
பள்ளிகொண்டபுரம் வெளியாகி கிட்டத்தட்ட நாற்பத்தெட்டாண்டுகள் ஆகி செவ்வியல் நாவலுக்கான அந்தஸ்த்தையும் அடைந்துவிட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு ஒரு கிளாசிக் வரிசை வெளியிட்டபோது முதன்முதலாக இந்த நாவலை வாசித்தேன்.
ஒரு குடும்பத்தின் இரண்டு தலைமுறை வாழ்க்கையைக் குறித்து நனவுக்கும் நினைவுக்கும் இடையில் ஊடாடி நாற்பத்தெட்டு மணிநேரம் நிகழும் கதை. விடுதலைக்குப் பின்னான தேச உருவாக்கம் நிகழும் காலம். கோவில்களும் குளங்களும் வணிகமும் என்றொரு திருவனந்தபுரத்தின் நகரப்பண்பாட்டுப் பின்புலம். இந்திய ஆண்களின் பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனந்தன் நாயர் ஒரு ரெண்டுங்கெட்டான். ஆன்மீகத்திற்கும் லெளகீகத்திற்கும் இடையில் ஒன்றிலும் நிலைகொள்ள முடியாமல் ஊடாடும் மனம். மனைவி கார்த்திகேயனியோ வெகுகாலத்திற்கு முன்பே குடும்பத்திலிருந்து வெளியேறிவிட்டவள்.
அவன் பிறந்த குடும்பத்தில் இளம் வயதிலேயே விதவையாகி கணவன் விட்டுச் சென்ற நல்ல சொத்துப் பின்புலத்தோடும் வேதாந்த விசாரம் புரிகின்ற மகனோடும் மூத்த சகோதரி இருக்கிறாள். இன்னொரு சகோதரன் நடிகன், இளைய சகோதரன் மதுசூதனன் எம்.எல்.ஏ. நோயாளியான கடைக்குட்டித் தம்பி மதுசூதனனின் கவனிப்பில் இருக்கிறான். புகழ்பெற்ற குடும்பத்தின் வாரிசுகளில் அனந்தன் நாயர் மட்டும் பலசரக்கு கடைக்கு கணக்கெழுதப் போகும் நிலைக்கு வந்துவிட்ட சராசரி.
விக்ரமன் தம்பியின் மிகப் பொறுமையான வலைவிரிப்புக்கு பலியானது அனந்தனின் மனைவி கார்த்திகேயனி மட்டுமா? தம்பியின் வழியான ஆதாயங்களையும் வாய்ப்புகளையும் மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொள்ளும் கோழையான அனந்தனும் அதற்கொரு காரணம்தானே? அவள், கார்த்திகேயனி வெளியேறியதற்கு அவனுடைய நோய்மை கூடிய உடலின் பலகீனம் மட்டுமா காரணம்? சமூக வாழ்வில் தனக்கு இருக்கும் கூனை மறைத்து அவன் அவளை சொற்களால் வதைக்கவில்லையா?
தந்தை அனுபவிக்கும் அகவேதனையை உணர்ந்திருக்கும் மகள் மாதவிக்குட்டி அனந்தனின் பக்கம், தந்தையோடும் தமக்கையோடும் வசித்தாலும் பிரபாகரன் தன் தாய் கார்த்திகேயனியின் பக்கம். ஆளாகிவிட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக்கொள்ளும் நிலையிலிருக்கிறார்கள். கிடைத்த வாய்ப்புகளைப் பற்றிக்கொண்டு முன்னேற வேண்டும் என்ற நோக்குடைய சந்தர்ப்பவாதியாக பிரபாகரன் சித்தரிக்கப்பட்டாலும் தன் பெற்றோரான அனந்தன் மற்றும் கார்த்திகேயனியின் மணவாழ்க்கை குறித்த அவன் பார்வை நவீனமானதாகவே இருக்கிறது.
அனந்தன் ஆசிரமத்திலிருக்கும்போது அவனைச் சந்திக்க வரும் கார்த்திகேயனி விக்ரமன் தம்பியுடனான தன் வாழ்வில் அவன் தன்னை குடி மற்றும் பரபுருஷ உறவுகளுக்குத் தள்ளிச் சீரழித்துவிட்டதைச் சொல்லி அழுது திரும்பவும் அவனுடன் வந்துவிடட்டுமா என்று கேட்கிறாள். நாவலில் இது அனந்தனின் ஈகோவைச் சமாதானப்படுத்தும் கொடுமையான ஆண்மையைப் பார்வை. இதைத்தான் தன் பிள்ளைகளோடு அனந்தன் நிகழ்த்தும் வெளிப்படையான உரையாடலில் பிரபாகரன் சுட்டிக்காட்டுகிறான்.
அனந்தனின் பார்வையில் ரிஷிமூலம் சரியில்லாத பெண்ணை திருமணம் செய்துகொண்டு செட்டிலாக விரும்புகிறான் பிரபாகரன் நாயர். சமூகக் கட்டமைப்பில் கீழ்நிலையில் உள்ள ஈழவனை விரும்புகிறாள் மாதவிக்குட்டி. இங்கே மேல்கலப்பு, கீழ்கலப்பு என்ற பிரிவினை தோன்றுகிறது. மேல்கலப்பில் பிறந்த கார்த்திகேயனியின் அழகில் மயங்கித் திருமணம் செய்த அனந்தனுக்கு தன் மகள் மாதவிக்குட்டி எண்ணியிருக்கும் கீழ்கலப்பு சஞ்சலமூட்டுகிறது.
நகரத்தின் பண்பாட்டுப் பின்புலம், இந்தியக் குடும்பங்கள் தமக்குள் கொண்டிருக்கும் வன்முறை, அகலொளி வெளிச்சத்தில் முயங்கும் நிழல்களின் அழகுகூடிய அனந்தன் மற்றும் கார்த்திகேயனியின் தாம்பத்யம் ஒருகட்டத்தில் சண்டையிடும் பாம்பும் கீரியுமாய் திரியும் துயரம், அனந்தன் நாயரின் துல்லியமான மனவோட்டச் சித்தரிப்புகள், காலமாற்றத்தில் இறுக்கமான சமூக அடுக்குமுறைகள் கலைந்து அவற்றிற்கிடையே ஏற்படும் ஊடாட்டம் போன்றவை பள்ளிகொண்டபுரத்தின் செவ்வியல் தன்மைக்குக் காரணமாகச் சொல்லலாம்.
சுற்றிலும் பார்க்கும்போது அறிந்த பல குடும்பங்கள் இன்று உருப்படியாய் நிற்பதற்கு பெரும்பான்மையாய் பெண்களே காரணமாக இருந்திருக்கிறார்கள். குடும்ப உறவுகளில் குறிப்பாய் கணவன் மனைவி உறவில் நாம் எதையும் கறுப்பு வெள்ளையாய் சொல்லிவிட முடியாதுதான். தாய்மை என்ற கருத்தாக்கத்தால் பெண்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் இன்று நாம் அதிக எண்ணிக்கையிலான விவாகரத்துக்கள் மற்றும் ஒற்றைப் பெற்றோர்களைக் காண்கிறோம்.
இயற்கையானதாகவும் உள்ளுணர்ச்சிகளுக்கு இயைந்ததாகவும் தர்க்கப்பூர்வமானதாகவும் குடும்பங்களே மனிதர்களுக்குப் பொருத்தமான சமூகக் கட்டமைப்பாக முதிர்ந்திருக்கிறது. அது உடைவது எவ்வகையிலும் யாருக்கும் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கப்போவதில்லை. ஆனால் இன்றைக்கு அதிகரித்திருக்கும் தனிமனித சுதந்திரவுணர்வினால் எவ்வகையான ஒடுக்குமுறையிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளவே எந்தவொரு மனமும் விரும்பும். அதனை உணர்ந்து அன்பின் வழியான சுரண்டலைக் குடும்ப அமைப்பின் பங்குதாரர்கள் கைவிடவேண்டும்.
குடும்பத்திலிருந்து கார்த்திகேயனி வெளியேறிய காலம் ஐம்பதாண்டுகளுக்கு முந்தையது. அது இன்றைக்குப் பொருந்துமா என்று ஒருவர் கேட்கலாம். குடும்ப அமைப்பு என்பது இருக்கும்வரை , இந்த நாவலில் கார்த்திகேயனி எடுத்த நிலை என்பதும் விவாதத்திற்குரியதாக இருக்கும். கார்த்திகேயனி ஒழுக்கம் கெட்டவள் என்று ஒருவர் சொன்னால் அனந்தன் கையாலாகதவன் என்று இன்னொருவர் சொல்லக்கூடும். அனந்தனும் பாதிக்கப்பட்டவன்தான். ஆனால், ஆண் என்ற சலுகையைக் கொண்டு ஓப்பீட்டளவில் கார்த்திகேயனியை விட அவன் வலுவானவன். கார்த்திகேயனியோ வாழ்க்கையின் சூதாட்டத்தில் பகடையாக்கப்பட்டவள். கோவில் சிற்பம் மற்றும் ஒரு யட்சியின் சாயலோடு நீல பதமநாபனால் படைக்கப்பட்ட கார்த்திகேயனியின் இருப்பை, சரிதவறுகளைத் தாண்டி நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
No comments:
Post a Comment