“என்ன மோகன், ஏதாவது விசாரிச்சயா?”
பதினைந்து
நாட்களில் ஏகப்பட்ட தடவை செண்பா கூப்பிட்டுவிட்டாள். அவளுடைய அலைக்கழிப்பும் தவிப்பும்
புரிகிறதென்றாலும் இந்த விஷயத்தைக் கடக்க முயற்சி செய்யாமல் இன்னும் ஏங்குவதால் மூர்த்தி
உயிரோடு திரும்பப்போவதில்லை. அவள் கூப்பிடும்போதெல்லாம்
நினைவுகள் பலதும் கூடி துயரத்தைப் பெருக்கிவிடுகின்றன. நோண்டி நோண்டிப் புண்ணைப் பெரிதாக்கி
சீழ்பிடிக்க வைக்கவேண்டாமென்று கொஞ்சம் கடுமையாகவே அவளிடம் சொன்னேன்.
செண்பாவைத்
தப்பு சொல்லவும் முடியாது. என்னைத் தவிர யாரிடமும் அவளால் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள
முடியாதுதான். அவர்களுடைய காதல் முளைவிட்டு வளர்ந்து கிளைத்த ஒவ்வொரு கணத்திலும் உடனிருந்தது
நான் மட்டும்தான். ஓரிரு வருஷங்களில் திருமணம் செய்துகொள்ளும் முடிவோடு இருந்தார்கள்.
வாழ்க்கையின் மீதான பிடிப்பை மூர்த்திக்குத் தக்கவைக்க முடியாத அளவிற்குத் தன் காதல்
பலகீனமானதா என்ற ஆற்றாமையில் இப்போது செண்பா தவிக்கிறாள். காரணமே இல்லாமல் ஒருவன் சாவானா?
செண்பாவுக்கு அந்தக் காரணம் தெரியவேண்டும். அவளுக்கு மட்டுமல்ல, மூர்த்தியின் வீட்டிலும்
இதே பேச்சுதான்.
”இருவத்தஞ்சு
வருஷமா ஒண்ணாச் சுத்துனீங்க, உனக்குமே தெரீயலா?”
தோளைச்
சுரண்டிய பையனைக் கோபத்தோடு இழுத்து மடியில் அமர்த்தியவாறே மூர்த்தியின் அக்கா கேட்டபோது
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவனுடைய அப்பாவும் அம்மாவும் சோர்வோடு என்னைப்
பார்த்தார்கள்.
”நெஜமாவே
தெரீலீக்கா… அப்டி ஏதாவது இருந்துருந்தா இப்படி விட்ருப்பனா? போனவாரம் பாத்தப்பக்கூட
சாதாரணமாத்தான் பேசிட்டு இருந்தோம். எனக்குமே பைத்தியம் புடிக்கறமாதிரிதான் இருக்குது.
வீட்ல ஏதாவது வித்தியாசமா நடந்துக்கிட்டானா? “
“அப்டியெல்லாம்
ஒண்ணுமில்ல, எல்லாமே வழக்கத்துலதான் இருந்துச்சு” சொல்லச்சொல்ல மூர்த்தியின் அம்மாவுக்கு
அழுகை கூடி உடல் குலுங்க முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டார். அறையின் உத்தரத்தில்
தொங்கிய மூர்த்தியை முதலில் பார்த்தது அவனுடைய அம்மாதான். கர்ப்பத்தில் சுமந்தவளுக்கு வாய்க்கக்கூடாத காட்சி. அந்தக் குலைநடுக்கம் இன்னுங்கூட அவருடைய கண்களில் தெரிகிறது.
“அந்தப்
புள்ள யாரு? ஓரமா உக்காந்துக்கிட்டு மூர்த்திய எடுக்கறவரைக்கு அழுதுக்கிட்டே இருந்ததே?“
மூர்த்தியின் அக்கா கேட்டபோது திடுக்கிட்டேன். அத்தனை துயரத்திலும் எதையெல்லாம் நுட்பமாகக்
கவனித்திருக்கிறாள் இவள்?
”அது
ஃப்ரெண்டுக்கா, கூட வேலை செஞ்சது , ரொம்ப நாள் பழக்கம், வேற மாதிரி எதுவுமில்ல”
கண்ணிமைக்காமல்
பொய் சொன்னேன். மூர்த்தியே இல்லாமல் போய்விட்டபோது நான்காம் மனிதருக்குத் தெரியாமல்
அவன் ரகசியமாய் வைத்திருந்த காதலை வெளியே சொல்வது அவனுடைய தற்கொலையை வெகு எளிதாக அதனுடன்
முடிச்சுப் போட்டுவிடும். யாராலும் கண்டுபிடித்துவிட முடியாத ஆழத்தில் அதைப் புதைக்கவே
விரும்பினேன்.
“ஏதாவது
புள்ளக வெவகாரமாப்பா? ஏதா இருந்தாலும் மறைக்காமச் சொல்லு. ஊர்க்காரங்க கண்டமானிக்குப்
பேசறதெல்லாம் காதுக்கு வரும்போது ரொம்பச் சங்கடமா இருக்குது”
துண்டுப்
புகையிலையை முறித்து கடைவாய்க்குள் சொருகிக்கொண்டு தளர்வோடு கேட்டார் அவனுடைய அப்பா.
“அய்யய்யோ…
அப்டி எல்லாம் எதுவுமில்லீங்கப்பா, அந்த மாதிரி இருந்திருந்தா எனக்குத் தெரீயாமா இருக்காது,
இந்தளவுக்குப் போகவும் விட்ருக்கமாட்டேன்”
இந்தப்
பேச்செல்லாம் மூர்த்தியின் காரியங்கள் முடிந்து சில வாரங்களுக்குப் பின் சந்தடிகள் ஓய்ந்த தினத்தில்
நடந்தது. மூர்த்தியின் ஒன்றுவிட்ட சித்தப்பா ஒருவருக்கு இருந்த அதிகாரத் தொடர்புகளின்
மூலம் விஷயங்கள் ஒருமாதிரி சுமூகமாக முடிக்கப்பட்டன. தீராத வயிற்றுவலியால் வாலிபர்
தற்கொலை என்றுதான் மூர்த்தியின் மரணச்செய்தி பேப்பரில் வந்திருந்தது. அவன் என்னமோ கடைசிவரை
ஆரோக்கியமாகத்தான் இருந்தான். தற்கொலைகளின் உண்மையான காரணத்திற்கும் உலகத்திற்கும்
இடையே தீராத வயிற்றுவலி என்பது ஒரு திரை.
எங்கள்
நட்பு நடுநிலைப்பள்ளிக் காலத்தில் ஏற்பட்டது. நாலு கிலோமீட்டர் தொலைவிலிருந்த என் வீட்டிற்கு
அவன் வர, அங்கே நான் போக என்று அப்போதே பரஸ்பரம்
ஒருவர் குடும்பங்களில் மற்றவர் அங்கமாகிவிட்டோம். வீட்டில் கறி ஆக்கும் வழக்கம் இல்லாவிட்டாலும்
அசைவம் உண்ணப் பழகிவிட்ட நான் ஆடு,கோழி என்று விதவிதமாகச் சாப்பிட மூர்த்தியின் வீட்டுக்குப்
போய்விடுவேன். அவன் வீட்டில் கறி இல்லாத ஞாயிறே
கிடையாது. அவர்களுடைய தோட்டத்துக் கிணற்றில்
நீச்சலடித்த பகல்கள் கணக்கற்றவை. கொறங்காடுகளுக்கு அழைத்துச் சென்று மரங்களையும் பறவைகளையும்
சொல்லித்தருவான். காட்டுக்கோவில்களுக்கு அழைத்துச் செல்வான். அப்படிப் பல வருஷங்கள்.
இப்போது முப்பது வயதில் திரும்பிப் பார்க்கும்போது நெடுங்கால நட்புதான்.
மின்வாரியத்தில்
இருந்த அப்பாவின் டிரான்ஸ்பர் காரணமாக குடும்பம் திருப்பூருக்கு இடம்பெயர்ந்தபோதுகூட
நட்பு தடைபடவில்லை. என்ன, எல்லாம் ஒரு முப்பது கிலோமீட்டர் சுற்றளவுக்குள்தான். இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்தோம். அவனுடனான நட்பில்
இருந்த இதம் வேறு யாருடனும் அமைந்ததில்லை. நண்பன் என்பவன் ஒருவிதத்தில் நம்முடைய நீட்சிதான். மூர்த்தியின் சாவோடு சேர்த்து நானும் பாதி அழிந்துவிட்டேன்.
பயம் கூடிவிட்டது. வாழ்க்கையின் உருவத்தில்
இதுவரைப் பார்த்திராத வேறொரு முகம் தெரிகிறது.
கண்ணாடியில்
உருவத்தைப் பார்ப்பதுபோல் பரஸ்பரம் மற்றவரை அறிந்திருந்தோம் என்று நினைத்திருந்ததை
அவனுடைய சாவு பொய்யாக்கிவிட்டது. குற்றவுணர்வும் கழிவிரக்கமும் குழப்பமும் பெருகிவிட்டன.
அந்த இடத்திலிருந்துதான் செண்பாவின் ஆற்றாமை புரிகிறது. நானாவது நண்பன், செண்பா அவனுடைய காதலி. மாம்சத்தின் மாம்சம். ஊருக்குத் தெரியாத அவர்களுடைய
காதலின் ஒரே சாட்சி நான். அவள் என்னிடம் மட்டும்தான் அழமுடியும் என்பது புரிந்தாலும்
அது ஏனோ தொந்தரவாகவே இருக்கிறது.
“என்னால் எதையும் வெளிப்படையாச் செய்யமுடியாது மோகா…
நீதான் ஹெல்ப் பண்ணனும்… உன்னோட ஸர்க்கிள்ல விசாரிச்சுப் பாரு… தர்மபுரில அப்படி யாரோ
இருக்கறமாதிரி கேள்விப்பட்டேன், கேரளாவுல சித்தூர்லயும் இருக்காங்களாம்… நாம வேணா ஒருதடவப்
போய் பாத்துட்டு வந்தா என்னா?”
“அவ்வளவு
தூரமெல்லாம் போகமுடியாது செண்பா… நீ போன வை…விசாரிச்சுட்டு ரெண்டு நாள்ல சொல்றேன்”
”நீயுங்கூட
புரிஞ்சுக்க மாட்டங்கறே பாத்தியா? அவரு போய்ட்டா எல்லாம் முடிஞ்சுபோச்சா? ஒரு பொண்ணா
என்னோட எடத்துல இருந்து யோசிச்சுப் பாரு, எம்மனசு தகிக்கிறது ஒனக்குத் தெரியும்”
காற்றலைகளின்
வழியே அவள் விசும்பலின் கொடுக்குள் என்னைக் கொத்தின. அவர்களிடையே ஏதாவது பிரச்சனை இருந்ததாவென்று
பலதடவை கேட்டுவிட்டேன். எல்லா உறவிலும் இருக்கக்கூடிய இயல்பான ஊடல்களைத் தவிர வேறெதுவுமில்லை
என்பதே செண்பாவின் உறுதியான பதிலாக இருந்தது.
“செரி
செரி…அழுவாத… விசாரிச்சுட்டு ரெண்டு நாள்ல கண்டிப்பாக் கூப்டறேன்”
செண்பாவும்
மூர்த்தியும் பின்னாலடை ஏற்றுமதிக்கான டாக்குமெண்டேஷன் வேலைகளைச் செய்துதரும் கம்பெனியில்
வேலை பார்த்தார்கள். செண்பா இன்னும் அங்கேதான் இருக்கிறாள். நான் டெக்ஸ்டைல் மார்க்கெட்டிங்கில்
இருக்கிறேன். தினமும் மாலை வேலைமுடிந்து மூர்த்தி
ஊருக்குக் கிளம்பும் முன் சந்தித்து டீ சாப்பிட்டுவிட்டு ஒரே சிகரெட்டைப் பகிர்ந்து
புகைத்துவிட்டுப் பிரிவோம். அந்தப் பேக்கரியில்தான் அவளை அறிமுகப்படுத்தி வைத்தான்.
”என்னடா?
பாக்கறதையும் பழகறதையும் பார்த்தா விஷயம் வேற மாதிரி இருக்குமாட்ட இருக்குது? “
சிகரெட்டைக்
கொடுத்துவிட்டு சாலையில் ஊர்ந்த வாகனங்களைப் பார்த்தவாறு தன் இயல்புக்கேற்ற கூச்சத்தோடும்
மெல்லிய புன்னகையோடும் சொன்னான்.
“பேரு செண்பா, எங்கூடத்தான் வேலை செய்யறா”
எனக்கும்
சந்தோஷம்தான். ஆனாலும் கேட்க நினைத்ததை மூர்த்தியிடம் கேட்டேன்.
“பாத்தா
நம்ம ஆளுங்க மாதிரி தெரியலையேடா?”
”ஆமா…ப்ச்…
இந்தக் காலத்துல இதெல்லாம் ஒரு விஷயமா? நீ
இருப்பீல்ல, பாத்துக்கலாம்?”
நான்
இருக்கிறேன், அவன்தான் இல்லாமல் போய்விட்டான்.
நான்
பெண்களுடன் சரளமாகப் பேசுவேன். அவனோ என்னைவிடக் கூச்சசுபாவி. மெளனியாகவே இருப்பான்.
அவனிடம் செண்பா மயங்கியது ஆச்சரியந்தான். காதலை முதலில் சொல்லியதும் அவள்தான். அவளுடைய
பிரேமையைக் கொண்டு மூர்த்தி வெகு அதிர்ஷடக்காரன்தான்.
ஒருகட்டத்தில்
தன் காதலை வீட்டிற்குச் சொல்ல நினைத்திருந்தான். ஆனால் பிரசவத்திற்கு வந்த மூர்த்தியின்
அக்காவுக்கு கணவனுடன் ஏற்பட்ட மனத்தாங்கலில் இரண்டு வருஷங்களுக்கு மேலாக இங்கேயே தங்கிவிட்டாள்.
அந்தப் பிணக்கு நீடித்துக்கொண்டே இருப்பது மூர்த்திக்கு தொந்தரவூட்டும் விஷயமாக இருந்தது.
”என்னக்கா?
எத்தன நாளைக்கு இப்பிடி? மாமா என்னதான் சொல்றாரு?” கேட்பதற்கு உரிமை இருக்கிறது என்று
நினைத்துப் பேச்சுவாக்கில் யதார்த்தமாக ஒருநாள் கேட்டுவிட்டேன்.
“ஆமா,
தம்பீங்க எல்லா என்னத் தொரத்துறதுலயே குறியா இருப்பீங்க போல இருக்குது, எனக்கும் எம்பையனுக்கும்
ஒருவாய் சோறுபோட உங்களுக்கெல்லாம் தெம்பு இல்லாமயா போச்சு?”
வெடுக்கென்று
எதிர்க்கேள்வி கேட்டாள். அதற்குப்பிறகு அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
“நாந்தான்
சொன்னனல்ல… நீ எதுக்கு அவகிட்ட வாயக்குடுக்கற” வீட்டுக்குப் பின்னால் அமர்ந்து சிகரெட் பிடிக்கையில்
மூர்த்தி சொன்னான்.
“இதுல
என்னடா இருக்கு? அக்காதான சொல்லுச்சு… எனக்கொண்ணும் பிரச்சனையில்ல, செரி… நீ என்ன முடிவு
பண்ணிருக்கற? நா வேணா பக்குவமா அக்கா காதுல போடட்டா?”
மூர்த்தி
பதறிப்போனான். “ஐய்யோ… வேண்டாண்டா… இன்னுங் கொஞ்சநாள் போகட்டும், முதல்ல அக்கா பிரச்சனை
சால்வ் ஆகுதான்னு பாக்கலாம்… அதுக்கப்பறம் சொல்லிக்கலாம்”
செண்பாவைப்
பொறுத்தவரை ஆரம்பத்திலேயே என்னை ஒருமையில் விளிக்குமளவு சாதாரணத்தை ஸ்தாபித்துவிட்டாள்.
என்னைக் கிண்டல் செய்து ஓட்டுவதில் அப்படியொரு அலாதி இன்பம் அவளுக்கு. மூவரும் சந்தித்தால்
நாங்கள் இருவரும் வளவளவென்று பேசிக்கொண்டிருப்போம்.
மூர்த்தி அளந்து அளந்து பேசுவான். அவனை நோக்கிய காதலும் மரியாதையும் அடர்ந்த அவளுடைய
”ஏங்க…” என்ற விளிப்பை நான் மிமிக்ரி செய்து காட்டும்போது இருவரும் சிரிப்பார்கள்.
அதே சமயத்தில் அவர்களுடைய ஊடலையும் முறைப்பையும் என்னிடம் மறைத்ததில்லை. பத்து நாட்களுக்கு
மேலே அது நீடித்த சமயமொன்றில் ஒரே அலுவலகத்தில் எதிரெதிரே அமர்ந்துகொண்டு என் மூலமாக
தகவல்களைப் பரிமாறிக்கொண்ட கூத்தும் நடந்தது. இருவரும் சமாதானமான பின் அதைச் சொல்லிச்
சொல்லி சிரித்தேன்.
அவர்களுடைய
காதலில் நானே எதிர்பாராத சில விஷயங்களும் நடந்தன. அதில் நான் அவ்வளவு மகிழ்ச்சியாய்
பங்கெடுத்தேன் என்று சொல்லமுடியாவிட்டாலும் அது குறித்து எந்தப் புகார்களும் இருந்ததில்லை.
ஒருநாள் டீக்கடைக்கு வெளியே பைக்கில் சாய்ந்தவாறு சிகரெட் பிடிக்கையில் மூர்த்தி என்னிடம்
எதுவோ கேட்க நினைத்து தயங்கித் தயங்கி விழுங்குவதை உணர்ந்தேன். அந்தச் செய்கை வழக்கமற்ற
ஒன்று.
“என்னடா,
சொல்லு”
சாம்பலைத் தட்டிவிட்டுக் கேட்டேன்.
“இல்ல
வர்ற சனி ஞாயிறு அம்மாவும் அப்பாவும் திருச்செந்தூர் கோவிலுக்குப் போறாங்கன்னு சொன்னீல்லயா?”
“ஆமாம்,
அதுக்கென்ன இப்போ?”
“இல்ல,
நானும் செண்பாவும் வீட்டுக்கு வந்தா கொஞ்சம் ஃப்ரீயா பேசிட்டு இருக்கலாம்னு நெனைச்சேன்”
அவன்
சொல்லிவிட்டு அசட்டுப்புன்னகையோடு சாலையை வெறித்தான்.
“வீட்ல
நா இருக்கலாமா, இல்ல வேண்டாமா? “ கிண்டலாய்க் கேட்டேன்.
“சனிக்கிழமை
உனக்கு வெளியே வேலை இருக்கு… போய்ட்டு நீ ஈவினிங்தான் வருவீன்னு நா செண்பாகிட்ட சொல்லிட்டேன்”
அடப்பாவி.
ஆச்சரியப் புன்னகையோடு அவன் தோளில் குத்தினேன்.
“இல்ல…
சும்மா பேசிட்டு இருக்கலாம்னுதான். உனக்கே தெரியுமில்ல, மனுசங்க இல்லாத இடத்தில் தனியா
உக்கார்ந்து நாங்க இன்னும் ஒரு தடவை கூட பேசுறதுக்கு வாய்ப்பே அமையல ”
”புரியுதுடா” சிகரெட்டை அவனிடம் நீட்டிவிட்டுச் சொன்னேன்.
“அவங்க
நைட்டே கிளம்பிடுவாங்க… நீங்க ரெண்டுபேரும் காலைல எத்தன மணிக்கு வந்தாலும் சரி”
உண்மையில்
சனிக்கிழமை எனக்கு எந்த வேலையுமில்லை. போய்ச்சேர்ந்த தகவலைச் சொல்லுவதற்காக அம்மா அதிகாலையில்
அழைத்தபோதே விழித்துவிட்டவன் பிறகு தூக்கம் பிடிக்காமல் கிடந்தேன். எட்டரை மணி வாக்கில்
எழுந்து குளித்துவிட்டு இரண்டு தோசை உண்டபிறகு டிக்டாக்கில் மூழ்கிவிட்டேன்.
மூர்த்தியும்
செண்பாவும் பதினொரு மணிக்கு வந்தார்கள். மூர்த்திக்கு இது ஒருவிதத்தில் சொந்தவீடு போலத்தான்.
ஆனால் செண்பா இப்போதுதான் முதல்முறையாக வருகிறாள்.
”என்ன
மோகா, நீ ஒர்க்குக்குப் போறதா அவரு சொன்னாரு, காஸுவல்சுல இருக்கற? எப்பவும் டக் இன்
பண்ணி டை கட்டி, பயங்கரமான எக்ஸிகியூட்டிவா தெரிவே?” கிண்டலாகவே கேட்டாள்.
“இல்ல,
இன்னிக்கு ரெண்டு மூணு இன்பார்மல் மீட்டீங்ஸ்தான்”
“ம்ம்…
உங்க வீடு ரொம்ப நீட்டா இருக்கு”
“அம்மாவுக்கு
வீடு சுத்தமா இருக்கனும், அதனோட எஃபெக்ட்தான்”
சொல்லிவிட்டு
மூர்த்தியைப் பார்த்தேன். அவன் அசுவாரசியமாக செல்போனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஓ.கே
நா, கெளம்பறேன், ஃப்ரிட்ஜ்ல பால் இருக்கு, வேணும்னா டீ போட்டுக்குங்க, அம்மா புளிசாதம்
பண்ணி வைச்சிருக்காங்க. பசிச்சா சாப்பிடுங்க, மூர்த்தி… காம்பெளண்ட் கேட்ட லாக் பண்ணிக்க”
வீட்டிலிருந்து
வழக்கமான டீக்கடைக்குச் சென்றேன். மிக மெதுவான வேகத்தில் டீ குடித்து இரண்டு சிகரெட்டுகளைத்
தொடர்ச்சியாகப் புகைத்தேன். தவிர்க்க விரும்பிய காட்சிகள் விவஸ்த்தையற்ற மனதில் தலைதூக்கின.
வாழ்க்கையில் முதல் முறையாக மூர்த்தியின் மீது மெல்லிய பொறாமை எழுந்தது.
எந்தெந்த
தியேட்டரில் என்னென்ன படங்கள் ஓடுகின்றன என்று பார்த்தேன். தோதானதாக ஒன்றுமில்லாததால்
ஏற்கெனவே பார்த்த அடல்ட் காமெடிக்கே போனேன். படம் போட்ட சிறிதுநேரத்தில் உறக்கமும்
விழிப்பும் முயங்கிய நிலைக்குப் போய்விட்டேன். வெகு அந்தரங்கத்திலிருந்து கள்ளத்தோடு
தலையுயர்த்திப் பார்க்கும் பிம்ப அரவங்கள். தலையை உலுக்கிக்கொண்டு விழித்து திரையில்
கவனத்தை செலுத்தினேன்.
படம்
முடிந்து வெளியே வந்தபோது வீட்டுக்குத் திரும்ப இன்னும் நேரம் இருப்பதாகத் தோன்றியது.
வழக்கமான ஏஸி பாருக்குப் போனேன். முதிராத பிற்பகலில் என்னைத் தவிர யாருமேயில்லை. அரையிருட்டான
சூழலில் குளிர்ந்த பியரை சிப் சிப்பாக அருந்திக்கொண்டே மூர்த்திக்கு அழைத்தேன். முதல்
முறை ரிங் போய் ஓய்ந்தது. இரண்டாவது அழைப்பில் எடுத்தான். ஒரு மணி நேரம் கழித்து வருவதாகச் சொன்னேன். சுவரின் உயரத்திலிருந்த
பெரிய டிவியில் வரிசையாய் டூயட் பாடல்கள். பிண்ணனியில் ஆடும் துணை நடிகைகளின் முகங்களை
உற்றுப் பார்க்க ஆரம்பித்தேன்.
வீட்டுக்கு
வந்தபோது கிளம்பத் தயாராகி காத்துக்கொண்டிருந்தார்கள். என் முகம் பார்ப்பதை செண்பா
தவிர்த்தது தற்செயலா அல்லது என் பிரமையா என்று குழப்பமாகவே இருந்தது. செண்பாவை அனுப்பிவிட்டு
மூர்த்தியை திரும்ப வரச்சொன்னேன். அவனோடு திரும்பச்சென்று இன்னொரு பியர் அருந்தும்
யோசனை இருந்தது. அது அவனுக்குத் தேவைப்படும் என்று நினைத்தேன். ஆனால் திங்கள் பார்க்கலாமென்று
சொல்லிவிட்டு ஏனோ மூர்த்தியும் அவளுடனேயே கிளம்பியது ஏமாற்றமாக இருந்தது. அவர்கள் சென்றபிறகு
போதைக்கிறக்கத்தோடு என் படுக்கையறைக் கட்டிலில் விழுந்தேன். தலையணையின் மேல் உதிர்ந்து
கிடந்த ஒரு நீளமான கூந்தல் இழையை எடுத்து விரலில் சுற்றி வெறித்தவன் அப்படியே தூங்கிப்போனேன்.
என்
பைக்கின் பில்லியனில் செண்பா. மெயின் ரோட்டில் இருபது கிலோமீட்டர் பயணம். பிறகு கிளைச்சாலையில்
ஆறு கிலோமீட்டர். அங்கிருந்து பிரிந்த இட்டேறிப்பாதையில் இரண்டு கிலோமீட்டர்கள். கிளுவை
வேலிகளோடு முற்பகல் வெயிலின் நிசப்தத்தில் காடுகள் மூழ்கிக் கிடந்தன. பாதை முடிந்த
இடத்தில் நான்கைந்து ஏக்கர் பரப்பளவில் தோட்டம்.
ஐம்பது அறுபது தென்னை மரங்கள், வாசலுக்குப் பந்தல் போட்ட ஓட்டு வீடு. அதனையொட்டி தென்னந்தடுக்கு வேயப்பட்ட குடிசை. முன்னால்
கட்சிக்கொடி பறந்த ஒரு இன்னோவா காரும் இரண்டு
பைக்குகளும் நின்றிருந்தன.
வீட்டுக்குச்
சற்று தள்ளியிருந்த வேம்பின் கீழே கிடந்த நான்கைந்து பிளாஸ்டிக் நாற்காலிகளில் ஒன்றில்
வயோதிகர் ஒருவர் பீடி குடித்தபடி அமர்ந்திருந்தார். குடிசையிலிருந்து ஊதுபத்தியின்
வாசனை காற்றில் மிதந்து வந்தது. செண்பா நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். நான் வீட்டின் வாசலுக்குச் சென்றபோது திண்ணையில்
இருந்தவர்கள் உற்றுப்பார்த்தார்கள். அம்மணக் குழந்தையொன்றை இடுப்பில் வைத்தவாறு ஐம்பது
வயது மதிக்கத்தக்க தடித்த பெண்மணி வெளியே வந்தாள். கழுத்தில் மிகத் தடித்த தங்கச் சங்கிலி. காதுகளில்
பெரிய தோடுகள். வாயில் மெல்லிய வெற்றிலைச் சிவப்பு.
”இங்க
தர்மராசுன்னு…”
”எங்க
வூட்டுக்காரருதான்… பாத்துக்கிட்டு இருக்காரு… ரெண்டு மூணு பேரு வெயிட் பண்ணிட்டு இருக்கறாங்க…அப்படி
வேப்பமரத்து நெழல உக்காருங்க. அந்த செவத்த அம்மிணி உங்க கூட வந்தவியளா? “ செண்பாவைப்
காட்டிக் கேட்டாள். ஆமோதிப்பாய் தலையசைத்தேன்
“செரி
ஒக்காருங்க… அவரே கூப்புடுவாரு”
செண்பாவுக்கு
எதிரே நாற்காலியில் அமர்ந்தேன். முதியவர் ஏனோ எழுந்து நகர்ந்தார். அவள் தன் கன்னத்துக்குக் கை கொடுத்து வீட்டையும்
குடிசையையும் வேடிக்கை பார்த்தவாறிருந்தாள்.
“இன்னுங்
கொஞ்சம் நேரம் ஆகுமாம்… நாமதான் கடைசி போலிருக்கு”
சொல்லிவிட்டு
கண்களை மூடி உடலை முறுக்கி மூளி முறிக்க பிளாஸ்டிக் நாற்காலி லேசாக நெளிந்தது. இதோடு
இதிலிருந்து விலகிவிடவேண்டும். வாழ்க்கை நகரவேண்டும். இந்தக் காரியம் அபத்தமாகத் தெரிந்தாலும்
செண்பாவின் மனநிலை மாற்றத்துக்கு உதவும் என்ற காரணத்துக்காகவே செய்யவேண்டியிருந்தது.
செண்பாவின் தொடர்ச்சியான வற்புறுத்தலால் விசாரிக்கத் தொடங்கியபோது அலுவலக நண்பன் மூலம்
குட்டி படிக்கும் தர்மராசு தெரியவந்தார். நடந்தது, நடக்கப்போவது என எல்லாவற்றையும் கொஞ்சமும் பிசகாமல் சொல்லிவிடுவாராம்.
எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் செண்பா தீவிரமாக
நம்புவதால் அவர் சொல்லப்போவதை நினைத்து குறுகுறுப்பு இருந்தது உண்மைதான்.
சட்டென்று
கண்களை விழித்துப் பார்த்தேன். செண்பா என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
”என்ன?”
“ப்ச்…ஒண்ணுமில்ல…”
சொல்லிவிட்டு
கண்களை விலக்கி திரும்பவும் குடிசையையே வெறித்தாள். இன்றைக்கென்னவோ அவள் எனக்குப் புதிதாகத்
தெரிந்தாள். பேரழகி என்று சொல்லமுடியாதுதான். ஆனால் கண்களில் படிந்திருக்கும் துயரத்தையும்
மீறி முகத்திலும் வெளிர் நீலப்புடவை அணிந்த உடலிலும் மிளிரும் உயிரின் தாதுக்கள் எந்த
ஆணையும் வசிகரிக்கக் கூடியவைதான் இவளோடு சேர்ந்து வாழ்க்கையை அனுபவிக்காமல் ஏன் செத்துப்போனாய்
மூர்த்தி?
குடிசைக்குள்ளிருந்து
கரைவேட்டி மனிதர்கள் மூவர் வெளியே வந்தார்கள். அவர்களது பார்வை ஒரு நொடி எங்களின் மீது
படிந்து கடந்தது. இன்னோவா கிளம்பி நகரவும் புழுதிப்படலம் காற்றில் ஏறியது. முறுக்கு மீசையோடும் வெற்று மார்போடும் வெளியே வந்த
குள்ளமான மனிதரின் தோற்றத்தைப் பார்த்ததுமே தர்மராசு என்று புரிந்தது. அருகில் சென்று
வணக்கம் வைத்தேன்.
“வாங்க…
கொஞ்சம் உக்காருங்க… இன்னும் ரெண்டு பேரு இருக்கறாங்க…முடிச்சுட்டுக் கூப்படறேன்”
பீடியைப்
பற்ற வைத்துக்கொண்டு அவர் குரல் கொடுக்க உள்ளிருந்து அவர் மனைவி டீ நிரம்பிய தம்ளரோடு
வேகமாக வந்தாள். டீ குடிக்கச் சொன்னவரிடம் இங்கிதமாய் மறுத்துவிட்டு மரத்தடிக்கு வந்தேன்.
அவர் குடிசைக்குள் நுழைந்தபோது திண்ணையிலிருந்த ஆணும் பெண்ணும் அவரைத் தொடர்ந்து போனார்கள்.
செண்பா ஏதாவது பேசுவாளென்று நினைத்தேன். அவள் மெளனமாக இருக்கவே வாட்ஸ்ஏப்பில் குவிந்துகிடந்த பெருந்தகவல்களை வாசிக்க
ஆரம்பித்தேன்.
அரைமணி
நேரம் போயிருக்கும். பைக்கில் ஒரு இளம் ஆணும் பெண்ணும் வந்தார்கள். தர்மராசுவின் மனைவி
வெளியே வந்தபோது இடுப்பிலிருந்த குழந்தை அந்த இளம்பெண்ணிடம் வேகமாகத் தாவியது. தர்மராசுவின்
மகளும் மருமகனும் போல. அவன் வண்டியைக் கொண்டுவந்து வேப்பமரத்தடியில் நிறுத்தியபோது சிநேகமாகப் புன்னகைத்தான்.
அந்த
முதியவர் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது குடிசையின் வாசலில் இருந்து கையசைத்தார் தர்மராசு.
செண்பா என்னைப் பின்தொடர்ந்தாள். வடக்குப் பார்த்த குடிசையின் ஓரங்களில் அடர்த்தியாய்
மரத்துண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வடக்கு பார்த்து அமர்ந்த தர்மராசுவின் முன்னிருந்த
அரிசிச் சாக்கின் மேல் ஒரு மங்கலான புகைப்படம், வெற்றிலை பாக்கு, பழம், ஊதுபத்திக்
கட்டுக்கள், நீர் நிறைந்த சொம்பு எனப் பலவும்
இருந்தன. துண்டை உதறி தன் மடியில் பொதித்துக்கொண்டவர் பக்கவாட்டிலிருந்த தென்னந்தடுக்கில்
எங்களை அமரச் சொன்னார். நான் சொல்ல வாயெடுக்கும்போது கைகளை நீட்டி என்னை அமர்த்திவிட்டு,
ஒரு கொத்து ஊதுபத்திகளைக் கொளுத்தினார். உதடுகளில் ஏதோ முணுமுணுப்பு. ஊதுபத்தியை பழத்தில்
குத்திவிட்டு குடிசையின் விட்டத்தை ஒரு நிமிடம் வெறித்தார். பிறகு செண்பாவிடம் திரும்பிக்
கேட்டார்.
”கண்டிப்பா
காரணந் தெரியோணுமா? “
அவள்
ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.
“கொஞ்சம்
ரணமாகும்… ஆனா ஆறிடும்…இப்பவும் ஒண்ணும் பிரச்சனையில்லை அம்மிணி, உனக்குத் தெரியவேண்டாம்னா…
வுட்ருலாம். என்ன சொல்றே? “
“இல்லீங்கய்யா…
ஏதா இருந்தாலும் பரவாயில்ல… நீங்க சொல்லுங்க” அவள் உறுதியாகச் சொன்னாள்.
அவர்
என்னைக் கண்டு கொள்ளாமல் அவளுடனேயே பேசுவது கொஞ்சம் துணுக்குற வைத்தது.ஆறுதலூட்டும்
முகபாவனையோடு செண்பாவிடம் அவர் சொல்லத் தொடங்கினார்.
“இதப்
பாரம்மா… மனுசனோட மனசுல அவன் மனசுக்கே தெரியாத விஷயங்கள் என்னென்னமோ இருக்கு… தான் இருக்கற தடயத்தையே காட்டாம அவனோட புத்திய நிர்ணயிக்கற
விஷயங்க…நீ இப்பங்கூட அவனுக்காக ஏங்கி இங்க வந்து நிக்கறே…
ஆனா அந்த ஆன்மா உம்மேல சந்தேகப்பட்டு, அந்த சஞ்சலத்துலயே சாம்பலாப் போச்சு… மஞ்சங்
கண்ட மறுநாளே அவன் மாண்டதற்கான சுழி வுளுந்துபோச்சு… அது சொழண்டு சொழண்டு ஆளயே முடிச்சுப்போடுச்சு”
சொல்லிவிட்டு
என்னை அர்த்தபுஷ்டியோடு பார்த்தார். அவர் சொன்னதை நம்ப மறுத்தேன். ஆனால் அந்தச் சொற்களின்
அர்த்தம் அமிலம் பரவுவதுபோல் உள்ளே அரித்துப் பரவியது. செண்பாவின் முகத்தை தயக்கத்தோடு
ஏறிட்டுப் பார்த்தேன். உடலில் ஒரு அசைவுமில்லை. கேவலில்லை. ஆனால் கண்ணீர் தாரை தாரையாக
வழிந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து குடிசையை விட்டு வெளியே போனாள். தொடர்ந்து
எழுந்த என்னை தர்மராசு பார்வையாலேயே அமர்த்தினார்.
“ஒண்ணும்
பயப்படாதீங்க தம்பி… எல்லாம் சரியாய்ப் போயிடும்…”
“நீங்க
சொன்னத என்னால் நம்பமுடியல, அவன் அந்த மாதிரி ஆள் கெடையாது”
”தம்பீ,
ஒரு மனுசனோட மனசக்குள்ள என்ன இருக்குன்னு இன்னொரு மனுசன் முழுசாப் பாத்துரமுடியும்னா,
இந்த பூமி நெலைச்சிருக்குமுன்னு நம்பறீங்க?
அவருக்குப்
பதில் சொல்லமுடியவில்லை. சிறிய மெளனத்திற்குப் பின் கேட்டேன்.
”செண்பா
சீக்கிரம் மனசு தேறிடுவாளுங்களா? அவ லைஃப் நல்லாருக்கணும். இப்ப எனக்கு அதுதான் முக்கியமாப்
படுது”
“சந்தேகமே
வேண்டா தம்பி… ரொம்ப நல்லா இருப்பாங்க… பசு,
பூமி, தனம், தானியம், பெண், புத்திரர், செல்வம், வாகனம் முதலிய சகல
சௌபாக்கியங்களோடவும் சந்தோஷமா காலம்பூரா உங்க பக்கத்துலயே இருப்பாங்க”
விலுக்கென நிமிர்ந்தேன்.
பல அர்த்தங்கள் கொண்ட பார்வையை வீசினார் தர்மராசு.
கண்களை அவரிடமிருந்து விலக்கி குடிசையின் விட்டத்தை
வெறித்தபோது சிறிய அசிங்கமான உருவத்தில் ஒரு குறளி என்னையே பார்ப்பது தெரிந்தது. முதுகெலும்பில் குளிர் பரவிய கணத்தில் சட்டென்று
கீழே பாய்ந்த அது என் தலையில் ஒட்டிக்கொண்டது. திடுக்குறலோடு அனிச்சையாய்த் தலையைக்
தடவினேன். கையில் படர்ந்த பிசுபிசுப்பை முகர்ந்தபோது அதில் எனக்கு வெகு பழக்கமான மூர்த்தியின்
உடல் வாடை.
இருநூறு ரூபாய்த் தாளொன்றை தர்மராசுவின் முன்னால் வைத்துவிட்டு
மெளனமாய் வெளியே வந்தேன். செண்பாவுக்குத் தெரியாமல் குறளியை எப்படிக் கொல்வது என்று
யோசனையோடு நடந்தேன். அவள் என்னை நிமிர்ந்து
பார்த்த கணத்தில் என் தலையிலிருந்து வேகமாகத் தாவியெழுந்த குறளி அவள் கண்ணுக்குள் பாய்ந்து
மறைந்தது.
(நன்றி : நிலவெளி மாத இதழ் ,ஆகஸ்ட் 2019)
No comments:
Post a Comment