மனிதவுயிர் பூமியில் பிறக்கும்போது என்ன விதமான உரிமைகளோடு பிறக்கிறது என்பதற்கு பலவிதமான விளக்கங்கள் இருக்கலாம். ஆனால் உயிர்வாழ்வதற்கான உரிமை மட்டும் பூமியில் அந்த உயிரின் முதல் மூச்சின் சுவாச இழையின் வழியே தன்னியல்பாக மானுடத்திடமிருந்து பெறப்படுகிறது. ஆன்மவாதிகள் (animist) இதனை ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையான உயிர்களுக்கும் விரித்துச் சொல்லக்கூடும். இந்த உரையாடலுக்காக நாம் மனிதர்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். பிறப்பதே வாழும் உரிமைக்கான சாட்சி. அந்த உரிமை ஒரு கடப்பாட்டைப்போல உலகின் வாழும் மனிதர்களாலும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
நாகரீக செயல்திட்டம் தன் வளர்ச்சியினூடே மனிதர்களுக்கு தன்னை அழித்துக்கொள்ளும் சுயவுரிமை இல்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. இடையறாத உரையாடலின் காரணமாக இன்றைக்கு சூழலின் தன்மைக்கு ஏற்ப சில தளர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. இது மனித இருப்பின் பெறுமதி என்ற நாணயத்தின் ஒரு பக்கம். இன்னொரு புறத்தில், உயிர்களுக்கு வாழ்க்கைப் போராட்டம் இருக்கிறது, தற்கொலைகளின் மூலம் மனிதர்கள் வாழ்க்கையைத் துறக்கிறார்கள். கொலை புரிகிறார்கள். கொடுங்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பதின் மூலம் சமூகமும் சட்டமும் மனிதரின் ஆகப்பெரிய உரிமையான உயிர் வாழும் உரிமையை ரத்து செய்கின்றன. குற்றவுணர்ச்சி நீக்கப்பட்ட வன்முறை வடிவமான போர்கள் என்னும் செயல்திட்டத்தில் மனிதவுயிர்கள் வரைமுறையின்றி அழிக்கப்படுகின்றன.
மானுட மதிப்பீடுகளுக்கு எண்ணற்ற மாறுவேஷங்கள். நீதியை ஒன்றாக எழுதிவைத்துவிட்டு நடைமுறையில் வேறொன்றைச் செய்யும். மீப்பொருண்மையியல் குறித்த அடிப்படைக் கேள்விகளை விவாதிப்பதில் பயனில்லை என்று புத்தர் கருதினார். மானுடத்தின் சில விவாதங்கள் அப்படி முடிவுறாதவை. இதுதான் நியாயம் என்று அறுதியாகத் தீர்த்துவிட முடியாதவை. மனிதனுக்கு தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமை இருக்கின்றதா என்பதும் அதுபோன்ற ஒரு கேள்விதான். அந்த உரிமை இல்லை என்று பொதுப்படையாக சொல்வோம். ஆனால் எதையும் கறுப்பு வெள்ளையில் அறுதியிட்டுச் சொல்லிவிடமுடியாத சூழ்நிலைகளை வாழ்க்கை இன்னும் உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறது.
ரொமோன் செம்பொத்ரோவுக்கு வாழ்வதற்கு மட்டுமின்றி இறப்பதற்குக்கூட இன்னொருவரின் உதவி தேவைப்படும் நிலை. உலகைச் சுற்றிய மாலுமியாகப் பணியாற்றியவர். இருபத்தெட்டு வயதில் நீச்சலுக்காக கடலுக்குள் குதிக்கும்போது நேரிடும் விபத்தின் காரணமாக கழுத்துக்குக் கீழே உடல் செயலிழக்கிறது. கருணைக்கொலை செய்வதும் அதற்கு உதவுவதும் சட்டவிரோதமாக இருக்கும் ஸ்பெயினில் இருபத்தாறு ஆண்டுகளுக்கும் மேலே படுக்கையில் இருக்கும் ரொமோன் தன்னுடைய கருணைக்கொலைக்கான அனுமதி கேட்டுச் செய்யும் சட்டப் போராட்டத்தினூடே மனிதர்களின் உயிர்வாழ்தல் மற்றும் கருணைக்கொலை உரிமை குறித்து விவாதிக்கிறது The sea inside என்ற ஸ்பானியத் திரைப்படம். இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு வெளியாகி சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது பெற்றது.
அசைவற்றுப் படுக்கையில் கிடக்கவேண்டிய நிலையிலும் ரொமோனைச் சுற்றியிருக்கும் வாழ்க்கையில் உயிரும் உணர்வுகளும் தளும்புகின்றன. ரொமோனின் தந்தை, அவருடைய மூத்த சகோதரர், மகனைப்போல் ரொமோனைக் கவனித்துக்கொள்ளும் சகோதரரரின் மனைவி, தன் மகன் போலவேயான அண்ணனின் மகன் என்று ரொமோனின் குடும்பம் அவருடைய இருப்பில் அர்த்தத்தைக் காண்கிறது. அதே வேளையில் உயிர் துறக்கும் ரொமோனின் விருப்பத்தை அவர்களால் முழுமையாக நிராகரிக்கவும் முடிவதில்லை.
படுக்கையில் கிடந்தாலும் ரொமோன் முடங்கிவிடுவதில்லை. தந்தை மற்றும் அண்ணன் மகனின் மூலம் தனக்கான எழுதுகருவியை வடிவமைத்து தன் வாழ்க்கைக் கதையையும் மனவுணர்வுகளையும் எழுத முடிகிறது. கருணைக்கொலைக்கான சட்டப்போராட்டத்துக்கு உதவ வரும் வழக்கறிஞர் ஹூலியாவுடனான காதலூடிய நட்பின் மூலம் அது புத்தகமாகவும் ஆகிறது. துரதிரஷ்டவசமாக ஹூலியாவின் நோய்மை அவர் ரொமோனுக்கு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் ஆக்கிவிடுகிறது.
ஒருபுறம் மானுடத்தின் மேன்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் குடும்பத்தின் குறைவற்ற அரவணைப்பு ரொமோனைச் சூழந்திருக்கையில் தன் உயிரைத் துறக்கும் விருப்பின் உறுதி மட்டும் குலையாமல் தீர்க்கமடைகிறது. அது உணர்ப்பூர்வமான தீர்மானம் என்பதைவிட தர்க்கத்தின் வழியே அடைந்த நிதர்சனமாக ரொமோனுக்கு இருக்கிறது. ரொமோன் வாழவேண்டும் என்ற எண்ணங்களின் கண்கள் வழியாகவும் தன்னுடைய உறுதியில் எள்ளளவும் மாற்றமடையாத ரொமோனின் கண்களின் வழியாகவும் கதை நகர்கிறது. இரண்டு புறமும் மறுக்க முடியா தர்க்கங்கள் இருக்கின்றன. தர்க்கத்திற்குக் கீழே எந்த உணர்வு வலுத்து இருக்கிறதோ அது இறுதியில் தன் நோக்கத்தை அடைகிறது.
ரொமோனாக நடித்த ஹாவியர் பார்டமின் நடிப்பு துல்லியமானது. ஒரு திரைப்படத்துக்கான நாடகீயத்தைக் கொண்டிருக்கிற அதே வேளையில் மனித உணர்வுகள் ஆழமாக வெளிப்பட்டிருக்கின்றன. கருணைக்கொலையையும் மரணத்தையும் குறித்த கதையாக இருந்தாலும் வாழ்க்கையின் உயிர்ப்புதான் படம் நெடுகவும் வலியுறுத்தப்படுகிறது. மனிதனின் அத்தனை பாடுகளுக்கும் நடுவில் உயிர்த்திருத்தலின் மேலான விருப்புறுதி நம்மிடம் இருக்கிறது.
ரொமோன் வாழ்க்கையின் மீதான விருப்பை இழந்துவிட்டாலும் கசப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதில்லை.ஒரு மனிதரின் பெளதீகமான இருப்பு வேண்டுமானால் உடல் என்னும் ஒற்றைப் பரிமாணத்தில் அமையலாம். ஆனால் உள்ளமாக ஒரு மனிதரின் தன்னிலையில் பிறரும் இருக்கும்போது நம்மால் கசப்புணர்ச்சியைத் தவிர்க்க முடிவது எவ்வளவு பெரிய பரிசு.

No comments:
Post a Comment