Feb 23, 2026

மொழிபெயர்ப்பின் நிறம் - ஆர்.சிவகுமார் கருத்தரங்கு

நேற்று 22-02-2026 அன்று சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் மொழிபெயர்ப்பாளர் திரு. ஆர்.சிவகுமார் அவர்களுடைய மொழியாக்கப் படைப்புகள் குறித்த ஒருநாள் நிகழ்வை ஆகுதி அமைப்பு சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தது. நான் மதியம் பனிரெண்டு மணியளவில் சென்றேன். அரங்குக்கு வெளியே நூல்வனம் மணிகண்டன் மட்டும் தனியே யாரோவொரு நண்பருக்காகக் காத்திருந்தார். முழுநாள் நிகழ்விலும் நான் பார்வையாளராகப் பங்கெடுத்துக்கொண்டேன். சிறப்பாகப் பேசிய உரையாளர்களின் பேச்சாற்றல் மீது சிறிய பொறாமை எழுந்தது என்னவோ உண்மைதான்.



முதல் அமர்வாக ”இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்” மொழியாக்க நூல் குறித்து மொழிபெயர்ப்பாளர் நரேன், எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் இருவரும் கதைகளைக் குறித்தும் சிவகுமார் அவர்களின் ஒட்டுமொத்த மொழியாக்கப் பங்களிப்பு பற்றியும் சிறப்பாகப் பேசினார்கள். இந்த நூலின் முதல் பதிப்பை 2018 ஆம் ஆண்டில் பாதரசம் பதிப்பகம் வெளியிட்டிருந்தது. கடந்த சென்னை புத்தகக் காட்சியில் நூல்வனம் பதிப்பகம் வாயிலாக மறுவெளியீடு கண்டிருக்கிறது.




இரண்டாவது அமர்வாக உருமாற்றம் நூல் குறித்து தம்பி றாம் சந்தோஷ் வடார்க்காடு மற்றும் மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸ் ஆகியோர் பேசினார்கள். சிவகுமாரை வெறும் மொழிபெயர்ப்பாளர் என்ற அடையாளத்துக்குள் மட்டும் சுருக்கிவிடக்கூடாது என்று கூறிய றாம், அம்மொழியாக்கப் படைப்பைக் குறித்த முழுமையான புரிதலை வாசகருக்கு அளிக்க சிவகுமார் அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தையையும் மெனக்கெடல்களையும் விளக்கினார். மொழிபெயர்ப்புக்கான வழிகாட்டிக் கையேடு ஒன்றையும் சிவகுமார் உருவாக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சிவகுமார் அவர்களின் மொழியாக்க நுட்பங்களைப் பற்றியும் இருத்தலியல் மற்றும் காஃப்காவைப் புரிந்துகொள்வது குறித்தும் சிறப்பாகப் பேசினார் சிறில் அலெக்ஸ். காஃப்காவின் படைப்புகளை எந்த நோக்கில் பார்க்கவேண்டும் என்பதை எக்ஸ்ரே படத்துடன் ஒப்பிட்டு விளக்கினார். மொழிபெயர்ப்புக்குள் வரும் உரையாடல்களுக்கு வட்டார வழக்கு அல்லது பொது பேச்சுத் தமிழைப் பயன்படுத்துவது குறித்து அவர் முன்வைத்த கருத்து முக்கியமான விவாதத்திற்குரியது. உருமாற்றம், விசாரணை, தி கேஸல் ஆகிய மூன்று நாவல்களையும் கோர்த்து வாசிப்பது குறித்து நுட்பமான பார்வையையும் வழங்கினார். ஆழமான அவருடைய உரையை நேரக்குறைவு காரணமாக சுருக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. அவர் கட்டுரை வடிவத்தை வெளியிடுவார் என்று நினைக்கிறேன்.

மதியவுணக்குப் பிறகான முதல் அமர்வில் ”அந்த நாளின் கசடுகள்” குறித்து அசதா உரை நிகழ்த்தினார். நூலின் மையம் பற்றியும் மொழிபெயர்ப்பாளர்களின் சொற்குவை மற்றும் சிவகுமார் அவர்களின் சிறப்பான சொற்தேர்வுகள் குறித்தும் பேசினார். அசதாவின் பேச்சு இனிமையானது என்பதோடு சேர்த்து அவருடைய ஆளுமையில் இயல்பாகவே இருக்கும் கனிவும் சேர்ந்த உரை அது. அசதா மற்றும் செந்தில் ஜெகன்நாதனின் குரல்களை ஒலிவாங்கியில் கேட்கும்போது இசையின் ”கரகரப்பின் மதுரம்” எவ்வளவு துல்லியமான சொல்லாட்சி என்று விளங்குகிறது.

வசைமண் நாவல் குறித்து பேசிய இல.சுபத்ரா நாவலின் உள்ளோட்டம் குறித்து விரிவாகப் பேசினார். அடுத்த அமர்வில் சோஃபியின் உலகம் குறித்து தூயனும் சபரிநாதனும் பேசினார்கள். மொழிபெயர்ப்புகளின் வழியே உருவாகவேண்டிய விவாதங்களின் முக்கியத்துவம் குறித்தும் வாழ்க்கை குறித்த பார்வைக்கோணங்களில் கீழை மற்றும் மேலைத் தத்துவங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை மையப்படுத்தியும் பேசினார் தூயன்.

ஆழமான கருத்துக்களை சிற்றிதழ் மொழியில் தெளிவான உச்சரிப்பில் ரஜினிகாந்த் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது சபரிநாதனின் உரை. உலகை குழந்தைகள் புரிந்துகொள்ளும் விதம், நமது சூழலில் தத்துவ மற்றும் சிந்தனை இயக்கத்தின் மீதான வெகுஜன ஒவ்வாமை, குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடையே தத்துவத்தையும் சிந்தனையையும் எடுத்துச் செல்லவேண்டியதின் முக்கியத்துவம் போன்றவற்றைத் தொட்டுச் சென்ற அவருடைய பேச்சும் ஆழமானதாகவும் சிறப்பாகவும் இருந்தது.

அதற்கடுத்துப் பேசிய விக்னேஷ் ஹரிஹரன் சல்மான் ருஷ்டியின் விஜயநகரம் நாவல் மற்றும் அவருடைய அபுனைவு நூலான கத்தி ஆகிய இரண்டையும் இணைத்துப் பேசினார். புனைவாக விஜயநகரம் தன்னை ஈர்க்காவிட்டாலும் இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் விஜயநகரப் பேரரசு இந்து பொற்காலத்தின் குறியீடாக வலதுசாரிகளால் கட்டமைக்கப்படும் கதையாடலுக்கான எதிர்கதையாடலாக விஜயநகரத்தை ருஷ்டி எழுதியிருக்கிறார் என்றார். இலக்கியச் செயல்பாடு மற்றும் மொழிபெயர்ப்பில் விழுமியங்களை வற்புறுத்துவதாக இருந்தது அவரது பேச்சு.

உரையாடல் அரங்கை எழுத்தாளர் இளம்பரிதி ஒருங்கிணைத்தார். இதில் ஆர்.சிவகுமார் அவர்கள் தன்னுடைய பால்யகால வாசிப்பனுபவங்கள், லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் தமிழுக்கு வந்த காலகட்டம், அவை ஏற்படுத்திய தாக்கம், எழுபதுகளில் இருந்த கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம், மாய யதார்த்தவாதத்தின் மீதான இடதுசாரிகளின் ஏற்பும் மறுப்பும் என்று பல புள்ளிகளைத் தொட்டுப் பேசினார். நான் பெங்களூர் புக் பிரம்மா நிகழ்வில் பானு முஷ்டாக்கால் கடுமையாக மறுக்கப்பட்ட, ஆனால் அவருடைய மொழிபெயர்ப்பாளர் தீபா பஸ்தியால் முன்வைக்கப்பட்ட “மொழிபெயர்ப்பாளர் ஒரு இணையாசிரியர்” என்ற கருத்தாக்கம் குறித்த சிவகுமார் அவர்களின் கருத்தைக் கேட்டேன். இது போன்ற பார்வைகள் மேற்கின் ரீடர் ரெஸ்பான்ஸ் கோட்பாடுகளின் அடிப்படையில் எழுந்திருக்கலாம் என்றும், தான் எப்போதுமே மூல ஆசிரியரை ஒருபடி மேலே வைத்தே கருதுவதாகவும் கூறினார்.

பெர்ஷிய மொழியிலிருந்து நேரிடையாக மொழிபெயர்க்கப்பட்ட ரூமியை வாசிப்பது சிரமமாக இருக்கிற வேளையில், ரூமியை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும் க.மோகனரங்கன் போன்றோரின் மொழிபெயர்ப்புகள் ஈர்ப்புடையவைவாக இருப்பது குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதனையொட்டிய விவாதத்தில் ரூமி தன்னுடைய கவிதைகளை ஒரு இறையியல் பிரதியாகத்தான் எழுதியிருக்கிறார், இலக்கியப் படைப்பாக அல்ல என்ற கருத்தை வசுமிதர முன்வைத்தார். மேற்குலகம் ரூமியை வேறுவிதமாக அதாவது, இறையியல் பிரதி என்பதாக அல்லாமல் கவித்துவமான இலக்கியப் பிரதியாக தன்னுடைய வசதிக்கேற்ப உருமாற்றிவிட்டது என்ற பார்வையும் முன்வைக்கப்பட்டது. புதிய விஷயங்களை இடதுசாரிகள் மெதுவாகத்தான் ஏற்றார்கள் என்ற ஆர்.சிவகுமார் அவர்களின் பார்வைக்கு மாற்றுக் கருத்தை மொழிபெயர்ப்பாளர் அமரந்தா முன்வைத்தார்.

நிறைவு அமர்வில் செல்வேந்திரன், இன்றைய தரம் குறைந்த மொழிபெயர்ப்புகளின் பெருக்கத்தால் வாசகர்களுக்கு நேரும் இடர்களுக்கு நடுவில் கவிஞர் அபியின் மாணவரான சிவகுமார் போன்றவர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்று பேசினார். கவிஞர் க. மோகனரங்கன், தனக்கு சிவகுமார் அவர்களுடன் அறிமுகம் ஏற்பட்ட காலகட்டத்தையும், இலக்கியத்தில் மட்டுமின்றி தனிப்பட்ட விதத்திலும் சிவகுமார் அவர்களின் ஆளுமை எப்படி ஒரு வழிகாட்டியாக இருக்கிறது என்பது குறித்தும் பேசினார். நதியின் மூன்றாவது கரை சிறுகதையில் வரும் தந்தையைக் குறித்து அவர் பேசியபோது குரல் உடைந்து நெகிழ்ந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. முன்பு சேலத்தில் நிகழ்ந்த உரையாடல் அரங்கில் சிவகுமார் அவர்கள் தன் தந்தையைக் குறித்து நெகிழ்ந்து கூறிய வார்த்தைகளை நினைத்துக்கொண்டேன். எம்.கோபாலகிருஷ்ணன் தன்னுடைய உரையில் சிவகுமார் அவர்களுடன் அறிமுக அனுபவங்கள், தன்னுடைய இரு கவிதைகளை சாகித்ய அகாதமி கவிதை வாசிப்புக்காக அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தது, செங்கதிர் அவர்களின் மொழிபெயர்ப்புக்கான செம்மையாக்கத்தில் கருத்துக்களைப் பாந்தமாக பகிர்ந்துகொண்ட விதம், மொழிபெயர்ப்பில் நிகழ்ந்த சிறு பிழையை பதினாறு ஆண்டுகள் கழித்துத் திரும்பவும் திருத்திய அவருடைய அர்ப்பணிப்பு போன்றவற்றைப் பகிர்ந்துகொண்டார். (பிரம்மராஜனால் நாள்முழுக்க இசைத்தட்டில் இசை கேட்கவைக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட எழுத்தாளர் யார் என்பதை மட்டும் மோகனும் எம்.கோ வும் மறைத்துவிட்டதை புலன் விசாரணை செய்யாமல் விடப்போவதில்லை).

கலந்துரையாடலிலும் ஏற்புரையிலும் ஆர். சிவகுமார் தனக்கேரிய நெகிழ்வோடும் ஆதுரத்தோடும் நிதானத்தோடும் பேசினார். க.நா.சு, சி.சு. செல்லப்பா போன்றவர்கள் எத்தனையோ காரியங்களைச் செய்துவிட்டு வெளிச்சங்கள் இல்லாமல் மறைந்துவிட்டார்கள் என்பதை நினைவுகூர்ந்தவர் இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற அங்கீகாரங்களை சற்று கூச்சத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றார். நாம்தான் முதலில் செய்தோம் என்று எதையும் சொல்லிவிடமுடியாது, நம்முடைய முன்னோடிகள் நமக்குமுன் அந்தக் காரியங்களைச் செய்திருப்பார்கள் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

சிவகுமாரின் மொழிபெயர்ப்புகளில் ஒரு தேர்வு இருக்கிறது, அதன் வழியே ஒரு இலக்கிய மதிப்பீடு முன் வைக்கப்பட்டிருக்கிறது, பல இளம் தலைமுறை மொழிபெயர்ப்பாளர்களை அவர் பாதித்திருக்கிறார், நிறைய மெனக்கெடல்களோடு ஒரு தியானம்போல் மொழிபெயர்ப்பைச் செயல்பாட்டை மேற்கொண்டிருக்கிறார், அவருடைய மொழிபெயர்ப்புகள் தரமான சொற்குவையின் அடிப்படையில் அமைந்தவை போன்றவை இந்த நிகழ்வில் முன்வைக்கப்பட்ட முக்கியமான பொதுக்கருத்துகள். மொழிபெயர்ப்பு ஒரு நன்றிகூரப்படாத வேலை என்றொரு பார்வையும் அப்படியில்லை இப்போது அந்த நிலை மாறிக்கொண்டிருக்கிறது என்ற மாற்றுப்பார்வையும் வைக்கப்பட்டது. இன்றைய மொழிபெயர்ப்புகள் பலவற்றின் தரம் குறித்தான கடுமையான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது


நினைவிலிருந்த கருத்துக்களைத் தொகுத்துச் சொல்லியிருக்கிறேன். விரிவான உரைகளை ஸ்ருதி டிவியின் வழியே காணலாம். தமிழ் சிற்றிதழ் இயக்கம் குறித்த நினைவுகூரலாகவும் நேற்றைய அமர்வு அமைந்தது மிக முக்கியமானது. ஆகுதியின் சார்பில் நிகழ்வை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்த அகரமுதல்வனுக்கு நன்றியும் வாழ்த்துகளும். நிகழ்வில் நூல்வனம் பதிப்பகத்தாரும் பரிசல் செந்தில்நாதனும் நூல் விற்பனை அரங்குகளை அமைத்திருந்தார்கள்.

நெடுநாட்கள் கழித்து அசதாவை நேரில் பார்த்தாலும் இடைப்பட்ட காலத்தில் தூரத்தில் இருந்த உணர்வே ஏற்படவில்லை என்று கூறியபோது புன்னகையோடு “சோஷியல் மீடியா” என்றார். தம்பி றாம் சந்தோஷ் ஒரு கறுப்புப் பேனாவைப் பரிசளித்ததோடு சிவகுமார் அவர்களுடனான புகைப்படத்தையும் எடுத்துக் கொடுத்தார். நெடுநாள் கழித்துப் பார்த்த நண்பர் காலத்தச்சன் என் கன்னத்தைப் பிடித்துப் பிடித்துக் கொஞ்சியபோது எனக்கு பாபுவை நினைக்காமலிருக்க முடியவில்லை. காலத்தச்சனின் நலம் கேட்டுக்கொண்டேன். வசுமித்ர உள்ளிட்ட மற்ற நண்பர்களைச் சந்தித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.

                                                                      ***

இந்த நிகழ்வு எனக்கு, 29-07-2018 ஞாயிறு அன்று சேலத்தில் தக்கையின் சார்பில் நடந்த ”ஆர்.சிவகுமார் - மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல்” அரங்கம் குறித்த நினைவுகளைக் மீளக் கொணர்ந்தது. சிவகுமாருக்கு ஒரு கூட்டம் நடத்தவேண்டும் என்று ஓரிரு வருஷங்களாக பாபு சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சற்று சோர்வோடு இருந்த காலம் அது. திடீரென்று ஒரு நாள் நடத்திவிடலாம் என்றான், நடத்திவிடலாம் என்றேன் நானும். இசை, மற்ற நண்பர்கள், சொற்சுனை நண்பர்கள் ஆகியோர் ஒத்துழைக்க அது அரைநாள் நிகழ்வாக நடந்தது. பின்னால் ஆர்.சிவகுமார் தன்னுடைய நாவல்களை எழுதுவதற்கு அந்த நிகழ்வுகூட ஒரு சிறு தூண்டுதலாக இருந்திருக்கக்கூடும் என்று தான் நினைப்பதாக நேற்றைய கூட்டத்தில் க.மோகனரங்கன் குறிப்பிட்டார்.


கூட்டத்தோடு மட்டுமின்றி அந்தக் கட்டுரைகளை நூலாக வெளியிடவேண்டும் என்பதும் பாபுவின் தீர்மானம். ஜீ.முருகன் வடிவமைத்துக் கொடுத்து உதவ, பாபுவும் நானும் தொகுத்தோம். பல நாட்களாக தலைப்பு கிடைக்கவில்லை. கடைசியில் “மொழிகளின் உருமாற்றம்” என்ற தலைப்பை நான் பரிந்துரைக்க பாபுவுக்கும் பிடித்துவிட்டது. இலக்கண ரீதியாக அது சரியான தலைப்பா என்பதை பெருமாள்முருகன் அவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டோம்.

நூல்வனம் மணிகண்டன் அவர்களுடைய அச்சகத்தில்தான் அதன் நூறு பிரதிகளை அச்சிட்டோம். கூட்டத்திற்கு முந்தைய நாள் சனிக்கிழமை மாலை நேராக ராயப்பேட்டையிலிருந்த அவருடைய அச்சகத்துக்குச் சென்று நூல்கட்டை எடுத்துக்கொண்டு சேரன் எக்ஸ்பிரஸில் நான் சேலத்துக்குப் கிளம்பினேன். சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் அந்த இரண்டு கட்டுகளை தூக்க முடியாமல் தூக்கிச் சென்றபோது சி.சு.செல்லப்பாவின் கொடிவழியைச் சேர்ந்த எனக்கு “இது ஒரு பேறு” என்ற நிறைவுணர்ச்சி நெஞ்சத்தை நிறைத்தது. அந்த நிகழ்வைக் குறித்த புகைப்படங்கள் முகநூலில் இருக்கின்றன. தக்கை நிகழ்வின் உரைகளின் ஷ்ருதி டிவி யூடியூப் பக்கத்தில்  இருக்கின்றன ”மொழிகளின் உருமாற்றம்” நூலின் pdf வடிவத்தைத் தரவிறக்கிக் கொள்வதற்கு கீழே உள்ள அட்டைப்படத்தின் மீது சொடுக்கவும்.


ஆமாம், ஒரு குறிப்பிட்ட சதவீதமான இருண்மை நம்முடைய வாழ்க்கையிலும் கலைச் செயல்பாட்டிலும் இருக்கிறதுதான், இருந்தாலும் படைப்பிலக்கியத்திலும் இலக்கியச் செயல்பாட்டிலும் அர்ப்பணிப்போடு செய்யப்படும் எந்தவொரு ஆக்கப்பூர்வமான காரியமும் வீணாவதில்லை. மற்றவர்களின் கண்களுக்குப் புலப்படும் பெருந்தருவுக்கான விதையாகவோ அல்லது கண்ணுக்குப் புலப்படாத உரமாகவோ அந்தக் காரியங்கள் மாறுகின்றன. முரண்பாடுகளோடும் சண்டைகளோடும் ஒரு சிறிய பரப்புக்குள் அது இருந்தலும் தமிழ் நவீன இலக்கியமும் சிற்றிதழ் மரபும் காத்திரமான காரியங்களைச் செய்திருக்கின்றன. அந்தப் பைத்தியக்காரத்தனத்தைக் கைவிடாமல் இருப்பது எப்படி என்பதுதான் நேற்றிலிருந்து யோசனையாக இருக்கிறது.

No comments: