May 10, 2018

வாசிப்பு- கார்லோஸ் புயந்தஸ்

டான் கிகோட்டே ஒரு வாசகன். அல்லது, ஒருவேளை இன்னும் முக்கியமாக அவனுடைய வாசிப்பே அவனுடைய பித்து. வாசிப்பின் பித்தால் பீடிக்கப்பட்ட டான் கிகோட்டே தான் வாசித்த விஷயங்களை- வீரமரபு சார்ந்த புத்தகங்களை- யதார்த்தமாக மாற்ற விரும்பினான். ஆட்டிடையர்களின், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களின், விடுதிப்பணியாளர்களின், மோசமான புகழ் கொண்ட பணிப்பெண்களின், குற்றவாளிக் குழுக்களின் நிஜ உலகமோ டான் கிகோட்டேவின் மாயைகளைப் பூர்த்தி செய்யாமல் அந்தப் பாவப்பட்ட கனவானை களைப்படையச் செய்து காயப்படுத்தித் துவைத்தெடுக்கிறது.நிஜ உலகத்தால் தனக்கு அடிகள் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் டான் கிகோட்டே ராட்ஷதர்களைக் காண வலியுறுத்துகிறான். அங்கே காற்றாடிகள் மட்டுமே இருக்கின்றன. அவன் அவற்றைப் பார்க்கிறான். ஏனெனில் அவற்றைப் பார்க்கச்சொல்லித்தான் அவன் புத்தகங்கள் அவனிடம் கூறின.

ஆனால் ஒரு அசாதரணமான தருணம் இருக்கிறது. தீவிர வாசகனான் டான் கிகோட்டே, தான், வாசகனும், வாசிக்கப்பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டுபிடிப்பது ஒரு கதாப்பாத்திரமான டான் கிகோட்டே அச்சகத்திற்குள் நுழைவது - வேறெங்கே? பார்சிலோனாவில்தான்- இதுதான் இலக்கியத்தின் வரலாற்றில் முதல் தருணம். அங்கே அவன் சென்றது, அவிஷெனிதா என்பவனால் பதிப்பிக்கப்பெற்ற தன் சாகசங்கள் குறித்த கட்டுக்கதைகளின் பிரதியை மறுப்பதற்கும் தான் உண்மையான டான் கிகோட்டே, அவிஷெனிதாவின் நூலிலிருக்கும் பொய்யான டான் கிகோட்டே அல்ல என்று உலகத்திற்குச் சொல்வதற்காகவும்.

                                            

உன்னத நகரமான பார்சிலோனாவின் ஊடே டான் கிகோட்டே பயணிக்கையில் இங்கே புத்தகங்கள் அச்சிடப்படும் என்ற விளம்பரத்தைக் காண்கிறான். அவன் அச்சகத்திற்குள் நுழைந்து வேலைகள் நடப்பதைக் கவனிக்கிறான். அச்சகர்கள் ”ஒரிடத்தில் அச்சடிப்பதையும், இன்னொரு இடத்தில் திருத்துவதையும், இங்கே அச்சுக்கோர்த்து அங்கே மீள்பார்வை செய்வதையும்” உண்மையில் அங்கே அச்சாகிக்கொண்டிருப்பது தன்னுடைய சொந்த நாவலான The Ingenious Gentleman Don Quixote de la Mancha என்பதை உணரும் வரை பார்த்துகொண்டிருக்கிறான். சான்கோ பாஞ்சாவின் பீதியை, அவனும் அவன் எஜமானனும் மட்டும் பேசிய விஷயங்களை விவரமாக எடுத்துச்சொல்லும் அந்தப் புத்தகத்தின் அச்சாக்கத்தினாலும் அதனைத் தொடர்ந்த வாசிப்பினாலும் வெளியரங்கமாக்கப்படும் ரகசியங்கள், அதன் மூலம் அறிவு மற்றும் ஆய்வின் விமர்சனப்பூர்வ ஜனநாயகமான பரப்புக்குள் கதையின் நாயகப் பாத்திரங்கள் உள்ளாக்கப்படுகிறது. பண்டிதத்தன்மை இறந்துவிட்டது. சுதந்திரமான ஆய்வு பிறந்துவிட்டது.

இதற்கு முன்னோ அல்லது பின்னோ இருந்த எந்தவொரு இலக்கியத் தருணத்தையும் போலில்லாமல் டான் கிகோட்டேவின் இந்தக் கணம் புத்தக செம்மையாக்கம், பதிப்பு மற்றும் வாசிப்பில் நிகழப்போகும் விடுதலையை வெளிப்படுத்துகிறது. இந்தக் கணத்திலிருந்து இலக்கியம் மற்றும் அதன் நீட்சியாக புத்தகமே தன்னளவில் கடவுளாலோ அதிகார அமைப்பினாலோ அல்லாமல் உணர்வு மற்றும் கருத்து இவற்றிற்கிடையிலான இணக்கத்தை உருவாக்கி அந்த இணக்கத்தில் விளைந்த கனியான ஒரு புதுவகை யதார்த்தத்தை நிறுவும் மனிதத்திறனான கற்பனையின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் களஞ்சியமாக ஆகிறது. செர்வாண்டிஸின் டான் கிகோட்டே, பாப்லோ நெரூடாவின் கேண்டோ ஜெனரல் அல்லது ஸ்டெந்த்தாலின் தி ரெட் அண்ட் தி ப்ளாக் ஆகியவற்றின் சொற்கள் சார்ந்த அனுபவம் மட்டும் இல்லாமிருந்தால் இருந்திருக்க முடியாத ஒரு புது யதார்த்தம்.

பார்வையாளனுக்கும் கலைப்படைப்புக்குமிடையேயான நெருக்கமான அதே தருணத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் இந்த இணக்கம் பின்நவீனத்துவ உலகம் என்று சொல்லப்படும் இதில் குழப்பமடைந்துவிட்டதா? வாசிப்பும் இலக்கியமும் அவற்றின் கலாச்சார மாண்பினோடு பிணைக்கப்பட்டிருந்த ஐந்து நூற்றாண்டுகளான குட்டன்பெர்க் மற்றும் செர்வாண்டிஸ் சகாப்தத்தின் முடிவை கடைசியாகக் காண்கிறோமா மேலும் அதற்குப் பதிலாக நமக்கு முன்னால் தொலைக்காட்சியிலோ கணினித்திரையிலோ நேரிடையாகப் பார்க்கக்கூடிய விஷயங்களே கவனத்தைக் கோருபவையாக இருக்கும் டெட் டர்னர் மற்றும் பில் கேட்ஸ் இவர்களின் சகாப்தத்திற்குள் நுழைகிறோமா?

நான் வானொலியின் காலத்தில் வளர்ந்தேன். அந்த நாட்களில் காளைச்சண்டை வீரர் மனொலெத்தோவின் சிறப்பான செயல்திறனைப் பற்றி XEW அறிவிப்பாளர் சொல்லியது குறித்து நீங்கள் உறுதியாக இருக்க விரும்பினால் அதனை அறிந்துகொள்ளவும் உண்மைகளை உறுதிப்படுத்தவும் செய்தித்தாள்களுக்குச் செல்ல வேண்டும். ஆம் அது உண்மைதான். கூர்துடுபாவின் ராட்சஷன் காளையின் வாலையும் இரு காதுகளையும் வெட்டிவிட்டார். அது உண்மை, ஏனெனில் அது எழுதப்பட்டிருக்கிறது. இன்றைய உலகில் பாக்தாத்தின் மீது குண்டு வீசப்படுகையிலேயே நாம் நம் தொலைக்காட்சித் திரைகளில் பார்க்கிறோம். இதை எழுத்தில் உறுதியாக்கிக்கொள்வதற்கு எந்தத் தேவையுமில்லை. மேலும் இதனை அரசியல் பூர்வமாக புரிந்துகொள்வதற்குக்கூட எந்தத் தேவையுமில்லை. காட்சியின் எங்குமிருக்கும், உடனடித் தன்மையான இயல்புக்கு நன்றி, தொலைக்காட்சித் திரையில் ஒரு திகைப்பூட்டும் அற்புதம் நமக்கு உண்டு. மரித்தவர்கள்? நாம் அவர்களைப் பார்க்கவோ கேள்விப்படவோ இல்லை.

நமது காலத்தின் புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் விதி குழப்பமானது. அதற்கு இரண்டு எதிரெதிர் உதாரணங்களைத் தருகிறேன். ஒருவர் செய்யவேண்டியதெல்லாம், கதை சொல்வதிலும் பழைய கதைகளை நினைவுகூறுதலிலும் தொன்மங்களிலும் அதன் ஆண்கள் மற்றும் பெண்களின் பெருந்திறனை திகைப்புடன் கண்டடைய மெக்சிகோவின் பிரத்யேக நிலப்பரப்பினுள் நுழையவேண்டும். ஏழைகளாகவும் கல்வியறிவற்றவர்களாகவும் அவர்கள் இருக்கலாம், ஆனால் மெக்சிக இந்தியர்கள் கலாச்சார வறுமையை அனுபவிப்பதில்லை. டாராஹுமாரக்கள் மற்றும் ஹுயூச்சோல்கள், மெய்சேடெக்கோக்கள் மற்றும் சோட்ஸில்கள் இவர்கள் எல்லோரும் கனவுகள் மற்றும் கொடுங்கனவுகள், அண்டப் பேரழிவுகள், உன்னத மறுபிறப்பு இவற்றுடன் சேர்த்து அன்றாட வாழ்வின் மிகச்சிறிய விஷயங்கள் ஆகியவற்றை நினைவுகூறுதலிலும் கற்பனை செய்வதிலும் அசாதரணமான திறனைக் கொண்டிருக்கிறார்கள்.

சிறந்த மெக்சிக எழுத்தாளரும் இந்த பிரத்யேக நிலப்பரப்பின் வாழ்வுகளை நல்லெண்ணத்துடன் விரிவாக ஆவணப்படுத்தியவருமான ஃபெர்ணாண்டோ பெனிட்டேஸ் சொன்னார், ஒரு இந்தியன் மரிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு முழு நூலகமும் அவனோடு சேர்ந்து மரிக்கிறது. மறுமுனையில் அச்சமூட்டும் மீபுனைவுகளைக் கொண்ட ரே ப்ராட்பரியின் ஃபேரன்ஹீட் 451 இல் ஒரு சர்வாதிகாரம்- நிச்சயமாக இப்போது முழுமையடைந்துவிட்ட- அனைத்து நூலகங்களையும் சட்டவிரோதமாக்கி புத்தகங்களை எரித்தபோதும் ஒரு கடைசிக் குழுவின் ஆண்களையும் பெண்களையும் அவனோ அவளோ முழுமையாக ஒடிஸி(Odyssey), புதையல் தீவு (Treasure Island) அல்லது ஆயிரத்தொரு இரவுகளாய்(The thousand and One Nights) முழுமையாய் மாறும் வரை உலக இலக்கியத்தை மனனம் செய்வதை தடுக்க முடியாமலிருப்பதையும் காண்கிறோம்.

நாம் இங்கே இருவேறுபட்ட நூலகங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒன்று, ஒரு இந்தியனின் மூளையிலுள்ள முற்றிலுமான வாய்மொழிக் கலாச்சாரம். பின்நவீனத்துவ பின்கம்யூனிச, பின்முதலாளித்துவ மற்றும் அனைத்தையும் தாண்டியவொன்றின் நினைவிலுள்ள மற்றொன்று. ஆனால் அவையிரண்டும் எதைக் கொண்டிருக்கிறதென்றால் மெளனத்துக்கும் குரலுக்குமிடையே, நினைவுக்கும் மறதிக்குமிடையே, அசைவுக்கும் உறைதலுக்குமிடையே, வாழ்வுக்கும் மரணத்திற்குமிடையே தேர்வுசெய்யும் பொதுவான சாத்தியத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு துருவங்களுக்கு இடையிலான பாலமாக பேசப்பட்டதாகவோ அல்லது பேசப்படாததாகவோ, துயரகரமானதாகவோ அல்லது மகிழ்ச்சிகரமானதாகவோ, கண்ணுக்குத் புலனாகியோ அல்லது புலனாகமலோ, வாழ்க்கை தொடர்ந்து செல்லவேண்டுமா அல்லது முற்றாக முடிந்துவிடவேண்டுமா என்பதை ஒவ்வொரு எழுத்திலும் தீர்மானிக்கும் சொல்லே இருக்கிறது.

ஆனால் காணொளிக்கும் இதே விஷயத்தை நம்மால் சொல்லமுடியாதா? ஒரு கோயா சித்திரம், ஒரு கோயல்ஷாஹசி சிற்பம், ஒரு புனுவல் திரைப்படம் அல்லது ஆஸ்கர் நெய்மர் கட்டிடம் ஆகியவற்றால் நிகழ்த்தப்படும் முக்கியச் செயல்பாடுகள் ஒத்த தன்மையுடையதல்லவா? ஓவியம் ஒரு மனம் சார்ந்த விஷயமென்று லியானர்டோ சொன்னார். ஆயிரக்கணக்கான அலைவரிசைகளை கொண்டிருக்கும் தொலைக்காட்சி நெடுஞ்சாலைக்கும் இது உண்மைதானே? புத்தகங்களின் சாத்தியமான வாசகர்களை அதனிடமிருந்து களவாடி செர்வாண்டிஸ் மற்றும் குட்டன்பெர்க் காலத்திற்கான கல்லறையைத் தோண்டிய காட்சித் தொடர்பியலுடைய நவீன ஊடகம் என்று அழைக்கப்படுவதற்கும் இதேதானே உண்மை? நாம் பெறும் செய்திகள் முக்கியமானவையா என்று ஒருபோதும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ளாமல் நாமெல்லாம் மிக நன்றாக அறியத்தரப்பட்டிருக்கிறோமென்று பெருமிதமாய் உணரும்வகையில் அவ்வளவு அதீதமான தகவல்களினால் காட்சித் தொடர்பியல் நிரப்பப்படுகிறது. மேலும் உண்மையில் முக்கியமான செய்திதான் நமக்குக் கிடைக்காததா?

இந்த நூற்றாண்டு மற்றும் புத்தாயிரத்தின் திருப்பத்தில் புத்தகமும் நூலகமும் காட்சி ஊடகத் தொடர்பின் சாத்தியமான மற்றும் வெளிப்படையான குறைபாடுகளை நிரப்பக்கூடிய துணையின் கூறுகள் என்று அதற்கு ஆதரவாய் நான் வாதிடவில்லை. அதற்கு மாறாக நவீன காட்சித்தொடர்பு ஊடகம் புத்தகத்திற்கும் பொதுவாக வாசிப்புக்கும் தடையாக இருப்பதைவிடவும் அதற்கு உதவக்கூடிய ஒரு பரப்பை ஆராய விரும்புகிறேன். ஒன்று விஷயம் மட்டும் உண்மை. மல்லாந்த கிடையிலிருந்து எந்தவொரு விமர்சன மற்றும் படைப்பாக்க எதிர்வினையுமின்றி தொடர்ச்சியாகக் கிரகிக்கும் காட்சிகள் மூலம் ஏறக்குறைய பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்பட்டு, தரையோடு சேர்ந்து கிடக்கும் அசைவற்ற சோம்பேறியாய், முழுக்கவும் செயலற்ற முறையில் தொலைக்காட்சி பார்க்கும் பார்வையளர்களின் உலகப் பொதுச்சூழலை உறுதியாக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் திருச்சபை சிலுவையைப் போல் தொலைக்காட்சி ஆண்டெனா ஆகிவிட்ட எந்தவொரு வீட்டிற்கும் செல்வதுதான். ஒரு நல்ல புத்தகமோ ஓவியமோ அல்லது திரைப்படமோ நம்மிடமிம் கோருவது இதற்கு முற்றிலும் எதிரானது.

ஆனால் பிறகு திரும்பவும், மாணவர்களின் அறிவுப்பரப்பை விரிவுபடுத்த, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான தொடர்பாடலை வலுப்படுத்த மற்றும் நம் வீடுகளில் செயலற்ற முறையில் தகவல்களைப் பெற்றுச் செரிப்பதின் தீமையான பண்புகளை எதிர்கொள்ள காணொளித் தகவல் ஒரு அசாதரணமான கருவியாக இருக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் மாண்ட்டெரி தொழில்நுட்ப நிலையம் போன்ற கல்வி நிலையங்களுக்கு செல்லவேண்டும். காணொளிக் கலாச்சாரம் மற்றும் புத்தகக் கலாச்சாரம் ஆகியவை பரஸ்பரம் என்ன பரிமாறிக்கொள்ள முடியுமென்பதன் ஒவ்வொரு வாய்ப்பையும் சாத்தியத்தையும் நாம் ஆய்ந்து தீரவேண்டும்.

முதலில், உலகமெங்கும் காணொளிப் ”பார்வையாளர்களின்” எண்ணிக்கையில் மிகப்பெரிய வளர்ச்சி நிகழ்ந்திருக்கிறது. ஆனால் புத்தக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருப்பது மேற்சொன்ன உண்மையின் தவிர்க்கமுடியாத முழுமையான விளைவாக இருக்கவேண்டியதில்லை. இது தவிர்க்கமுடியாததல்ல, ஏனெனில் இந்த ஊடகம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதே பொருட்படுத்தத்தக்கது. அவற்றின் இருப்பே அச்சுறுத்தலல்ல. சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை இதற்கு முன்பு அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிராத ஏரளமானவர்களிடம் விளம்பரப்படுதியதன் மூலம் பாதுகாப்பதற்காக மட்டுமில்லாமல் புதிய தொழில்நுட்பங்களை இலக்கியப் பாரம்பரியத்தை அகலப்படுத்தவும் பயன்படுத்தவும் முடியுமென்பது அமெரிக்க செவ்வியல் தொகுப்புகள் மற்றும் அமெரிக்க நூலகத்தின் பதிப்பாசிரியர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. இதே வகையில் இசையில், மொசார்ட்டின் முழு வாழ்க்கையில் அடைந்ததைவிட இன்று டான் ஜோவனி ஒரே நாளில் நிறைய ரசிகர்களை அடைகிறது.

                                                    
                (கார்லோஸ் புயந்தஸின் கல்லறையில்- பாரிஸ், 2017)

அதைப் போல காணொளி ஊடகத்தின் துணையோடு போன பத்தாண்டில் ஜெபர்சன் முதல் ஃபாக்னர் வரை அவற்றின் முதல் தலைப்புகளில் அமெரிக்க செவ்வியல் இலக்கியம் முப்பது லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கின்றன.

மெக்சிக்க புரட்சியின் முதல் கல்விச் செயலாளரான ஹொசே வாஸ்கோன்செலஸ் அழகிய கட்டுமானத்தில் உலகளாவிய செவ்வியல் படைப்புகளை 1923 இல் பதிப்பித்தார். கல்வியறிவின்மை விகிதம் 90 சதவீதம் இருக்கும் ஒரு நாட்டில் ஏன் செர்வாண்டிஸைப் பதிப்பிக்கவேண்டுமென்று கேட்டு அவருடைய நாட்களில் மக்கள் விமர்சித்தார்கள். ஆனால் இன்றைக்கு பதில் தெளிவானது. ஆகவே, அதன் மூலம் கல்வியறிவற்றவர்கள் கல்வியைப் பெற்றவுடன் அவர்கள் சூப்பர்மேனுக்குப் பதிலாக டான் கிகோட்டேவை வாசிக்க முடியும்.

இதே வகையில், புதிய ஊடகங்கள், இருக்கின்றவர்களை திருடாமல் புதிய வாசகர்களை உருவாக்கமுடியும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இன்றைய புத்தக உலகம் இயங்கவேண்டும். இது நிகழ ஆரம்பத்திலிருந்தே வகுப்பறையிலிருந்து, இயன்றால் நம் வீடுகளிலிருந்தே இலக்கியம் மற்றும் காட்சிக்கலைகள் கணிக்கப்படும் விதத்திலேயே காணொளிக் காட்சியும் கணிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். தாங்கள் பெறும் காட்சிகளை எப்படி விமர்சனப்பூர்வமாக கவனிப்பது என்பதைப் பார்வையாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வளவு சிறந்த காணொளி வளங்களை உடைய சமூகம் இறுதியில் அதிக சிறப்புத்தேர்ச்சியையும் குறைந்த வணிகமயத்தையும் நோக்கி நகர்ந்து அதன் விளைவாக பதிப்பாசிரியர்கள் மற்றும் காணொளி பொதுச்சமூகம், வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கொண்ட ஒரு புதிய சமூகம் உதயமாகி அவர்கள் எல்லோரும், அதிகரிக்கும் வேறுபட்ட வரிசைகளிலான கலாச்சார வழங்கல்களிருந்து தேர்வு செய்ய இயலுமென்று நன்னம்பிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், விளம்பரப்படுத்துதல் விற்பனை மற்றும் புத்தகத்தேர்வில், கடந்தகாலத்திலிருந்து எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது. இன்றைய அத்தனை வழிமுறைகளைக் கொண்டு கொஞ்சமல்ல, நிறைய வாசகர்களை உருவாக்க இன்றைய வெகுமக்கள் ஊடகம் நிச்சயமாக உதவமுடியும். நான் மேலே குறிப்பிட்ட அந்த விமர்சனப்பூர்வமான பரிமாணத்தை காணொளி விசை சேர்த்துக்கொள்ள முடியுமானால பெரும் விளம்பரமும் உயர் இலக்கியத்தரமும் ஒன்றுக்கொன்று முரண்பட வேண்டியதில்லை.

ஆயினும் நாம் ஆபத்துகளை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. உடனடிப் போக்குகள் மற்றும் மோசமான ரசனை (என்றுமே இருக்கும் ஒன்று) ஆகியவற்றின் ஊக்குவிப்பாளராய் வணிகமயமாக்கல் வழங்கும் ஒப்பீட்டளவிளலான சிறிய ஆபத்துகளை விடவும் தெளிவற்ற ஒன்றை தெளிவானதாகக் காட்டுவதற்காக புதிய தொழில்நுட்பங்களைத் தவறாகப் பயன்படுத்தும் ஆபத்துகளை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. எப்போதுமே தேவை மற்றும் வாய்ப்புகளின் உலகமாக இருக்கும் மனித உலகில் விஷயங்களை அறிவுப்பூர்வமானதாக்க பிரதிகள் தேவை. -அப்படியில்லையெனில் விஷயங்கள் அர்த்தக்குறைவுபட்டிருக்கும். இந்தத் தேவை, உதாரணத்திற்கு பைபிளை உருவாக்கியிருக்கலாம், ஆனால் கூடவே மெயின் கேம்ப்ஃயும். லெளகீக நிறைவு, ஆன்ம உயிர்ப்பைத் திருப்திப்படுத்தாமல் விட்டுவிடக்கூடிய, திருப்தியற்ற மனங்கள் காத்திருப்பால் களைத்துவிடும் இலக்கற்ற சமூகங்களிலேயே, பெரும்பான்மை மக்களின் கவனத்தையும் கற்பனையையும் மிக வலிமையோடு நிறைய சித்தாந்தப் பிரதிகள் அடைந்திருக்கின்றன. தொலைக்காட்சித் திரையைக் கொண்டு ஹிட்லர் என்ன செய்திருக்கக்கூடும் என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.

இதுதான் ஆபத்து. வெகுமக்கள் ஊடகங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார சுயாட்சி இவற்றின் உலகளாவிய கிராமத்தில் வாழ்கிறோம், ஆனால் இந்த ஊடகத்தில் தான் பிரதிபலிக்கப்படுவதைக் காணமுடியாத, கிரகமெங்கும் திரைகளில் விளம்பரப்படுத்துதலின் சலனங்களால் பொறிக்கப்பட்ட கனியை அடைய டாண்டூலஸைப் போல வீணாக முயற்சிக்கும் ஒரு உள்ளூர் கிராமத்தின் அச்சங்களை வளர்த்தெடுக்கவும் ஏன் கிளர்ச்சியைக்கூட தோற்றுவிக்க முடியும்.

சர்வாதிகார கம்யூனிச எதிரியை இனிமேல் எதிர்கொள்ளத் தேவையில்லாத ஒரு ஏதேச்சதிகார முதலாளித்தும் உலகின் சில பகுதிகளை மோசமான வகையிலும் தெளிவற்றதாகவும் வட்டமிடுகிறது. இது புத்தகங்களுக்கும் வாசிப்புக்கும் மட்டும் அச்சுறுத்தலைக் கொடுக்கவில்லை, காணொளி ஊடகத்தின் சுதந்திர மற்றும் படைப்பூக்க பயன்பாட்டுக்கும் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது. மேலும் இந்த நச்சு விளைவை சமப்படுத்துவதற்கான ஒரே வழி இந்த ஊடகங்களின் பயன்பாடு குறித்த முழு ஜனநாயகப்பூர்வமான ஒரு பன்மைத்துவ அரசியல் சீர்த்திருத்தம். எல்லாவற்றுக்கும் மேலே பொதுக்கல்வித் திட்டங்கள், பொது நூலகங்கள் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் கிடைக்கப்பெறல், தரம், திறன் போன்றவற்றின் உயரிய அளவீடுகளைப் பூர்த்தி செய்யும் அனைத்துவிதமான படைப்பாக்க வெளிப்பாட்டிற்கான சுதந்திரம்.

கடந்த நூற்றாண்டெங்கும் ஒவ்வொரு லத்தீன் அமெரிக்க நாட்டிலும் நாம் எல்லோரும் எழுத்தாளரிடமிருந்து பதிப்பாசிரியருக்கு விநியோகஸ்தருக்கு புத்தக விற்பனையாளருக்கு பொதுமக்களுக்கு பிறகு எழுத்தாளருக்கென்று ஒரு மாபெரும் வட்டத்தின் உருவாக்கத்தில் பங்கெடுத்தும் சாட்சியாகவும் இருந்திருக்கிறோம். அதிக வணிக வளர்ச்சியும் குறைவான அறிவியக்க உந்துதலும் கொண்ட நாடுகளில் நிகழ்ந்ததைப் போலல்லாமல் மெக்சிக்கோவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் அலமாரிகளிலிருந்து என்றுமே மறையாத குறிப்பிட்ட புத்தகங்கள் இருக்கின்றன. நெரூடா மற்றும் போர்ஹெஸ், கொர்தசார் மற்றும் மார்க்குவெஸ்,வெலோஜோ மற்றும் ஆக்டோவியா பாஸ், அவை எப்போதுமே நம் புத்தகக்கடைகளில் இருக்கின்றன.


                                                    

அவர்கள் எப்போதுமே இருக்கின்றார்கள் ஏனெனில் அவர்களுடைய வாசகர்வட்டம் என்றும் குறையாமல் தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படுகிறது. பதினைந்து மற்றும் இருபத்தைந்து வயதுக்கு இடைப்பட்ட இவர்கள் இளைய வாசகர்கள். உழைக்கும் வர்க்கம், மத்தியதர வர்க்கம் அல்லது இரண்டிற்கும் இடைப்பட்ட ஏதோவொரு புள்ளியைச் சேர்ந்த ஆணும் பெண்ணுமான இவர்கள்தான் மாற்றத்தைச் சுமப்பவர்கள் மற்றும் நமது கண்டத்தின் நம்பிக்கைகள்.

இன்றைக்கு 1980லிருந்து லத்தீன் அமெரிக்காவால் தாங்கிக்கொள்ளப்படும் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகள்தான் சமூகத்தொடர்ச்சியின் பிரதிபலிப்பான வாசிப்புமரபின் தொடர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. பல்வேறு தலைமுறைகளைச் சார்ந்த இளம் லத்தீன் அமெரிக்கர்கள் தாங்கள் யாரென்பதை கேப்ரியல் மிஸ்ட்ரெல், இவான் கார்லோஸ் ஒனெட்டி அல்லது ஹோர்ஹெ அமெதா போன்றோரை வாசித்ததின் மூலம் கண்டறிந்தார்கள். இந்த வாசிப்பு வட்டத்தில் ஒரு உடைப்பு என்பது பல இளைய தலைமுறையினர்க்கு அடையாளமிழப்பை குறிக்கும். துயரம் குற்றம் மற்றும் புறக்கணிப்பின் பாதாள உலகினுள் தொலைந்து போவதற்காகவே நூலகங்களையும் புத்தகங்களையும் விட்டு விலகும் அவர்களை நாம் கண்டனம் செய்யாமலிருப்போம்.

இழந்த நகரத்தின், சேரியின், விளிம்புநிலை சுற்றத்தின் அல்லது புறநகர் குடிசைப்பகுதியின் குழப்பத்தில் எந்தவொரு எதிர்கால இளம் வாசகனும் வீணாவதை அனுமதிக்காமல் இருப்போம்.

நான் விவரிக்கும் பரப்பில் நூலகமென்பது ஒரு விலைமதிப்பில்லாத நிறுவனம். ஏனெனில் நாகரீகமான சூழலில், நமது தலைகளுக்கு மேலே பாதுகாப்பான கூரையோடு மானுடத்தின் சொல்வளங்களை மிக அருகில் காண அனுமதிக்கிறது

ஆனால் அங்கே இருக்கும்போது, அழகு அமைதி விருந்தோம்பல் மற்றும் நூலத்தின் தனித்தன்மையான வாசனை ஆகியவற்றால் சூழப்பட்டிருந்தபோதும் தணிக்கைச் சுழல்கள், துன்புறுத்தல் மற்றும் சகிப்பின்மை ஆகியவை எப்போது வேண்டுமானாலும் எழுதப்பட்ட சொல்லை அழிக்கக்கூடும் என்ற உண்மையின் மீதான பார்வையை இழந்துவிடக்கூடாது. சல்மான் ருஷ்டிக்கு எதிரான ஃபத்வா இதற்குச் சான்று.

1920 களில் ஹொசே வஸ்கோன்செலஸால் தொடங்கப்பட்ட கல்வித்திட்டம் அன்றைய நாட்களின் நிலவுடமை தன்னலக் குழுக்களால் மூர்க்கமான எதிர்ப்பைச் சந்தித்தது. எழுதவும் படிக்கவும் தெரிந்த தொழிலாளர்களை ஹெசிண்டா உரிமையாளர்கள் விரும்பவில்லை. அடிமைத்தன்மைமிக்க, அறியாமைமிகுந்த சார்புத்தன்மை உடைய தொழிலாளர்களையே அவர்கள் விரும்பினார்கள். கிராமப்புறங்களுக்கு அனுப்பப்பட்ட பல ஆசிரியர்கள் மரங்களில் தூக்கிலிடப்பட்டார்கள். மற்றவர்கள் அங்கஹீனத்தோடு திரும்பினார்கள்.

வஸ்கோன்செலஸின் நாயகப்பூர்வமான கல்வித்திட்டம் எந்தவொரு முரண்பாடுமில்லாமல் உயர்கலாச்சாரத்தை நோக்கிய இணையான போக்கினோடு பொருந்தியது. 1920 இல் மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் தலைவராக அழகிய கட்டுமானத்தில் உண்மையான நூலக மற்றும் கலை ஆபரணங்களின் தொகுப்பான ஹோமர் மற்றும் விர்ஜில், ப்ளேட்டோ மற்றும் புளோட்டோனிஸ், கதே மற்றும் தாந்தே ஆகியோருடைய நூல்களின் அச்சாக்கத்திற்கு உத்தரவிட்டார். ஆனால், அது கல்வியறிவற்ற மூர்க்கமான விளிம்பு நிலை மக்களுக்கா? ஆமாம். மிகச்சரியாக: பல்கலைக்கழகத்தில் இந்த செவ்வியல் பிரதிகளின் பதிப்பு ஒரு நம்பிக்கையின் செயல்பாடாகும். அதுவொரு பெரும்பான்மை மெக்சிகர்களுக்கு சொல்லும் வழிமுறையாகும்: ஒருநாள் நீங்கள் எல்லோரும் சமூகத்தின் விளிம்பிலல்ல, மையத்திலிருப்பீர்கள். ஒருநாள் புத்தகத்தை வாங்குவதற்கு தேவையான வளங்களைக் கொண்டிருப்பீர்கள். ஒருநாள் உங்களால் அந்த விஷயங்களைப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் இயலும், இன்றைக்கு நமது நாட்களில் அனைத்து மெக்சிகர்களும் புரிந்துகொள்ளும் விஷயங்களை.

புத்தகம், அது வணிகமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கையிலும் வணிகத்தை மீறட்டும். 

புத்தகம், சமகால உலகின் தகவல் தொழில்நுட்பத்தின் மிகுதி மற்றும் எளிதாக்கத்தோடு போட்டியிடுகையில்கூட தகவல்களின் மூலம் என்பதைத் தாண்டிய ஏதோவொன்றாக நிற்கட்டும்.

முற்றான தகவல்களால் கற்றுக்கொடுக்காத முடியாத விஷயங்களை நம் எல்லோருக்கும் புத்தகங்கள் கற்றுக்கொடுக்கட்டும். ஒரே நேரத்தில் நம்மைப் பற்றிய நம் புரிதல், நமக்கு வெளியே இருக்கும் புற உலகம் மற்றும் நகரமும் மக்களும் ஒன்றிணைந்த சமூக உலகத்தைப் பற்றிய நம் புரிதல்களை விரிவாக்கிக்கொள்ள ஒரு புத்தகம் கற்றுக்கொடுக்கிறது.

வேறெந்த தொடர்பு வடிவமும், கொண்டிராத விருப்பத்தையும் திறனையும், காட்ட இயலாததையும் ஒரு புத்தகம் நமக்கு காட்டுகிறது: நம்மைப் புரிந்துகொள்வதில் நம் புலன்களின் முழுமையான ஒருங்கிணைவு, ஆகவே இந்த உலகில் நமக்குள்ளும் மற்றவர்களுடனும் முழுமையான புரிந்துணர்வு கொண்டவர்களாக நாம் ஆகக்கூடும்.

விருப்பத்தை அனுபவமாகவும் அனுபவத்தை விதியாகவும் மாற்றும் சாத்தியங்களின் தொகுப்பாகவும் நமது வாழ்வுகள் இருக்கின்றன என்பதை புத்தகங்கள் சொல்கின்றன.

மற்றமைகள் இருக்கின்றன, மற்றவர்களுங்கூட இருக்கின்றார்கள் என்று புத்தகங்கள் சொல்கின்றன. தன்னுள் தானாக மட்டும் நம் அடையாளம் இருப்பதில்லை, ஆனால் நமது வாழ்வுகளுக்கு எப்போதுமே மிதமிஞ்சியிராத மற்றவர்களின் மேல் கவனத்தைச் செலுத்தவேண்டிய கட்டாயமான தார்மீகக் கடமையை நமது அடையாளம் கொண்டிருக்கிறது.

மொழியின் வழியாக ,புலன்களுக்கான கல்விதான் புத்தகங்கள்.

புத்தகம், தொட்டுணரக்கூடியது, நுகரக்கூடியது, காணக்கூடியது மற்றும் அது நம்முடைய சொந்த இல்லங்களின் கதவை நம்மை உலகத்தோடு இணைக்கும் அன்புக்காகத் திறக்கும் நட்பின் நிமித்தமான செயல்பாடு. ஏனெனில் நாம் உலகத்தின் சொற்களைப் பகிர்ந்துகொள்கிறோம்.

ஒரு நாட்டின் நெருக்கமாக, நமது காலம் , நமது கடந்த காலம் மற்றும் நினைவுகூரப்படும் எதிர்காலம் குறித்து நாமாகவே உருவாக்கிக்கொள்ளும் தவிர்க்கவியலா கருத்துக்களாக, காலங்களெங்கும் அனுபவிக்கத்தக்க மொழிசார்ந்த நினைவாக, இங்கு மற்றும் இப்போதின் விருப்பமாக, புத்தகம் இருக்கின்றது.

இப்போது, முன்னெப்போதையும்விட, ஒரு எழுத்தாளர், ஒரு புத்தகம் மற்றும் ஒரு நூலகம் உலகத்திற்கு ஒரு பெயரையும் அதிலிருக்கும் மனிதர்களுக்கு குரலையும் கொடுக்கின்றனர்.

இப்போது முன்னெப்போதையும்விட, ஒரு எழுத்தாளர், ஒரு புத்தகம் மற்றும் ஒரு நூலகம் நமக்குச் சொல்கின்றார்கள்: விஷயங்களுக்குப் பெயரிடாவிட்டால் நமக்கு ஒன்றை யாரும் தரமாட்டார்கள். நாம் பேசாவிட்டால் நிசப்தம் தன் கரிய ஆளுகையை நம்மீது விதிக்கும்.

-( “Reading" என்ற தலைப்பிலான புயந்தஸ் கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

No comments: