Dec 23, 2015

குட்டிப் பொன்னுலகம்

குட்டிப்பெண் உலகின் வாசலில் நிற்கிறேன்
ததும்பும் அவள் குழந்தமையின் பூரணத்தில்
என் எலும்புகள் இளக
நான் கடக்க வேண்டிய இடைத் தூரத்தை
அவளுடைய தயக்க அணுகலில் உணர்கிறேன்
என் உயரத்தில்
ஓரடியைக் குறைத்துக்கொள்ளும்போது
அவள் புன்னகையின் அகலம் அதிகரிக்கிறது
ஒலிக்கும்
அவள் இனிய மழலை
என் கண்களில் அடர்ந்திருக்கும்
மூப்பின் இழைகளைப் பிய்த்தெறிகிறது
ஒன்றுக்கொன்று தொடர்பற்ற
சிலவற்றைச் சொல்கிறாள்
நான் அவற்றைக் கோர்த்து காட்டுகிறேன்
வியப்பில் விரியும் அவள் கண்களில்
ஒளிச்சலனங்கள் விரிய
ஒரு வானவில்லைக் கிடத்தி
அதன் வழியே உள்ளழைக்கிறாள்
அவள் உலகத்திற்குள்
நான் நடக்க நடக்க
அவளுடைய உயரத்திற்கே வளர்ந்துவிட்டேன்
பிறகு நாங்கள்
ஜோடி போட்டுக்கொண்டு
அங்கிருந்து பார்க்கிறோம்
அடடே
வெளியேதான்
உலகம் எவ்வளவு சிறியது.

No comments: