எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவலில் பக்கிரி, ரத்தினம் என்ற இரு நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை வழியாக கரிசல் நிலத்தில் அந்த கலை அடைந்திருந்த பொற்காலமும் பிறகு அதன் சிதைவும் சொல்லப்பட்டிருக்கின்றன. பக்கிரியும் ரத்தினமும் தங்கள் குழுவோடு கரிசல் நிலத்தின் வெவ்வேறு ஊர்களில் சஞ்சரிக்கிறார்கள். திருவிழாவுக்கு வாசிக்கப் போன இடத்தில் நேர்கின்ற தகராறில் தப்பியோடி அலைந்து திரிந்து இறுதியில் பிடிபடுகிறார்கள். இந்த தப்பியோடலின் இடையில் நினைவோடையாக கலைஞர்களின் வாழ்க்கை அனுபவங்கள் துண்டான காட்சிகளாலும் பல கிளைக்கதைகளாலும் சொல்லப்படுகின்றன.
பக்கிரியின் கதை வழியே பல நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கையில் இருந்த ஒளியையும் இருளையும் காண்கிறோம். எளிய சாதாரண பின்புலங்களில் இருந்து மேதமையோடு எழுந்து வரும் இந்தக் கலைஞர்களில் பலர் வித்யாகர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அந்தப் பொற்காலம் போயியாற்று. இப்போது நள்ளிரவுக் கரகாட்டத்திற்கும் அரசியல் தலைவர்களை வரவேற்க வேண்டியும் வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. லெளகீகத்தில் கலை வெறும் சடங்காக மாறிவிட்டது. கலைஞர்கள் தொழிலாளர்களாக ஆகிவிட்டார்கள். கலையை ஆராதிக்க ஜமீன், ஊமை ஐயர் போன்ற ஒரு சிலரே மீந்திருக்கிறார்கள்.
நாவலில் சில கிளைக்கதைகள் சிறப்பான சிறுகதைகளின் லட்சணத்தைக் கொண்டிருக்கின்றன. மாலிக் கபூரின் படையெடுப்பின் போது அரட்டானம் லட்சய்யாவின் இசைக்கு கோவில் கல்யானைகளின் காதுகள் அசையும் சித்திரம் நல்ல புனைவு. ஓதியூருக்கு வரும் திருடனுக்குத் தண்டனையாக ஏழு வீட்டுச் சோறு போட்டு அவனைத் திருத்துவது மானுடவியல் அடிப்படையிலான நல்லதொரு சித்திரம். செல்லியின் ஆட்டையும் அவளையும் பொறாமையின் காரணமாகக் கொன்றுவிடும் மகாலிங்கம், வாழ்நாள் முழுக்க அவள் அமர்ந்திருந்த பாறைக்கு குற்றவுணர்ச்சியினால் நீர் ஊற்றுவது செவ்வியல் தன்மை கொண்ட இன்னொரு கிளைக்கதை.
அழிந்துவரும் நாதஸ்வரக் கலை, கலைஞர்கள் எதிர்கொள்ளும் அவமானங்கள் மற்றும் பல கிளைக்கதைகள் கொண்டிருக்கும் குறியீட்டுப் படிமங்கள் போன்றவை சஞ்சாரம் நாவலில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. நாவலின் மைய இழைக்குத் தொடர்புடையவையாகவும் தொடர்பற்றவையாகவும் பல கிளைக்கதைகள் கூறப்பட்டிருக்கின்றன. நாவலுக்குள் அவற்றை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்த பயன்படுத்தப்பட்டிருக்கும் கதாப்பாத்திரங்களின் “நினைத்துப் பார்க்கும் உத்தி” முதிர்ச்சியற்றதாக இருக்கிறது. மையக்கதையும் ஆழமற்று மேலோட்டமாக இருக்கிறது.
எஸ்.ராமகிருஷ்ணனின் ஆரம்ப கால நாவல்களை ஒப்பிடும்போது சற்றே தட்டையான மொழியோடு ஆழம் குறைவாகவும் வடிவம் கூடி வராத நாவலாகவுமே சஞ்சாரம் எனக்கு எஞ்சியது. கதைகூறலில் ஒரு அவசர தொனி தெரிகிறது. சற்றே விரிவான வாழ்க்கை மற்றும் மொழி ஆழத்தோடும் எழுதப்பட்டிருந்தால் சஞ்சாரம் வேறொரு நிறத்தை அடைந்திருக்கக் கூடும். மனிதர்கள், காட்சிகள், தொன்மங்கள் போன்றவை நம் நினைவில் நின்றாலும் கலையொருமையும் வாசிப்பின்பமும் நாவலில் கைகூடவில்லை.
விகடனின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் சிற்றிதழ் உலகத்தில் இருந்து வெகுஜனத் தளத்தை நோக்கி நகர்ந்தபோது எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி போன்ற பத்தி எழுத்துக்கள் அவருடைய தீவிர இலக்கியச் செயல்பாட்டின் கலைவளம் மிக்க கனிகளாக புதிய அழகியலோடு வெளிப்பட்டன. துணையெழுத்து வாசித்தே நான் எஸ்.ராமகிருஷ்ணனின் வாசகன் ஆனேன். பிறகு அந்த அழகியலை அவர் இழந்துவிட்டாரோ என்று தோன்றுவதுண்டு.
சில வருஷங்களுக்கு முன்பு சஞ்சாரம் நாவல் சாகித்ய அகாதமி பெற்றது. அப்போது அதை வாசித்திருக்கவில்லை. எஸ்.ராமகிருஷ்ணன் சாகித்ய அகாதமிக்குத் தகுதியானவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவருடைய எல்லா நாவல்களையும் வாசித்திருக்காவிட்டாலும் வாசித்த அளவில் நெடுங்குருதி சிறப்பாக இருந்தது. அவருடைய சமீபத்திய நாவல்கள் மேலோட்டமானவையாக இருக்கின்றன என்று நினைக்கிறேன். சஞ்சாரம் மெய்யாகவே விருதுக்கு ஏற்ற நாவலா என்ற கேள்விக்கு ஒரு வாசகனாக உறுதியான பதிலைச் சொல்ல முடியவில்லை .
விருதளிக்கும் வருடத்திற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளுக்குள் வெளியான பதிப்புகள் மட்டுமே பரிசீலனைக்குத் தகுதியானவை என்பது அகாதமியின் விதிகளில் ஒன்று. தேர்வுக்குழுவில் இருப்பவர்களின் கருத்தையும் மனச்சாய்வையும் பொறுத்துதான் தேர்வுகள் அமைகின்றன. 2022 ஆம் ஆண்டு “காலா பாணி” என்ற நாவல் விருதுபெற்றது. தமிழ் இலக்கிய உலகத்தில் சிறு சலனத்தைக்கூட அந்த நாவல் ஏற்படுத்தவில்லை என்பது என் அனுமானம். தேவிபாரதியின் “நீர்வழிப் படூஉம்” விருது நாவலுக்கு விருது கொடுக்கப்பட்ட போது சில எதிர் விமர்சனங்களைக் கடந்தும் அந்த விருதுக்கு ஒரு பொதுவான ஏற்பு இருந்தது.
சாகித்ய அகாடமி விருதுபெறும் நாவல்கள் சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி மூன்றாயிரம் முதல் நான்காயிரம் பிரதிகள் வரை விற்பனையாகவதாக ஒரு கருத்து இருக்கிறது. உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை. இருபத்துநான்கு மணிநேர செய்தித் தொலைக்காட்சிகளில் பின்னணி இசையோடு உடனடிச் செய்தியாக விருதுச் செய்தி அறிவிக்கப்பட்டு முதல்வர் வாழ்த்துச் செய்தி வெளியிடும் சூழலில் வாசகர்களின் ஆர்வம் இந்த எண்ணிக்கையைச் சாத்தியப்படுத்தலாம்.
பொதுவாக அகாடமி விருது போன்ற விருதுகளின் தேர்வுக்குழுவில் இருப்பவர்கள் மொழி குறித்தும் அதன் இலக்கியம் குறித்தும் Ubiquitous connoisseur ஆக இருக்கவேண்டும். ஆனால் அது எல்லா நேரங்களில் சாத்தியப்படுவதில்லை என்பது மட்டும் புரிகிறது. ஆனால் அந்தப் பொறுப்புணர்வை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திக்கொண்டுதான் இருக்கவேண்டும்.


No comments:
Post a Comment