Feb 21, 2016

நிழல் உலகம்

நிழலே
நீ விலகிவிடு
இருண்ட வளைக்குள்
நான் தவழத் தொடங்கிவிட்டேன்
சாத்தானின் சபை கூடிவிட்டது
உன்னை நான்
உருவெடுத்த காலங்கள் முடிந்துவிட்டன
என்னிலிருந்து தப்பித்துப் போ
அவர்களின் நீதி
பரிசளித்த தழும்புகளால்
என் தோல்
சுரணையற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது
மீட்சி மற்றும் புத்துயிர்ப்பைக் குறித்த
அனைத்து நம்பிக்கைகளையும் இழந்துவிட்டேன்
கடைசித்துகள் வரை நிர்மூலமாக்கப்பட்டு
திரும்பச் சமைக்கப்படவேண்டியதாய்
பூமியில் குற்றங்கள் மலிந்துவிட்டன
மேலும்
பிராயச்சித்தத்தின் பீடத்திற்கு
திரும்பும் வழியை
உலகம் மறந்துவிட்டது
பிரபஞ்சத்தை மீளுருவாக்கவேண்டிய நேரத்தில்
இந்தக் கடவுளர்களை வேறு காணவில்லை
ஆகவே நிழலே
என்னைக் கைவிடு
எல்லை கடந்து போ
அங்கே பொன்னுலகம் இருக்கும்
பிறப்புக்கும் இறப்புக்குமிடையே
துளி குருதியும் கேட்காத
குற்றமழிந்த நிலம் அது
நிர்வாணம் வெட்கத்தைத் தோற்றுவிக்காத
காலம் அங்கே நிலவும்
மண்ணுக்குத் திரும்பும் யாத்திரையை
இப்போதே தொடங்கு நீ
இயன்றால்
என்னை அங்கே உருவெடு
மெய்யுலகம் என்று
அவர்கள் முழக்கும்
இந்த நிழல் உலகத்தினுள்
இதோ
நான் பதுங்குகிறேன்

No comments: