May 11, 2018

நாவலின் தொடக்கமும் முடிவும்-மிலோரட் பாவிச்

                                    

தன்னுடைய முதல் நூறு வாசகர்களின் முகங்களைக் காண போர்ஹெஸ் ஆவலாக இருந்தார். என்னுடைய ஆவல் வேறுபட்டது. கடைசி நூறு வாசகர்களின் முகங்களை அல்லது பரிதாபகரத்தைக் குறைவுபடுத்திச் சொல்ல வேண்டுமெனில் நாவல் வடிவத்தின் கடைசி நூறு வாசகர்களின் முகங்களைக் கண்டுவிடக்கூடிய சவாலின் முன் நாமெல்லோரும் நிற்கிறோமில்லையா?

அதற்குப் பதிலளிக்க, எப்போது எங்கே, பிரதியின் எப்பகுதியில் ஒரு நாவல் வாசிப்பு தொடங்கி எங்கே எப்போது அது முடிவடைகிறது என்ற கேள்வியை வினவுவோம். நாவலின் தொடக்கம் மற்றும் முடிவு, வாசிப்பின் தொடக்கம் மற்றும் முடிவு ஆகியவை ஜாஸ்மினா மிகாஜ்லோவிக்கால் ”வாசிப்பும் பாலுறவும்” என்று அழைப்படுவதால் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? கட்டாயமாக நாவல் ஒரு முடிவைக் கொண்டிருக்க வேண்டுமா? மேலும் ஒரு இலக்கியப் படைப்பினுடைய, நாவலுடைய முடிவு என்பது உண்மையில் என்ன? மேலும் அது தவிர்க்கவியலாதவண்ணம் ஒன்றே ஒன்றா? ஒரு நாவலோ நாடகமோ எத்தனை விதமான முடிவுகளைக் கொண்டிருக்க முடியும்?

அந்தக் கேள்விகளுக்கான சில பதில்களை என் புத்தகங்களை எழுதும்போது நான் கண்டறிந்தேன். கலைகளானது ”தலைகீழாக மாற்றத்தக்கவை” மற்றும் “தலைகீழாக மாற்றவியலாதவை”யாக இருக்கின்றன என்ற புரிதலுக்கு வெகு முன்னமே வந்திருந்தேன். கட்டிடக்கலை, சிற்பம் அல்லது ஓவியம் போன்ற சில கலைகள் பார்வையாளருக்கு தம் சுய விருப்பத்தின் அடிப்படையில் ஒரு படைப்பை வெவ்வேறு பக்கங்களிலிருந்து அணுக அல்லது அதனைச் சுற்றி வந்து இடம், பார்வைக்கோணம், திசை ஆகியவற்றை மாற்றுவதன் மூலம் செம்மையான பார்வையை அளிக்கும் வகையில் இருக்கின்றன. இசை, இலக்கியம் போன்ற மற்ற தலைகீழாக மாற்றவியலாத கலைகள் எல்லாம் தொடக்கத்திலிருந்து முடிவை நோக்கி, பிறப்பிலிருந்து இறப்பை நோக்கி நகரும் ஒருவழிச்சாலையைப் போலிருக்கின்றன. தலைகீழாக மாற்றவியலாத கலையான இலக்கியத்தை, தலைகீழாக மாற்றத்தக்க ஒன்றாக உருவாக்கவே நான் என்றும் விருப்பப்பட்டிருக்கிறேன். ஆகவே என் நாவல்கள் தொடக்கத்தையும் முடிவையும், அந்தச் சொல்லின் பாரம்பரியமான பொருளில் கொண்டிருக்கவில்லை.

உதாரணமாக கசார்களின் அகராதி (Dictionary of Khazars) லட்சம் சொற்களைக் கொண்ட ஒரு அகராதி நாவல். மேலும் நெடுங்கணக்கின்படி வெவ்வேறு மொழிகளில் நாவல் வெவ்வேறுவிதமாக முடிவடைகிறது. சிரிலிக் நெடுங்கணக்கில் அச்சிடப்பட்ட கசார்களின் அகராதியின் மூலப்பிரதி “sed venit ut illa impleam et confirmem, Mattheus" என்ற லத்தீன் மேற்கோளுடன் முடிவடைகிறது. ”என்னில் ஒன்றல்ல, மூன்று பயங்கள் இருப்பதை நான் உடனடியாக கவனித்தேன்” என்று என் நாவலின் கிரேக்க மொழிபெயர்ப்பு முடிகிறது. ஆங்கில, யூத, ஸ்பானிய மற்றும் டேனிஷ் மொழிபெயர்ப்புகள் இப்படி முடிகின்றன: “பிறகு வாசகன் திரும்பும்போது முழு நடைமுறையும் தலைகீழாக்கப்படும். மேலும் இந்த வாசிப்பு நடையிலிருந்து விரிவாக்கிக்கொண்ட எண்ணப்பதிவுகளின் அடிப்படையில் திபோன் மொழிபெயர்ப்பைத் திருத்துவார்”. லத்தீன் நெடுங்கணக்கில் அச்சிடப்பட்ட செர்பிய மொழிபெயர்ப்பு, நார்ட்ஸ்டெட்ஸால் பதிப்பிக்கப்பெற்ற ஸ்வீடிய மொழிபெயர்ப்பு, ஹாலந்து, செக் மற்றும் ஜெர்மானிய மொழிபெயர்ப்புகள் பின்வரும் சொற்றொடருடன் முடிகின்றன. ”அந்தப் பார்வை கோயனின் பெயரைக் காற்றில் எழுதி, எரிதிரியைப் பற்றவைத்து வீட்டிற்கான அவள் பாதைக்கு ஒளியூட்டியது”. ஹங்கேரிய மொழிபெயர்ப்பு இந்தச் சொற்றொடருடன் முடிவடைகிறது ”உன் இயல்பு எப்படியிருக்குமென்பதற்காக அவன் வெறுமனே உன் கவனத்தை ஈர்க்க விரும்பினான்”. இத்தாலிய மற்றும் கேட்டலோனியன் மொழிபெயர்ப்புகள் இப்படி முடிகின்றன: “வெகுநாட்களுக்கு முன்னரே அது இல்லாமல் போய்விட்டாலும் இந்த நாளுக்கு சசார் ஜார் மெய்யாகவே பணியாற்றுகிறார்”. டோக்கியோ ஷோகன் ஷா வால் பதிப்பிக்கப்பட்ட ஜப்பானிய மொழிபெயர்ப்பு இந்தச் சொற்றொடருடன் முடிவடைகிறது: “அந்தச் சிறுமி ஒரு வேகமான விரைவான மகளைப் பெற்றெடுத்தாள்-அவள் மரணம்; அந்த மரணத்தில் மோராகவும் வெண்ணெயாகவும் அவள் அழகு பிரிவுபட்டிருந்தது. மேலும் அடியில் நாணலின் வேர்களைக் கொண்டிருந்த ஒரு வாய் காணப்பட்டது.”

என்னுடைய இரண்டாவது நாவல், தேயிலையால் வரையப்பட்ட நிலவெளி (Landscape painted with Tea) (குறுக்கெழுத்துப் புதிர்களுடன் ஒப்பிடத்தக்கது) செங்குத்தாக வாசிக்கப்பட்டால் கதாப்பாத்திரங்களின் சித்திரங்களை முதல் அமைப்பினுள் கொண்டு வருகிறது. அதே அத்தியாயங்கள் கிடைமட்டத்தில் வாசிக்கப்பட்டால் (மரபான வாசிப்பு முறையில்) நாவலின் மையக்கருவும் வளர்ச்சியும் முதல் அமைப்பிற்குள் கொண்டுவரப்படுகின்றன. நாவலின் தொடக்கம் மற்றும் முடிவுகுறித்து இதிலும் விவாதிப்போம். முதலில் இந்த நாவல் பெண் வாசகரால் வாசிக்கப்பட்டால் ஒரு விதத்திலும் வாசகர் ஆணாக இருக்கும்பட்சத்தில் இன்னொரு விதமாகவும் முடிவடைகிறது. இந்த நாவல் செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக வாசிக்கப்படுவதைச் சார்ந்து இந்த நாவலின் தொடக்கங்களும் முடிவுகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று நிச்சயமாக வேறுபடும். தேயிலையால் வரையப்பட்ட நிலவெளி கிடைமட்டமாக வாசிக்கப்பட்டால் பின்வரும் தொடக்கத்தைக் கொண்டிருக்கும். ”வினியோகிக்கப்படாத எந்தவொரு அடியும் எப்பொழுதும் கல்லறைக்கு கொண்டு செல்லப்படக் கூடாது.” இதே முறையில் வாசிக்க விரும்புவர்களுக்கு பின்வரும் சொற்றொடருடன் நாவல் முடிகிறது: ”சில காலத்திற்கு ராசின் என்ற பெயரைக் கொண்டிருந்த அத்தானஸிஜி ஸ்விலாருக்கு என்ன நேர்ந்ததென்பதை நினைவில் கொண்டிருக்காத அளவிற்கு வாசகன் முட்டாளாக இருக்க மாட்டான்” . இந்த நாவல் செங்குத்தாக வாசிக்கப்பட்டால் இந்தச் சொற்றொடருடன் தொடங்குகிறது: ”நம் நண்பர், பள்ளித்தோழர், புரவலர், சிற்பியும் ஒரு காலத்தில் நம் தலைமுறையின் மிக அழகிய பெண்களின் பின்புறங்களில் தன் நாவால் தன் பெயரைச் பொறித்த அதானஸ் பியோதோரோவிட்ச் ராஸின் (எ) அத்தானஸ் ஸிவிலாருக்கான இந்த நற்சான்றைத் தயாரிப்பதில்...”. இதே வகையில் வாசிக்கப்பட்டால் பின்வரும் சொற்றொடருடன் இந்த நாவல் முடிகிறது: ”நான் தேவலாயத்திற்குள் ஓடினேன்.”

நாவல்-அகராதி மற்றும் நாவல்-குறுக்கெழுத்துப் புதிருக்குப் பிறகு தலைகீழாக மாற்றக்கூடிய கலைகளின் வரிசைக்கு நாவலை மாற்ற நான் மீண்டும் முயற்சித்தேன். அது “ காற்றின் உட்பக்கம்”(The Innder side of the wind). ஒரு திரவக்கடிகார நாவல். பிரபல தொல்லியலாளர் டிராகஸ்லோவ் ஸ்ரோஜிவிக் ஒருமுறை சொல்லியது போல் அது இரண்டு முன் பக்கங்களைக் கொண்டிருக்கிறது மேலும் அதை ஒன்றரை முறை வாசிப்பது சிறப்பானது. இந்தப் புராணீக கதையில் காதலர்களான ஹீரோவும் லியாண்டரும் சந்திக்கும் மையப்பகுதியில் முடிவு இருக்கிறது. லியாண்டரின் பக்கத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தால் நாவலின் தொடக்கம் இப்படி இருக்கும்: ”எல்லா எதிர்காலங்களும் ஒரு நற்குணத்தைக் கொண்டிருக்கின்றன: நீங்கள் கற்பனை செய்யும் விதத்தில் அவை என்றுமே தோற்றமளிப்பதில்லை.” புத்தகத்தின் அந்தப்பக்கத்தில் நாவலின் முடிவு பின்வருமாறு இருக்கும். “பயங்கரமான வெடிப்பில் சிதறிய கோபுரங்கள் லியாண்டரின் உடல் அழிந்த தீப்பிழம்புகளை தம்மோடு காற்றில் எடுத்துச்சென்றபோது மணி பனிரெண்டு ஐந்தாகியிருந்தது.” ஹீரோவின் பக்கத்திலிருந்து காற்றின் உட்பக்கம் நாவலை வாசித்தால் புத்தகத்தின் தொடக்கம் இப்படி இருக்கும்: “வாழ்வின் முற்பகுதியில் பெண், குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள், இரண்டாவதில் அவள் தன்னையோ தன்னைச் சுற்றியிருப்பவர்களையோ கொன்று புதைக்கிறாள்.” ஹீரோவின் பக்கத்திலிருந்து வாசிக்கத் தொடங்கியிருந்தால் நாவலின் முடிவு இப்படி இருக்கும்: ”குழப்பத் திகைப்படைந்த லெப்டினண்டின்படி மூன்றாம் நாள் மாலை வரையில், ஒரு ஆணுடையதைப்போல பயங்கரமான மற்றும் ஆழமான குரலில் ஹீரோவின் தலை அலறவில்லை”

என் அண்மைய புத்தகம், கான்ஸ்டாண்டிநோபிளில் கடைசிக் காதல்(Last Love in Constantinople), உண்மையில் மேஜர் ஆர்கானாவின் அட்டைகளுடன் தொடர்புடைய 22 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு டேரட் நாவலாகும். அறியப்பட்டதுபோல் டேரட் சீட்டுகளின் உதவியுடன் எதிர்காலத்தை முன்கூற முடியும். மேலும் கான்ஸ்டாண்டிநோபிளில் கடைசிக் காதல் நாவல் டேரட் சீட்டுகளைப் போலவே தம்மிடையே பல குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன. இன்னொரு விதமாகச் சொன்னால் இந்த நாவல் டேரட் குறிசொல்வதற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கின்றது. மேலும் நிறைய வெவ்வேறு விதங்களில் இதனைப் பயன்படுத்தமுடியும். ஆனால் இந்த நாவல் தன் நாயகர்களுக்கு குறி சொல்வதில்லை. மாறாக தன் வாசகர்களுக்குச் சொல்கிறது. டேரட் சீட்டுகளின் பொருளை நாவலின் அத்தியாயங்களில் (தனித்தனி சீட்டுகளில் இருப்பதுபோல் அதே தலைப்புகளையும் எண்களையும் கொண்டிருக்கும்) வாசிக்க முடியும். குறி சொல்லும்போது சீட்டுகளின் பொருளாக நாவல் அத்தியாயங்களை வாசிக்கமுடியும். சீட்டுக்களைப் பொருட்படுத்தாமல் இந்த நாவலையே பயன்படுத்த முடியும். மேலும் உள்ளடக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் டேரட்டுக்கான வழிகாட்டுதலின்படி நீங்கள் முதலில் அட்டைகளை வீசிவிட்டு பின்னர் மேசையில் அட்டைகள் விழுந்திருக்கும் வரிசையில் நாவலின் அத்தியாயங்களை வாசிக்க முடியும்.ஆகவே ஒற்றை வழியில் மட்டுமல்லாது, ஒன்றிலிருந்து மற்றொன்று தொலைவிலிருக்கும் நிறைய வழிகளின் மூலம் வெளியே வரமுடியும் என்பதை விளக்கப்பட்ட நாவல்களிலிந்து தீர்மானித்துக் கொள்ளலாம்.

வீட்டிற்கும் ஒரு புத்தகத்திற்கும் இடையேயான வித்தியாசத்தை மெல்ல என் பார்வையிலிருந்து இழக்கிறேன். மேலும் இதுதான் இந்தப் பிரதியில் ஒருவேளை நான் சொல்லவேண்டிய மிக முக்கியமான விஷயமாக இருக்கலாம். ஆனால இந்த நாட்களில் அடிக்கடிக் கேட்கப்படும் ஒரு பொதுவான கேள்விக்குத் திரும்புவோம். நாவல் வடிவத்தின் முடிவு நெருங்கிக்கொண்டிருக்கிறதா? நாவலுக்கான முடிவு நமக்கு முன்னாலிருக்கிறதா அல்லது ஏற்கனவே நமக்குப் பின்னாலிருக்கிறதா. நாம் ஏற்கனவே வரலாற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில் வாழ்கிறோம் என்ற சிந்தனையைப் பினபற்றுபவர்களிடம் கேட்கவும். மேலும் இது பின்ரோமானிய காலம் கூடவா? கவனிக்கக்கூடச் செய்யாமல் முடிவைக் கடந்துவிட்டு ஏற்கனவே முடிந்துவிட்ட ஓட்டத்தில் இப்போது நாமெல்லோரும் ஒன்றாக ஓடுகிறோமா? அண்ட விகிதாச்சாரத்தின் ஏதோவொரு அணுப் பிரளயத்தால் நாம் தாக்கப்படாதவரை அவ்வாறாகச் சொல்லமுடியாது என்று நம்புகிறேன். ஒரு வகையான வாசிப்புமுறையை கைவிடும் நிலையிருக்கிறோம் என்று சொல்லவே விரும்புகிறேன். நாவலை நாம் வாசிக்கும் முறைதான் நெருக்கடியிலிருக்கிறது, நாவல் வடிவமல்ல. ஒருவழிச் சாலை வகையான நாவல் நெருக்கடியிலிருக்கிறது. கூடவே வேறொன்றும் நெருக்கடியிலிருக்கிறது. அது நாவலின் வரைகலைப் பார்வை. அதாவது புத்தகம் நெருக்கடியிலிருக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா திசைகளிலும் நகரும் நமது மனதைப் போலவே நாவலும் நகர முடியும் என்பதை அதிபுனைவு நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. மேலும் ஊடாடக்கூடியதாக இருப்பதற்கும்.

ஒரு நாவலை உருவாக்கும் செயல்முறைமையில் வாசகரின் பொறுப்பை அதிகரிப்பதன் மூலம் நாவல் வாசிப்பு முறையை மாற்ற முயற்சித்தேன்( உலகில் திறமையான ஆசிரியர்களையும் விமர்சகளையும்விட அதிக எண்ணிக்கையில் திறமிகுந்த வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது) நாவலில் மையக்கருக்கள் குறித்தத் தேர்வுகளையும், வாசிப்பு எங்கு தொடங்கி எங்கு முடிகிறது போன்ற சூழலின் வளர்ச்சி குறித்த முடிவுகளை நான் அந்த வாசகர்களிடமே விட்டுவிட்டேன், பிரதான கதாப்பாத்திரங்களின் தலைவிதி குறித்த முடிவைக்கூட. ஆனால் வாசிப்புமுறையை மாற்ற வேண்டிய காரணத்திற்காக நான் எழுதும் முறையை மாற்ற வேண்டியிருந்தது. ஆகவே நாவலின் வடிவம் சார்ந்த பேச்சாக மட்டும் இந்த வரிகள் புரிந்துகொள்ளப்படக் கூடாது. அதே நேரத்தில் இது உள்ளடக்கம் சார்ந்த பேச்சுங்கூட. உண்மையில் நாவலின் உள்ளடக்கமானது இரண்டாயிரம் வருடங்களாக ப்ரோக்ரஸிட்டின் படுக்கையைப் போல வடிவத்தின் கருணையற்ற மாதிரிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு முடிவு வந்துவிட்டதாகவே நம்புகிறேன். ஒவ்வொரு நாவலும் தனக்கே உரித்தான வடிவத்தை தேர்ந்தெடுக்கவேண்டும், ஒவ்வொரு கதையும் தனக்குத் போதுமான உடலைத் தேடிக் கண்டடைய முடியும்... அது இயலுமென்பதை கணினி நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. ஆனால் நீங்கள் கணினியை விரும்பவில்லையென்றால் கட்டிடக்கலை நமக்கு என்ன கற்றுக்கொடுக்கிறது என்பதை ஒரு பார்வை பாருங்கள்.

கட்டிடக்கலை நமது வாழ்க்கைமுறையை மாற்றுகிறது. ஒரு இலக்கியப்படைப்பு, அதனை ஒரு வீடாக நாம் பரிசீலித்தால் நமது வாழ்க்கைமுறையை மாற்றும். ஒரு நாவல் வீடாகவும் இருக்கமுடியும். குறைந்தபட்சம் கொஞ்ச நாட்களுக்கேனும்.

(-Beginning and the end of the Novel என்ற பாவிச் கட்டுரையின் தமிழாக்கம்)

No comments: