்கி அருகில் கூட சென்று பார்க்க மாட்டான். இப்படி அவனுடைய மூளை ஒரு வினோதக் கற்பனை எந்திரமாக மாறி ராட்ஷதத்தனமாக இயங்கிக்கொண்டிருந்தது. அக்கனவுகளில் தமிழர் பண்பாட்டுக் கூறுகளான காதலும் வீரமும் பிரதானமாக இருந்தாலும் காதல் வக்கிரமான காமமாகவோ வீரம் குரூரமான வன்முறையாகவோ மாறிவிடாமல் அவனுக்குள் இருந்த ஒருவகையான நீதியுணர்ச்சியும் சமூகத்தோடு ஒத்திசைந்து போகும் பழக்கமும் காப்பாற்றின. ஆனால் யதார்த்தத்தில் அவன் ஒரு கோழை. உள்ளொடுங்கிய தன்மை கொண்டவன்.

சிறுவனாக இருந்தபோது காமிக்ஸ் விரும்பிப்படித்தான். அதிலும் மூகமுடி மாயாவிதான் அவனுடைய ஆதர்ச நாயகன். டெவில் பின்தொடர குதிரை ஹீரோவின் மேல் மாயாவி ஆரோகணிப்பதையும் எதிராளியின் முகத்தில் மண்டையோட்டு முத்திரைச்சின்னம் பதியும்படி தாக்குவதையும் பார்த்துப் படிக்கையில் கைகள் பரபரவென்றிருக்கும். மாயாவியோடு சேர்த்து எத்தனையெத்தனை காமிக்ஸ்கள், கெளபாய் வீரர்கள், சாகச வீராங்கனைகள். எண்ணிலிடங்கா அந்தக் கறுப்பு வெள்ளைச் சித்திரங்களுக்குள் வெகுகாலம் தன்னைப் புதைத்துக்கொண்டு கிடந்தான்.காமிக்ஸில் ஆர்வம் குறையத்தொடங்கிய போது சினிமா பார்ப்பதில் , குறிப்பாக சண்டைக்காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படங்களின் மீது வெறி கொண்டு திரிந்தான்.

ஆனால் இந்த நடிகரின் ரசிகன் மட்டுமே என்று அவனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் குறுக்கிவிட முடியாது. அவன் கடைசியாகப் பார்த்த திரைப்படங்களில் எந்தத் திரைப்படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகம் இருந்ததோ அந்தப் படத்தில் நடித்த நடிகரின் ரசிகனாகத் தன்னைக் கவரும் இன்னொரு படத்தைப் பார்க்கும்வரை நீடிப்பான். ஆனால் காமிக்ஸில் ஆர்வம் குறைந்ததைப் போலவே ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவிலும் ஆர்வம் குறைந்துவிட்டது. சமயங்களில் வெறுப்பும் எரிச்சலும் மண்டின. தொங்கும் கழுத்துச்சதையோடும் குலுங்கும் தொப்பையோடும் சகிக்கமுடியாத வகையில் கதாநாயகர்கள் நடனம் என்ற பெயரில் உடற்பயிற்சியை வருடக்கணக்காய் செய்தார்கள். அடுத்த காட்சி இதுதான், இப்படித்தான் க்ளைமேக்ஸ் இருக்கப்போகிறது என்று மிகச்சரியாய் கார்த்தியால் கணிக்க முடிந்த காலத்தில் அவன் தமிழ்சினிமா பார்ப்பது பெரும்பாலும் நின்றுபோயிருந்தது. அவ்வப்போது சில வித்தியாசமான படங்கள் வந்தால் அவற்றை டொரண்டில் டவுன்லோட் செய்து பார்ப்பதோடு சரி.

தமிழ்சினிமா கதாநாயகர்களால் ஏமாற்றமடைந்த டீன் ஏஜ் பருவத்தில் ஜாக்கிச்சானும் ஜெட்லீயும் புதிய ஆதர்ச நாயகர்களாக உருவெடுத்தார்கள். இறுக்கமான முகத்தோடு பாரம்பரிய உடையில் பறந்து பறந்து சண்டைபோடும் ஜெட்லீயை விட யதார்த்தமாகச் சிரிப்பூட்டும் விதத்தில் சண்டைபோட்ட ஜாக்கிச்சானைப் பிடித்திருந்தாலும் அவரிடம் ஒரு காதலனுக்குரிய உடல்மொழி இல்லாமலிருந்தது. பதினாறு பதினேழு வயதில் கட்டற்றுப் பொங்கிய காதலுணர்ச்சியோடும் காமத்தோடும் தன்னை எந்த பிம்பத்தில் பொருத்திக்கொள்வது என்று குழம்பியிருந்த காலத்தில்தான் அவன் ஜேம்ஸ்பாண்டை அறிந்துகொண்டான். அழகு, கம்பீரம், சாகசம், காதலுணர்ச்சி மற்றும் கொஞ்சம் கள்ளம் போன்ற குணாதிசயங்கள் நிரம்பியிருந்த ஜேம்ஸ்பாண்டாக மாறி கனவுவெளியில் வெகுநாட்கள் அலைந்துகொண்டிருந்தான்.

இப்படியான பரிணாம வளர்ச்சியில் பல ஆக்ஷன் த்ரில்லர் வகையறா படங்களைத் தேடித்தேடிப் பார்த்து அந்த நாயகர்களின் பிரதியாய் தன்னைக் கற்பனை செய்துகொண்டு பகற்கனவுகளைத் தொடர்ச்சியாய் புனைந்துகொண்டிருந்தான். அவனுடைய கணிணியின் ஹார்ட் டிஸ்க் முழுக்க அதிரடி ஹாலிவுட் திரைப்படங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. டாம் க்ரூஸ் நடித்த மிஷன் இம்பாஸிபிள் வரிசை, மேட் டீமன் நடித்த பார்ன் வரிசை போன்றவற்றை எண்ணற்ற முறை திரும்பத்திரும்ப பார்த்தான். மிஷன் இம்பாஸிபிள் படத்தின் தீம் மியூசிக் அவன் நாடி நரம்பெல்லாம் ஊடுருவிப் புத்துணர்வூட்டியது. எப்போதெல்லாம் மனம் சோர்வாக இருக்கிறதோ, எப்போதெல்லாம் கடின முயற்சி எடுத்து ஒரு வேலையை முடிக்க வேண்டியிருக்கிறதோ அப்போதெல்லாம் அவனுடைய செல்போனின் ரிங்டோனாகவும் காலர்டோனாகவும் மிஷன் இம்பாஸிபிள் தீம் மியூசிக் மாறிவிடும். கோட் அடிக்கும்போது ஒரு சிக்கலான லாஜிக் பிடிபட மறுத்தால் ஹெட்போனை மாட்டிக்கொண்டு அந்த தீம் மியூசிக்கை இரண்டொருமுறைகள் கேட்பான்.விஷயம் முடிந்தது.

கவிஞர் போர்ஹேப்ரியன்தான் குயிண்டின் டாரண்டினோ, மார்ட்டின் ஸ்கார்ஸஸி, செர்ஜி லியோன் ஆகிய மூவரின் படங்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவற்றையெல்லாம் திரும்பத் திரும்பப் பார்த்தான். ரத்தம் தெறிக்கும் குரூர அழகியல் கொண்டவையாக டாரண்டினோ படங்களும் புறவாழ்வில் ஆளுமையுள்ள ஆண்களின் குடும்பச்சிக்கல்களையும் உளவியல் பிரச்சனைகளையும் ஆராய்பவையாக ஸ்கார்ஸஸி படங்களும் தெரிந்தன. டிபார்டட் திரைப்படத்தின் பரபரப்பான திரைக்கதைக்குப் பின்னுள்ள மெல்லிய காவியநயத்தை வெகுவாக ரசித்தான் கார்த்தி. ஆனால் அவனே எதிர்பாராத வகையில் அவனை ஆட்கொண்டது க்ளிண்ட் ஈஸ்ட்வுட்தான். எப்பேர்ப்பட்ட அழகன்? குறி தவறாத துப்பாக்கியோடும் வாயில் புகையும் சுருட்டோடும் சால்வையைப் போர்த்தியவாறு மண்ணில் பூட்ஸ் சரசரக்க ஒசிந்து ஒசிந்து நடக்கும் ஈஸ்ட்வுட்டின் நடைக்கு அடிமையாகவே மாறிவிட்டவன் அவ்வப்போது அமெரிக்காவின் மேற்கு நிலங்களில் ஒரு பவுண்டி கில்லராக அலைவதுண்டு.

சாப்ட்வேர் ப்ரோகிராமரான கார்த்தியின் பேச்சுலர் வாழ்க்கை இவ்விதமாகப் போய்க்கொண்டிருந்தது. விடுமுறை நாட்களில் கவிஞர் போர்ஹேப்ரியனுடன் சேர்ந்து பெங்களூரைச் சுற்றினான். டி.எஸ்.வரதராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட அவரும் சாப்ட்வேர் துறையில்தான் பணியாற்றினார். இருவரும் சமவயதுடையவர்கள்தான் என்றாலும் போர்ஹேப்ரியனிடம் மிகவும் மரியாதையோடு நடந்துகொள்வான். கலை கலைக்கே என்று சொல்லிக்கொண்டு மக்களிடமிருந்து தன்னைத் தனித்துக்கொண்டு திரியும் தூய (போலி) இலக்கியவாதியாக அவரைக் குறுக்கிவிட முடியாது. இந்த இளம் வயதிலேயே பரந்த வாசிப்பும் கூர்மையான அரசியல் பிரக்ஞையும் உடையவர். நவீன ரொமாண்டிஸ்ஸிட்களிடமிருந்து தமிழ்க்கவிதையை மீட்கவேண்டுமென்று உத்வேகத்துடன் மிகைப்படுத்தல் இல்லாத தத்துவமும் தொன்மமும் அரசியலும் வரலாறும் ஊடுபாவிய நுட்பமான கவிதைகள் எழுதும் அவருடைய கவிதைகளின் மீது நைந்து வெகுகாலமாகிவிட்ட புரியாமை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அவரிடம் ஒருநாள் தன் பகற்கனவுகள் குறித்து நேரிடையாக எதுவும் பேசாமல் பொதுவான வகையில் உரையாடலைத் தொடங்கினான். ப்ராய்டிய மற்றும் லக்கானிய நோக்கில் பகற்கனவுகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்து மூச்சுவிடாமல் முப்பத்தி மூன்று நிமிடங்களுக்கு போர்ஹோப்ரியன் விளக்கியபோது விஸ்கியைத் துளித்துளியாக அருந்தியவாறு மெளனமாக கேட்ட கார்த்தி சந்தோஷத்தைத் தரும் ஒன்றை விளங்கிக்கொள்ள தத்துவம் தேவையில்லை என்று நினைத்தவாறு அப்பேச்சை அத்துடன் முடித்துக்கொண்டான்.

ஆன்சைட்டில் பணிபுரிய சுழற்சி முறையில் அவனது டீமில் அடுத்து இவன்தான் அமெரிக்கா பயணிக்கவேண்டும். அவனுடைய தற்போதைய பகற்கனவுகளை அமெரிக்கா ஆக்ரமிக்க ஆரம்பித்தது. சினிமாவின் மூலம் தெரிந்திருந்த அமெரிக்காவைக் கொண்டு அவை தங்களை ராட்ஷதத்தனமாக பின்னிக்கொள்ளத் தொடங்கிவிட்டன. விசா விண்ணப்பத்திற்கான ஆவணங்களை நிறுவனத்திற்கு அனுப்பியவுடன் அமெரிக்காவில் அனுபவிக்க வேண்டிய விஷயங்களை மனதிற்குள் பட்டியலிட்டுக்கொண்டு கற்பனை செய்கையில் மனதில் ஜொள் வழிந்தது. ஆனால் துரதிரஷ்டம் அக்கனவுகளின் மேல் ஒரு சம்மட்டி அடி விழுந்ததுபோல் அவனுக்கு விசா கிடைக்கவில்லை. புளூ ஸ்லிப் கொடுத்துவிட்டார்கள். சோகத்தோடு சென்னையிலிருந்து பெங்களூர் திரும்பியவன் ஒரு வாரம் சோர்ந்து கிடந்தான். சனிக்கிழமை மாலைநேரக் குடியின் போது இப்போது வரலாறு மூன்றாம் உலகநாடுகளில்தான் நிகழ்கிறது என்று சொல்லி அவனை போர்ஹேப்ரியன் ஆறுதல்படுத்தினார்.

திருமணம் செய்துகொள்ளும்படி சில ஆண்டுகளாக கார்த்தியின் பெற்றோர்கள் வற்புறுத்தினாலும் அமெரிக்கா சென்றுவந்தபின்னர்தான் திருமணம் என்ற முடிவிலிருந்தான். ஆனால் விசா கிடைக்காததால் திருமணத்தைத் தள்ளிப்போட விரும்பாத அவனுடைய பெற்றோர் மீண்டும் வற்புறுத்தியபோது சம்மதித்துத் தலையாட்ட கார்த்திக்காக பெண் தேடும் படலம் தொடங்கியது. படித்து சாப்ட்வேரில் வேலையிலிருக்கும் பெண்ணாய் தேடச்சொல்லியிருந்தான். முதலில் வந்த ஐந்தாறு ஜாதகங்கள் பொருத்தமில்லாமல் தட்டிப்போயின. ஜாதகப்பொருத்தம் இருந்தவற்றில் நேரில் சந்தித்துப் பேசியபின் கார்த்தியை இரு பெண்கள் கழித்துவிட்டார்கள். வேறு இருவரை கார்த்தி கழித்தான். இந்த சனிக்கிழமை ஃபோரம் மாலில் ஒருத்தியைப் பார்க்கப் போகவேண்டும். ரம்யா. அவளும் பெங்களூரில் கார்த்தி பணிபுரியும் நிறுவனத்திலேயே பணிபுரிந்துகொண்டிருந்தாள்.

வளவளவென்று பேசினாலும் யதார்த்தமான பெண்ணாய் மாநிறமாய் லட்சணமாய் இருந்தாள். கார்த்தி நடுநடுவே இங்கிலீஷில் பேசியபோதும் அவள் தமிழிலேயே பதில் சொன்னாள். கார்த்தியின் மனம் அவளை நோக்கி சாய ஆரம்பித்தது. இவளே உன்னுடைய இன்னொரு பாதி என்ற அசரரீ அவன் காதில் ஒலித்தது. அவளுக்கும் அந்த மனச்சாய்வு தோன்றியிருக்கும் என்று அவன் நம்புமளவிற்கு அவளுடைய உடல்மொழியும் இந்த அரைமணி நேரத்தில் மாறிக் குழைந்திருந்தது. பேச்சில் பல விஷயங்களைப் பரிமாறிக்கொள்ளும்போதுதான் அவள் அமெரிக்க விசா வைத்திருப்பது கார்த்திக்கு தெரியவந்தது.

க்ளிங் என்ற ஓசையோடு ஓவன் அணைய அதனைத் திறந்து காபிக் கோப்பையை வெளியே எடுத்து சர்க்கரையைக் கலந்துகொண்டான். லிவிங் ரூமின் ஜன்னலோரம் இருந்த நாற்காலில் அமர்ந்தவன் உள்ளிருந்து பார்த்தால் வெளிப்புறம் நன்றாகத் தெரியும் வகையிலும் வெளியிலிருந்து உட்புறம் தெரியாத அளவில் ஜன்னலின் ப்ளைண்டை அமைத்துவிட்டு வேடிக்கை பார்த்தவாறு காபியைக் குடித்தான். ப்ளாக்கின் பின்புறப் பாதையில் போன கார் போய் தானியங்கிக் கேட் விலகுவதற்காக காத்திருந்தது.

காபியின் கடைசிச் சொட்டையும் விழுங்கி நாக்கைச் சப்பிக்கொண்டவன் கோப்பையை கிச்சன் ஸிங்கிற்குள் போட்டுவிட்டு கிச்சனின் மரமேடையில் கிடந்த மார்ல்பெரோ பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். கதவின் வெளியே சருகுகள் நிரம்பிக்கிடந்தன. பின்புற நடைபாதையில் நின்றவாறு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு இருநூறடி தூரத்திலிருந்த கேட்டிற்கு வெளியே சாலையை வேடிக்கை பார்த்தான். சைரனோடு ஒரு தீயணைப்பு வாகனம் விரைந்து போனது. தினமும் இரண்டு மூன்று முறையாவது அதைப் பார்க்கிறான். கேட்டின் புறங்களில் கம்யூனியிட்டியின் கம்பி வேலி உயரமான மரங்களோடு அடர்ந்திருந்த புதர்களிடையே மறைந்திருந்தது. பார்வையை விலக்கி புல்வெளியையும் இடையிலிருந்த மரங்களையும் பார்த்தான். எங்கும் சருகுகள் உதிர்ந்து கிடந்தன.

மூன்றாவது ப்ளாக்கின் தரைத்தளத்தில் இருக்கும் இந்த வீடு அவனுக்கு மிகப் பிடித்திருந்தது. கொஞ்சம் பழைய பாணி கம்யூனிட்டிதான். ஆனால் ஜாக்ஸன்வில்லின் சவுத்சைடிலிருந்த மற்றவற்றை விட வாடகை கொஞ்சம் குறைச்சலாக இருந்தது. ஒவ்வொரு ப்ளாக்கிற்கும் இருதளங்களாய் எட்டு வீடுகள். அதுபோல் மொத்தம் முப்பதுக்கும் மேற்பட்ட ப்ளாக்குகள். நீச்சல் குளம், ஜிம் போன்றவற்றோடும் விஸ்தாரமான புல்வெளிகளோடும் கிட்டத்தட்ட ஒரு பெரிய கிராமத்தைப் போலிருந்தது. மேலும், ஒரு இந்திய சமூகமே இங்கே இருக்கிறது. ரம்யாவின் அலுவலக நண்பர்கள் பலர் குடும்பத்தோடு வசிப்பதால் கார் பூலிங் முறையில் அவள் அலுவலகம் செல்வதற்கும் வசதியாக இருக்கிறது.

சில சமயங்களில் விஷயங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிடுகின்றன. அப்படித்தான் கார்த்திக்கு தோன்றியது. ரம்யாவும் அவனும் சந்தித்து உரையாடிய அந்தத் தினத்திலேயே இருவரும் பரஸ்பரம் தங்கள் சம்மதத்தை வீட்டாருக்குத் தெரிவித்துவிட்டார்கள். அன்றைய இரவிலிருந்தே செல்போனில் பேசவும் ஆரம்பித்துவிட்டார்கள். கார்த்தியின் காதில் எந்நேரமும் ஹெட்போன் இருந்தது. பகற்கனவு கண்டுகொண்டே வேலை செய்பவனுக்கு பேசிக்கொண்டே வேலை செய்வது ஒன்றும் பெரிய விஷயமாயில்லை. தினமும் மாலை சந்தித்துக்கொண்டு சினிமா, மால்கள் என்று சுற்றினார்கள். உயர்தர விடுதிகளில் இரவுணவிற்குப் போனார்கள். ஒருதடவை டின்னரின்போது தனக்கு இரண்டு லார்ஜ் விஸ்கி ஆர்டர் செய்துகொள்ளட்டா என்று கேட்டான். அதுவொன்றும் பெரிய விஷயமில்லை என்பதுபோல் அவள் தோள்களைக் குலுக்கிக்கொள்ள மகிழ்ச்சியுடன் கூடிய நிம்மதியை அடைந்தான் கார்த்தி.

அவர்கள் வீடுபார்க்கத் திட்டமிட்டபோது எதிர்பாராத வகையில் ரம்யாவிற்கு ஆன்சைட் வாய்ப்பு வந்தது. தற்போது அங்கே பணிபுரிபவர் பல்வேறு சொந்தக் காரணங்களுக்காக உடனடியாக இந்தியா திரும்ப விரும்பியதால் அந்த இடத்திற்கு ரம்யாதான் சென்றாக வேண்டும். செல்வதா வேண்டாமா என்பது குறித்து அவள் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கார்த்தி எந்த முடிவு எடுத்தாலும் தனக்குச் சம்மதமே என்று சொல்லிவிட்டாள். ஆனால் கார்த்திதான் குழம்பிவிட்டான். போர்ஹேப்ரியனுடன் ஆலோசித்தான். தன்னுடைய பெற்றோர்களிடமும் ரம்யாவின் பெற்றோர்களிடமும் பேசினான். கடைசியில், திருமணம் முடிந்தவுடன் தான் ஓராண்டு சபாட்டிக்கல் விடுமுறை எடுத்துக்கொண்டு சார்பு விசாவில் ரம்யாவுடன் அமெரிக்க செல்வது என்ற முடிவுக்கு வந்தான். என்ன, அவன் தன் ஓராண்டு பணி அனுபவத்தை இழக்க வேண்டியிருக்கும். சார்பு விசாவை வைத்துக்கொண்டு அமெரிக்காவில் அவன் பணியாற்ற முடியாது. சமூகப் பாதுகாப்பு எண் கிடைக்காது, வங்கிக் கணக்குத் தொடங்க முடியாது. இருந்தபோதும் ரம்யாவிற்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பை வீணடிக்கவும் விரும்பவில்லை. திருமணம் முடிந்தவுடன் உடனடியாக திருமணத்தைப் பதிவு செய்து சான்றிதழை வாங்கினான். அடுத்த மூன்றாவது வாரத்தில் விசா நேர்முகத்திற்குப் போனான். அமெரிக்காவில் உங்கள் மனைவி பணியாற்றுவார்…அங்கே நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று அதிகாரி கேட்டபோது தான் அமெரிக்காவின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் கற்கப்போவதாகச் சொன்னான்.

வேடிக்கை பார்த்துக்கொண்டே புகைத்துக்கொண்டிருந்த சிகரெட் அணைந்து போயிருக்க இன்னொன்றைப் பற்ற வைத்துக் கொண்டான். தரைத்தளத்தின் எதிர்வீட்டுக் கதவு நீக்கப்பட நீண்ட சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த பொன்னிற ரோமங்களோடிருந்த நாய்க்குட்டி குலைத்தவாறு அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. சட்டென்று தாண்டிக்குதித்து ஒதுங்கி நின்றபோது அவள் சங்கிலியை சுண்டி இழுத்துக்கொண்டு ஸாரி சொன்னாள். மார்புகள் முன்புறம் தளும்பும் வகையில் மேலுடையும் பின்புறம் எடுப்பாகத் தெரியும்படி கீழுடையும் அணிந்திருந்தாள். கமான் கமான் என்று விளித்தவாறு அவள் நாய்க்குட்டியோடு நடைபாதையில் போக அவளுக்கு கமான் என்று மானசீகப் பெயரிட்டான்.

இந்த நாட்கள் அவனுக்கு மிக மகிழ்ச்சிகரமானவையாக இருக்கின்றன. திருமண காலத்தின் ஆரம்ப வசந்தங்களும் பணிச்சுமையால் ஏற்படும் அழுத்தங்கள் ஏதும் இல்லாமையும் அதற்குப் பிரதான காரணங்கள். மேலும், நாம் இன்னொருவருக்கு உரிமையானவராக இருக்கிறோம், நமக்கு இன்னொருவர் உரிமையானவராக இருக்கிறார் என்னும் உணர்வு தரும் பாதுகாப்புணர்வையும் நிம்மதியையும் உணர்ந்தான். முந்தைய நாயகத்தன்மையான தன் பகற்கனவுகளில் கார்த்தி தனியனாய் இருந்தான். இப்போது எண்ணிக்கையில் அவை மட்டுப்பட்டிருக்கின்றன. அவ்வப்போது அவனும் ரம்யாவும் தோன்றும் இனிய காதலுணர்வு நிரம்பிய மென்மையான பகற்கனவுகளை மட்டும் காண்கிறான்.

மதிய உணவைத் தயாரித்து வைத்துவிட்டு காலை எட்டு மணிக்கே ரம்யா அலுவலகம் கிளம்பிவிடுவாள். அவள் அலுவலகம் சென்றவுடன் ஜிம்மிற்குச் சென்று ஒரு மணி நேரம் உடற்பயிற்சிகள் செய்வான். முற்பகல்களில் கம்யூனிட்டியின் அலுவலகத்தோடு இணைந்திருக்கும் நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரம் நீந்துவான். வார நாட்களில் அது பெரும்பாலும் காலியாகவே இருக்கும். நீச்சல் முடிந்தவுடன் நீச்சல் குளத்தை ஒட்டிப் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் சாய்ந்து படுத்து வெயிற்காய்ந்தவாறே சிகரெட் புகைப்பான். வாங்கி ப்ரிட்ஜில் அடுக்கி வைத்திருக்கும் கார்ல்ஸ்பெர்க் டின் பியர் ஒன்றை எடுத்துப் போயிருந்தால் அதைக் குடித்தவாறு தான் அனுபவிக்கும் இந்தக் கணத்தைப் போன்ற காட்சியில் எந்த ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் என்று யோசிப்பான்.

40 Mbps வேகத்தில் இணைய இணைப்பு இருந்தது. வேண்டிய திரைப்படங்களை டவுன்லோட் செய்யத் தேவையில்லாமல் இணையத்திலேயே பார்த்தான். ஹாலிவுட் பிரபலங்களுடனான டேவிட் லெட்டர்மேனின் குறும்புத்தனமான நேர்காணல்களின் காணொளிகளை ரசித்தான். தரில்லர் சீரியலான டெக்ஸ்டரின் எல்லா சீசனின் அனைத்து எபிசோடுகளையும் பார்த்தான். உலகின் மிகச்சிறந்த இசை ஆல்பங்கள் எவையெவையென்று இணையத்தில் தேடி அவற்றையெல்லாம் கேட்டான். நீலப்படங்கள் பார்த்தான். தகவல் தொழில்நுட்பத்தில் புதிய விஷயங்களைப் படித்தான். தொடர்பு விட்டுப் போகாமலிருக்க அவ்வப்போது கோட் அடித்துப் பார்த்தான். போர்ஹேப்ரியனுடம் மற்ற நண்பர்களுடனும் தொலைபேசியில் உரையாடினான். ரம்யாவின் அலுவலக நண்பர்களின் வீட்டு விசேஷங்களுப் போனான். வெளியே நின்று புகைத்துக் கொண்டிருக்கும்போது அவ்வப்போது ஏதேச்சையாய் சந்திக்கும் கமானுக்கு ஹலோ சொல்லி அவளை சைட் அடித்தான். இத்தனை செய்தும் அவனுக்கு எராளமான நேரம் மிச்சமிருந்தது.

நேரத்தைப் போக்குவதற்காக வெகுநாட்களாக நுழையாமலிருந்த மைண்ட்நோட் சமூக வலைத்தளத்திற்குள் நுழைந்து பார்த்தான். அவன் அதன் தொடக்க காலத்திலிருந்தே உறுப்பினராக இருந்தாலும் பெரிய அளவில் பயன்படுத்துவதில்லை. இப்போது பார்த்தால் சமூகத்தில் அதன் பயன்பாடு பெருகியிருந்தது.அவன் நண்பர்கள் பலர் முழு வீச்சில் அங்கே பொழுதுபோக்கிக் கொண்டிருந்தார்கள். ப்ருஸ் வில்லீஸ் நடித்த சரகோட்ஸ் திரைப்படத்தில் வருவதுபோல் எல்லோருக்கும் ஒரு மெய்நிகர் சுயம் உருவாகியிருந்தது. கார்த்தியின் நண்பர்கள் பலர் ஊர் ஊராய்ப் டூர் போய் தண்ணியடித்துக்கொண்டு அதன் புகைப்படங்களை மைண்ட்நோட்டில் பதிவேற்றிக்கொண்டு பரஸ்பரம் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். அதில் கார்த்திக்கு பெரிதாக ஆர்வமில்லை. ஆனால் போர்ஹேப்ரியனின் காலக்கோட்டிலும் அவன் சார்ந்த திரியிலும் சுவாரசியமான இலக்கிய, சமூக, அரசியல் விவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. போர்ஹேப்ரியனின் அனைத்துப் பதிவுகளுக்கும் விருப்பக்குறி போடுவதில் தொடங்கி அவனுடைய நட்பு வட்டத்திலிருந்த அனைத்து இலக்கியவாதிகளுக்கும் நட்பழைப்பு அனுப்பினான். அவர்களுடைய பதிவுகள் அத்தனையையும் வாசித்து விருப்பக்குறியும் மகிழ்ச்சியூட்டும் பின்னூட்டங்களும் போட்டான்.விரைவில் கார்த்தி மைண்ட்நோட்டில் பல இலக்கியவாதிகளின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டான்.

மைண்ட்நோட்டில் இலக்கியவாதிகள் அடிக்கடி அடித்துக்கொண்டார்கள். இலக்கிய விவாதங்களைப் பொருத்தவரை அது கிட்டத்தட்ட விர்ச்சுவல் டாஸ்மாக்காக மாறிக்கொண்டிருந்தது. அச்சண்டைகள் எல்லாம் கார்த்திக்கு சுவாரசியத்தைக் கொடுத்தன. மைண்ட்நோட்டில் தானும் ஒரு ஆளுமையாக மாறவேண்டும் என்று மனம் குறுகுறுத்தது. சொந்த ஐடியில் இயங்கிக்கொண்டிருந்த அதே தருணத்தில் சான்கோ பாஞ்சா என்ற பெயரில் ஃபேக் ஐடியை உருவாக்கி அனைத்து இலக்கியவாதிகளுக்கும் நட்பழைப்பு விடுத்தான். உடன் காலை வணக்கம், மாலை வணக்கம் போட்டுக்கொண்டிருக்கும் பலரையும் சான்கோ பாஞ்சாவின் நண்பர்களாக இணைத்துக்கொண்டான். ஜோக்ஸ், நகைச்சுவைக் காணொளிகள், துணுக்குகள் எனத் தினமும் பலவற்றைப் பதிவு செய்ய அவற்றிற்கெல்லாம் ஏராளமான விருப்பக்குறிகள் விழுந்தன.

சான்கோ பாஞ்ச்சா ஃபேக் ஐடியோடு சேர்த்து தன் சொந்த ஐடியிலும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தான் கார்த்தி. மேற்கத்திய இலக்கியவாதிகளின் மேற்கோள்கள், தொல்காப்பியம், நன்னூல் ,அகம் புறம், மேல் கீழ் கணக்கிலிருந்து பாடல் விளக்கங்கள், சுவாரசியமான வரலாற்றுத் துணுக்குகள், ஷூப்பநேகர், கண்ட், ஹைடெக்கர், பார்த்ஸ், ஃபூக்கோ, தெரிதா, ஓரியண்டலிஸம், சர்ரியலிஸம், போஸ்ட் மாடர்னிசம், நாட்டரியல், தமிழ் தொன்மம், உடல் நலக் குறிப்புகள், முகஞ்சுளிக்க வைக்காத மெல்லிய காமரசம் ததும்பும் சமாச்சாரங்கள், பிரபல புகைப்பட இணையதளங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பீட் தலைமுறை எழுத்தாளர்கள், பாப் மார்லி, லெட் ஸாப்ளின், பீட்டில்ஸ், ரேடியோ ஹெட், மைல்ஸ் டேவிஸ், பாப் டைலன், என்னியோ மோரிக்கோன், தமிழ் நவீன கவிதை, குஜிலி இலக்கியம், தமிழ் மேஜிக்கல் ரியலிசம், டவுன்லோட் செய்து வைத்திருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளிலான என்சைக்ளோபீடியாக்களிலிருந்து ரேண்டம் தெரிவுகள் என்று பலவற்றையும் அழகாக கட் காப்பி பேஸ்ட் செய்தான். அவன் சொந்த சிந்தனையிலிருந்து இதுவரை ஒரு வரிகூட வந்ததில்லை. ஆனால் மைண்ட் நோட்டில் இப்போது கார்த்தி ஒரு ஆளுமையாக மாறிவிட்டான். பல இலக்கியவாதிகள் அவன் மீதான மரியாதையோடு அவன் பதிவுகளில் தீவிரமாக பின்னூட்டமிட்டார்கள். போனில் பேசியபோது கார்த்தி அடைந்திருக்கும் முதிர்ச்சியைக் கண்டு தான் மகிழ்வதாக போர்ஹேப்ரியன் சொல்ல வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி ஆனான் கார்த்தி.

திடீரென்று சிற்றிதழ் இயக்கம் குறித்த விவாதமொன்று பற்றிக்கொண்டது. ஒரு பூர்ஷ்வா எழுத்தாளன் தமிழில் சிற்றிதழ் இயக்கம் அழிந்துவிட்டது என்று எழுத போர்ஹேப்ரியன் பொங்கியெழுந்துவிட்டார். எரிக்கப்பட்டுவிட்ட புத்தகங்களின் மனனம் செய்யப்பட்ட நினைவுப்பிரதிகளோடு ஃபாரன்ஹீட் 451 நாவலில் அலையும் மனிதர்களைப் போன்ற உறுதி படைத்தவர்கள் தமிழ் சிற்றிதழ் இயக்கத்தினர். ஆகவே தமிழில் சிற்றிதழ் இயக்கம் என்றைக்கும் அழியாது என்று காட்டமாக பதிலளித்தார். அந்த விவாதம் வளர்ந்து பூர்ஷ்வா எழுத்தாளன் போர்ஹேப்ரியனை ஏக வசனத்தில் திட்டிவிட கார்த்தி கொதித்துவிட்டான். சான்கோ பாஞ்ச்சா ஐடியில் போய் பூர்ஷ்வா எழுத்தாளனின் காலக்கோட்டிலிருந்து பல ஸ்கிரீன்ஷாட்கள் எடுத்துப்போட்டு அந்த பூர்ஷ்வா எழுத்தாளன் எப்படிக் கார்ப்பரேட் தன்மையுடன் செயல்படுகிறான் என்பதை மைண்ட்நோட் சமூகத்திற்கு அம்பலப்படுத்தினான். ஆனால் எதிர்பாராத வகையில் போர்ஹேப்ரியன் ஃபேக் ஐடியில் இருப்பவர்களைத் திட்ட ஆரம்பித்துவிட்டார். இரண்டு இலக்கியவாதிகள் விவாதித்துக்கொண்டிருக்கும்போது சான்கோ பாஞ்சா போன்ற ஃபேக் ஐடியில் ஒளிந்திருக்கும் துணுக்கு எழுத்தாளர்களுக்கு சிற்றிதழ் இயக்கத்தைப் பற்றிப் பேச அருகதையில்லை என்று எழுதினார். கார்த்தி மனதுக்குள் சிரித்துக்கொண்டான். உடனே தன் ஒரிஜினல் ஐடியில் லாகின் செய்து சான்கோ பாஞ்சாவைக் கண்டித்து கார்த்தியும் எழுதினான். பத்து நிமிடம் கழித்து சான்கோ பாஞ்சா ஐடியில் லாகின் செய்து போர்ஹேப்ரியனும் கார்த்தியும் மேட்டிமைத்தன்மையுடன் நடந்துகொள்வதாக எழுதினான். இரண்டு பக்கமும் ஆதரவும் எதிர்ப்பும் குவிந்தன. அதில் பலர் கார்த்தியை ஆளுமை ஆளுமை என்றே குறிப்பிட்டார்கள்.

சிற்றிதழ் விவகாரத்தைப் போலவே மைண்ட்நோட்டில் எங்கே சண்டைகள் நிகழ்ந்தாலும் கார்த்தி ஆஜராகி தன் கம்பீரத்தைக் குறைத்துக்கொள்ளாத வகையிலும் அதேநேரத்தில் கண்டிப்புடனும் கருத்துக்களைப் பகிர்ந்தான். ஒரிரு மாதத்தில் அவனுக்கு ஆயிரக்கணக்கான நண்பர்கள் மைண்ட் நோட்டில் சேர்ந்துவிட்டார்கள். எந்நேரமும் மைண்ட்நோட்டே கதியாய் கிடக்கும் கார்த்தியின் பைத்தியத்தைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டாள் ரம்யா. இணைய ஆளுமை என்றும் நம்பிக்கை நட்சத்திரமென்றும் ஒரு பத்திரிகை கார்த்தியைப் பற்றிக் குறிப்பிட்டதை ரம்யாவிடம் பெருமையாகக் காட்டினான்.

மைண்ட்நோட்டில் அடுத்து என்ன பதிவிடுவதென்று தீவிரமாக யோசித்துக்கொண்டே நடைபாதையில் நின்றவாறு சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தான். சட்டென்று எதிர்வீட்டின் கதவு திறக்கப்பட பதட்டத்தோடு வெளியே ஓடிவந்தாள் கமான். பயந்திருந்தவள் வீட்டிற்குள் வினோதமான ஒன்று புகுந்துவிட்டதாகவும் அதை வெளியேற்ற உதவும்படியும் கேட்டுக்கொண்டாள். சிகரெட்டை வீசிவிட்டு வேகமாக அவளுடைய அப்பார்ட்மெண்டின் லீவிங் ரூமிற்குள் நுழைந்தான். சுவரோரத்தில் அவள் காட்டிய இடத்தில் ஒரு மிகச் சிறிய ஓணான் இருந்தது. டாக்ஸ்-இன்னுக்குள்ளிருந்த பொன்னிற நாய்க்குட்டி குலைக்க கமான் அதனை அதட்டினாள். ஓணான் மெல்ல நகர வீல் என்ற சத்தத்தோடு கார்த்தியின் முதுகுக்குப் பின்னால் பதுங்கியபோது அவளிடமிருந்து வீசிய ஃபர்பியூமின் சுகந்த வாசனை கிறங்கடித்தது. ஒரு டிஷ்யூ பேப்பரைக் கார்த்தி கேட்கவும் எடுத்து நீட்டினாள். அதை சட்டென்று ஓணானின் மீது வைத்தழுத்தி குவித்து எடுத்து வந்து வெளியே வீச அது புல்வெளிக்குள் ஓடி மறைந்தது. நிம்மதியான பாவனையோடு கமான் நன்றி சொன்னபோது இது என் மகிழ்ச்சியான கடமை என்றான். மெல்லிய புன்னகையோடு அவள் கதவைத் தாழிட்ட பின்னர்தான் அவள் பெயரைக் கேட்டிருக்கலாமோ என்று தோன்றியது.

இன்னொரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு கண்களை லேசாக மூடிக்கொண்டான்.மிஷன் இம்பாஸிபிள் பிண்ணனி இசை ஒலித்தது. ப்ளாண்டியின் துப்பாக்கியிலிருந்து புகை எழுந்தது. குழந்தைகளை, பெண்களை சமூகத்தின் விளிம்பிலிருப்பவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் நாயகன் அவன். உடம்புக்குள் ரத்த ஓட்டம் தாறுமாறாகப் பாய பெருகும் நாயகத் தினவோடு அப்படியே எம்பி காற்றிலேகித் தீமையை அழிக்க வேண்டிய திசையில் பறந்தான்.

கார்த்தி, தி ஹீரோ… நம் காலத்தின் நாயகன்!

No comments: