Oct 7, 2018

காதுகளும் குரல்களும்

மாலி யார்? அவன் ஒரு எழுத்தாளன். அவனுடைய பால்யத்தையும் பூர்வ கதையையும் பார்க்கையில் குடும்பம் முழுமையாக வறுமைக்குள் வீழும் வரை செழிப்பாக வாழ்ந்தவனாகவே இருக்கிறான். மகா கூச்ச சுபாவி. அவன் தந்தையாரும் என்னென்னவோ செய்து பார்க்கிறார். ம்ஹும் , ஒன்றும் நடப்பதாயில்லை. மனிதர்களோடு புழங்கக் கூச்சப்படுவர்கள் சங்கீதம், ஓவியம், புத்தகம் மாதிரி ஏதோவொன்றில் தஞ்சமடையும் பொதுவிதியின் அடிப்படையில் மகாலிங்கம் புத்தகங்களின் பக்கம் ஒதுங்கி எழுத்தாளனாகிவிடுகிறான். சங்கீதம் அவனுக்கு செட் ஆகவில்லை.

ஒருசில தடுமாற்றங்களுக்குப் பின் நிலைகொள்ளும் திருமண வாழ்க்கை. (“சுமார் நாலு வருட செக்ஸ் தாபத்தையும் சேர்த்துத் தீர்த்துக் கொள்ள விரும்புகிறவன் போல் மனைவியை உலுக்கியதில் குழந்தைகள் உதிர்ந்தன. ’மூட்’ இருக்கும்போது நிதானமாக எழுதினான்”.) தொழில் வேறு இடையில் நன்றாக செழித்துவிடுகிறது. மாலையில் ”அழகு” தரிசனத்திற்காக மட்டும் கோவிலுக்குச் செல்பவனாக இருக்கும் மாலியின் வாழ்க்கை ஒரு கனவின் மூலம் திசை மாறும்போது தொழிலும் சரிந்து குடும்பம் வறுமைக்குள் விழுகிறது. மாலிக்கு ஒரு வினோத சிக்கல், காதுகளில் மெல்லிய விசிலடிப்பாய் தொடங்கிய இரைச்சல்கள் ஏதேதோ குரல்களாய் உருவெடுத்து பிறகவை காட்சிகளாகவும் விரிந்துவிடுகின்றன.

ஒரு கட்டத்தில் வானொலி ஒலிச்சித்திரங்களைப் போல மாறிவிடும் இந்த தொடர் குரல்கள் இரண்டு பிரதான பிரச்சனைளைக் குறித்தனவாக இருக்கின்றன. ஒன்று, முற்பிறவிகளில் தன்னுடைய பக்தனாக இருந்த மாலி இப்பிறவியிலும் தன்னையே வணங்கவேண்டும் என்று காளி துரத்துகிறாள். எப்போதோ ஒரு பிறவியில் அவன் தன்னை மோகித்ததாக சொல்கிறாள். ஆனால் முருகபக்தனான மாலி அதற்குத் தயாராக இல்லை. (“இது நவீனத்திலும் நவீனம் மட்டும் அல்ல, நித்ய நவீனம். ஒப்பற்ற ஓர் ஆண்மகனின் தாகத்தைத் தீர்க்க தெய்வம் அமுத கலசத்துடன் இறங்கி வருகிறது என்பது ஒரு Grand Theme இல்லையா?” )இரண்டு, காமத்தின் உந்துதலில் மாலி கண்ணுறும் பாலியல் ஃபேண்டஸி விஷயங்கள். பாவம் மாலி, Orgy, Porn content எல்லாம் பார்த்து சித்ரவதை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. புராண சினிமாவின் காட்சிகள், பூங்காக்களில் காதல் நாடகம் எல்லாம் மாலியை மையமிட்டே நடக்கின்றன. அவனுக்காக பெண்கள் உருகுகிறார்கள். எல்லாம் எங்கே? அத்தனையும் அவனுடைய காதுகளுக்கும் கண்களுக்கும் எதிரில்தான். மனநல மருத்துவரிடம் போக விரும்பாத மாலி இப்பிரச்சனைக்குத் தீர்வு கேட்டும் போகும் ஆன்மீக பயிற்சியாளர்கள் அனைவரும் அவன் இச்சோதனைகளை அனுபவித்துக் கடக்கவேண்டுமென்று சொல்லிவிடுகிறார்கள்.

காதோர ஒலிச்சித்திரத்தில் நாடகம் வேறு நடக்கிறது. அதில் வரும் இலக்கிய விமரிசகர் டிப் வாங்கிக்கொண்டு ஆபாசத்திற்கு திரை கட்டிவிடுவதாக சொல்லிவிட்டுப் போகிறார். காளியை அழிக்க கறுப்பனை அனுப்பிவிட்டு நழுவிவிடுகிறார் முருகப்பெருமான். மாலிக்காக தசரதராமனும் வருகிறார். கறுப்பனும் ராமனும் மாலியின் வாய்க்குள் நுழைந்து காளியைத் தேடும்போது நடத்தும் உரையாடல் சிரிப்பூட்டுகிறது.

பிரமைகள் அவனைச் சித்ரவதை செய்து தத்துவ விசாரத்திற்குள் தள்ளுகின்றன. (உதயமோ அஸ்தமனமோ இல்லாத சூரியன் உதிப்பதாகவும் அஸ்தமிப்பதாகவும் பிரமை வசப்பட்டுத்தானே காலக்கணக்கு செய்கிறோம்?). வெவ்வேறு வித வேஷமிட்டாலும் அந்தப் பிரமைகளுக்குள் உள்ளுறைந்திருப்பது காமம்தான் (சொல்லைச் சோர்வுபடுத்தித் திகைக்க வைக்கும் ஒரே இன்பம்-கலவி இன்பம்தான்)

குழந்தைகள் நிறைந்த குடும்பத்தில் அத்தனை வறுமை. ஒவ்வொரு நேர உணவுக்கும் திண்டாட்டம். அந்தச் சூழலிலும் இக்குரல்களிலிருந்து தப்ப மாலி இரவுகளில் காமாட்சியை விடாமல் உலுக்குகிறான். அதன் விளைவான பிரசவ ரணசிகிச்சையில் சிசுவோடு ஆரோக்கியத்தையும் பலி கொடுத்து நித்ய நோயாளியாக அவள் முடங்குகிறாள். மாலியின் பிரம்மைகள் தற்கொலைகள் மற்றும் மரணத்தைக் குறித்தனவாக வேற்றுருக் கொள்கின்றன.

நாவல் முழுக்கவே எம்.வி.வியின் பகடிக் குரல் இழையோடி இருக்கிறது. காளியின் தூண்டுதலால் ஒலிக்கப்பெறும் பிரமைகளாகவும் குரல்களாகவும் அவை சுட்டப்பட்டாலும் நாம் அவற்றை மாலியின் பிரதி பிம்பங்களாகவும்(Multiple Personality) சமூகம் மற்றும் பக்தியின் மீதான ஒரு பகடிப்பூர்வமான விமர்சனமாகவும் கொள்ளலாம். வெறுமனே பகடியாக நகர்ந்துவிடாமல் விஷயத்தின் ஆழத்தை அடைவதாகவும் இறுதியில் முதிர்ச்சியடைகிறது. கதைக்கு மிகத் தேவையான இடத்தில் ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனின் ”டாக்டர் ஜெகிலும் மிஸ்டர் ஹைடும்” கதையை நன்மை தீமை குறித்த ஒரு குறிப்பாக ஊடுபாவியிருக்கிறார் எம்.வி.வி.

வாழ்க்கையில் மனிதன் விழைவு கொள்ளும் விஷயங்கள் பெருகிவிட்டன. துரதிரஷ்டவசமாக அவை எதிரெதிர் தன்மைகள் கொண்டனவாக இருக்கின்றன. இதுவும் வேண்டும் அதுவும் வேண்டும். சுயம் தன்னைப் பிளந்து பல்கிப் பெருகுகிறது. வேறு எவராலும் காணமுடியாத நம் மனங்களுக்குள் பகற்கனவுகளும் மாயத்தோற்றங்களும் பெருகி உருவெடுத்து அலைகின்றன. மாலியின் விழைவுகளும் அப்படிப்பட்டவைதான். காளியும் முருகப்பெருமானும் சும்மானாச்சுக்குத்தான், மாலியின் காதுகளில் ஒலித்தவை எல்லாம் அவனுடைய பல சுயங்களின் குரல்களே. எல்லா திரைகளையும் விலக்கி மாலியை உள்ளது உள்ளபடி காட்டிவிட்டார் எம்.வி.வி. நம் மனத்திரை விலக்கிப் பார்த்தால் அங்கே மாலியின் காதுகளும் நம் காதுகளும் ஒன்று போலவே தெரியலாம்.

No comments: