Mar 2, 2026

சிறுகதை எழுதுவது எப்படி

(01/03/2026 அன்று வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஏற்பாட்டில் இணையவழியில் நிகழ்ந்த சிறுகதைப் பயிற்சி முகாமில் பேசியவையின் கட்டுரை வடிவம்)
 
             புலம்பெயர் இலக்கியத்தின் கருப்பொருட்கள்

சிறுகதை எழுதுவது எப்படி என்பதைப்பற்றி பேசுவதற்கு முன்னால் இந்த உரையாடலின் கருவான புலம்பெயர் வாழ்க்கையின் இலக்கியக் கருப்பொருட்கள் குறித்தும் பேசலாம். புலம்பெயர்தல் மனிதர்களுக்கு மிகப்பழைய விஷயம். ஆதிகாலத்தில் மனிதன் உணவுக்காக அலைந்து இடம்பெயர்வது நடந்தது. அப்படி அலைந்து திரிந்த, இன்னும் மொழி தோன்றியிராத காலத்திலும் மனிதனுக்கு தன்னுடைய நினைவைப் பதியவைக்கும் எத்தனங்கள் இருந்திருக்கின்றன என்பதற்கு குகை ஓவியங்கள் போன்றவை சாட்சியாக இருக்கின்றன. மொழி உருவானபிறகு அது மனித நினைவுகளின் பெட்டகமாக மாறுகிறது.

மனிதர்கள் சமூகமாகத் திரண்டு ஒரே இடத்தில் உணவு உற்பத்தியைச் செய்துகொண்டு நிலைபெற்று வாழத் தொடங்கியபோது இடம், காலம், பருவநிலை, பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றினால் மனித நினைவுகளுக்கு ஒரு பழகிய சட்டகம் உருவாகிறது. அப்படியான பழகிய நினைவுகள் உள்ள இடத்திலிருந்து முற்றிலும் வேறான பிரதேசத்துக்கு ஒருவர் புலம்பெயரும்போது இந்தச் சட்டகம் மாற்றத்தை அடைகிறது. அயற்கவர்ச்சியான புதிய நினைவுகள் சட்டகத்துக்குள் இணைவதால் வாழ்க்கையைக் குறித்த புரிதல் மாற்றத்தை அடைகிறது அல்லது விரிவுபடுகிறது. புலம்பெயர்தல் நினைவின் சட்டகத்தை மாற்றி, நினைவை மறு உருவாக்கம் செய்கிறது.

போர், வணிகம், வாழ்வாதாரம் என்று பல காரணங்களால் மனிதர்கள் புலம்பெயர்வது பூமிக்கோளமெங்கும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. உலகமயமாக்கலுக்கு பிறகு மூன்றாம் உலக நாடுகளின் சமூகங்கள் பலவற்றிற்கும் வட அமெரிக்காவில், ஐரோப்பாவில், மத்திய கிழக்கில் புலம்பெயர் சமூகம் (diaspora) உருவாகியிருக்கிறது. புத்தாயிரத்தின் தொடக்கத்திலிருந்து புலம்பெயர்தலால் ”புதிய நினைவுருவாக்கம்” ஏற்பட்டிருக்கிறது.

இன்று எதிர்மறையான காரணங்களுக்காக மட்டும் புலம்பெயர்தல் நடப்பதில்லை. பணி, தொழில், மேம்பட்ட வாழ்க்கைத் தரம் ஆகிய காரணங்களாலும் நடக்கிறது. போர்ச்சூழலில் உயிரைக் காத்துக்கொள்ள புலம்பெயர்ந்தவரின் நினைவேக்கத்துக்கும் பணி, தொழில் வாய்ப்புகளுக்காகப் புலம் பெயர்ந்தோரின் நினைவேக்கத்துக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது. ஒன்று அடையாளம் இழப்பு, இன்னொன்று அடையாள உருவாக்கம்.

இந்தப் பின்புலத்தில் பிரிவேக்கமும் நினைவேக்கமும் தம்முடைய அர்த்தத்தில் மாற்றமடைந்திருக்கின்றன. அறிவியலால் பூமியின் ஒவ்வொரு அடியும் அளக்கப்பட்டு தொலைவு என்பது கிட்டத்தட்ட நிர்மூலமாக்கப்பட்டு மனித வாழ்க்கையின் புறவய இயல்புகள் மாறியிருக்கின்றன. பிரிவேக்கம் என்பது காணாமையால் ஏற்படுவது. இன்று மனித ஏக்கங்களில் பாதியை ஒரு செல்போனே தணித்துவிடுகிறது.  தொடுதிரையால் இன்னும் ’தொடுகை’யை மட்டும் சாத்தியப்படுத்த முடியவில்லை.

இன்றைய புலம்பெயர் இலக்கியம் இழப்பின் நினைவேக்கத்தை உலகளாவிய தன்மையில் ஆழமாக விசாரிக்க வேண்டும். மனிதர்கள் தாய்நிலத்தைத் தாண்டி வேறு நிலங்களில் வசிக்க வேண்டிய தேவை அதிகரித்திருக்கும் இன்றைய சூழலில் உலகின் பல பகுதிகளிலும் அந்நிய வெறுப்பு (xenophobia) பரவலாகி இருக்கிறது. இது புலம்பெயர் இலக்கியம் பேசவேண்டிய முக்கியமான அரசியல். 

வேர்களை முழுமையாக அறுக்கமுடியாத முதல் தலைமுறை புலம்பெயர்ந்தவர்களின் அடையாளச் சிக்கல்கள், இரண்டாம் தலைமுறைக்கு நேரும் பண்பாட்டுத் துண்டுபடல், இனம்-நிறம்-மதம் ஆகியவற்றால் வேறுபட்டவர்கள் புலம்பெயர்ந்த பிரதேசத்தில் ஒரே சமூகமாக வாழும் சூழலில் நிகழும் பண்பாட்டு ஊடாட்டம் ஆகியவற்றையெல்லாம் புலம்பெயர் இலக்கியம் பேசவேண்டியிருக்கிறது. முக்கியமாக, மனிதர்களை வேறுபடுத்தும் துவேஷங்களைக் கடந்து மனிதர்களின் ஆதார உள்ளுணர்வுகளால் உருபெறும் “மனித சாரம்” குறித்தும் அது பேசவேண்டும். பின்னால் திரும்பி மட்டும் பார்த்துக்கொண்டிராமல் புலம்பெயர் இலக்கியம் முன்னோக்கிப் பார்ப்பதும் முக்கியமானது.

***

வாழ்க்கையும் கலையும்

வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கும் ஆத்மார்த்தமான அகவய அனுபவமே கலை. மனிதர்களின் புலன்களோடு வினைபுரிகிறவையாக இருப்பதால் அவை இயல்பாகவே மனதை ஈர்க்கின்றன. கலை, வாழ்க்கைக்கு எவ்வளவு செறிவூட்டுகிறது என்பதை அதனுடன் தொடர்பயிற்சியில் இருப்பவர்கள் அறிவார்கள். இங்கே கலையின் ஸ்தானத்தில் இலக்கியத்தைப் பேசுகிறோம். இலக்கியம் மனிதர்களின் அடிப்படை உணர்வுகள் உருவாக்கும் அனுபவங்களின் அழகியல்பூர்வமான வரலாற்று ஆவணம்.

அழகியல்தான் (aesthetics) இலக்கியத்தை ஆவணத்திலிருந்து வேறுபடுத்துகிறது. புலன்களின் நுண்ணுர்வுகளின் மீது கலை அழகியல் பூர்வமாக ஆளுகை செலுத்துகிறது. கலை இலக்கியத்தின் பயன்பாட்டு நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் கலையின் அழகியலில் சமரசம் நிகழ்ந்துவிட்டால் அது தன் அசல் தன்மையை இழந்துவிடுகிறது. வடிவப் பரிசோதனை, கோட்பாட்டுப் பின்னணி, ஆவணமாக்கல், பிரச்சாரம் என்று எந்த ரீதியில் இலக்கியம் எழுதப்பட்டாலும் மனித உணர்வுகள் மீதான விசாரணை, அழகியல் ஆகிய இரண்டிலிருந்தும் விலகாமலிருப்பது முக்கியம்.

                                                              ***
சிறுகதை எழுதுவது எப்படி

இலக்கியம் அகவயமானது, அது விதிகளின் அடிப்படையில் அமைந்த துறை அல்ல. உள்ளடக்கத் தேர்விலோ, படைப்பாக்க நுட்பத்திலோ இது சரி, இது தவறு என்று யாராலும் தீர்த்துச் சொல்லிவிடமுடியாது. எழுதப்பட்ட படைப்புகளை ஆராய முடியும், ஆனால் இப்படி எழுது என்று சொல்ல முடியாது. பொதுவான வழிமுறைகள், உத்திகள், நுட்பங்கள் போன்றவற்றை விவாதிக்கலாம். எழுத்தின் மீதான வேட்கை ஒருவருக்குள் ஆதார உள்ளுணர்வாக இருக்கும்போதுதான் இந்த விவாதங்கள் பயன் தரும். பயிற்சியினால் மட்டும் எழுதிவிட முடியுமா என்பதற்கு முற்றிலும் சாதகமான பதிலைச் சொல்லமுடியாது.


தமிழ்ச் சிறுகதையின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, போக்குகள் போன்றவை குறித்து ஏற்கெனவே நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. ஆகவே அவற்றைத் தவிர்த்துவிட்டு ஒரு ஆரம்ப கால சிறுகதை எழுத்தாளர் கவனம் செலுத்தவேண்டிய சில அம்சங்களை என்னுடைய அனுபவம், நம்பிக்கை மற்றும் சூழலில் ஏற்கெனவே உருவாகி நிலைபெற்றிருக்கும் கருத்துக்கள் ஆகியவற்றிலிருந்து தொகுத்திருக்கிறேன்.

1. வாசிப்பின் அவசியம்

எழுத்துக்கு அடிப்படை வாசிப்பும் கூர்நோக்குதலும். மொழி கூர்மையடைய தொடர் வாசிப்பு கட்டாயமாகத் தேவை. நீரில் இறங்காமல் நீச்சல் பழகமுடியாது, வாசிக்காமல் இலக்கியம் படைக்கமுடியாது. சிறுகதை எழுத விரும்புகிறவர்கள் நிறைய சிறுகதைகளை வாசிக்கவேண்டும். தொடர்வாசிப்பினால் இரண்டு விஷயங்கள் நிகழும். கதையின் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் குறித்த அக விவாதமும் கருத்துருவாக்கமும் நம்முள் நிகழ்ந்து நுட்பங்கள் பிடிபடும். இரண்டாவதாக, நமக்கு விருப்பமான கதையுலகமாக எந்த வகைமை (Genres) இருக்கிறது என்ற தெளிவு கிடைக்கும்.

தமிழுக்கு செழுமையான சிறுகதை மரபு இருக்கிறது. ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. எல்லா வகைமைகளிலும் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர்களின் முழுத்தொகுப்புகளும் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்புகளும் வருகின்றன. வட்டாரம் மற்றும் வெவ்வேறு கருப்பொருட்களின் அடிப்படையில் சிறுகதைகள் தொகுக்கப்படுகின்றன. இந்திய மொழிகளிலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் சிறுகதைகள் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. சிறுகதை எழுதுவது எப்படி என்று பல முன்னோடி எழுத்தாளர்கள் எழுதியும் பேசியுமிருக்கிறார்கள். ஒரு பருந்துப் பார்வையிலான அடிப்படைப் புரிதலை உருவாக்கிக்கொள்ள இவற்றை வாசிக்கலாம். சிறுகதை எழுதப் பயில்வது என்பது அதனை வாசிக்கப் பழகுவதையும் சேர்த்துத்தான்.

2. ஆரம்பத் தடுமாற்றங்களைக் களைதல்

சிறுகதையின் முழு உருவமும் உள்ளடக்கமும் மனப்பிரதியிலேயே கிடைக்காது. அப்படி எதிர்ப்பார்க்கவும் கூடாது. நமக்குள் பூடகமாக இருக்கும் எண்ணத்தையோ காட்சியையோ குறிப்பிட்ட காலத்துக்கு அசைபோடும்போது அவை விரிவடையும். கதையின் கோட்டுருவம் கிடைத்தவுடன் எழுத அமர்ந்துவிடவேண்டும், கதை முழுமையாக மனப்பிரதியிலேயே துலங்கக் காத்திருப்பதைத் தவிர்க்கவேண்டும்.

எழுத அமர்ந்துவிட்டால் ஏற்கெனவே யோசித்தவற்றிலிருந்து விலகி கதை நம்மை புதிய பாதையில் அழைத்துச் செல்வது நிச்சயம் நிகழும். அப்போது நாம் தயங்காமல் அந்தப் பாதையில் பயணிக்கவேண்டும். கதைக்கான இன்னும் சிறந்த புதிய விஷயங்கள் நம் ஆழ்மனதிலிருந்து மேலெழும். படைப்பாக்கத்தின் உண்மையான ரசவாதம் இங்கேதான் நிகழ்கிறது.

3. சிறுகதையின் உருவும் கருவும்

சிறுகதையின் உருவம் குறித்த மரபான பார்வை என்ன? ஒரு சிறிய விஷயத்தை, ஒற்றை இழையை எடுத்துக்கொண்டு அதில் ஒரு முரணைக் கட்டமைத்து வாசகர் எதிர்பாராத திருப்பத்தை அளித்து கதையை முடிப்பது. சிறுகதை எழுதுவது எப்படி என்ற அத்தனை உரையாடல்களிலும் இந்தத் “திருப்பம்” என்பது மாறாமல் சொல்லப்படுகிறது. இவ்வகையான உத்தியைப் பெரிதும் பயன்படுத்தியவர் ஓ.ஹென்றி [the gift of the magi, the last leaf ) வாசகரால் யூகிக்க முடியாத, ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளும் முடிவு என்பது சிறுகதைக்கு மாறாத அடிப்படை விதியாக இருக்கிறது. நம்முடைய பெரும்பான்மையான கதைகள் இன்றும் இந்த வரையறைக்குள்தான் எழுதப்படுகின்றன. சிறுகதையில் “திருப்பம்” என்பதை சுவாரசியத்துக்கான உத்தி என்பதோடு சிறுகதையில் கண்டடையும் குறுந் தரிசனம் என்பதாகவும் கொள்ளலாம்.

சிறுகதை என்பது ஒரு ஜன்னலின் வழியே தொலைதூர அடிவானத்தைக் காண்பதுபோல், சிறிய சட்டகத்தின் வழியே பெரிய காட்சியைக் காண்பது. பெரிய வாழ்க்கையையும் நீண்ட கால வியாபகத்தையும் சிறுகதையில் எழுத முடியும். ஆயினும் புதிதாக எழுதிப் பழகுகிறவர்கள் விஷயங்களைக் கையடக்கமாக வைத்துக்கொள்வது கற்றலை எளிதாக்கும்.

சிறுகதைக்கான கரு எங்கிருக்கிறது? எப்படிக் கண்டுபிடிப்பது? அன்றாடம் பார்க்கிற, நிகழ்கிற, கேட்கிற, படிக்கின்ற விஷயங்களுக்குள் கதை ஒளிந்திருக்கிறது. கவனிக்கவும், கதை வெளிப்படையாக இருப்பதில்லை, உள்ளுறைந்திருக்கிறது. அழுத்தமான பாதிப்பைக் ஏற்படுத்துகிற ஒரு சம்பவத்தைக் கேள்விப்படுகிறீர்கள். அந்த சம்பவம் அவ்விதமாக நடந்திருக்காமல் வேறுவிதமாக நடந்திருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசிக்கலாம். நிகழ்ந்த ஒன்றிலிருந்து நிகழ வாய்ப்பிருந்த அத்தனை சாத்தியங்களையும் யோசிப்பது. விஷயங்களின் பின்பக்கத்தை, எதிர்முனைகளைச் சிந்திப்பது.

வாழ்க்கையில் அனுபவங்களும் செய்திகளும் கரட்டு வடிவில் இருக்கும். மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களைக் கடந்திருப்போம். நினைவிலிருக்கும் வெவ்வேறு மனிதர்களையும் சம்பவங்களையும் பொருத்தமான சரடில் கோர்க்க முனைந்தால் சிறுகதைக்கான கரு கிடைக்கலாம். உங்களுக்கு முழுமையாகப் பிடிபட்டிராத, திரும்பத் திரும்ப மனதில் மேலெழும் விஷயத்தினுள் நிச்சயமாக ஒரு கதை இருக்கிறது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சிறுகதைக்கான கணங்கள் குறைந்தது பத்தேனும் இருக்கும். தொடர்வாசிப்பு அந்தப் பெறுமதியான தருணங்கள் எவை என்பதை உணர்த்தும். அவற்றைத் தேர்ந்தெடுத்து உருமாற்றி எழுதவேண்டும். சொந்த அனுபவங்களிலிருந்து எழுதுவது தொடக்கத்தில் உதவும். ஆனால் ஒரு கட்டத்தில் எழுத்தாளன் கூடுவிட்டு கூடுபாயக் கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் தொடக்கத்தில் அதிக சிடுக்குகள் இல்லாத ஒற்றை முடிச்சு மட்டும் உள்ள கருவை மையமாக வைத்து எழுதலாம். மனப்பயிற்சியும் எழுத்தோட்டமும் கூடியபிறகு நமக்கே ஆச்சரியமூட்டும்படி எதிர்பாராத புள்ளிகளிலிருந்து கதைகள் கிடைக்கும்.

4. சிறுகதையின் தொடக்கம்

சம்பவங்களையும் கதைப்போக்கையும் வளர்த்தெடுக்கும் வகையில் கதையின் தொடக்கம் திறந்த முனையாக இருக்கவேண்டும். முற்பகுதியில் கதையின் வளர்ச்சியைத் தடுக்கிற அல்லது மட்டுப்படுத்துகிற சித்தரிப்புகளைத் தவிர்க்கவேண்டும்.

ஆரம்பகால எழுத்தாளன் காலத்தின் நேர்கோட்டு வரிசையில் கதை எழுதிப் பழகுவதில் பிழையில்லை. ஆனால் கதையை மையத்திலிருந்து தொடங்கி முன்னும் பின்னும் ஊடாடுவது கதையை விரிப்பதற்கான நிறைய சாத்தியங்களைக் கொடுக்கும். இந்த உத்தி நவீன கதைகளின் அடையாளமாகவும் இருக்கிறது.

இடம், காலம் குறித்த கவனம் முக்கியமானது. தன்மை மற்றும் படர்க்கை இரண்டில் எந்த இடம் கதையை வலுவாகச் சொல்ல உதவுமோ அதைப் பயன்படுத்தலாம். ஆரம்பகால எழுத்தாளருக்கு தன்மை ஒருமை (first person singular) இல் கதை சொல்வது சற்று எளிதாக இருக்கலாம்.

கதையில் சொல்லப்படும் காலம் குறித்த கவனம் முக்கியம். ஒரு கதையை நிகழ்காலத்தில் தொடங்கி கடந்தகாலத்துக்குச் சென்று திரும்பவும் நிகழ்காலத்திற்கு திரும்பி முடிக்கும்போது ஏற்படச் சாத்தியமுள்ள காலக் குழப்பங்கள் தவிர்க்கப்படவேண்டும்.

5.கதையை வளர்த்தெடுத்தல்

கதையின் மைய உணர்வு என்ன? அது என்னவிதமான உணர்ச்சிகளைக் கையாள்கிறது? கதையின் அடிப்படை உணர்ச்சி என்ன (காதல், காமம், வெறுப்பு, துரோகம், இயலாமை, கையறு நிலை போன்றவை). கதையின் மைய உணர்ச்சி மற்றும் அதனோடு இயைந்த மற்ற உணர்வுகள் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டோடு பயன்படுத்தவேண்டும், தேவையற்ற உணர்ச்சிகளைக் குவித்து கதையின் ஒருமையைக் குலைக்கக்கூடாது. உதாரணமாக, கதையின் மைய உணர்வு துரோகம் என்றால் கோபம், வருத்தம் போன்றவை அதன் துணை உணர்வுகள்.

கதையின் மைய உணர்ச்சிக்குப் பொருத்தமான பொழுதும் நிலமும் காட்டப்பட வேண்டும். அகத்தில் இருப்பதை புறப்பொருட்களில் எதிரொளிக்கலாம். புறத்தின் காட்சிகளால் அகம் கொள்ளும் மாற்றங்களைச் சித்தரிக்கலாம். (உதாரணம், ஒருவன் கோபத்தோடு தெருவில் போகும்போது அவனைப் பார்த்து நாய் குரைத்தால் அதை கல்லால் அடிப்பான்,  துயரத்தோடோ விரக்தியோடோ நடந்துபோனால் அதைப் பொருட்படுத்தாமல் நடப்பான்)

யதார்த்தத்தின் தர்க்கத்தில் கதை இருக்கவேண்டிய அவசியமில்லை. புனைவுக்கு என்று ஒரு தர்க்கம் இருக்கிறது. கதையின் தர்க்கம் அதற்குப் பொருந்தினால் போதும். அதேபோல், புனைவின் தர்க்கத்துக்கும் பொருந்தாத ஒன்று கதையின் செழுமைக்குத் தேவைப்படுமெனில் எழுத்தாளன் ”பொயட்டிக் லைசென்ஸ்” எனப்படும் மீறலைச் செய்யலாம்.

6. சிறுகதையின் முடிவும் விளைவும்

கதையின் தொடக்கத்தில் திறக்கப்பட்ட பகுதிகள், புனைவின் தர்க்கத்தின் அடிப்படையில் ஒரு இறுதியை எட்டி சிறுகதை ஒரு முழுமையுணர்வைத் தரவேண்டியது முக்கியம். முடிவு ஒற்றைத்தன்மை உடையதாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. பல்லர்த்த சாத்தியங்கள் தொனிக்குமாறும் முடிக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட சாத்தியங்களோடு முடிக்கப்படும் கதையில், முடிவிலிருந்து வேறு கதைகள் தொடங்குகின்றன.

கதையில் எழுத்தாளன் எல்லாவற்றையும் சொல்லவேண்டியதில்லை. கதை என்பது பிரசங்கம் அல்ல. கதை என்பது எழுத்தாளரும் வாசகரும் சேர்ந்து காணும் கனவு. எது சொல்லாமல் விடப்படுகிறது என்பது முக்கியமானது. 

கதை வாசகரின் மனதில் வேறொன்றாக மாறும். சிறுகதையின் உருவமும் ஒருமையும் முழுக்க ஆசிரியனின் விவரிப்பைப் பொறுத்து மட்டும் அமைவதில்லை. வாசித்தவுடன் வாசகரின் மனதில் உருவாகும் பிசிரற்ற சித்திரத்தின் மூலமே கதையின் ஒருமை உருப்பெறுகிறது. எழுத்தாளன் அளிக்கும் சித்திரத்தின் அடிப்படையில் தன் நினைவிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் காலத்தையும் இடத்தையும் அர்த்தங்களையும் வாசகர் சிருஷ்டித்துக்கொள்கிறார். அதனால்தான் எழுத்தாளன் உத்தேசித்திராத அர்த்தங்கள் கதைக்குக் கிடைக்கின்றன. ஆகவே வாசகரை வரிகளுக்கு நடுவே வாசிக்க அனுமதிப்பது, வாசகப் பங்கேற்புக்கான இடைவெளிகளைக் கொடுப்பது ஆகியவை ஒரு சிறுகதைக்கு முக்கியமானவை

7. சிறுகதையில் மொழியின் பங்கு

மொழிதான் அழகியலை நிர்ணயிக்கிறது. சிறுகதை மொழி என்பது கவித்துவமாகச் சொல்வதோ அடர்த்தியாகச் சொல்வதோ மட்டுமல்ல. வாசகருக்குப் படிக்கும் உணர்வு மறைந்து கதை வாழ்க்கையாக விரியவேண்டும் என்றும் மொழி ஒரு திரையாக மாறி வாழ்க்கை விரிய வேண்டும் என்றும் ச.தமிழ்ச்செல்வன் கூறுகிறார். எழுத்தாளருக்கும் வாசகருக்குமிடையே ’பாஷையே பரிபாஷை ஆகவேண்டும்’ என்று லா.ச.ரா கூறியதையும் குறிப்பிடுகிறார். முகத்தோற்றம் எப்படி தனித்துவமானதோ அப்படித்தான் உங்கள் மொழியும் அமையவேண்டும்.

8. பின்பற்ற வேண்டியவையும் தவிர்க்க வேண்டியவையும்

முன்னோடிகளின் பாணியில் எழுதுவதையும் போலச் செய்தலையும் தவிர்க்க வேண்டும். எவ்வளவு குழந்தைத்தனமாக இருந்தாலும் உங்களுடைய நடையை மட்டும் எழுதி எழுதி வளர்த்தெடுக்கவும். தொடர்சியாக எழுதும்போது உங்களுக்கான தனிநடை உருவாகும். உங்கள் நடைதான் உங்கள் முகம்.

முதல் வரைவு என்பது பெரும்பாலும் முதிர்ச்சியற்றது. “The first draft of anything is shit" என்று ஹெமிங்வே கூறுகிறார். திரும்பத் திரும்ப எழுதி ஒரு கதைக்குள் நிலைத்திருக்கும்போது அது விரிவும் ஆழமும் கொள்ளும். தொடக்கத்தில் எதையும் தணிக்கை செய்யாமல் தோன்றுவதை முழுக்க எழுதவும். எழுதும்போதே எடிட் செய்யும் திறன் அனுபவத்தின் அடிப்படையில் கூடும். ஆனால் ஆரம்ப கட்டத்தில் முதல் வரைவை முடித்துவிட்டு செம்மையாக்கத்தைத் தொடங்கவும். எவை தேவையானவை, எவை ஊளைச்சதை என்று பிடிபடும்.

தொடக்கத்தில் சுயவிமர்சனம் செய்துகொள்ளாதிருப்பதும் பிறருடைய விமர்சனங்களுக்கு செவிகொடுப்பதும் முக்கியமானவை. சற்று சிரமம்தான் என்றாலும் விமர்சனங்களின் முன்னால் திறந்த மனதோடு இருக்கவேண்டும். அதைப் போலவே எழுத்துக் கைவரப்பெற்றபிறகு கடுமையான சுயவிமர்சனத்திற்கு முன்னுரிமை கொடுப்பது முக்கியம். பொதுவான வகையில் உங்கள் படைப்பின் மீதான விமர்சனங்களை காய்தல் உவத்தலின்றி தர்க்கப்பூர்வமாக அணுகி கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுக.

ஒரு நல்ல கதை எழுத பத்து சுமாரான கதைகளை எழுத வேண்டியிருக்கும். ஆகவே சோர்வடைய வேண்டாம். எழுக! எழுதுக!

பிற வாசிப்புகளுக்கு:

1. சிறுகதை எழுதுவது எப்படி – தி.ஜானகிராமன்


2. சிறுகதை ஒரு சமையல்குறிப்பு – ஜெயமோகன்


3. சிறுகதை எழுதுவது எப்படி – ச.தமிழ்செல்வன்


4. 2022 வது வருடம் டிசம்பர் 3 ம் தேதி வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இணைய வழியிலான சிறுகதை பயிற்சி - லக்ஷ்மி சரவணகுமார்


No comments: