லத்தீன் அமெரிக்க நாவல்களைப் பொறுத்தவரை ஏராளமான பெயர்கள் முப்பதாண்டுகளாக தமிழில் புழங்குகின்றன. அவர்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு தமிழ் வாசகர்கள் நகரவேண்டும் என்ற குரல்கள் தற்போது ஒலிக்கின்றன. சரிதான். போர்ஹேஸ், மார்க்கேஸ் போன்றோரின் படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டு அவர்கள் தமிழர்களாகிவிட்டனர். ஃபுயண்டஸின் நாவலை சமீபத்தில் ஸ்ரீதர் ரங்கராஜ் மொழியாக்கம் செய்திருக்கிறார். மரியோ வர்கஸ் யோசாவின் நாவல்கள் எதுவும் தமிழில் மொழியாக்கம் செய்யப்படாமலே அவர் பெயர் அறிந்த தன்மையுடையதாக மாறிவிட்டது. யோசாவின் நாவல்களில் The Feast of the Goat, The time of the Hero மற்றும் The way to Paradise ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். ஆனால் இக்குறிப்பு ஒரு பெரு நாட்டு நாவலைப் பற்றியது என்பதால் தவிர்க்க முடியாமல் யோசாவை நினைக்க வேண்டியிருக்கிறது.
சமகால லத்தீன் அமெரிக்க நாவலாசிரியர்கள் குறித்து இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளரான எடித் க்ராஸ்மென்னின் ஒரு நேர்காணலின் வழியே பெரு நாட்டு நாவலாசிரியரான ஸாண்டியாகோ ரோன்கேக்லியோலோ (Santiago Roncagliolo) அறியக்கிடைத்தார். அவருடைய Red April நாவலை க்ராஸ்மென் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
பெருவின் ஆண்ட்ஸ் மலைத்தொடரை ஒட்டிய அயக்கூச்சா நகரத்தில் கார்னிவல் மற்றும் புனித வார திருவிழா தருணமான மார்ச்/ஏப்ரல் மாதங்களில் நடக்கும் ஒரு கொலை நடக்கிறது. பின்னர் அந்த நிகழ்வு தொடர்கொலைகளாக மாறுகின்றது. பெருவில் சட்ட விசாரணை என்பது அரசு வழக்குரைஞர், காவல்துறை, ராணுவம் மற்றும் நீதிமன்றம் என்ற நான்கு அடுக்குகளைக் கொண்டிருந்தாலும் 1980 களில் இருந்து இயங்கிய மாவோயிசக் குழுவான சாண்டரோ லூமினோசோ( Sendero Luminoso-Shining Path) ஒடுக்கப்பட்ட பின்னரும் தொடரும் கண்காணிப்புக் காலத்தில் ராணுவமே உயர் அதிகாரத்தோடு கொலைகள் போன்ற குற்றச் செயல்பாடுகளை விசாரிக்கும் அமைப்பாக இருக்கிறது.
குற்றவழக்குகளில் விசாரனையை அரசு வழக்குரைஞரும் காவல்துறையும் இணைந்து செய்யவேண்டியதே முறையாக இருந்தாலும் மேற்சொன்ன காரணத்தினால் அரசு வழக்குரைஞர்களுக்கு குடும்ப வன்முறைகள் போன்ற எளிய வழக்குகளே வழங்கப்படும் சூழலில் முதன்முதலாக ஃபெலிக்ஸ் சக்கல்தானா சல்தீவாருக்கு இந்தக் கொலைவழக்கு விசாரனைக்கு அளிக்கப்படுகிறது. துல்லியமான விதத்தில் விசாரணை அறிக்கைகள் எழுதுவதில் அபாரமான தேர்ச்சியுடைய சக்கல்தானா தன் உயிருக்கு ஆபத்து மிகுந்த விசாரனைச் செயல்பாட்டின் இறுதியில் இடதுசாரிக் குழுக்களை ராணுவம் ஒடுக்கிய காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்களின் தடயங்களை அழிக்க முயல்வதே கொலைகளுக்கான காரணமாகக் கண்டறிகிறான்.
அரசியல், அதிகாரம், இடதுசாரி போராளிக் குழுக்கள், பெருவின் மண்ணின் மைந்தர்களாக இருக்கக்கூடிய பல இனக்குழுக்கள் என்ற பின்புலத்தில் ஒரு துப்பறியும் கதையாக இந்த நாவல் அமைந்துள்ளது. நாவலின் நாயகனான அரசு வழக்குரைஞர் சக்கல்தானா மிகத் துயரமான பால்யத்தையும் இறந்துபோன தாயோடு தொடர்ச்சியாக கற்பனையில் உரையாடும் உளவியல் சிக்கல்கள் உடையவனாகவும் இருக்கிறான். சட்டத்தின் மீது பெரிய நம்பிக்கையுடைய அவன் இக்கொலைகள் குறித்த விசாரனையின் பாதையில் அமைப்புகளோடு ஏற்படுத்திக் கொள்ளும் சமரசங்களினாலும் தன் காதலுக்குரிய பெண்ணாக இருக்கும் எடித் அயலாவை தன் கோழைத்தனத்தைக் கடப்பதற்காக வல்லுறவுக்கு உள்ளாக்கும் செயலினாலும் அகவீழ்ச்சி அடைபவனாகவும் இருக்கிறான்.
சக்கல்தானாவின் துல்லியமான விசாரனை அறிக்கைகள் பாரபட்சமற்ற சட்டத்திற்கு குறியீடாகக் கொண்டால், நாவலில் ஆங்காங்கே தனித்த அத்தியாயங்களில் விவரிக்கப்படும் கொலையாளியின் எழுத்துப்பிழைகள் கூடிய குறிப்புகள் நடைமுறையில் கறைபடிந்த கைகளினால் சட்டம் பிழையாகக் கையாளப்படுவதைக் குறியீடாக்குகிறது.
குற்றம், விசாரணை, அரசியல் என்றொரு புறவயமான இழையோடு சக்கல்தானாவின் அகப்போராட்டம் மற்றும் தன்வயமான உணர்வுகளையும் தொடர்ச்சியாக இந்த நாவல் பேசுவதால் லத்தீன் அமெரிக்க அரசியல் நாவல்களில் வழக்கமாக காணக்கிடைக்கும் ஒரு பிரம்மாண்டத் தன்மை கிடைப்பதில்லை என்று யூகிக்கிறேன். இந்த நாவலுக்கான கட்டமைப்பு விஷயங்கள் பலவற்றை சமகால பெரு வரலாற்றிலிருந்து எடுத்துக்கொண்டு கதாப்பாத்திரங்களையும் சம்பவங்களையும் கற்பனையாக அமைத்திருக்கும் சாண்டியாகோ நாவலுக்கு எழுதியிருக்கும் சிறிய பின்குறிப்பில் இப்படி நுட்பமாகச் சொல்கிறார்.
Like all novels, this book recounts a story that could have happened, but this author does not confirm that it did happen this way.

No comments:
Post a Comment