கார்த்திகைப்பாண்டியன் கதைகளில் ஒரு இளைஞன் இருக்கிறான். மரணம் மற்றும் வாழ்வின் நிலையாமை குறித்த தொந்தரவூட்டும் எண்ணங்கள், நுரைத்துப் பொங்கும் காமத்தின் வேட்கையைத் தணித்துக்கொள்ள வடிகால்கள் இல்லாமை, புறவுலகில் எதிர்கொள்ள நேரும் எதிர்மறையான அபத்தக்காட்சிகள் போன்றவை அவனுடைய பிரத்யேகமான தன்னிலையிலிருந்து கிளைத்தெழும் வாழ்க்கைச் சிக்கல்களாக இருக்கின்றன.
அதே சமயத்தில் வாழ்வு குறித்த மதிப்பீடுகளும் சமூக வெளியில் மனித உணர்வுகள் மழுங்குவது குறித்த ஒரு ஆற்றாமையும் அவனுக்கிருக்கின்றன. அவ்வகையான சூழலில் தன்னைப் பொருத்திக்கொள்ள இயலாத தவிப்பையும் பதற்றத்தையும் அவன் முகத்தில் பார்க்கிறோம். தன் ஆழத்தில் நீதியுணர்வுக்குக் கட்டுண்ட மனமாக இருந்தாலும் லெளகீக வெளியில் சராசரித் தன்மையிலிருந்து வெளிவர இயலாமல் இரட்டையாக உடைவுண்ட மனோநிலையுடைய அந்த இளைஞன் நிழலாட்டம், மர நிறப் பட்டாம்பூச்சிகள், கலைடாஸ்கோப் மனிதர்கள், தனி, பரமபதம் ஆகிய கதைகளில் இருக்கிறான்.
புறவுலகில் அவனுக்கு அதிகமாகக் காணக்கிடைப்பது என்ன? மரநிறப் பட்டாம்பூச்சிகள் கதையில் கா.பா மேற்கோளாகச் சொல்லியிருக்கும் காம்யூவின் வரி இதற்கு பொருத்தமான பதிலைச் சொல்லும். “At any street corner the feeling of absurdity can strike any man in the face”. அவன் காண்பவை எல்லாம் வாழ்வின் அபத்தங்கள். மனநலம் குன்றிய பெண்ணால் எத்தியெறியப்பட்டு பேருந்தில் அடிபட்டு இறக்கும் நாய்க்குட்டி, ரயில் நிலையத்தில் முகவரியற்ற கடிதத்தோடு செல்லவேண்டிய ஊர் தெரியாத பெரியவர், முதல் புணர்ச்சியில் தோற்ற ஒருவன் நூலகத்தில் எதிர்கொள்ளும் ஒருபால் விழைவுடையவன், எதிர்பாராத கணத்தில் ரயிலின் முன் பாயும் குழந்தை, நட்சத்திர விடுதியின் கனவு மயமான சூழலில் தேவதை போன்ற பெண்ணொருத்தியின் மாதவிடாய் தருணம் என முந்தைய கணத்திலிருந்து பொருளற்று விரியும் மறுகணத்தின் அபத்தங்கள் அவன் முகத்திலறைகின்றன. பெரும்பாலும் இன்மை மற்றும் இழப்பு ஆகியவற்றின் மூலம் அபத்தவுணர்வு இக்கதைகளில் இயங்குகிறது.
இக்கதைகளில் அந்தரமீன், கலைடாஸ்கோப் மனிதர்கள் மற்றும் தனி ஆகியவற்றை கா.பாவின் ஆரம்பகால சிறுகதை முயற்சிகளாக யூகிக்கிறேன். கதை சொல்லல் முறையிலிருக்கும் ஒருவித வெகுளித்தன்மையின் பொருட்டு இத்தொகுப்பின் பலகீனமான கதைகளாகவும் அவற்றை அனுமானிக்கிறேன். தொகுப்பின் பிறகதைகளோடு இக்கதைகளுக்கு உள்ள வேறுபாட்டை ஒரு வாசகர் எளிதாக அறியலாம். புழங்குதன்மை அதிகமுள்ள காட்சிகளையும் கருத்தோட்டங்களையும் இக்கதைகள் கொண்டிருப்பதும் இவற்றின் பலகீனத் தன்மைக்கு ஒரு காரணம்.
காமம் மற்றும் மரணத்தோடு மனித மனதின் வெவ்வேறு உணர்வுநிலைகளை கனவு அல்லது அதிபுனைவில் உருவகப்படுத்திச் சொல்வது இத்தொகுப்பின் ஒரு பொதுப்போக்காக இருக்கிறது. அந்தர மீன், பெருத்த மார்புகளையுடைய ஆணின் கதை போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அந்தரமீன் கதையின் முதல் சிக்கல் கதை சொல்லப்படும் கோணம், இரண்டாவது புழங்குதன்மை அதிகமுள்ள பேய் பிடித்தல் மற்றும் தொடர்புடைய சடங்குகள், நுட்பத்தினுள் இறங்காது புறத்திலிருந்து சொல்லப்படும் அப்பெண்ணின் அகவுலகம், அவள் கெளதமை விரும்பினாள் என்பதுபோல் கோடிட்டுக் காட்டப்படும் இறுதிப்பகுதிக்கு வலுவூட்டும் எந்த தர்க்கமும் முன்கதையில் நிறுவப்படாமை போன்றவை முன்சொன்ன கதையின் பலவீனத்திற்கான காரணிகள்.
சமீபத்தில் இறந்துபோன தன் குழந்தையின் மாயத்தோற்றத்தோடு வாழும் பாலியல் தொழிலாளியான லதாரஞ்சனி, தோற்றப்பிறழ்வின் காரணமாக பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் திருக்குமரன் ஆகிய இருவரையும் மையப்படுத்திய ”பெருத்த மார்புகளுடைய ஆணின் கதை” யில் இவ்விரு கதாப்பாத்திரங்களின் பின்புலமும் அவற்றைச் சந்திக்க வைக்கும் கதைக்கருவும் தமிழுக்குப் புதிது. ஆனால், ஆங்கிலத்தில் cold-blooded என்று சொல்வார்களே, அவ்வகையான குரூரத்தன்மை கூடியதாக இக்கதையைச் சொல்வேன். பிரச்சனை என்னவெனில் இக்கதையில் சொல்லப்பட்டிருப்பதைவிட குலைநடுங்க வைக்கும் பலப்பிரயோகங்கள் நிஜவாழ்வில் அன்றாடம் நடக்கின்றன. ஆனால் அவை புனைவுக்குள் எந்த விகிதத்தில் பரிசீலிக்கப்படவேண்டும் என்ற கேள்வியை இக்கதையைக் கொண்டு ஆராயலாம். இங்கே ”சம்பவத்தின்” அதிர்ச்சியில் நாம் உறைந்து நின்றுவிடுகிறோம். திருக்குமரன் மற்றும் லதாரஞ்சனியின் துயரத்தில் நாம் பங்கெடுப்பது இரண்டாம்பட்சமாக ஆகிவிடுகிறது.
Viva La Muerte (அல்லது) இணைய மும்மூர்த்திகளும் இலக்கிய பஜனை மடங்களும் ஒரு புன்னகையோடு வாசிக்கத்தக்க கதை. தொண்ணூறுகளிலிருந்து தமிழ் சிற்றிதழ் உலகில் புழங்கும் சொற்களின் கேட்டலாக் ஆகவும் இக்கதையைக் கருதலாம். மேலும் பரமஹம்சர், மாயாண்டி மற்றும் வெற்றிமாறன் ஆகிய மூவரின் இணையம் சார்ந்த இலக்கியச் செயல்பாடுகளை அவர்களின் மொழியிலேயே எழுதி பகடி செய்திருக்கிறார் கா.பா. அவருடைய சொந்த வாத்தியாருக்கே சூனியம் வைத்திருப்பதும் பாராட்டத்தக்கது. தமிழ் இலக்கியத்தின் உலகத்தின் பொதுவான போக்குகள் மேலான விமர்சனமாகவும் இக்கதையை வாசிக்கலாம். பல வருஷங்களுக்கு முன்னர் கோணங்கி ”நாற்பத்து எட்டுக் கோடி வார்த்தைகளின் மரணம் அல்லது சும்மா கிட சவமே” சிறுகதையை எழுதினார். இப்போதைய காலமாற்றத்தை உள்வாங்கி காலத்தின் தேவையாக இக்கதை அமைந்திருக்கிறது.
மகளை இழந்த ராமநாதன் அதன் பொருட்டான துயரத்தோடு அலைவதைப் பேசுகிறது கன்னியாகுமரி. நரேந்திரனைக் குறித்த முன்பகுதியையும், புணர்ச்சிக்குப் பின் அறையிலிருந்து கிளம்பும் அச்சிறுபெண் தன் பெயரை பகவதி என்று கூறுவதையும் கதை நிகழும் நிலவெளியின் புராணீகத் தன்மையோடு தொடர்புறுத்தி நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறதென்றாலும் அவை கதைக்கான பிரத்யேக அழுத்தங்கள் எதனையும் கூட்டவில்லை. நிரஞ்சனா/பகவதி என்ற இணையில் ஒரு ஆழத்திற்குப் பயணிக்கும் சாத்தியம் இக்கதைக்கு இருந்திருந்தாலும் சுற்றுலா தலத்தின் காட்சிகள், பெண்களின் உடல் வனப்பு, ராமநாதனின் பாலியல் கிளர்ச்சி எனப் புறவயமாக கதை அலைவுறுகிறது.
காமம், மரணம், அபத்தம், தனிமை போன்றவற்றால் விரவியிருக்கும் இருண்மையான தொனி இத்தொகுப்புக்கு அதன் முதுகெலும்பைப் போன்ற ஒரு தனித்த ஒருமையைக் கொடுக்கின்றது. மேலும் மேற்சொன்ன பண்புகள் ஒரு தன்னிலையின் உலகத்தில் (பெரும்பாலும்) இயங்குகையில் சிலுவையின் ஏழு வார்த்தைகள் கதை விஷயங்களை சாரப்படுத்தி வேறுவிதமாகச் சொல்லிப்பார்க்கும் முயற்சியாக இருக்கிறது.
கதைகள் தம் கவித்துவ ஆழத்தை அடையும் பாதையில் இடையூடிக் குலைவூட்டும் ஒருவித புறவயத்தன்மையை சில இடங்களில் உணர்கிற அதே தருணத்தில் கதைகளின் அகத்திலிருந்து (கூறுமுறையில் அல்லாமல் ) ஒரு ஒட்டுதலற்ற வெளிறிய உணர்வையே நாம் அடைகிறோம். பின்னுரையில் கா.பாவின் அக உலகத்தை ஐரோப்பியனின் உலகமாக போகன் ஷங்கர் சொல்லுகிறார். அந்தக் கருத்தை கா.பா ஏற்றுக்கொள்கிற பட்சத்தில் அவர் கதைகளில் இன்னும் கொஞ்சம் தமிழ்த்தன்மை (எது தமிழ்த்தன்மை என்பது வேறு விவாதம்) கூடலாம் என்பது என் கருத்து. தன்னிலையிலிருந்தும் இருத்தலியற் சிக்கல்களின் சாரமான (abstract) பார்வையிலிருந்தும் விலகி இருத்தலின் நுட்பங்களின் (nuances) மேல் இந்தப் பட்டாம்பூச்சி அமரவேண்டும் என இத்தருணத்தில் கார்த்திகைப்பாண்டியனிடம் சொல்லிக்கொள்கிறேன்.
(மொழிபெயர்ப்புக்கான ஆத்மாநாம் விருது பெற்ற கார்த்திகைப் பாண்டியனின் சிறுகதைகளைப் பற்றிய குறிப்பு)
No comments:
Post a Comment