Oct 7, 2018

நெடுந்தொடர்கள்

                                            

வெளியே வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே இறங்கியிருக்க நிலமெங்கும் உறைந்திருந்த பனியின் வெண்மையால் இருள் சற்றே வெளிறியிருந்தது. அந்த முன்னிரவில் GOT இன் முதல் பருவத்தின் முதல் அத்தியாயத்தில் அத்தனை பிரம்மாண்டமான ஒரு பனிச்சுவரைப் பார்த்தபோது கணினித்திரையின் காட்சியிலும் வெளியிலும் நிரம்பியிருந்த பனியை இணைத்து ஒரு வினோதமான உணர்வு தோன்றியது. அன்று தொடங்கி ஒரே வாரத்தில் அதுவரையிலான அதன் ஆறு பருவங்களின் அத்தியாயங்களையும் தொடர்காட்சிகளாக பார்த்தேன். கணினி அறிவியலிலும் வரைகலையிலும் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம், அறிவியல் புனைவு மற்றும் அதிபுனைவுக் கதைகளைப் படமாக்குவதற்கான சாத்தியங்களைப் பெருக்கியிருக்கிறது. ஆனால் அவ்வகையான படங்களில் ஏனோ ஒன்றுதல் இருந்ததில்லை. The Shawshank redemption வகையான டிராமா படங்களைப் பார்த்துக்கொண்டு வெகுநாட்கள் GOT ஐ பார்க்காமலிருந்தேன்.

ஆனால் GOT இல் ஒரு வலுவான அடிப்படைக் கதையோடு இயைந்தோடும் இழையாகவே அதிபுனைவு இருக்கிறது. அதிகாரப் போட்டிக்கான சதுரங்க ஆட்டம் என்ற செவ்வியல் கருவைக் கொண்ட கதையின் சூழலில் GOT இன் கதாமனிதர்களை நாம் விரும்பலாம் அல்லது வெறுக்கலாம், ஆனால் தவிர்க்க முடியாது. பொதுவாகவே மேற்கில் கதாப்பாத்திரங்களுக்கு பொருத்தமானவர்களைத் தேர்வு செய்யும் Casting ஐ சிறப்பாகச் செய்கிறார்கள். அநேகமாக GOT இன் ரசிகர்கள் அனைவருக்கும் அக்கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களுடன் ஒரு மானசீக நெருக்கம் இருக்குமென்றுதான் நினைக்கிறேன்

சில வருஷங்களுக்கு முன்னால் ப்ளோரிடாவில் இருந்தபோது இரத்தச்சிதறல் அதிகம் கொண்ட Dexter இன் முதல் பருவம் மட்டும் பார்த்தேன். HBO/Netflix போன்றவற்றின் நெடுந்தொடர்களைப் பார்க்கும் ஆர்வத்தை GOT தான் தொடக்கிவைத்தது. ஊருக்கு நூறு உலகசினிமா ரசிகர்கள் உருவாகிவிட்ட இன்று இணைய வசதியும் பெருகியிருப்பதால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இன்றைக்கு இவ்வகையான தொடர்கள் பார்க்கக்கூடும். இப்போதெல்லாம இத்தொடர்களைக் குறித்து அறிந்து வைத்திருப்பது இலக்கியவாதிகளின் அடிப்படைத் தகுதியாக வேறு எதிர்ப்பார்க்கப்படுகிறது.

                                        

GOT ஐ அடுத்து House of Cards. முன்னது சரித்திரப் பிண்ணனியிலான அதிகாரப் போட்டி என்றால் இது சமகாலத்தில் அமெரிக்க அதிபர் பதவியைக் குறிவைத்து நடக்கும் அதிகாரத்தின் சூதாட்டம். கெவின் ஸ்பேசியும் ராபின் ரைட்டும் அண்டர்வுட் தம்பதிகளாக நடிப்பில் மிரட்டியிருப்பார்கள். டிரம்ப் அமெரிக்க அதிபரானதும் அத்தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்யாவின் செல்வாக்கு குறித்த செய்திகள் பரபரப்பானதும் இக்கதைக்கு நிஜ வாழ்வின் சுவையைக் கொடுத்துவிட்டன. ஸ்பேசிதான் பாவம், பாலியல் அத்துமீறல் புகார்களை அடுத்து தொடரிலிருந்து தூக்கிவிட்டார்கள். அவரது அசுரத்தனமான நடிப்புக்கு இணைவைக்க அடுத்து யார் வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தலை அடிப்படையாகக் கொண்டவை Breaking Bad மற்றும் Narcos. ஆழமான பதட்டவுணர்வை ஊட்டும் முன்னதின் திரைக்கதை குறைவான கதாப்பாத்திரங்களைக் கொண்டு மெதுவாக நகர்வதால் அதை இன்னும் முழுதாகப் பார்த்து முடிக்கவில்லை. மாறாக, தொடர்காட்சிகளாக காண்பதற்குத் தூண்டும் வகையில் முப்பதாண்டுகளுக்கு முந்தைய கொலம்பியாவின் வரலாற்றுப் பிண்ணனியில் அமைந்திருக்கிறது Narcos.


                                            
    
பள்ளிக்காலத்தில் ஒரு தினத்தந்தி கட்டுரையிலிருந்து பாப்லோ எஸ்கோபாரின் பெயர் அறியக்கிடைத்தது. கொலம்பியாவின் மெடலின் நகரத்தில் போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவனான எஸ்கோபார் தான் அமெரிக்காவுக்கு குற்றவாளியாய் நாடுகடத்தப்படுவதைத் தடுப்பதற்காக கொலம்பிய அரசாங்கத்தோடு நிகழ்த்திய சம்பவங்கள் பிரசித்தி பெற்றவை. அப்போதைய சில நிகழ்வுகளைக் குறித்து மார்க்கேஸ் News of a Kidnapping என்றொரு பிரமாதமான அபுனைவு நூல் எழுதியிருக்கிறார். கொலம்பிய சிறப்பு படைப்பிரிவினரும் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளும் எப்படி எஸ்கோபாரின் கடத்தல் சாம்ராஜ்யத்தை சரித்து அவனுக்கு முடிவுகட்டினார்கள் என்பது Narcos இன் முதலிரண்டு பருவங்களின் மையமாகவும் மூன்றாவது பருவம் மற்றொரு போதைப்பொருள் கடத்தல் குழுவான Cali Cartel எப்படி ஒடுக்கப்பட்டது என்பதையும் விவரிக்கிறது. ஈவு இரக்கமற்று படுகொலைகள் பல புரிபவனாகவும் தன் குடும்ப வாழ்வில் வெகு மென்மையுடையவனாக ஒரே நேரத்தில் எஸ்கோபாரின் இருமுக பாத்திர வார்ப்பு குறிப்பிடத்தக்கது.

                                

அடிப்படையில் இவற்றை சிறப்பான பல்ப் வகை கதைகளைக் கொள்ளலாம். திரைக்கதையை அமைக்கும்போது ஒவ்வொரு காட்சிகளின்/அத்தியாயங்களின் இறுதிகளையும் திறந்த முனைகளாக வைப்பதால் அடுத்த காட்சிக்கு அது பலவிதமான சாத்தியங்களை உருவாக்குகிறது. இது அப்படியே தொடர்கண்ணியாக நீட்டிக்கப்பட்டு மனிதர்களின் ஆதார உணர்ச்சிகளைக் கொண்டு ஆடப்படும் விளையாட்டாக ஒவ்வொரு அத்தியாயமும் மாறுகிறது. மனிதர்கள் தங்கள் குடும்பங்களுக்காக செய்யும் தியாகங்கள் மற்றும் துரோகங்கள், முறைதவறிய பாலுறவுகள், அதிகாரம் மற்றும் பொருள் தேட்டங்கள், காலம் உருவாக்கும் பதற்றமான நிலைக்கு மனிதர்கள் புரியும் எதிர்வினை மற்றும் அதன் விளைவுகள் போன்றவை இக்கதைகளில் நமக்குப் பொதுவாகக் காணக்கிடைக்கும் பண்புகள். மொழியனுபவங்கள் குறைவுபட்டு காணொளிகளின் காலமான தற்சமயத்தில் நாவல்களின் இடத்தை எதிர்காலத்தில் இவ்வகையான தொடர்கள் பிடித்துவிடுமோ என்றுகூட தோன்றுகிறது. அடுத்ததாக நண்பர்கள் பரிந்துரைத்திருக்கும் 13 reasons why ஐ பார்க்கவேண்டும். கதை, கதையாக இருக்கும்வரை நாம் வாசகனா அல்லது ரசிகனா என்பது ஒரு பொருட்டே இல்லை.

No comments: