டாங்கோ நாவல் குறித்து என் பார்வைக்கு கிடைத்த மதிப்புரைகள் மற்றும் விமர்சனங்களின் தொகுப்பு இது. இவற்றை வழங்கிய நண்பர்களுக்கும் பிரசுரித்த இதழ்களுக்கும் நன்றி
மதிப்புரை- சுனில் கிருஷ்ணன்
குணா கந்தசாமி எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். புதிய நாவலான “டாங்கோவை” அவரது இரு இலக்கிய நண்பர்களான கே. என். செந்திலும் பாலாவும் வரைவு வடிவத்தில் வாசித்தார்கள் என்பது அவரை புரிந்து கொள்ள உதவும். பாலாவும் செந்திலும் ஒரு கிடைமட்ட கோட்டின் இரு எல்லைகள் என்று வைத்துக்கொண்டால் குணா இவர்கள் இருவருக்குமான நடுப்புள்ளி. அவரால் சுக்கிலம் போன்ற முற்றிலும் நவீன வாழ்வின் சிடுக்கை பேசும் கதையை எழுத முடியும் திரிவேணி போன்ற மண்ணில் காலூன்றிய கதையையும் எழுத முடியும். இந்த வீச்சு அவரை எனக்கு முக்கியமான எழுத்தாளராக ஆக்குகிறது.
குணாவிடம் சம்பத் கோபிகிருஷ்ணன் போன்ற இருத்தலியல் எழுத்தாளர்களின் சாயல் உண்டு. வெறுமையும் தனிமையும் அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை. ஆனால் அக்காலகட்டத்து எழுத்துக்களில் இருந்து குணா வேறுபடும் புள்ளியை தொட்டு காட்ட வேண்டும். முந்தைய காலகட்டத்து வெறுமை பொருளியல் பற்றாக்குறையுடன் நெருங்கிய தொடர்புடையது. சுராவின் உருவகத்தை கடன்வாங்குவதென்றால் எதனாலும் நிறையாத ஒரு பள்ளம். “டாங்கோவின்” ஆனந்துக்கு என்ன தான் பிரச்சினை? அவனுக்கு என்ன தான் வேண்டும்? இன்று அவன் நல்ல வேலையில் இருக்கிறான். அவனால் எதையும் துய்க்க முடியும். பற்றாகுறை மட்டுமே நிலவிய கடந்தகாலத்தை கடந்துவிட்டான். ஆனாலும் ஓரு பெரும் வெறுமை அவனை சூழ்கிறது. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள அவனுக்கு முடியவில்லை. சுயேச்சையை கொண்டு அவன் செல்வது தன்னழிவின் பாதையை. அவனது வெறுமையும் தனிமையும் நுகர்வால் நிறையாதது. அவனுக்கு பெண் உடல் தான் வேண்டுமா? அதை அடைகிறான். ஆனால் அவனுக்கு அது நிறைவை தரவில்லை. அவன் வளரும் போது உடனிருக்காத தந்தையையும் தாயையும் தேடுகிறான். ஒரு குடும்பத்தை ஈட்டிக்கொள்ள முனைகிறான். பள்ளி கால தமிழ் ஆசிரியர் ராகவன், கல்லூரி ஆசிரியர், ஸ்பானிய பத்தி எழுத்தாளர் மத்தியாஸ், அடுக்கக உரிமையாளர் கிரிஸ்டோப் என வயதில் மூத்த அத்தனை பேரிடமும் தந்தையை கண்டடைய முற்படுகிறான். இந்திய முகமே தென்படாத சிறிய கடற்கரை நகரமான உருகுவே நாட்டின் மாண்டிவீடியோவில் அவன் காணும் காந்தி சிலை கூட அவனுக்கு தந்தையின் வடிவமாக தான் இருக்கிறார். அவர் முன்னால் லாகிரி பயன்படுத்தியதற்காக கூசுவான். அவரது இருப்பு அவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. காந்தி அவனுக்கு வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள தூண்டுகிறார். தன்னழிவின் பாதையிலிருந்து மீண்டு வர அவரது இருப்பும் உதவுகிறது.
நாவல் ஒரு தளத்தில் உறவின் கூடலையும் பிரிவையும் பேசும் காதல் கதை. இன்னொரு தளத்தில் குடும்ப அமைப்பை பற்றிய உரையாடல் நிகழ்கிறது. அதுவே இந்த நாவலின் சமூக தளம். இதற்கடுத்து மூன்றாவதாக ஒரு ஆன்மிக அடுக்கும் உள்ளது. இருத்தல் குறித்த விசாரணை ஒரு சரடாக நாவல் முழுக்க வருகிறது. இருத்தலியல் பிரதிகள் போல சூனியத்திற்குள் சென்று முட்டிக்கொள்ளாமல் மேலெழுகிறது. ஆன்மிகம் என்பது தன்னை கண்டடைதல் தான். தன்னை கண்டடைய தனக்குள்ளிருக்கும் இருளை எதிர்கொண்டு கடக்க வேண்டும்.
ஆனந்த் வாழ்வில் சந்தியா வருகிறாள். திருமண முறிவிலிருந்து மீண்டவள் இன்னொரு உறவுக்குள் வர தயாராக இல்லை. எந்த உறுதியும் கோராத, எந்த பிணைப்பையும் ஏற்காத உறவே அவளுடைய தேர்வு. குடும்பம் எனும் அமைப்பினால் பாதிக்கப்பட்டவள். சந்தியாவால் தன் வாழ்வு பொருளுடையதாக ஆவதை உணர்கிறான். அவளது அண்மையில் தன்னை ஒழுங்குக்குள் கொணர்ந்து பேணி கொள்கிறான். அவனை விட்டு சென்ற பிறகு திரும்பவும் இருளில் மூழ்குகிறான். இயல்பான நட்புடன் பழகி வந்த வேசையின் மீது திடிரென்று நாட்டம் கொள்கிறான். அவனது பள்ளத்தை உடலால் நிறைக்க முயல்கிறான். உடல் நலம் குன்றிய ஓரிரவில் அவன் வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்து செல்லும் இடம் நாவலின் மிக முக்கியமான தருணம். அவள் இரு குழந்தைகளுக்கு தாய் என்பதை அறிந்து கொள்கிறான். அதற்கு பின் அவளை நாடவில்லை. பல வகைகளில் பொருள் படதக்கது. அதுவரை பெண்ணாக தெரிந்தவள் தாயாக தன்னை வெளிப்படுத்துகிறாள். பிரபஞ்சத்தை தனது தோழமையாக வழிகாட்டியாக உணரும் புள்ளியில் நாவல் நிறைவடைகிறது.
“டாங்கோ” இருவர் ஒன்றாகும் ஒருவித நடனம். மரபான குடும்ப அமைப்புக்கு மாற்றான புதிய அமைப்பிற்கான உருவகமாக வாசிக்க முடியும். ஆன்மிக தளத்தில் இருமையொழிந்த நடனம் என்பதையும் குறிக்கிறது. நாவலின் முற்பகுதிகளில் வரும் கிறிஸ்டோப் மத்தியாஸ் ராகவன் எம்கே போன்ற பாத்திரங்கள் வழியாக குடும்ப அமைப்பின் மாறிவரும் இயங்குதளம் குறித்த ஒரு உரையாடல் நடக்கிறது. என்னளவில் அந்த பாத்திரங்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இந்த உரையாடலை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறார்கள். கிறிஸ்டோப் குடும்பம் என்பது பாலியல் அமைப்பு அல்ல சமூக அமைப்பு என சொல்கிறார். பாலியல் சுதந்திரத்தை அனுமதிக்கும் சமூக அமைப்பாக குடும்பம் உருமாற முடியுமா என்றொரு கேள்வி எழுகிறது. ஏறத்தாழ ஆனந்தை போலவே தனியனாக இருப்பவர் மத்தியாஸ். இறந்து போன சகோதரியின் மகளை பேணும் பொறுப்பு அவரிடம் வந்ததும் பொறுப்புடன் நடந்து கொள்ள தொடங்குகிறார். கிறிஸ்டோபின் கூற்றை வலுப்படுத்தும் சித்திரமாக இதை காண முடியும்.
நாவலில் நிலம் முக்கிய பங்காற்றுகிறது. இரவு விளக்கில் மின்னும் நீர்பரப்பின் சித்திரம் அபாரமாக உள்ளது. றாம்பாலா காந்தியை கண்ணில் காண முடிகிறது. நாவலுக்குள் காந்தியின் இருப்பு ஆனந்துக்கு வாழ்வை பொருளுடையதாக ஆக்கிக்கொள்ள உந்துகிறது. வலுவான மைய முடிச்சு அற்ற சுயகூராய்வு நாவல் என்பதே இந்த நாவலின் வடிவம். அதுவே இதன் எல்லையும் கூட. அஜிதனின் ‘மைத்ரியுடன்’ பலவகையிலும் ஒப்பிடலாம். இரண்டு நாவல்களும் அபாரமான நிலைக்காட்சி விவரணை கொண்டவை. ஒரு பெண் வழியாக தன்னை கண்டடைவது என்பதை முன்வைப்பவை. மைத்ரி கொந்தளிப்பான மொழியில் உறவையும் பிரிவையும் சொல்கிறது என்றால் ‘டாங்கோ’ ஆர்பாட்டமற்ற அடங்கிய மொழியில் விலகிய தொனியில் அணுகுகிறது. வலுவான மைய முடிச்சு அற்ற தன்னை நோக்கும் நாவல்கள் தான் இரண்டுமே. வேறுபடும் புள்ளிகளும் உண்டு. சமகாலத்தின் வெறுமையை இருவிதமாக அணுகியுள்ளார்கள் என்று சொல்ல முடியும். விமர்சனம் என்பது பிரதியில் எது இல்லையோ அதை சுட்டுவது அல்ல. அதே போல் நான் எழுதி இருந்தால் என்ன எழுதி இருப்பேன் என்று சொல்வதும் அல்ல. அப்படி சொல்லும்போது அது என்னுடைய பிரதியாகும். அவனது மீட்சி வலுவாக சித்தரிக்கப்படவில்லை என்பதை வேண்டுமானால் ஒரு விமர்சனமாக வைக்க முடியும். நல்ல நாவல் அளித்த குணாவிற்கு வாழ்த்துகள்.
***
கார்த்திக் பாலசுப்ரமணியன்
குணாவின் கற்றாழைப் பச்சை எனக்குப் பிடித்த சிறுகதைத் தொகுப்புகளில் குறிப்பிடத்தக்கது. இது அவருடைய இரண்டாவது நாவல்.
தமிழ் புனைவுப் பரப்பில் பல்வேறு நிலங்கள் பதிவாகியிருக்கின்றன. அதற்கு ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யிலிருந்து விஜய ராவணனின் ‘பச்சை ஆமை’ வரை நிறைய உதாரணங்களைக் கூற முடியும். குறிப்பாக தொண்ணூறுகளின் தாராளமயமாக்கலும் இரண்டாயிரத்துப் பிறகான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் நாடுகளுக்கிடையேயான அழுத்தமான கலாச்சார, பண்பாட்டு வேலிகளை நெகிழ்த்தியுள்ளன. அதிலும் நல்லதும் அல்லதுமான விளைவுகள் உண்டெனினும் இலக்கியத்துக்கு புதிய அனுபவங்களைச் சேர்ப்பித்த வகையில் நன்மையே விளைந்திருக்கிறது.
தென் அமெரிக்க நிலத்துடன் தமிழ் இலக்கிய உலகுக்கு நெருங்கிய தொடர்பு உண்டென்றபோதும் உருகுவே போன்ற தென் அமெரிக்க நாட்டிலிருந்து அந்நிலத்து அனுபவங்களைத் தாங்கி தமிழில் வந்திருக்கும் முதல் படைப்பு – ‘டாங்கோ’ என்றே நினைக்கிறேன். நாவல் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் நாவலின் நாயகனான ஆனந்துடன் நாமும் மான்ட்டிவீடியோ நகரத்தையும் அதன் மக்களையும் அவர்களின் கொண்டாட்ட வாழ்வையும் அறிந்துகொள்கிறோம். நாவலின் இரண்டாவது பகுதி, காதலின் வரவும் பிரிவுமான நிகழ்வுகளால் நிறைகிறது. தாய் தந்தை இல்லாத குடும்ப உறவுகளை அறியாத ஆனந்தும் கடந்த கால உறவுக் கசப்பிலிருந்து முழுவதும் மீண்டிருக்காத சந்தியாவும் சந்திக்கும் தருணங்களில் நிகழும் ரசவாதங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன.
ஒரு நிலத்தை அதன் அசல் தன்மை கெடாமல், அதே நேரத்தில் வாசகனுக்கு நெருக்கமாக உணரச் செய்வது ஆகப்பெரிய சவால். குணா தன்னுடைய பிரமாதமான மொழியால் அச்சவாலை எளிதாகக் கையாளுகிறார். அதன் பொருட்டு அவர் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் சற்று அதிகமாகி ஒரு கட்டத்தில் கதையின் போக்கு பிடிபடத் தாமதமாகிறது. முதல் பகுதியில் தொடர்ச்சியான அறிமுகங்களே நடந்துகொண்டிருப்பது மெல்லிய சலிப்பைத் தரத் தொடங்கும்போது அப்பகுதியில் அறிமுகமானவர்களின் பிரிவும் நிகழ்ந்துவிடுகிறது. நாவலின் இரண்டாம் பகுதியில் வரும் சந்தியாவின் வரவே கதைநாயகனான ஆனந்தின் உளச் சிக்கலை இன்னும் துலக்கமாகக் காட்டுகிறது.
நாவலை வாசித்து முடித்து சற்று நிதானமாக யோசிக்கும்போது இரண்டு பகுதியிலுமே புதியவர்களின் வருகையும் பிரிவும், அதன் வழியே எழுந்து முரண்களும் பிரதானமாக இருக்கும்போது நாவலை இரு பகுதிகளாகப் பிரிக்காமலிருந்திருந்தால் இன்னும்கூட அடர்த்தியாக வந்திருக்கும் என்று தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை.
நல்ல வாசிப்பனுபவம் தந்த நாவல். நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.
***
டி.சே.இளங்கோ
பெளத்தத்தில் நிரந்தரத் துக்கம், அன்றாடத் துக்கம் என வகுத்துக் கொள்ளும் பார்வை இருக்கின்றது. மகிழ்ச்சியை அப்படி வகுத்தெல்லாம் எவரும் அனுபவிப்பதாகச் சொல்வதில்லை. நமது நினைவுகளால்தான் இந்த துயரங்களும், துன்பங்களும் என்றும் பெளத்தம் சொல்லும். சிலவேளை ஆறறிவொன்று இருப்பதால்தான் மனிதர்களாகிய நாம் இந்த வாழ்க்கையை இயல்பாகக் கொண்டாடத் தெரியாமல் இருக்கின்றோமோ தெரியவில்லை.
குணா கந்தசாமியின் ‘டாங்கோ’விலும் வரும் ஆனந்துக்கும் வாழ்விவை அனுபவிக்க வசதிகளும் வாய்ப்புக்களும் இருந்தாலும் தனிமை பெரும் இருளாய் அவனைச் சூழ்ந்து கொள்கின்றது. அவன் மென்பொருள் வேலை நிமித்தம் உலகின் மறுகரையான உருகுவேயுக்கு வருகின்றபோதும் அவனைக் கடந்தகாலம் துரத்தியபடி வருகின்றது. அகற்றவே முடியாத ஓர் இருள் அவனின் அகத்தில் தொடர்ந்து வளர்ந்தபடியே இருக்கின்றது. அதன் நிமித்தம் குடியிலும், கஞ்சா புகைப்பதிலும் தன்னிலையைத் தொலைக்கின்றான்.
அவன் இந்த வாழ்வின் கொண்டாட்டங்களைத் துய்ப்பதற்கான அத்தனை வழிகளிலும் திறக்கப்பட்ட ஓர் அந்நிய நிலத்திலும், தனித்தலைபவனாகவும், தனித்திருப்பவர்களின் மீது விருப்புக் கொண்டு நட்புக் கொள்கின்றவனாகவும் இருக்கின்றான்.
பெற்றோரை சிறுவயதில் இழந்தும், மாமா/அத்தையினால் வளர்க்கப்பட்ட ஆனந்துக்கு அவனது கடந்தகாலம் தாண்டி வர முடியாதது. அவன் தனது இருபதுகளின் மத்தியில் தனக்கான வசதியான வாழ்வை மென்பொருள் கல்வியினால் அமைத்துக் கொண்டாலும், அவனது மனது கீழைத்தேய கிராமமொன்றில் அடைபட்டு விடுதலை பெறத்துடிக்கும் ஒரு பறவையைப் போல இருக்கின்றது.
அவனது சிக்கல் என்பது, அவனுக்கு இந்த இன்பங்களை அனுபவிக்க ஆசையும், அதேவேளை அவற்றை நோக்கிச் செல்லும்போது அவனறியாத கண்ணிகளால் அவன் இழுத்து வீழ்த்தப்படுகின்றவனாகவும் இருக்கின்றான். ஆனால் எல்லாமே மனம் போடுகின்ற வேடங்கள்தான் என அவன் தன்னிலை அறிகின்றபோது எதையெல்லாம் வேண்டாம் என்று தனது சமூகத்தின்/ஒழுக்கத்தின் நிமித்தம் மறுத்தானோ அவையெல்லாவற்றையும் அனுபவித்துப் பார்க்கின்றான்.
இன்றைய நவீன மனிதனின் பெரும் சிக்கலே, அவனு(ளு)க்கு கிடைக்க வேண்டிய எல்லாம் கிடைத்தபின்னும் எஞ்சுகின்ற பெரும் வெறுமை. அறிவை பெறுவதையும், செல்வத்தைப் பெருக்குவதையும், கொண்டாடங்களில் திளைப்பதையும் சொல்லித் தருகின்ற இந்த நவீன வாழ்வு நம் அகத்தில் பொங்கும் வெறுமையையும் தனிமையையும் எப்படிக் கையாள்வது என்று சொல்லித் தருவதில்லை.
இதன் நிமித்தம் இன்னுமின்னும் இன்றையகாலத்து மனிதர்களாகிய நாம் எல்லாவற்றிலிருந்தும் அந்நியமாகின்றோம். அது சாதாரண நமக்கு மட்டுமான சிக்கல் இல்லை, இன்று அவ்வளவு பிரபல்யமாக இருந்தும் தற்கொலையை நாடிச் செல்கின்ற/தம்மை அழித்துக் கொள்கின்ற, வசதி படைத்தவர்க்குமான பொதுப் பிரச்சினையாக இது இருக்கின்றது.
குணா ‘டாங்கோ’ வில் வரும் ஆனந்தின் மூலம் ஒரு வரைபடத்தை விரித்துக் காட்டுகின்றார். அது நம் தமிழ் மனதுக்கு பழக்கமில்லாத புதிய நிலப்பரப்பில், றாம்பலாவின் வீதிகளிலும், உருகுவேயின் கடற்கரைகளிலும் சந்திக்கும் மனிதர்களில் இருந்து, காந்திச் சிலையோடு தனித்து அளவாளவதுவரை என அழகாக காட்சிப்படுத்தப்படுகின்றது. அங்குள்ள மத்திய தர வர்க்கத்தினூடாக மட்டுமில்லாது, விளிம்புநிலை மனிதர்களினூடாகவும் நமக்கு வேறொரு உலகை குணா அவ்வளவு நெருக்கமாகக் காட்டுகின்றார்.
‘யாதும் ஊரை யாவரும் கேளிர்’ என்று நினைக்கும், அதன் தாற்பர்யத்தை ஸ்பானிய நண்பருக்கும் எடுத்துச் சொல்லும் ஆனந்ததால் ஏன் கீழைத்தேய மனநிலையைத் துறந்து ஓரு ‘வேரற்ற’ மனிதனாக அகமும்/புறமும் சார்ந்து மாறமுடியவில்லை என்ற கேள்வியிலிருந்து நமது இருத்தலியம் சார்ந்த சிக்கல்களும், அந்நியமாதலின் பிணக்குப்பாடும் துல்லியமாகின்றன. ஒருவகையில் நவீனம் கடந்த பின்னத்துவ வாழ்க்கையை வாழ்வதாக நம்பும் நாமின்னும் கடந்தகாலத்தில்தான் உறைந்து போய் இருக்கின்றோமா என ஆனந்தனின் இருப்பு நமக்குச் சுட்டிக் காட்ட முயல்கின்றன.
இன்றைக்கு குடும்பம் என்ற அமைப்பும், ஆண்-பெண் உறவுகளும் எவ்வாறு நாளுக்கொரு தடவை மாறி சிக்கலாகிக் கொண்டிருக்கின்றன என்பது நாம் கண்கூடாகப் பார்க்கலாம். ஆனந்த் ஒரு புதிய நிலப்பரப்பில் வாழ்கின்றபோதும் அவனால் சில அடிப்படைகளைத் துறக்க முடியவில்லை. முரண்நகையாக அவன் குடிக்கு மட்டுமில்லை, கஞ்சாவுக்கும் அடிமையாகின்ற நிலைமைக்கு வந்துவிட்டான்; ஆனால் அவன் விரும்பும் பெண்ணோ குடும்பம் என்ற அமைப்புக்குள்ளும், அவனால் ஏற்பட்ட கருவுக்குத் தாயாகாவும் ஆகவேண்டும் என்/ரும் தீவிரமாக நம்புகின்ற ஒருவனாகவே இருக்கின்றான். ஒருவகையில் ஆனந்தில் பிரதிபலிப்பது சமகாலத்து பெரும்பாலான தமிழ் ஆண்களின் மனதென்பதால் அவனை விலத்தி வைத்து தூற்றவெல்லாம் தேவையில்லை.
மேலும் இன்று முற்போக்கு பேசும் ஆண்களில் அரைவாசிப்பேர் இப்படி மரபுகளோடும் சடங்களோடும் தம்மைப் பிணைத்தபடியே குடும்பம் என்ற அமைப்புக்குள் அடைக்கலம் பெறுகின்றவர்களாகவே இருக்கின்றனர். ஒருவகையில் பார்த்தால், சந்தியா திருமணம் செய்த விவாகரத்துப் பெற்ற அவளின் முதல் கணவனுக்கும், ஆனந்துக்கும் கூட பெரும் வித்தியாசமில்லை என்ற எண்ணம் ஒருகணம் வந்து நம்மைத் திடுக்குறச் செய்கின்றது. அதாவது நாளை சந்தியா ஆனந்த்தைத் திருமணம் செய்தால் அவனும் ஏற்கனவே மணம்புரிந்த அந்தக் கணவனைப் போல ஆகிவிடமாட்டானா என்ன?
ஆனந்துக்கு ஒரு Redemption நடக்கின்றது. ஒருவர் தன்னை உடைத்துப் பார்க்கும்போது உடைந்த இடத்தில் வீழும் ஒளி அவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்பது போல அவன் இந்த இயற்கையைத் தன் நெருங்கிய துணையாகக் கொள்கின்றான். அவனுடைய பாவங்களுக்கு மட்டுமில்லை, தன்னிலை உணர்தல்களுக்கும் சாட்சி ரியோ தெ லா பிளாட்டா நதிதான். ஆகவேதான் அவன் இறுதியில் அங்கு நீராடும்போது அவன் அதைப் புனித நதியாக உருவகித்துக் கொள்கின்றான்.
மேலும் அவன் முதல் முத்தம் பெற்ற அவனின் மாமாவின் மகளான தீபாவைத் திருமணம் செய்து அவன் அகமனது அவாவும் குடும்பம் என்ற அமைப்புக்குள் அடங்கிக் கொள்வானா என்பது ambiguity ஆக இருப்பது இந்த நாவலின் பிறபகுதியில் அழகாகப் பொருந்திக் கொள்கின்றது.
நம் சமகாலத் தமிழ்ச் சூழலில் சரளமான வாசிப்பு மொழியில் எழுதப்பட்டால் அது ஆழமற்றதென நம்பும் ‘கெட்ட வாசிப்பு’ பழக்கமொன்று இருக்கின்றது. அதுபோலவே சில பாத்திரங்களோடு மட்டும் நாவல் இருந்தாலும் அது தட்டையானது என்ற பார்வையும் பலருக்கும் இருக்கின்றது. என்னைப் போன்றவரை ஒரு புனைவு பாசாங்கு செய்யாது genuine ஆக எழுதப்பட்டு என்னை உள்ளிழுத்துக் கொண்டாலே அது நல்லதொரு நாவலாகிவிடும்.
உண்மையில் புனைவின் சரளமான மொழியல்ல, அந்தப் புனைவு நம்மை உள்ளிழுத்து நாம் எளிதில் அதில் அமிழ்ந்துவிட்டதால்தான் நமக்கு வாசிப்பு எளிதாக இருக்கின்றதென்பது பலருக்குப் புரிவதில்லை. நான் குணாவின் ‘டாங்கோ’ வாசித்துக் கொண்டிருந்தபோது, எனது ‘மெக்ஸிக்கோ’ நாவலுக்கு வந்த விமர்சனங்களை குணாவும் எதிர்கொள்வார் என்றே நினைத்தபடியிருந்தேன். அதேவேளை எனக்கு ‘மெக்ஸிக்கோ’ நான் எதிர்பார்க்காத திசைகளிலிருந்து புதிய வாசகர்களைக் கொண்டு வந்தது சற்று வியப்பாக இருந்தது. அதுபோல குணாவின் ‘டாங்கோ’வை நோக்கி அவரை இதுவரை வாசிக்காத புதிய வாசகர்கள் அவரிடம் வந்து சேர்வார்கள் என்று நம்புகின்றேன்.
பலர் இந்நாவலில் உண்மையிலே ஆனந்துக்கு என்னதான் பிரச்சினை, அப்படி ஒரு பெரும் பிரச்சினை இருந்தால் ஏன் குணா, அதை விவரிக்கவில்லை என்று கேட்கக்கூடும். ஆனால் என்னைப் பொருத்தவரை இவை சொல்லப்படாததன் இடைவெளிதான் இந்த நாவலை ஒரு முக்கிய புனைவாக்குகின்றது எனச் சொல்வேன். அந்தக் காரணங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தால் அது தனித்து ஆனந்துக்குரிய வாழ்க்கைச் சிக்கலாக சுருங்கிப் போயிருக்கும். அவை சொல்லப்படாததால்தான் வாசிக்கும் நாம் ஒவ்வொருவரும் ஆனந்தாக இருந்து நம் தனிமையையும், வெறுமையையும் உற்றுநோக்கும் ஒரு சந்தர்ப்பம் இங்கே வாய்க்கின்றது.
ஆக குணா, ஆனந்த் ஊடாக நம்மிடம் ஒரு முக்கிய வினாவை முன்வைக்கின்றார்; இன்றைக்கு நீங்கள் பரபரப்புடன் தேடி ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து விடயங்களும், என்றேனும் ஒருநாள் கிடைத்துவிட்டால், உங்களால் இந்த வாழ்வை அகம் ஊறி சந்தோசத்தில் திளைக்க முடியுமா? அல்லது ஆகக்குறைந்தது உங்கள் மனப்பிசாசை அடக்கி அமைதியாக மிஞ்சியுள்ள வாழ்க்கையை நிறைவாக வாழமுடியுமா என்பதுதான்.
***
இருண்மையைக் கடப்பது: குணா கந்தசாமியின் டாங்கோ - கவிஞர் சமயவேல்
குணா கந்தசாமியின் நாவல் டாங்கோ, வெகு நாட்களுக்குப் பிறகு அனுபவித்து வாசித்த நாவலாக இருக்கிறது. கதையம்சம் என்பது கொஞ்சமே எனினும் மனித வாழ்க்கை குறித்த ஆழ்ந்த விசாரணையும் விசாரமும் மிக அதிகம். இந்த நாவலின் நாயகன் ஆனந்த், சோர்வடையாமல் தன்னைத் தானே சலித்துக்கொண்டு, தனக்குள்ளும் தனது அனுபவங்களுக்குள்ளும், அனுபவங்களில் இருந்து குமிழியிடும் விதம் விதமான எண்ணங்களை சேகரிப்பவனாகவும், சேகரித்தவற்றை விசாரணை செய்பவனாகவும் இருக்கிறான். இந்த நாவலின் பிரதானக் கதாபாத்திரமான ஆனந்தனுடைய மனதின் இதயத்தின் முனகலை சொற்களாக எழுதிக்கொண்டே போகிறார் குணா கந்தசாமி. குணாவின் வாசிப்புப் பலம், ஒரு சிறந்த படைப்பூக்க மொழியை அவருக்கு வழங்கியிருக்கிறது. இந்த உரைநடை, சட்டென நினைவுபடுத்துவது மிலன் குந்தரே. அதீத உணர்வுகளுக்கு ஆட்படாத மன விசாரங்களின் மொழி அவருடையது. சிந்தனை என்றும் சொல்ல முடியாது. மனதின் ஆழங்களளைத் தோண்டிக்கொண்டே செல்வது. தேர்ந்த வாசிப்பாளர்களுக்கே இது சாத்தியம். மிக ஆழமான, உன்னிப்பான வாசிப்பு என்பது ஒரு எழுத்தாளருக்கான அடிப்படைப் பயிற்சி என்று நம்புகிறேன். படைப்பு மொழியை தனியே கற்க முடியாது. வாசிப்பின் ஊடாகவே படைப்புமொழி கைவரப் பெறுகிறது.
எதிர்கால வாழ்வுக்கான அடித்தளமாக அமைவது இளமைக்காலமே. கல்வி, வேலை, தொழில், வருமானம், நிலையான வருமானம் என்னும் புறவாழ்வும் காதல், திருமணம், வாசிப்பு, இசை, ஓவியம் என்னும் அகவாழ்வும் இளமைக்காலத்தில் தான் வலுவாக காலூன்றி எழுகிறது. இங்கே உருகுவே நாட்டில் ஐ.டி. நிறுவனத்தில் களப்பணிகளை ஒருங்கிணைக்கும் அலுவலகத்தின் பொறுப்பாளராக இருக்கும் ஆனந்தனின் இளமைக்காலம் அவனது வாழ்வின் தலைவாசலாக நாவலில் விரிகிறது. நாவல் இரண்டு பகுதிகளாக இருக்கிறது.
முதல் பகுதியில் இருண்மையும் சலிப்பும் நிறைந்த அர்த்தமற்ற வாழ்வு ஆழ்ந்து பரிசீலிக்கப்படுகிறது. றாம்ப்லா கடலில், கழுத்தழவு ஆழத்தில் வந்த வேகமானதொரு அலையால் கரை மீண்டு மணலில் கிடக்கையில் தன்னை அனாதையாக உணர்கிறான். நினைவு தெரியும் முன்னே அப்பாவும் அம்மாவும் இறந்துவிடுகிறார்கள். மாமாவும் அத்தையும் வளர்க்கிறார்கள். அப்பா அம்மா என்ற சட்டகத்துக்குள் அவர்கள் அடங்குவதில்லை. “அன்பையோ பிரியத்தையோ துலக்கிக் காட்டும் ஒரு காட்சியும் நினைவில் இல்லாதது போலவே, மிகுந்த துயரம் கொண்டதாகவும் எதுவும் இல்லை.” எதிலும் சேர்த்தி இல்லாத இத்தகைய அனாதைத்தனத்தை எதிர்கொள்ளவும் கடக்கவும் தேவைப்படும் வாழ்வும் திடசித்தமும் சட்டென உருவாகிவிடுவதில்லை. அதையும் வாழ்வனுபவத்தில் இருந்தே பெற முடியும். ஆனந்த் பல்வேறு அனுபவங்களின் ஊடே அலைந்து திரிவதே நாவலின் முதல் பகுதியாகிறது. மரியுவானாவும் மது வகைகளும் மென்பொழுதுகளில் சில பெண்ணுறவுகளும் என இளமை அதன் வழமையான பாதைகளில் நடக்கிறது. இளமையில் எல்லோருக்கும் கிட்டும் குருபோன்றதொரு நண்பராக, ஆனந்துக்கு றாம்ப்லா கடற்கரையில் மத்தியாஸ் கிடைக்கிறார். “இதைத் தேடுகிறோமென்று முழுமையாக உணராமல் சதா எதையோ தேடி மனதின் உணர்கொம்புகளை வெளியில் அலையவிட்டுத் திரியும் ஆன்மாக்களின் திரளில் இருவரும் இருந்தார்கள்.” என்று இருவரையும் பற்றி குணா எழுதுகிறார். ஏற்கெனவே வாழ்ந்த வாழ்வில் பெற்ற படிப்பினைகளால் நிறைந்த, மேலும் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கும் ஒருவராக மத்தியாஸ் வருகிறார். உரையாடல்கள் மூலம் துளிர்க்கும் இத்தகைய நண்பர்கள், ஒரு காலகட்டத்தில் ஒரு இளைஞருக்குத் தேவையான சில தெளிவுகளை அறிந்தும் அறியாமலும் வழங்கிவிடுகிறார்கள். அரசியல் இல்லாமல் இங்கே எதுவும் இல்லை என்று கூறும் மத்தியாஸ், நேரடி அரசியலில் ஈடுபடாவிட்டாலும், அரசியல் சிந்தனைகளைப் பின்தொடர்வது மிக முக்கியம் என்கிறார். மனிதன் எந்த முறையில் வாழ்ந்தாலும் குடும்பம் என்னும் அமைப்புக்குள் இருப்பது முக்கியமானது என்பதை தனது அனுபவத்தின் வழியாக கூறுகிறார். குருதி வழியிலான உறவுகளின் அண்மை அல்லது அதற்கு இணையான நட்பு தேவை (இதை இந்திய மனம் என்றும் கருதலாம்) என்று மத்தியாஸ் கூற ஆனந்தோ, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் தமிழ் உணர்வை வைக்கிறான். இந்தப் புதினத்தில், இந்த இடத்தில், இந்த சொற்றொடர் பெரும் அர்த்தத்தை வழங்கி மேலதிக உரையாடலுக்கு வழி வகுக்கிறது.
நாவலின் இரண்டாம் பகுதி, வாசகரின் கதைப்பசியை சற்றே ஆற்றுவதாக இருக்கிறது. சந்தியா என்னும் இளம்பெண்ணின் வருகையுடன் இரண்டாம் பகுதி தொடங்குகிறது. வாசகர்கள் யூகிக்கும் வகையில் ஆனந்தின் மனதில், “... மழை வாசத்தைப் போல ஏதோவொரு ஆதுரம் பரவுவதை” உணர்கிறான். தமிழ் புனைவுலகில் சந்தியா என்னும் புதிய பாத்திரம் உருவாகி நிலைகொள்கிறது. தன்னை, தன் உணர்வுகளை, உடலை, உடலின் கோரிக்கைகளை புரிந்து கொண்டவளாக, முதல் திருமணத்தின் வடுவையும் ஆனந்துடனான புதிய உறவையும் தான் விரும்பியவாறு ‘நிதானத்துடனும் தெளிவுடனும்’ கையாள்கிறாள். காதலையும் காமத்தையும் அறிந்த, ஆனால் ரொமாண்டிக் உந்துதலுக்குப் பலியாகாத ஒரு கதைப்பெண்ணை முதன்முறையாக நாம் சந்திக்கிறோம். இதுவே நாவலின் முடிவாகவும் அமைகிறது. கடைசி அத்தியாயத்தில், ‘புயனஸ் ஐரிரிக்கோல்டா கல்லறையிலிருந்து திரும்புகையில் பற்றியது... வாழ்க்கையின் ஆவேசம்’ என்னும் சரியான புரிதலை நாவல் வழங்குகிறது. இந்த நாவலின் மூலம் நாம் அறிய வருவதும் அதுதான். “பிரபஞ்சமே, நான் உன்னை ஆரத் தழுவிக் கொள்கிறேன்.”
(நன்றி தமிழ்வெளி மாத இதழ்)
***
சாம்பல் நீலக்கடற் துயரம் - கோணங்கி
'பால்வண்ணம் பிள்ளை ஆபீஸில் பசு. வீட்டிலோ ஹிட்லர். அன்று கோபம் ஆபீசில் இருந்து வரும்பொழுது ஹிட்லர் மீசை அவருக்கு இல்லாவிட்டாலும் உதடுகள் துடித்தன. முக்கியமாக மேலுதடு துடித்ததற்கு காரணம் ஆபீசில் பக்கத்து குமாஸ்தாவுடன் சிறு பூசல். இவர் மெக்ஸிகோ தென்அமெரிக்காவில் இருக்கிறது என்றார். இவருடைய நண்பர் பூகோள சாஸ்திரம் வேறுமாதிரிக் கூறுகிறது என்றார். பால்வண்ணம் பிள்ளை தமது கட்சியை நிரூபிப்பதற்காக வெகுவேகமாக வீட்டிற்கு வந்தார்'
(புதுமைப்பித்தன்- பால்வண்ணம் பிள்ளை- சிறுகதை)
பிளட்ஸ்:ஒன்று
லாஸ் ஏஞ்சலஸ் உண்மையில் யாருக்குச் சொந்தமானது. யார் அதன் ஆதிக்குடிமக்கள். லாஸ் ஏஞ்சலஸ் என்ற நகரம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய நகரம். ஆனால் இதற்கு முன்பாக அது முதன்முதலில் பூர்வீக அமெரிந்தியர்கள் குறிப்பாக 'டோங்வா' ஆதிக்குடிகளுக்குச் சொந்தமான எரிமலைக் கடவுளான சக்-மூல் சிறுகதையின் கடைசிப்பக்கத்தில் சக்-மூல் மனிதனாக மாறினால் அவனுடைய பல நூற்றாண்டுக் காலவாழ்க்கை அனைத்தும் ஒரு கணத்தில் ஐக்கியமாகிப் பட்டென்று அவன் செத்து விடக்கூடும். நானும் மரணமடைந்து விடக்கூடும். அப்போது தன் மரணத்தைப் பார்க்க சக்-மூல் என்னை அனுமதிக்க மாட்டான். அவன் என்னைக் கொன்று விடக்கூடும். எனவே இன்றிரவு சக்-மூல் வெளியில் போகும் போது ஓடிவிடப்போகிறேன். அகபுல்கோ கடற்கரைக்குச் சென்று சக்-மூலின் மரணத்துக்காகக் காத்துக் கொண்டிருப்பேன்... அவன் தலைமுடி சாம்பல் நிறமாக மாறிவிட்டது. அவன் முகம்கூட வீங்கிவிட்டது.... எனக்குத் தேவை கொஞ்சம் சூரியனும் நீச்சலடிக்க ஒரு கடற்கரையும். கையில் நானூறு பெசோ மிச்சம் இருக்கிறது. அந்த முல்லர் பெண்மணி நடத்தும் ஹோட்டலுக்குப் போகப் போகிறேன்... சக்-மூல் இந்த இடத்தில் தனியாகத் தண்ணீர் இல்லாமல் எவ்வளவு நாள் தான் வாழமுடியும்?
ஃ பிலிபர்ட்டோவின் டைரி முடிந்து விட்டது. ஸ்பெயினியர்கள் ஆயுத பலத்தால் 'எல- புவெப்லோ-டே- நோஸ்த்ரா சென்யோரா- லா-ரெய்னா டே லோஸ் ஏஞ்சலஸ்' என்ற பெயராக எரிமலைக் கடவுள் சக்-மூலை அழித்துஅழித்து உருமாற்றினர். மெக்சிகோ சுதந்திரம் பெற்றபின் லாஸ் ஏஞ்சலஸ் அமெரிந்தியகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. மெச்சிக்கோ- அமெரிக்கா போர்முடிவில் கலிபோர்னியா அமெரிக்காவின் பகுதியாகஆனது. இதனால் லாஸ் ஏஞ்சலஸ் உட்பட இந்த தொல் 'டோங்வா'க்களின் மாய நிலப்பரப்பு எரிந்த தண்ணீருக்குள்ளிருந்து கார்லோஸ் புயந்தேஸின் பிறப்புக்கு முன்பே அமெரிக்கப் பாசிசக்கரங்களால் இழுத்துச் செல்லப்பட்டது. இன்று லாஸ் ஏஞ்சலஸ் பல பிரிவினரின் கலவையாக நிகர்வெளி- நிலவெளி ஜீவிதர்கள் எனும் 'கிரிப்ஸ்' புனைவுக் குறியீட்டை வைக்கிறேன். மெக்சிகோ மண்மத்தின் ஆழத்தில் பாதாளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூலக் குடிமக்கள் டோங்குவா,சூமாஷ் முகமூடிகளும், ஆவிகளும் எரிமலைக் கடவுளான 'சக்- மூல்'கார்லோஸ் ஃபுயந்தேஸின் சிறுகதை நாகார்ஜுனனால் எண்பதுகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஆர் .சிவகுமார் தொகுத்த முதல் 'லத்தீன்அமெரிக்கச் சிறுகதைகள்' தொகுதி பிம்மராஜனின் மீட்சி வெளியீடாக வந்தது. மீட்சி இயக்கத்தின் எண்பதுகளின் ரேகைகள் இரகஸியமாய் நிழற்றும் அதீதாந்திரீக ஆவிகளின் மொழி எழுத்தும் சொல் எழுத்தும் தமிழில் பிரிந்தே உருவாகி இருக்கிறது.
பிளட்ஸ்:இரண்டு
இதன் பின்னணியில் 'டாங்கோ'நவீனத்தில் றாம்ப்லா புள்ளடிக்கழிமுகத்தில் 'நாளும் கடலுள் துலாம் பண்ணினார்' பராகுவேஏகிய குணா கந்தசாமி 'நீரற நீர்ச்சார்வு அறும்'பிறப்பறுத்துப் பேரின்பம் பெற வேண்டுமானால் முதலில் பிறப்புக்கு காரணமான பந்தபாசங்களின் தொடர்புகளை எல்லாம் முற்றவும் அறுத்து விடுக என்பது கருமுனை.கதாபாத்திரமானஆனந்த் தாய் தந்தையைப் பால்யவனத்திலேயே இழந்த வாடியபயிர்முகம் கொண்டவன். கதைக்குள்வாழும் மையலின் அகப்பாலையால் இந்தப் புதினத்தின் பொங்கெழுச்சி நாடகம் றாம்ப்லா சாம்பல் நீலச் சமுத்திரத்தில் மூழ்குவதனின்றுங் காப்பதைக் காட்டுவதற்காகத் டாங்கோ இசைக்குள் பழுப்பு அட்லாண்டிக் அடிக்கடலின் சமவெளியில்ஆனந்த்- சந்தியா பிரிவின் நிமித்தம் கரடியை எழுப்பும் தீநாய் அழிவது என ஆனந்த் சந்தியா பழுப்பு நிலப்பருந்தின் தீவிர அலைவுகளோடு விண்ணில் அலையும் சிறு புள்ளிகளாய் அவனுள் இருட்கோடிட்டு விசும்பில் கைவருநரம்புகளை வருடி இசைக்குள் டாங்கோநவீனத்தை வரைகிறாள் சந்தியா. டாங்கோ இசை இருள் எனும் கடல்.அதில் அலையும் இந்தத் தமிழ்நவீனம் ஒரு மோகப் புயல். அமெரிந்தியர்கள் கொடையளித்த டாங்கோ எனும் இப்பெயரில் இயங்கும் நாவல் வடிவம் குணா கந்தசாமி மூன்றுவருடங்கள் நேர்வெளி வாழ்கனலில் திரிந்தலைந்து புனைவை நிழறும் ஊன்மம் உருகும் எழுச்சிமிக்க நாடகம்.
சாம்பல் நீலக் கடற்துயரம் யுகங்களுக்கிடையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒற்றைமணற் துகள் ஒன்று கையறுநிலையில் ஊர்ந்து வருகிறது. கரைக்குள் இறங்கி உலர்மணற் பரப்பினுள் சாலையின் விளக்கொளி மங்கிய இருளில் அசையும்ஒளி குறைந்துவரும் பரப்பில் அலைகளின் நுரைகள் உடைந்து கரைவது தன் இருப்பின் நிச்சயமின்மை அதில் வெளிறலாகத் தெரிந்தது, தற்செயலில் சந்தித்த லத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகளில் விசித்திர இயல்புடைய தன் படைப்புகளை வெளியிடாத கையெழுத்துப் பிரதிகளோடு மறைந்துதிரியும் நாடோடிஎழுத்தாளன் மத்தியாஸுடனான நட்பில் உன் நோக்கம் எதையும் உணர முடியாது.
பிளட்ஸ்:மூன்று
இருகடல்கள் இரு வளைவுக்கோடுகள் முகம்முகமாய் வினாடிகளில் மாறும் நீர்நிறமிகளின் வேறுபாடுகளுடன் இரு தனிமையான ஆழ்கடல் உயிரிகளாகப் பிறையுருக் கடற்கரையில் சதா எதையோ தேடி ஒற்றைக்கண் நத்தையின் எச்சில் பாதையில் டாங்கோ இசை ஊர்ந்து திரியும் சாம்பல்நீல நத்தைகளின் உணர்கொம்புகளை உடைய இருவரும் தன் கொம்புகளைத் தனித்தனியே வெளியில் அலையவிட்டுத் திரியும் இரு நத்தைகளின் றாம்ப்லா நெடுங் கடற்கரை மணற்பரப்பில் கற்பனையான நிலவெளியை உருவாக்கிக் கொண்டு நீர் விளையாட்டில் விழுந்து புரளும் ஜோடிகள், உள்ளடங்கிய பிறைகளாய் வளையும் நீர்ப்பரப்பில் அலைச்சறுக்கு விளையாடும் சாகச விரும்பிகள் எனப் பலவிதமான சப்த சமுத்திரங்களில் மறைந்துபோன நீர் மனிதர்களால் ஈர்க்கப்பட்ட ஆனந்த் றாம்ப் லா உயிர்பெறும் பலகணியில் அமர்ந்து மரியுவானா புகைத்தவாறு ஆளரவமற்ற இரவுகளில் மனதில் நிழற்றும் தன் பால்யவனத்தில் அனாதையாய் பள்ளி நாட்களில் திரிந்த ஆஸ்பெஸ்டாஸ் மூடிய ஹாலோ பிளாக் வராண்டாக்களில் ஐம்பது தோதகத்தி இலை வளைவுக்கோடுகளில் ஒளிரும் பள்ளிநாட்களில் உறங்கிய சிறுமரக் கட்டில்களில் ஊர்ந்து திரிந்த எறும்புகளோடு உரையாடிய நாட்களோடு சேர்ந்தே வரும் அனாதைமையின் கருந்திட்டுகளோடும் தன் விழிகளை உருகுவே எல்லையில் வைத்து கடல் மலை நதிகள் தாண்டி மிதந்து வந்து சேர்ந்திருக்கும் சோகப்பனுவலின் உள்ளுவத்தில் தோன்றும் விவா தப்புள்ளிகளோடுதான் வாடகை உப்புவிடுதியில் வாழ்ந்துவரும் ஆனந்த் இவ்வேளையில் அர்ஜெண்டினாவின் டாங்கோ நீரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்குமான மைமோகப்புயல் வீசும் அணுக்க நடனம் எனக் கரைந்து பாடியவாறு அலைகள்மேல் பறந்துதிரியும் தனிமை குடித்த கருந்தலைக் கடற்காகம் எழுதிய நவீனம் இது.
கிரிப்ஸ்:ஒன்று
உப்பு விடுதி மேலடுக்கின் நீள்வராண்டாவில் தனித்திருக்கும் றாம்ப்லாவும் ஆனந்துக்கு அலுத்ததே இல்லை. சாம்பல் நத்தைகளின் திரவஆன்மாக்களின் திறலுருவில் பெரும் இடைவெளிகளோடு இவனும் சந்தியாவோடு :’தீற்றாதோ நாய்நட்டால் நல்லமுயல்... என்பது இருவரின் அணுக்க நடனம். அர்ஜன்டைனாவில் பத்தாண்டுகளுக்கு முன்பே பயணம் செய்த குணா கந்தசாமி, போர்ஹேயின் சமாதி மரத்தின் சாம்பல் இலைகளில் இருந்தும் பாரசெல்ஸஸ் ரோஜாவை மீண்டும் உயிர்ப்பித்துத்தருமாறு ரசவாதியிடம்கேட்டு காத்திருந்த தமிழின்நவீனப் படைப்பாளியின் காத்திருத்தலை பாரசெல்ஸஸ் சீடன் போனபின் நெருப்பிலிருந்து ரோஜாவின் சாம்பல் இதழ்களைமீண்டும் உயிர்ப்பித்து கொடுமணலில் இருந்து முன்பே வந்த கதா வாசனைத் திரவிய வர்த்தகன் போனபின் காத்திருந்துஎழும் டாங்கோ நவீனம்.
பிளட்ஸ்:நான்கு
தாய்ரோஜா வளையம் கொண்ட கிளிக்கண்ணிகளைக் கருவுற்ற சந்தியாவும் இரு பிளவமைந்த கருப்பை உடற்கூறு கொண்டவள். பின்பாதி அத்தியாயங்களை ஆனந்துக்கும் இவளுக்குமான சூதாட்டக் களரி வரைபடம் கீறி எழுதிக் கொண்டிருக்கிறாள். சந்தியாவின் கிளிக்கண்ணிகள் தனித்திருக்கும் பெண்மையின் நவீன காலத்தின் திணுசையெல்லாம் கண்டங்களைக் கடந்த தாய்ரோஜா வளையம் கொண்ட கிளி சந்தியாவின் சாயலோடு இங்கு பறந்துவந்த நாள்முதலாய் ஒவ்வொரு கணமும் இருவருக்கிடையில் பிளவுண்ட நிலையில் இருந்த குறைந்த கால எல்லையில் தனித்திருக்கிறார்கள். அவனுக்கு ஆல்கஹாலின் கிடாரிசை தடதடத்து ஒலிக்கும் முன்னிரவுகளில் உப்பு விடுதியில் இருந்து தூரத்தில் ஒளிரும் வளிவிளக்கு மிதவைகளின் மங்கிய மயக்கமான தோற்றத்தில் தூர தேசங்களின் மரப்புணைகள் ஒன்றையொன்று முட்டிக் கொள்ளும் ஓசைகளோடு விளக்கொளிகளின் ஒளி குறைந்த பித்தப்பயணங்களில் வந்த பாதைகளை ஆனந்த் பார்க்கும்போது உயிர்த்திருத்தலைக் குறித்த வினோத உணர்வு கொண்டதில் மீச்சிறு மீமிகைப் புனைவுக் குறுங்கதைகளைத் துண்டுதுண்டாய்ஒட்டி வரைபடமாக்கி அதில் சத்துருக்களின் உரையாடல்களாய் புள்ளடிக் கழிமுக ராத்திரிகளை வரையும் நவீனம். ஆனந்த் பலகுரல்வளைகளால் சொல்லியாகி இந்த வடிவத்தில் தோற்றங்களாகி வந்து நிழற்றும் நவீனம். கார்ரோஸ் ஃபுயந்தஸ் நேர்முகத்தில் சொன்ன வரிகளை நினைவு கூர்ந்தான். ஃபுயந்தஸ் நுண்ணியசொல்லுதலில் கடலும் வானும் இணைந்தநனவிலி நீர்க்கோடுதான் இன்றைய நவீனம். அவனுக்குள் பான்மண்டில ஒண்முகிற்படலம் ரியோ தெ லா பிளாட்டா நதியும் ஒன்று கலக்கும் முகத்துவாரத்தின் கரையில் கடற்கழி வெளியில் தோன்றமான தற்கணப் புனைவோட்டத்தில் வரைந்து கொண்டிருந்தான். அனாதித் தனிமை வெளியில் மத்யாஸும் ஆனந்தும் இருப்பதாகப்படுகிறது. மாண்டிவீடியோவின் உள் விளிம்பில் அட்லாண்டிக் சமுத்திரமும் ரியோதெலா பிளாட்டா நதியும் ஆனந்தின் மைமோகம் இவை மூன்றும்தாம் குணா கந்தசாமியின் 'டாங்கோ'- நவீனத்தை வெளிப்புற ஈரத்தில் கடலாகச் சுழிகொண்டு இருக்கிறது.
காதை-வெகுளி-வேட்கை -இந்தநாவலின் ஆதாரஊற்று.டாங்கோ உருவாக்கியிருக்கும் புனைவாக்கக் கூறுகள் இலைகள் உதிரும் நடைபாதையோர மரங்களின் இடையில் கசியும் சூரியவெளிச்சம் ஒளிர்இலைகளின் நிழற்கூட்டம் ஒன்றுமேல் ஒன்றாய் அடுக்கப்பட்ட இலைகளின் புத்தகம். அட்லாண்டிக்கடல் இருளாய் ஓசையிடும் உருக்கள் நிழற்றும் உரையாடல்கள்.
ஆனந்த் இளம் பருவத்தில் பெற்றோர்களை இழந்த தனிமை வாசம் அவன் கூடவே வாடியதோற்றமாய் மறைந்திருக்கிறது. கடலோர அதிசய இருப்பில் சந்தியா போனபிறகு திரும்பவும் நீண்ட கடற்கரைக்கு வருகிறான் ஆனந்த். பால்யப்பிராயக் கோடைக்காலத்தில் பார்த்த மாமன்உறவு ஒட்டாமல் இருப்பதும் குடும்பத்தில் வாழ்வு கொள்ளாத பள்ளிப் பருவத்தில் நீள் கூடாரங்களின் தனிமை. கல்லூரிஉப்பு விடுதி வாடகை இருப்பின் சேர்வதும் மறைவதுமான நண்பர்களை மீண்டும் அதே இடத்தில் பார்க்கமுடியாத ஸ்திதிநிலை.
கிரிப்ஸ்:இரண்டு
மரியா வர்கஸ் லோஸா போஸ்டரின் எழுத்துக்களோடு விலோரோவால் சமர்ப்பிக்கப்பட்ட ஓவியங்கள் தான் எண்பதுகளுக்குப் பிறகான லத்தீன் அமெரிக்க இலக்கியச்சூழல் படிகளின் கூர்முனை இலக்கும் மீட்சிஇயக்கமும் தமிழில்நவீனப் புனைவுச்சாளரங்களைத் திறந்தன என்பதை உணர்த்தும் ஒரு சிலவரிக்கோட்டோவியங்களே போதுமானது. பூனஸ் அயர்ஸ்ஸின் காற்று போர்ஹெஸ் கல்லறையைத் தேடிச்சென்ற குணாவின் நாட்களிலிருந்தே இந்தநவீனம் மறைமுகமாகத் தொடர்கிறது. தமிழில் அற்புத எதார்த்தப் புனைகதையாளர்களின் வருகையும் முன்நடந்திருந்தது. இந்தநவீனத்தின் ஒரு போஸ்டரில் இருந்து ரெவேராவும் ஃபிரைடா மாயாவும் (கெஸ்தாவ்தோர்1992 கல்குதிரை10 உலகச் சிறுகதைச்சிறப்பிதழுக்கு ரேப்பர்ஓவியமாக அமைந்ததும்) ஹெகாட்டேயின் நாவலுக்குள் வேடவாசகன் உருவற்ற இடில்ரீடர் ...எப்போதும் கூடவே வந்துகொண்டு தான் இருப்பான்.ஜான்பான்விலின்'கடல்' காருகி முரகாமியின்' நார்வே ஜியன்வுட் 'உள்ளோடும் அரவு புனைநிழல்கள் அவனைச் சுற்றிப் பின்னிஊர்ந்து வரையும் புனைவுக் கோடுகள் 'நீரினுட் குளிப்பினும் காமம் சுடுமே' கம்பனின் சூர்ப்பனகைப்படலத்தோடு பிரிதல்நெய்தல். வேட்கைச் சுழி கொள்கிறது கடல்.
பிளட்ஸ்:ஐந்து
சந்தியா திரும்பிப்போன ரகசஸிய ரேகைகளோடு இருட்டுநீரின் பழுப்பான உவர்நிலப்பாதைகளில் நடந்து கொண்டிருக்கிறான் ஆனந்த். சந்தியா விட்டுச்சென்ற கிளிகள் கூண்டுக் கம்பிகளுக்குள் கதறிக் கதறி இறகுகளை உதிர்கின்றன இப்போது. சிறுவயதில் தாய் தந்தையரை இழந்து பெற்றவர்களால் வளர்க்கப்படாத வாழ்க்கையில் அரவணைப்பு, பிரியம், பாதுகாப்புணர்வு என பலவற்றையும் இழந்திருந்தான். பெற்றோர்களின் தேவை இருந்த பருவங்களை இன்மையோடு கடந்து விடாமலும் மனம் பலவீனமடையும் தருணத்தில் உரத்து எழுவதற்காக மறைந்து காத்திருக்கும் கேவலாக அந்த இன்மை புதைந்திருக்கிறது. தன்னையே தான் சுமந்து கொண்டு வாழ்க்கையில் எவ்வளவு தூரத்திற்கு முன்னேறிவிட்டான். இத்தனை வருஷங்களில் அது குறித்த எந்த வெறுமை உணர்வையும் அடைந்ததில்லை.
கிரிப்ஸ்:மூன்று
மாண்டி வீடியோவுக்கு வந்தபின்பு தனக்குள் தானே வேறுவேறு பூதங்களாய் உருக் கொண்டு அலைகிறான். அஸ்டெக் -மாயன் முகமூடி அணிந்து அட்லாண்டிக் சமுத்திரமும் ரியோ- தெ-லா -பிளாட்டா நதியும் ஒன்று கலக்கும் கழிமுகத்தின் உப்புவிடுதி மேல் தளத்தில் ஓலோலியுக்வி செடியில் இருந்து சிதறும் விதைகள் கனவுகாணும் ஒரு நூற்றாண்டுத் தனிமை நாவலுக்குள் மெக்காண்தோவாக இவான் ரூல்ஃபோவின் 'லூவினா'வைப் புரட்டிய காற்றில் கார்லோஸ் ஃபுயண்டஸின் எரிந்த நீரில் அலையும் ஆவிகளாக இருப்பதில் ஆக்டோவியா பாஸின் கவிதையில் 'ஒரே சமயத்தில் தொடர்ச்சியானதாகவும் கற்புலனாகாததாகவும் நிலவுகிற புறஉலகம் பிறகாகும் இப்போதின் உதிர் விதைகளை முழுஇருளில் போர்ஹெஸ்ஸின் கல்லறையைத்தொட்ட கணத்திலிருந்து வரைதெளிவற்ற பச்சைமினுங்கும் 'நீலப்புலி' சிறுகதையிலிருந்து பைசாசக்கப்பலின் கடைசிப் பயணத்திலிருந்து பராகுவே- அர்ஜென்டினாவுக்கு கம்பெனிவிசாவுடன் தாவிய இந்த கதாபாத்திரமான ஆனந்த் இரவிரவாய் அலைந்து திரியும் இருள் எனும் கடலில் இந்த நாவலின் புறநடை நேர்நிலவெளியில் இருட்டுநீரில் நடப்பது தான் நவீனம். இரவிரவாய் உலவி வாழ்ந்த மூன்று ஆண்டுகளில் புனைவுதிரம் நகர்ந்துவரும் இரவுகளில் அசாதாரணமான நீலப்புலியின் கண்களில் அகப்பட்டுக் கொண்ட கதாபாத்திரம் ஆனந்த்.
கிரிப்ஸ்:நான்கு
உலகமயத்தின் சக்கரங்கள் உருண்டு வரும் ஏகபோகப் பெருநிழலாக இந்திய நிலத்தோற்றங்களில் இருந்து வெளியேறி வாடகைக் கடல்நகர உப்புவிடுதிகளில் தற்காலிக உவர்நிலக் காற்றாய்வந்து குடியேற்றத்தில் சதாசப்தமிடும் ஜன்னல் கதவுகளோடு பேசியபடி கணினித் தகடுகளில் சிசுவறுத்துக் கொண்ட கல்வி கேந்திரங்களிலிருந்து மென்பொருள் பொறியாளர் கூட்டம் கடந்த முப்பதுஆண்டுகளாய் கார்ப்பரேட் கூலிக்கதாபாத்திரங்களாக மாறிப்பெருங்கூட்டமாக வளர்ந்துவிட்ட மரணநாடகம் டாங்கோ நவீனத்துடன் துவங்கியது. மேற்குலகின் விசா முத்திரைத்தாளை எதிர்பார்த்து பீர்போத்தல்களோடு றாம்ப்லா கடல்முன் அமர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நுரையிலும் ஏடிஎம் கார்டு பொங்க வேண்டி இருந்தது. கம்பெனி விசா வந்ததும் ஆனந்தின் கொங்குகிராமங்களையே சுருட்டிச் சென்றுவிடும் என்பதிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வாஸ்கோடா காமா நன்னம்பிக்கை முனையைக் கடந்துவந்த ஆலிவ்நிறக் கருநீலமென்பொருள் தானியங்கி இயந்திர மனிதர்களின் டோக்கன்களை முன்கூட்டியே கொடுத்து மரணவாயிலில் காத்திருக்கிறார் வாஸ்கோடா காமா.
கிரிப்ஸ்:ஐந்து
வால்ட் டிஸ்னி கண்டுபிடித்த இயாகோகிளி அரேபிய இரவுகளிலிருந்து எடுக்கப்பட்ட மந்திரி இயாகோவின் குமாரதிகள் தான் கதைபோடும் ஸீரசாத்தும் துன்யசாத்தும். கருநீலமென்பொருள் குடியேற்றங்களுக்கான விசாமுத்திரைகளோடு தானியங்கி இயந்திரவாதிகளை காமிக்ஸ்கதை விளையாட்டில் மந்திரி இயாகோவை கிளியாக உருமாற்றுகிறார் வால்ட் டிஸ்னி. தொடுதிரை காமிக்ஸ் லைபிரரியைத் திறந்தார் வால்ட் டிஸ்னி. கூகுல் இரவல் காகிதமுகமூடியைக் கிழித்துக்கொண்டு ஒருவிரல் தொடுதிரைக் காமிக்ஸ் இயாகோகிளி புக்மேக்கர்கள் மதராஸப்பட்டினத்து பிண்டோச் செக்கு காகிதக்கூழ் முகமூடிகள் பி. ஓ. டி ஸாரியார் மன்னர்களிடம் ஜெராக்ஸ் கத்திகளைத் திரும்பவாங்கி அவற்றின் மீது கேலிச்சித்திரக்காரனின் கவிதையை யவனிகா எழுதுவதும் நவீனம். வால்ட் டிஸ்னி கண்டுபிடித்த இயாகோகிளி தாள்உற்பத்தி மேடுகளிலிருந்து பறந்து வருகிறது. அலைபேசியில் அரூபக்கதைசொல்லிகளாய் உருவற்று அலைந்துகொண்டிருக்கும் ஸீரசாத்தும் துன்யசாத்தும் ஜெராக்ஸ் கத்திகளைகண்டு மறைந்து திரிகிறார்கள். இந்த நாவலுக்குள் வேகமாய் வந்த சந்தியாவுடன் இயாகோகிளியின் உரையாடல். குறிப்பாக இந்நாவலுக்கான உலர்ந்தவிதையொன்று பன்னிரு வருடங்களுக்கு முன் சமாதியின் சாம்பல்மரத்தின் உரசும் நெத்துகளில் இருந்து உதிரும் விதைகளை இப்புதினத்திற்கான பாப்பிரஸ்தாள்களில் கிறுக்கிய கோடுகளிலிருந்து இருவிதமானதேயங்களின் ஞாபகநிறவெளியில் கொங்குநாட்டின் கொல்லிப்பாவையும் உருகுவே-அர்ஜென்டினாவின் பித்தநிறமிகளோடு மாயன்முகமூடிகள் புதினத்தின் வரியோட்டத்திலிருந்து பறந்து வருகின்றன. மாறுபட்ட இருதேயங்களின் சோளப்பெண்களும் பிறைக்கோடுகளின் நடந்து வருகிறார்கள். வலசைபோகும் கருமூக்கு நாரைகளும் செங்கால் நாரைகளும் கடற்கரையோரம் பறவைச்சுவடுகளை உலர்ந்த உப்புநிலவெளியில் இப்புதினத்தின் இரு மனவெளிகளின் பிரிதல் நிமித்தமாக அகப்பாலைகளின் பிளக்கும் இடைவெளியில் டாங்கோ புதினத்தின் வாசகவேடனின் ஓட்டம் விரைவு கொண்டிருக்கிறது. றாம்ப்லா உப்புஇயல் பக்கங்களை பொசிட்டோஸ் கணினி விசைப்பலகைகள் இருக்கும் இடது அடைப்புக்குறியின் வடிவத்தை ஒத்திருந்த கடற்கரைச் சாலைக்கும் நடைபாதைக்கும் மறுபுறத்தில் சிறு முக்கோணச்சுவர் முகடு வாயில்வரை காலடிமணலை அலைகள் அரிப்பதின் குறுகுறுப்பைப் புனைவின் அரிச்சலாகத் தான்தோன்றியாய் வரும் கதையின் அணுக்கருவில் ஒரு சொட்டு மணலும் நீரும் இணைவதில் டாலியின் திரவவுருக் கடிகாரம் நீர்ச் சொட்டுகளைமணல் கடிகையாக்குகிறது. நவீனத்தின் துகள்துகளாக வெட்டி ஒட்டும் மாயன் ஆழிபொம்மையின் நிழலாட்டம். மொத்தமானுடத் திரளில் தான் ஒரு வெளியேறிய சாயை அல்லது நகல் என்பதின் ஒப்புதல்.
கிரிப்ஸ்:ஆறு
‘வாக்குமூலம்’ நகுலனின் அந்த நாவல் வடிவத்தைச் சிதைக்கும் சுதந்திரத்தில் நாவலை விட்டுத் தப்பியோடும் கதாபாத்திரம் நகுலனின் சாயை ஆனந்த் மீதும் விழாமலுமில்லை. குணாவின் தனிமை வாசம் போர்ஹேயின் கல்லறையைத் தேடிச்செல்கிறது. சொல்கதை முறையில் ஓட்டம் கொண்டிருக்கும் இந்த நாவல் மொழிகதையாக உருமாறுவதில் சற்று இடைவெளி காண்கிறது.ஆனாலும் புதிய உத்தியை இருட்டுக் கடலைப் போல் அலையலையாய் பேசித் திரியும் தனிமை.
பிளட்ஸ்: பராகுவே கடல் நகரங்களில் 'இருள் ஒரு கடல்' என தனக்குத்தானே இருளிடம்பேசித் திரியும் ஆனந்த் ஆகவும் இருக்கிறான். கேள்வி பதில்களால் ஆன 'வாக்குமூலம்' நவீனத்தைத் தொடுகிறது இந்த 'டாங்கோ' நவீனம்.றாம்ப்லா புள்ளடிக் கழிமுகத்தில் உப்புவிடுதிகளின் விட்டங்களில் தொங்கும் சந்தியா அவனிடம் விட்டுச் சென்ற புட்கூடுகள் உப்புக்காற்றில் தொலைதூரத்தில் கேட்கும் டாங்கோ நீரிசை மெல்லொலியில் இருவரும் பிரிந்த மையலின் துயரக் காற்றில் அசைந்து கொண்டிருக்கின்றன. ஆனந்த் தனக்குள் நிகழும் உருமாற்றம் ஏற்படுத்தும் அச்சத்தில் இருந்து தப்பித்துவிட விரும்பினாலும் மனதின் ஆழத்தில் இந்த மாற்றத்தின் மீது ஒரு ரசிப்பும் உருவாகிவிட்டது.
'இந்தியாவைப் போல் திறமையாளர்கள் உருவாகி வருவதற்கு இன்னும் காலம் பிடிக்கும்.... தகவல் தொழில்நுட்ப பூங்கா மாண்ட்டி வீடியோவுக்கு வெளியே இருந்தது நாற்பது ஏக்கர் பரப்பளவில் விஸ்தாரமான இடைவெளிகளில் அதிகபட்ச மூன்று தளங்களோடு அலுவலகங்கள் இருந்தன. பொஸிசிடோசஸிக்கும் அலுவலகத்திற்கும் இடையேயையான பயணம் முப்பதிலிருந்து நாற்பது நிமிடங்கள் பிடிக்கும். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து அந்திச் சூரியன் செவ்வொளி படர்ந்த பொட்டல் வெளிகளை விரித்தவாறு திரும்பும் போது ஏக கணத்தில் மூன்றாம் உலகத்திலும் முதல் உலகத்திலும் இருப்பதின் வினோதமான மன உணர்வுஎழும். அமைதிஅறை....சியாஸ்டா உரக்கப் படுக்கைகள் என இதுவரை அறிந்திராத விஷயங்களை இந்த மனிதக்கண் அலுவலகத்தில் கண்டான்.தன்னை ஒரு கதையின் பாத்திரம் ஆக உணர்ந்தான். தன்னைத் தானாக உணரும் உணர்வுக் குவியத்தில் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கைச் சாயைங்கள் இருக்கின்றன. ஆனால் ஆனந்த் மனிதக்கண் அலுவலகத்தில் முதல் நாள் தியாகோ ஒரு ஹவானா சுருட்டை நீட்டினான். குழப்பமாகப் பார்த்தபோது அது விருந்தாளிகளை வரவேற்கும் அவர்களுடைய பிரத்தியேக முறைகளில் ஒன்றுன்னு சொல்லிச் சிரித்தான். அனாதியாய் நாடோடியாய் மறைந்து திரியும் 'ப்ளட்ஸ்'என அஷ்டக்-மாயன்- இன்கா பழங்குடிகளை பிரித்துப் பார்க்கலாம். பாதாள கார்பார்க்கிங் கடற்கரையோர வீடு சொந்தமாகக் கொண்ட எழுத்தாளர் மத்தியாஸ், அப்பார்ட்மெண்ட் வாடகையை நேரில் வந்து வாங்கும் மறதியில் உழலும்முதியவரான டாக்டர் கிறிஸ்டாஃப் அவரது இளம் மனைவி அலெஹேண்ட்ரோ, தியாகோ, ஆண்ட்ரியாஸ்,சந்தியா, பிகினி அணிந்த வெரோனிக்கா முதுகுத் தண்டுவடக்குழிவில் டிராகன் பச்சைகுத்தி இருந்தாலும் இவர்களை கிரிப்ஸ் என்று குறியீடுகளாக்கி பிரீப்ஸ்கேஷிடன் முத்திரையிடப்பட்ட கம்பெனி விசா லெட்டருடன் பறந்து வருபவர்களையும் ஆனந்தையும் சேர்த்தே கிரிப்ஸ் என வகைப்படுத்தி இந்த டாங்கோ புதினத்தை நேர் -நிகர் வெளிகளாகப்பிரித்து விடலாம்.
கிரிப்ஸ்:ஏழு
பிளட்ஸ்-கிரிப்ஸ் என்று டாங்கோ புதினத்தின் பிளவுறும் இருவகை நேர் -நிகர் வாழ்வியல் குறியீடுகள் என இந்த நூதனப் புனைவு நவீனத்தின் அதிசயத்தையும் பிரிக்கலாம். ஒரு வகையில் றாம்ப்லா காந்திசிலை நிலைபெயர்ந்து அவனோடு கூடவே கைத்தடியால் கேள்விகள் கேட்டபடி அவனோடு வாக்கிங் வருவதைநேர் நிலவெளியில் இயங்கும் நாவல் என்றும் சொல்லலாம். பராகுவே லத்தீன் அமெரிக்கா பூமத்தியரேகை நாடுகளிலும் நம் கானல் அலை எனினும் கடுங்கோடை எனினும் கடும்பயணம் தொடருமோ எனக் கேட்டபடி காந்தியின் நிழல் நீண்டுவருகிறது ஆனந்துடன். தென்னிந்திய வெப்ப மண்டலத்தில் இருந்து சென்ற ஆனந்த் தன்னூர் எரிழல் வாழ்வியலில் பிளட்ஸ் ஆகவும் மனிதக்கண் அலுவலகத்தில் தொழில்நுட்பத்திற்கு கார்ப்பரேட் மூளையால் பலவகை மென்பொருள் கூட்டுஇயக்கத்தின் மையத்தில் இவன் சுழன்று கொண்டிருப்பதால் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் கிரிப்ஸ் ஆகவும் இருக்கிறான். கிரிப்ஸ்- பிளட்ஸ் இரண்டாகவும் இருக்கிறான் ஆனந்த். ஆனால் சந்தியா கிரிப்ஸ்தான்.
பிளட்ஸ்:ஆறு
அந்தப் பழங்குடிஇளைஞன் கார்லோஸிடம் இரகஸியமாக வாங்கிய மரியுஜானா புகை உருவங்களோடு சேர்ந்து உருமாறிய ஒருவனோடு காலிபீர் போத்தல்களைக் கழிவெளியில் தேடித்திரியும் கிழிந்த ஊதாஜீன்ஸ்காரனிடம் மரியுவானா சுருட்டி இருந்த ஜாயின்டை விரல்கள் வருடி லைட்டரை விசிறி நெருப்பைப் பொருத்தினான். நீலப்புகை உருவங்களோடு கார்லோசுடன் பகிர்ந்து கொள்ளும் ரெண்டு ஃபப் அனாதையாக்கப்பட்ட பழங்குடி இளைஞன் இருப்பின் தானும் அனாதையாகிவிடும் நிலைக்கு ஆனந்த் சிறிய கடற் பாலத்தில் அமர்ந்திருக்கிறான். ஆனந்தின் நரம்புகளை முறுக்கி விடும் முனைப்போடு புகையை ஆழஉள்ளிழுத்து இமைகளை மூடியபோது கடல் கண்களுக்குள் அலைவீசியது. எதார்த்த வானியல் இந்நாவலில் பல வர்ணனைகள் கதைசொல்லும் முறையும் சிறிது ஆனந்தும் கடலும் இணையும் இரவுகளில் மாந்திரீக எதார்த்த உத்தியில் சில தானே அத்தியயிக்கும் பக்கங்கள் யார்கை மூலம் என்பதை விட காலிப்புட்டிகளைத் தேடித் திரியும் கார்லோஸ் அசேதனத்தை உயிர்ப்பிக்கும் பிளட்ஸ் நாடோடிகளின் மந்திரச்சொல். காலிபீர்போத்தல் லேபிள்கள் மீது எழுதிக் கொண்டிருக்கிறான். அவனால் சில பக்கங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்த நாவலில் எழுந்து கொள்ளும்போது தடுமாறும் வயதான கிறிஸ்டாஃப் டாக்டர் அவரது தோளைப் பிடிக்கப் போன அலெக்சாண்ட்ராவின் கைகளை அவர் தட்டிவிட்ட போதும் அவளிடம் புன்னகை மாறவில்லை. விடை பெறுவதற்காக அவர் நீட்டிய கையை ஒற்றிவிட்டு விலகிக் கொண்டான்.
பெரியப்பா குடும்பத்தில் பல காலம் ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்தவன் வாழ்க்கையை கொண்டாட வேண்டிய தருணம் இது.பெரியப்பா குடும்பத்தில் ஒட்டியும் ஒட்டாத ஞாபகங்களை ஏற்றுக் கொண்டும் சிலவேளை மறுத்தும் நினைவுகளில் அந்நியப்பட்ட கல்லூரி நாட்களில் மூதாதைகளை விட்டு விலகினாலும் அதில்சிக்குண்டு தப்பிக்கும் அகத் தூண்டல்கம்பெனிவிசாவுடன்அவனை விண்பருந்தாக்கி நாவலின்காகிதமடிப்பில் பறக்கவைக்கிறது..
கிரிப்ஸ்:எட்டு
அலைக்கழிக்கப்பட்ட அனாதைமை கொண்டு சேர்த்த மென்பொருள் தொடுதிரை மடிக்கணினியை இயக்கியவாறு சதக் ஹசன் மாண்டோவின் 'காலிப்பெட்டிகளும் காலிப்புட்டிகளும்' சிறுகதைக்குள் நாடோடி அனாதை இளைஞன் கார்லோஸும் இருக்கிறான். ஆனந்த் 'சுவாரோரத்தில் அடுக்கி இருந்த காலிப்புட்டிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. உடனுக்குடன் எடுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் போடுவதில் சுணக்கம் ஏற்பட்ட தருணத்தில் கடந்துவந்த மனநிலைகளின் நினைவுச் சின்னங்களாய் நாள் வாரியாக அடுக்கும் வழக்கம் தொடங்கியது மாண்டோவின் சிறுகதையென. இங்கே கலிப்புட்டி எனும் ஜடத்தை புதுமைப்பித்தனின் பிரம்மராக்ஷஸ் எலும்புக்கூட்டில் ஜீவரசத்தைப் பூசு... என்றான் நன்னயப்பட்டான். காலி பாட்டில் அசேதனத்தை ஜடத்தைச் சேதனமாக்கும்சக்தி ஆக்குவது மாண்டோவிடமிருந்து அதிபுனைவோட்டம் தொடர்கிறது இங்கும். சமையல் மேடையில் இருந்த ஜாக் டேனியல் விஸ்கி பாட்டிலை வருடியபோது குடிக்கத் தோன்றியது.
பிளட்ஸ்:ஏழு
'டாங்கோ புதினத்தின் வரி யோட்டத்தில் ஜடத்தை சக்தியாக்கும் புனைவு இது. ஆனால் அலமாரிக்கும் பக்கவாட்டு சுவரில் பொருத்தப்பட்டிருந்த மரத்தாலான மாயன் முகமூடி அவனையே பார்த்தது மாந்திரீக எதார்த்தக் கூறுகளோடு சடங்குகளின் தொன்மங்களோடு.....மாயன் முகமூடியை எடுத்து முகத்தில் பொருத்திக் கண்களை மூடிக்கொண்டான். முகமூடிமீது எழுதப்பட்ட அமெரிந்திய தொன்மநாவலாக்கம் மொழிகதை வடிவத்தைசிலவரிகள் உரைநடைக் கவிதார்தத்மாக சிலபக்கங்கள் வந்துள்ளன. விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடைப்பட்ட நினைவுப் புலத்தில் காட்சிகள் தோன்றின. உருவங்களும் குரல்களும் தெளிவற்றவையாக இருக்க அவற்றை விளக்கிக் கொள்ளும் விழிப்புணர்வும் அகல்ஒளியின் அளவில் அவனுள் மினுங்கியது. தற்கணத்தில் இருக்கும் தான், தன் கடந்த காலத்தில் நடந்து போவதைக் கண்டான். உள்முகப் பயணங்களில் காலின்றி விழாமல் தப்பிக்க விரும்பும் நினைவின் பல தாக்கங்கள் ஒன்று சேர்வதுண்டு. ஆனால் துரதிஷ்டவசமாக ஒவ்வொரு முறையும் அதற்குள் விழவே செய்கிறான். றாம்லா கடல் அரக்கு முத்திரையிடுதல் வேகமாக இயங்குவதில் கூண்டு விளக்கடியில் ஈசல் படை சிறகடித்து ஒளியும். அட்லாண்டிக் கடல் மீது நாய் பிளாக்கணமிட லஸ்தர் விளக்கைத்தூக்கிப் பார்த்தான் ஆனந்த். கடலையே ஒரு கூண்டுஒளி நீரில்பட்டு பளபளத்து நீள்கிற வெளிச்சம். தூரத்தில் கழிமுகத்தின் படகு லைட்டுகள் மேல் எழுந்து மறையும் இருள் எனும் கடலின் நகர்வு.றாம்ப்லா பிறைவடிவக் கரை ஒதுங்கிய நீர்மனிதர்களின் தொன்மைஉருக்களின் நடமாட்டத்தைக் கண்டான் ஆனந்த். கால்களை தலைகளாகப் புதைத்து ஒருகால் சூ அணிந்தவள் மறுகாலில் காலுறை கிழிந்ததில் சிக்கியமீன் துள்ளி விழுந்தது றாம் லா கடலில்.அந்த றாம் ப்லா கடலில் கைதட்டிக் கூறினான் ஊதா ஜீன்ஸ்பேண்ட் இளைஞன் பிளட்ஸ் கார்லோஸ். அவன் எழுதிய வெகுசிலபக்கங்கள் நீரின் இசை திவலைகளோடு டாங்கோ நாவலின் காலிக் குப்பிகளை உரசும் கடைசிச் சொட்டுகளின் நுரைகளில் சங்கீதம் இன்னும் தீரவே இல்லை.`
(நன்றி : கல்குதிரை)
***
மீட்பின் நடனம்- சிவபிரசாத்
ஒரு நாவலை ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் வகைப்படுத்துவது விமர்சன செளகர்யமே அன்றி வேறல்ல. ஒற்றைப் பரிமாணம் உள்ளதாக ஒரு நாவல் இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயம் மேலோங்கி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிக் கவனம் குவிந்திருந்தாலும் நாவலின் கைகள் எட்டுத் திசைகளையும் துழாவியடியும் பக்கத்துப் பக்கத்துச் சாகைகளிலும் தொட்டுக் கொண்டிருக்க நாவல் நடக்கிறது. வேண்டுமானால், இந்த நாவலை ஒரு உடைந்த, நிறைவேறாத காதல் கதை எனலாமா என்றால், அதிலும் அர்த்தம் கூடுகிறதே தவிர அடர்த்திக் கூடுதல் இல்லை. உடைந்ததும் நிறைவேறாததுமான காதல் எனும்போது காதல் உடையாமலும் நிறைவேறியும்தான் ஆக வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது. குணா கந்தசாமியின் டாங்கோ நாவல் வாசித்து முடித்ததும் உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை நாவலுக்கு பிரபஞ்சன் எழுதிய இந்த முன்னுரையின் வரிகள் நினைவுக்கு வருகிறது.
உருகுவே நாட்டின் மாண்டிவீடியோ நகரில் சந்தித்து காதல் கொள்ளும் இருவரில் ஒருவர் திருமண பந்தத்தில் குடும்ப உறவில் இணைய நினைப்பதும் மற்றொருவர் அதை ஏற்க மறுப்பதுமான அகப் போராட்டமே இந்நாவலின் மையம். இருவரின் ஏற்பும் மறுப்பும் அவரவரின் கடந்த கால கசப்புகளால் உருவானவை. ”இனிமையோ கசப்போ காதலுறவு எப்படிப்பட்டதாயினும் அடிப்படையில் இது நித்யமாய் விதிக்கப்பட்ட உயிரியல் விழைவு” என்று தன் முன்னுரையில் குறிப்பிடும் குணா கந்தசாமி இருதரப்பின் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் சார்பில்லாமல் பதிவு செய்திருக்கிறார்.
இந்நாவல் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் மாண்டிவீடியோ நகரின் பொசிட்டோஸ் பகுதியில் தங்கியிருக்கும் ஆனந்த் டெக்ஸாஸைத் தலைமையாகக் கொண்ட மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்கிறான். புதிய நிலத்தில் அதிகத் தனிமையும் சலிப்பும் நிறைந்த வாழ்க்கையில் உழல்கிறான். இளமையில் பெற்றோரை இழந்து மாமாவின் கண்காணிப்பில் ஆசிரமத்தில் வாழ நேர்ந்ததிலிருந்து தனிமை தொடர்ந்தப் படியே இருக்கிறது. கல்வியையும் வேலையையும் இலக்காகக் கொண்டு ஓடியதால் அப்போது அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் பொருளாதார வெற்றிக்குப் பிறகும் இருண்மையும், சலிப்பும் தொடர்வதால் போதையின் பாதையில் பயணிக்கத் தொடங்குகிறான். அவன் வசிக்கும் நகரமும் அதற்குக் காரணமாக இருக்கிறது எனலாம். மத்தே பானம், மரியுவானா(கஞ்சா) போன்ற போதை வஸ்துக்கள் மக்களிடம் தாராளமாகப் புலக்கத்திலிருக்கிறது. அவனுக்கு அறிமுகமான எல்லோருமே போதை வஸ்துக்களோடு தொடர்புடையவர்களாகவே இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கொண்டாட்ட மனநிலையை உருவாவதற்கோ அல்லது தக்கவைத்துக் கொள்வதற்கோ தான் பயன்படுத்துகிறார்கள். ஆனந்த் மட்டும் போதைச் சூழலுக்குள் மாட்டிக் கொள்கிறான்.
“பிறரின் கருணையினால் நான் வளர்க்கப்பட்டதை வெறுக்கிறேன். இந்தப் புழுதியும் அழுக்கும் என் மீது படியட்டும். நான் அழிகிறேன்” என்று முதல் பகுதியின் இறுதில் ஆனந்த் புலம்புவதிலிருந்து அவனின் அகசிக்கலின் தீவிரத்தை உணர்ந்துக் கொள்ளலாம்.
சந்தியாவின் வருகை ஆனந்தின் வாழ்வில் ஏற்படுத்தும் மனமாற்றங்கள் இரண்டாம் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. டாங்கோ என்பது அர்ஜெண்டினா மற்றும் உருகுவே எல்லையான ரியோ தெ லா பிளாட்டா நதியினோரம் தோன்றிய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையினான காதலின் அணுக்க நடனம். டாங்கோவில் ஆண் வழிநடத்துகிறான். பெண் பின்தொடர்கிறாள். நடனத்தில் இணங்கும்போது பன்மை அழிந்து இரு உருவங்கள் இணைந்து ஒற்றை நிழலைத் தோற்றுவிக்கிறது. ஆனந்த்தும் சந்தியாவும் ஆடும் நடனம் விதிகளுக்கு உட்பட்டதாக இருப்பதில்லை. இதில் சந்தியா தான் வழிநடத்துகிறாள். ஆனந்த் பின்தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவன் வழிநடத்த முற்படும் போது “ நம்மோட ரிலேஷன்ஷிப் தவிர்க்கவே முடியாத வாய்ப்புகளால் விதிக்கப்பட்ட ஒரு சூழல். இந்த இடத்தில் நீயில்லை, யாரா இருந்தாலும் இதே முடிவுதான்” என அவன் முயற்சிகளைத் தொடர்ந்து மறுதலிக்கிறாள். சந்தியாவின் இந்த முடிவு ஆனந்தின் பார்வையில் தவறாகவும் வலிநிறைந்ததாகவும் தெரிந்தாலும் சந்தியாவின் கோணத்தில், அவளின் கடந்த கால கசப்புகளோடு பார்த்தால் இது தீர்க்கமான முடிவாகத் தான் தோன்றுகிறது. வீதி ஓவியனால் வரையப்படும் டாங்கோ நளினத்துக்குள் ஆனந்த், சந்தியாவின் முகம் தத்ரூபமாகப் பொருந்தினாலும் அவை பாவனைகளே அன்றி நிஜமாகாது.
இந்த நிதர்சனத்தை ஆனந்த் ஏற்றுக் கொள்ளவும் தன்னுள் இருக்கும் இருண்மையை விலக்கி ஒளியைத் தேடும் பயணத்தைத் தொடங்கவும் ஏதோ ஒரு வகையில் றாம்ப்லாவின் சாலையில் இருக்கும் காந்தி உந்து சக்தியாக இருக்கிறார்.
நாவலில் இந்த காந்தி சிலை பிரதானப் பாத்திரம் போல் வருகிறது. போதை, விலைமகளீர் என்று ஆனந்த் தவறு செய்யும் போதெல்லாம் காந்தி தன்னை கண்காணிப்பதாக உணர்ந்து குற்றவுணர்வு அடைகிறான். இளமையிலேயே தந்தையை இழந்த அவன் தன் தந்தையின் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும் ஒருவரைத் தேடிய படியே இருக்கிறான். தமிழாசிரியர் ராகவன், வார்டன் ஆர்.ஜே.எஸ், பெங்களூர் அறைத் தோழன் எம்கே, அப்பாட்மெண்ட் ஓனர் டாக்டர் கிறிஸ்டாஃப், கலை மனம் படைத்த மத்தியாஸ் என்று அவன் நேசிக்கும், அவனை நேசிக்கும் மனிதர்கள் இருந்த போதும் ஆனந்த் இறுதியில் தன் தந்தையாய், வழிகாட்டியாய் உணர்ந்துக் கொள்வது காந்தியைத் தான் என்று அறியும் போது நாவல் வேறுதளத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
இந்த நாவலில் இரண்டு விஷயங்களை முக்கியமானதாகக் கருதுகிறேன். ஒன்று காட்சிப் பூர்வமான விவரணைகள். மற்றொன்று துணைப் பாத்திரங்களின் வாழ்க்கைச் சூழல் சொல்லப்பட்ட விதம். தமிழ் வாசகனுக்கு இந்த நிலப்பகுதியும் அதில் வாழும் மனிதர்களும் அன்னியமானவர்கள் என்பதால் மேற்கூறிய இரண்டு விஷயங்களும் பிரதானமானதாக மாறுகிறது. அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து அதற்குறிய மெனக்கெடலோடு குணா கந்தசாமி எழுதியிருக்கிறார்.
மாண்டியோ நகரம், றாம்ப்லா கடற்கரைச் சாலை, பொசிட்டோஸ் பகுதியின் அமைப்பு, ஆனந்த் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட், மாண்டியோவுக்கு வெளியே நாற்பது கிலோமீட்டர் பரப்பில் அமைந்திருக்கும் தகவல்தொழில்நுட்பப் பூங்கா, கலை ரசிகரான மத்தியாஸின் பழமையான வீடு, றாம்ப்லா காந்தி சிலை, அட்லாண்டிக் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் முக்கியமான இடங்கள், அவற்றின் நிலக் காட்சிகள் என்று நாவலில் இடம்பெறும் அன்னிய நிலத்தை தன் காட்சி விவரிப்பின் வழியே உயிர்ப்புள்ளதாக மாற்றுகிறார். உருகுவேவின் கலாச்சாரத்தை பிரதிபளிக்கும் கார்னிவல் திருவிழா பற்றியச் செய்திகள், டாங்கோ நடனத்தின் நுட்பங்கள், அடிமை வணிகம், நிலத்தின் தாதுக்களுக்காகக் கொல்லப்பட்ட பூர்வக்குடிகள் பற்றிய தகவல்கள், நாட்டின் சமகால வரலாறு ஆங்காங்கே சில அத்தியாயங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
நாவலில் வரும் பிரதானத் துணைப் பாத்திரங்களோடு ஒரிரு இடங்களில் மட்டுமே வந்துச் செல்லும் மாமா இளைய மகள் தீபா, ராகவன் சாரின் அம்மா சாவித்திரி, டெபுடி வார்டன் பூனை என்கிற பழனிக்குமார், றாம்ப்லாவின் சாலையில் சந்திக்க நேர்ந்த சாண்டியாகோ, கமீலா, பாலியல் தொழில் செய்யும் பெண்(சீக்கா) அமெந்தே என்கிற மார்செலா, சலோமி, ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மார்த்தா, இரவு காவலாளி முலாட்டோ, மத்தியாஸின் சகோதரி மகள் இசபெல் மற்றும் சந்தியா வளர்க்கும் கிளி உட்பட எல்லோரும் மனதில் தங்கிவிடுகிறார்கள். காரணம் கதைமாந்தர்களின் தனித்தன்மையுடன் அவர்களின் வாழ்க்கைச் சூழலையும் குணா கந்தசாமி வலிந்து திணிக்காமல் நாவலின் போக்கில் இயல்பாகச் சொல்லிச் செல்கிறார்.
இதில் இன்னொரு காதலும் சொல்லப்படுகிறது. ஆனந்தின் அலுவலகத் தோழி வெரோனிகாவிற்கும் ரொமோனுக்கும் இடையிலானக் காதல். தன் அறைத் தோழி சலோமியோடு காதலன் ரொமோனை இணைத்துப் பார்க்கும் சந்தேகம் வெரோனிகாவைத் தன் காதலையும் வேலையையும் விட்டு சொந்த நகரத்திற்குச் செல்லும் நிர்பந்தத்தை உண்டாக்குகிறது. வெரோனிகாவின் இந்த தவறான முடிவு கலை மனம் படைத்த சலோமியைப் பாதிக்கிறது. ஆனால் ஆனந்திற்கோ போதையிலிருந்து, தனிமையிலிருந்தும் விடுபடுவதற்கான நல்வாய்ப்பாக அமைந்து விடுகிறது. காரணம் வெரோனிகாவின் பணியிடத்திற்குத் தான் சந்தியா வந்துச் சேர்கிறாள். ஒருவருக்கு இழப்பாய் தோன்றுவது மற்றொருவருக்கு வாய்ப்பாக அமைந்துகிறது.
சந்தியா புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும், பிரச்சனைகளைக் கையாள்வதிலும், மற்றவர்களோடு இணக்கமாகப் பழகுவதிலும் திறன்பட இருக்கிறாள். தனக்கு என்ன தேவை என்பதை விட எது தேவையில்லை என்பதில் தெளிவானவளாக இருக்கிறாள். அவள் ஆசையாய் வளர்க்கும் கிளி போல தான் ஆனந்துடனான உறவையையும் பார்க்கிறாள். அதனால் தான் அவளிடம் பிரிவின் வலியோ, இழப்பின் துக்கமோ தோன்றுவதில்லை. இயல்பாக கடந்துச் செல்கிறாள்.
ஆனந்தைப் போலவே தனிமையான மனிதர்கள் என ராகவனையும் மத்தியாஸையும் சொல்லலாம். தமிழாசிரியர் ராகவன் காதல் தோல்வியில் மதுவுக்கு அடிமையாகி தனது தாயின் இறப்பிற்குப் பிறகு காணாமல் போய்விடுகிறார். உருகுவேக்காரரான மத்தியாஸிக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருந்த போது அவர்களைப் பிரிந்து தனிமையில் வாழ்கிறார். தன் அனுபவத்திலிருந்து ஆனந்திற்கு அவர் கூறும் அறிவுரைகள் முக்கியாமானது.
”மனிதனுக்கு எத்தனையோ விதமான வாழ்க்கை முறைகள் உண்டு. அவன் எந்த முறையைத் தேர்ந்தாலும் குடும்பம் என்ற அமைப்புக்குள் இருப்பது முக்கியமானது”
”எத்தனை சிக்கல்கள் இருந்தாலும் மனிதர்களுக்கு தன் குருதிச் சங்கிலியில் உள்ள மனிதர்களின் அண்மை தேவையாகத்தான் இருக்கிறது அல்லது அதற்கு நிகரான நண்பர்கள் தேவை. நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குருதிச் சங்கிலி மனிதர்களால் நிராகரிக்க முடியாத ஒரு கடப்பாட்டை உருவாக்குகிறது . அந்த கடப்பாடு உனக்கு விதிக்கப்பட்ட ஒன்று. அதை நீ பொருட்படுத்தலாம் அல்லது நிராகரிக்கலாம், அது வேறு விஷயம். ஆனால் அந்த குருதிப்பிணைப்பு அழியாமல் இருக்கும்”
நாவலின் மொழி எவ்வித சிடுக்குகளும் இல்லாமல் எளிமையும் வசிகரமும் கொண்டதாக இருப்பதால் சிக்கலில்லாமல் வாசிக்க முடிகிறது. குணா கந்தசாமி கவிஞர் என்பதால் நாவலின் போக்கில் கதாப்பாத்திரங்களின் உரையாடளில் நிறையக் கவித்துவமான, தத்துவார்த்தம் பொதிந்த வரிகளை எழுதிச் செல்கிறார். அவற்றில் எனக்குப் பிடித்த சில வரிகளைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
அறிவு என்பது முயன்றால் எல்லோரும் சம்பாதித்துவிடக் கூடிய சொத்து. நீ உனக்குள் இரண்டு மனிதனாக மாறிக்கொள், ஒருவன் இந்த வாழ்க்கைக் கடலை நீந்திக் கடக்கவேண்டிய லௌகீக மனிதன். அந்த லௌகீக மனிதனை ஆற்றுப்படுத்து ஆன்மாவில் அழிக்கமுடியாத கறைகள் படிவதைத் தடுத்து மட்டுறுத்தவேண்டியவன் உன்னுள் இருக்கும் இன்னொரு தூயவன்.
ஒரு மனிதனுக்கு மட்டுமான தனிமாதிரியான துயரமென்று ஒன்று கிடையவே கிடையாது. எல்லா வகையான துயரங்களுக்கும் இந்தப் பூமியில் உனக்குப் பங்காளிகள் இருப்பார்கள். என் அனுபவத்தில் இருந்து ஒன்றைச் சொல்ல முடியுமென்றால் மனித வாழ்க்கையில் நீடித்த துன்பம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. காரணம் மனிதமனம் ஏற்றுக்கொள்ளப் பழக்கப்படுத்தப்பட்டது.
விதிவிலக்குகள் உண்டுதான். அப்படி ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஒன்று தற்கொலை செய்துகொள்வார்கள் அல்லது மனப்பிறழ்வுக்கு உள்ளாவார்கள்.
முதுமை என்பது உடலில் வளரும் சிலுவை. அதை பெயர்தெடுக்க வாய்ப்பே இல்லை. நீ வாழ்க்கையில் வியப்பை இழக்கும் போது உன் வயோதிகம் தொடங்கிவிடுகிறது.
எழுத படிக்க கத்துக்கறதுக்கு வேணா உழைப்பு தேவை படலாம். பேச கத்துகிறதுக்கு ஆர்வமும் பயிற்சி இருந்தாலே போதும்.
இப்படி குறிப்பிட்டுச் சொல்லும் படி நாவலில் பல சிறப்பான விஷயங்கள் இருந்தாலும் சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. நாவலின் முதல் பகுதியில் புதிய மனிதர்களும் அவர்களின் வாழ்க்கைப் பின்னனியும் கிளைக்கதைகளுக்கான முடிச்சுக்களோடு விவரிக்கப்படுகிறது. அதில் ஒரு பன்முகத் தன்மையை உணரலாம். ஆனால் இரண்டாம் பகுதி ஆண் பெண் உறவு சிக்கலாக ஒற்றைத் தன்மையில் சுருங்கிவிடுகிறது. இந்த கதையை லத்தின் அமெரிக்க நிலப்பரப்பில் மட்டும் தான் சொல்ல முடியுமா என்று யோசித்துப் பார்த்தால், அதற்கு வலுவானக் காரணங்கள் இல்லை. . ஆனாலும் அமெரிக்காவிற்குச் செல்லும் வாய்ப்பிருந்தும் ஆனந்த் உருகுவேவைத் தேர்வு செய்தது அவன் வாழ்வின் நல்லூழ் என்றே நாவல் வாசிப்பின் முடிவில் உணர முடிகிறது.
குணா கந்தசாமி தனது முன்னுரையில் ஆறாண்டுகளுக்குப் பின் வெளியாகும் என்னுடைய நூல் இது. இடைப்பட்ட காலத்தில் எதிர்மறை அழுத்தங்களில் காரணமாக எழுதமுடியாத உளத்தைடையில் சிக்குண்டிருந்தேன் என்று குறிப்பிடுகிறார். அவர் தொடர்ந்து உற்சாகத்தோடு எழுதும் மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் தரத்தோடு தான் டாங்கோ இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
(நன்றி: காலச்சுவடு)
***
பிரபஞ்ச நடனத்தின் மையப்புள்ளி- த.அரவிந்தன்
இரவில் ஒரு கடற்கரையில் இரண்டு மணிநேரம் நிகழ்ந்த நடன நிகழ்ச்சியில், இறுதியாக ஒரு கலைஞர் மேடையில் வந்து நின்றார். அவரின் கட்டைக் கால் விலக்கப்பட்டதும், காற்றின் அசைதலாக ஒற்றைக் காலால் துள்ளல் இசைக்கேற்ப அபாரமாக ஆடினார். முன் நொடிவரை ஆடியவர்கள் எல்லாம் கைகொள்ள முடியாத கையொலி அவருக்குக் கிடைத்தது. அது அவரின் தன்னம்பிக்கை கால்களுக்கானது மட்டுமல்ல; ஒவ்வொருவருமே மனதளவில் ஏதோவோர் ஊனத்தால் முடமாகியுள்ளனர். உலகமயமாக்கலுக்குப் பிறகு அந்த ஊனத்தின் கதிர்வீச்சு கூடுதலாகிக் கொண்டே செல்கிறது. அதன் வலிகளால் சூழப்பட்டவர்கள், அந்தக் கலைஞரின் கால் இல்லாத இடத்தில் தன்னைப் பொருத்திக்கொண்டு நம்பிக்கை பெறுகிறார்கள். அவர்களுடைய ஊனத்தின் மேல் அவர்களே எழுந்து ஆடத் தொடங்குகிறார்கள்.
குணா கந்தசாமியின் `டாங்கோ’ நாவலும் கட்டைக்கால் விலக்கப்பட்ட நிலையிலான ஆனந்த் என்கிற ஓர் இளைஞனுடைய வாழ்வின் நடனம்தான். அப்பா அம்மா இல்லாத நிலையில் மாமாவின் இல்லத்திலும், ஆசிரம உறைவிடப் பள்ளியிலும் வசித்து, கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, உருகுவேவின் மாண்டிவீடியோவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் அளவுக்கு உயருகிறான் என்றாலும், சமூகத்தில் தனித்து விடப்பட்டவனாக அது சார்ந்த பாடுகளோடு வாழ்வில் அல்லாடுகிறான். தனித்து விடப்பட்டவர்களுக்கு அல்லது தனித்து இயங்குபவர்களுக்கான முதல் துயரம் என்பது எப்போதும் தனிமைதான். அன்றாடத்தின் மீது சந்திக்க வேண்டிய கருணையற்ற தருணங்கள் எல்லாம் அதற்குப் பிறகானவைதான். ஆனால், இயற்கை எதையும் யாரையும் தனிமையாகப் படைக்கவில்லை என்பதுதான் நீதியாகவும் உள்ளது. அப்படியானால் இங்கு தனிமை என்பது என்னவெனில், மனிதர்களைத் தேடிக் கண்டடைவதுதான். கோடி மனிதர்கள் கடந்து சென்றாலும், அதில் தனக்கான மனிதர்களைத் தேடிக் கொள்வதுதான். அதிலும் துல்லியமாக மனிதர்களின் மனங்களைத் தேடிக் கொள்வதுதாம். இந்த நாவல் முழுவதுமே ஆனந்த் வழியே குணா கந்தசாமி மனங்களைத் தேடி அலைந்திருக்கிறார். அது தேசமற்றதாகவும் இருக்கிறது. தேசமற்று என்கிறபோது தகர்க்க முடியாத பெரும் பாறையாகத் தெரியும் கலாசாரம், பண்பாடு இன்னபிற தடுப்புச் சுவர்கள் எல்லாம் கானல் சுவர்களாக விலகிச் செல்லத்தானே செய்யும்? அந்தச் சுவர்களைத் தகர்க்கும் குகைவழி பயணம் போலும் நாவலின் நிழலை குணா கந்தசாமி விழச் செய்துள்ளார்.
மனங்கள் தேசமற்று கலக்கக் கூடியதாகவும், அதனை இறுக்கும் அத்தனை தடுப்புச் சுவர்களையும் தகர்க்கக் கூடியதாகவும் இருந்தாலும் மனிதனின் உடலுறுப்புகளைப் போன்ற மகிழ்ச்சி, துயரம் என்கிற இரண்டு கற்பனைச் சுவர்களை மட்டும் அவற்றால் தகர்க்க முடியாததாகவும் இருக்கிறது. `றாம்ப்லாவின் கரையில் உட்கார்ந்தால் கடலாகிப் போகலாம். அதே கரையில் திரும்பி உட்கார்ந்தால் விண்ணுயர்ந்த கட்டடங்களாகலாம்’ என்பதாக நாவலில் ஒரு வரி கடக்கிறது. இதுதான் மகிழ்ச்சிக்கும் துயரத்துக்குமான இடைவெளியாக உள்ளது. ஒன்றைத் திரும்பிப் பார்ப்பதன் மூலமே துயரத்திலிருந்து மகிழ்ச்சியை அடைந்துவிடலாம். ஆனால், அதை மகிழ்ச்சி என்கிற பெயரில் மட்டும் அடைந்துவிட முடியாது. அமைதி மற்றும் அனைத்தையும் துறத்தல் என்கிற நிலையிலிருந்தே அடைய முடியும். மகிழ்ச்சி என்று கருதிக் கொள்கிற ஒன்றைத் தேடும்போது, அது துயரத்தையும் சேர்த்து தேடுவதுதான். இங்கு மகிழ்ச்சிக்கான அர்த்தம் என்பது டாம்பீகமான வாழ்வு என்பதாகவே உள்ளது. அப்படி டாம்பீகமான வாழ்வின் வழியே சிற்றின்பத்தைப் போல மகிழ்ச்சி இருந்தாலும் அது நிரந்தரத்தின் மீது குடிகொண்டதாக இல்லை. அது சட்டென துயர மேகமாக மாறிவிடுவதை நாவலில் இடம்பெற்றுள்ள அனைத்து கதாபாத்திரங்களின் வாழ்வும் உறவும் கூறுகின்றன. இதுதான் உலகமயமாக்கலின் மறைவிளைவாகவும் இருக்கிறது. `ஒரு மனிதனுக்கு மட்டுமான தனி மாதிரியான துயரம் என்று ஒன்று இல்லை. எல்லாவகையான துயரங்களுக்கும் பங்காளிகள் உண்டு’ என்று குணா கந்தசாமி பதிவு செய்கிறார். அப்படி மகிழ்ச்சி வடிவிலான பங்காளிகள் நிறைந்த துயரங்களை அதன் டாம்பீகமான வாழ்வு அல்லது தற்கால வாழ்வு எனக் கருதப்படுபவையின் மூலம் `டாங்கோ’ விசாரணைக்கு உட்படுத்துகிறது. அதன் நீட்சியாக உலகமயமாக்கலின் உள்வெளிப்பாடுகளில் மற்றொன்றான கட்டற்ற சுதந்திரத்தின் மீதான தாகம் தொடர்பாகவும் விசாரணைக்கு உட்படுத்துகிறது.
கட்டற்ற சுதந்திரத்தை ஒரு நாட்டின் மக்கள் இயல்பாகவே அனுபவித்து வருவதற்கும் இன்னொரு நாட்டைச் சேர்ந்தவர் பாசாங்கின் வழியே அனுபவிக்க முயலுவதற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. லாகிரிகளில் ஆனந்த் திளைத்தாலும் அது குற்ற மனதிற்குரியதாகவே இருக்கிறது. பெண்களை நாடுவதிலும் தயக்கம். இந்தப் பார்வை இந்திய மனத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. தமிழகத்திலிருந்து பல கடல் மைல் தூரத்தில் இருக்கும்போதும் கட்டற்ற சுதந்திரத்தின் மீது ஓர் ஒவ்வாமை இருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர்தான். அது கேளிக்கையிலுமா பழக்க நெறிகளிலுமா என்றால் இல்லை. `புரிந்து கொள்ள முடியாத வகையிலான சிக்கலான காரணங்களோடு உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன’ என குணா கந்தசாமி கூறுகிறார். அது இதற்கும் பொருந்தும். இந்தப் புள்ளியில் அதன் இடைவெளியை அதிகம் உற்றுப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. நாவலில் வரும் டாக்டர் கதாபாத்திரம், `கிழக்கு, மேற்கு கலாசாரம் என்றெல்லாம் இல்லை. கலாசாரத்தின் இடுப்புத் துணியைத் திறந்து பார். அதன் பாசாங்குத்தனம் தெரியும்’ என்கிறார். மனிதனே பாசாங்குத்தனமானவன் என்கிறபோது, கலாசாரம் பாசாங்குத்தனம் இல்லாமலா போகும் என்கிற நினைவிழை நாவலை வாசிக்கையில் எழாமல் இல்லை. இந்தப் பாசாங்குத்தனத்தின் பாதிப்பு நாவலிலும் ஒரு கட்டத்தில் தொற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.
இரு பாகங்களாக எழுதப்பட்டுள்ள நாவலின் முதல் பாகத்தில் மாண்டிவீடியோ அலுவலக ஊழியர்களின் உறவுகள், றாம்ப்லா கடற்கரை சந்திப்பிலான உறவுகள் கதைகளாக முடியப்பட்டுள்ளன. இவை அந்நிய உறவுகள் என்றாலும் அவற்றினுடனான வாழ்வின் நடனம் தயக்கமற்ற கூறல் முறையில் உள்ளது. `கடலைக் கடப்பது என்பது அச்சத்தைக் கடப்பதும்தான்’ என்று கூறினாலும் அச்சமற்றதாகவே அமைந்துள்ளது. இரண்டாம் பாகத்தில் அலுவலகத்துக்குப் புதிதாக வந்து சேரும் தமிழ்ப் பெண்ணான சந்தியாவுடனான ஆனந்தின் உறவு அச்சத்தைக் கடப்பதுபோலும் தயக்கக் கூறல் முறையிலும் உள்ளது. அதுதான் இந்திய மனமா எனவும் தெரியவில்லை. முதல் பாகக் கடல் அலைதல் போல அந்தப் பெண்ணுடனான உறவின் அலைதலுக்கும் இன்னும் செறிவு கொடுத்திருக்கலாம். அதில் பேசுவதற்கும் இன்னும் நிறைய விஷயங்கள் இருப்பது போலும் தெரிகிறது. மறைதொனி உணர்த்தல் என்பதும் புரியாமல் இல்லை. ஓரிரு இடங்களிலேயே சொல்லப்படும் மாமா பெண் பாத்திரமான தீபாவின் மீதான அலைதல், ஏக்கம் பெரிதாக ஏற்படுத்தவே செய்கிறது என்கிற கவனத்துடன் கூறுவதாகும். எனினும், ஒன்றைக் கட்டுடைத்துக் காட்டுவது படைப்பாளன் சார்ந்த உரிமை. முடிவு.
றாம்ப்லா கடற்கரையும் அந்தக் கரையிலான காந்தியின் சிலையும் நாவலில் புடைப்பற்ற கதாபாத்திரங்களாகவே உருக்கொண்டுள்ளன. தேசமற்றவராக காந்தி இருந்தாலும், அந்நிய பகுதியில் அவருமேகூட தனிமையில் அல்லாடக் கூடியவராகத்தான் உள்ளார். அவருடைய கொள்கையும்கூட. உண்மையில் அந்த அல்லாடல் இங்கு அவ்வளவு முக்கியமும் அல்ல. எப்படியாயினும் இந்தப் பிரபஞ்சம் அவரை ஆரத் தழுவிக்கொள்ள முயலுகிறது என்பதுதான் முக்கியம். அவருடைய கொள்கையைத் தழுவவும்தான். ஆனால், தழுவ முடியாத அளவுக்கு இடையூறுகள். அது விலக்கப்பட்ட கனியிலான வாழ்வின் உண்மைகள். ஆனந்துமேகூட அவனுடைய எல்லாம் இழப்புகளையும், சட்டையில் ஒட்டிய மணலாகத் தட்டிவிட்டு இறுதியாகப் பிரபஞ்சத்தை ஆரத் தழுவிக் கொள்கிறான். வாழ்வு எத்தனை சபிக்கப்பட்டதாகவும் துயரப்பட்டதாகவும் இருந்தாலும், பிரபஞ்சத்தைத் தழுவுவதைத் தவிர யாருக்கும் மாற்றுப் பாதை இல்லை. அது தோல்வியைத் தழுவாத பாதையும். `டாங்கோ’ ஒரு பிரபஞ்ச நடனம். அதற்கு குணா கந்தசாமி அத்தூரம் முயன்றுள்ளார். `எந்தவொரு பிரமாண்டத்துக்கும் உயிர் ஒரு சிறுபுள்ளிதானே’ என்றும் அவர் கூறுகிறார். அது பஞ்சம் கலவாத அப்பட்டம். `டாங்கோ’வும் ஒரு சிறுபுள்ளி. பிரபஞ்ச வாழ்வு சிடுக்குகளின் மையப் புள்ளி.
(நன்றி: சிறு பத்திரிகை)
***
டாங்கோ – காளிப்ரசாத்
நாம் தொடர்ச்சியாக பொது ஊடகங்களின் வாயிலாகவும் ஜனரஞ்சக திரைப்படங்களின் வாயிலாகவும் பயின்று வந்த ஒன்று இருக்கிறது. தனித்து இருப்பவன்/ள் மீது சமூகம் கொள்ளும் பரிதாபம். நான் வளர்ந்த காலத்தில் பார்த்த திரைப்படங்களில் மூன்றுக்கு ஒன்று இப்படி ஒரு கதையைக் கொண்டிருக்கும். நாயகன் யாருமற்றவனாக இருப்பான். அனாதையான ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் மீது கருணையை குடம் குடமாக ஊற்றுவது என்பது அன்றைய கதைகளின் மரபு. அதற்கு எதிர் தரப்பாக அவனைத் திட்டுபவர்கள் ‘அடிச்சா ஏன்னு கேட்க ஆளில்லாத அனாதை என்றும்.. செத்தா தூக்கிப்போட ஆளில்லாத அனாதை” என்றும் வசைச் சொல்லை உதிர்க்கிறார்கள். அவனுக்கு ஆதூரமாக இருக்கும் கதாபாத்திரங்கள் ‘’உனக்கு யாரும் இல்லைனு நினச்சுக்காத.. என்னை அம்மாவா நினைச்சுக்கோ” என்று சொல்கிறார்கள்.
அந்தப் பதின் பருவத்தைக் கடந்த பின் நேரில் காண்பது என்பது வேறொன்றாக உள்ளது, அந்த காலகட்டத்தில்தான் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ந்து தனிநபரின் வருமானம உயர்ந்து போகும் ஒன்றையும் கண்முன்னால் காண்கிறோம். அப்போது இத்தகைய ”உடனிருப்புகளை” விடவும் விலகியிருத்தலில் ஆர்வம் கொண்ட தலைமுறை உருவாவதையும் காண்கிறோம். தனக்கு யாரும் இல்லை என்பது கழிவிரக்கம் என்கிற நிலை போய்.. அது ஒரு சுதந்திரம் என்கிற நிலைபாடு வருகிறது. இதற்கு இடையில் என்ன நிகழந்து விட்டது என்றால் வாழ்வாதாரத்திற்கான பொருள் சேர்ந்திருக்கிறது என்கிற ஒன்றைத்தவிர வேறு பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. பொருளியல் சுதந்திரம் என்பது அதுவரை கட்டிவைத்திருந்தவற்றைக் கலைத்துவிடுகிறதா? அதுநாள் வரையிலான ஒரு ‘கட்டு” என்பது தனிநபராக பார்க்கையில் ஒருவித பொருளியல் பாதுகாப்புதானா என்கிற கேள்வி எழுகிறது.
மானுடவியலாளர்கள் ஒன்று சொல்கிறார்கள். மனிதன் எப்பொழுதும் தனிமையானவனே.. lonely tiger என்பது போல. ஆனால் அவன் ஒரு குழுவாக மாற அவனுக்கு ஒரு “பிழைத்திருத்தல் தேவை இருக்கிறது. அன்றைய கால பெரு விலங்குகளுக்கு மத்தியில் வாழ்ந்து அவற்றை வென்று இன்றைய உயிரினங்களின் உச்சத்தில் மனிதன் அமர்வதற்கு அவனுக்கு ஒரு குழுவாக இயங்குவது தேவையானது. அவன் இயல்பாக குழுவுடன் இருப்பவன் அல்ல. ஒரு பிழைப்பிற்காக சேர்ந்து இருக்கிறான். அவ்வாறு தொடர்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து உயிர்ச் சங்கிலியின் உச்சத்தை அடைந்த பின்னர் நாகரீக மனித உயிரிக்கு குழுவாக இருத்தல் என்பது ஒருசில விதங்களில் மட்டுமே பொருளாகிறது. சக மனிதர்களுடன் கூடிக் களித்திருத்தல், சக மனிதர்களுடன் விலகியிருத்தல். தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் இருந்து கொண்டும்.. அதே நேரத்தில் இல்லாமலும் உருண்டு போவது.
இலக்கியத்தில் யாரும் லட்சிய வேட்கை, தியாகம் ஆகியவற்றை உன்னதப் படுத்துவதில்லை. பெரும்பாலானவை அவற்றில் உள்ள அபத்தத்தை சுட்டிக் காட்டியபடி இருக்கின்றன. இன்னும் விளக்கமாக சொன்னால், எழுத வரும் அனைவரும் ஒருவகையில் இருத்தலியல் சிக்கல் கொண்டுதான் வருகின்றனர். சமூகம் ஒரு குழுவாக அடுத்தக் கட்டத்திற்கு பலவகைகளில் முன்னேறிச் செல்கிறது. அப்போது இலக்கியம் அதில் உள்ள அபத்தத்தை சுட்டிக் காட்டுகிறது. ஒவ்வொரு காலத்திலும் இங்கே இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்று சொல்கிற படைப்புகள் உண்டு. இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஏசுவின் தோழர்கள் நாவல் ஒரு உதாரணம். தோழர் என்றால் நாம் இங்கு குறிப்பிடும் இடதுசாரி தோழர்கள். Friends of Jesus அல்ல comreds of Jesus. பணி நிமித்தமாக போலந்து செல்லும் ஒருவன் தனது கலாசாரம் மற்றும் போலந்தின் கலாசாரம் மற்றூம் அன்றைய அரசியல் சூழல் ஆகியவற்றைக் கொண்டு அடையும் ஒரு புரிதல். அதை அரசியல் நாவல் எனலாம். பசித்த மானுடம் நாவலில் வரும் கணேசன் கொள்கிற அலைபாய்தல்கள் மற்றொரு உதாரணமாக வருகிறது. இறுதியில் அவன் அடைகிற தரிசனம் அந்நாவலில் உண்டு. அவன் அதற்கான செயலில் இருப்பான்.
டாங்கோ நாவலை இவ்விரு விதங்களிலும் மேற்சொன்ன நாவல்களைத் தொட்டுப் பார்த்து அறியலாம். இன்றைக்கு சென்ற தலைமுறையை விடவும் பொருளிலும் ஆரோக்யத்திலும் பயணங்களிலும் பலதரப்பட்ட அனுபவங்களிலும் உயர்ந்து நிற்கிற நமது தலைமுறை எதையும் வெறும் நுகர்வோடு தொட்டு நகர்கிறதா? அல்லது சென்ற தலைமுறை போல காலுன்றி ஒன்றைப் பற்றிக்கொண்டு நிற்க விரும்பிகிறதா என்கிற கேள்வி கேள்வியை டாங்கோ நாவல் ஆனந்த் என்கிற ஒருவனின் பார்வையில் கேட்டுப் பார்க்கிறது.
திணை என்பது ஒரு நாலலுக்கு முக்கியமானது. காடு, ஆழிசூழ்உலகு, அவன் காட்டை வென்றான் ஆகியவற்றில் திணை ஒரு பாத்திரமாக ஆவைதைப் பார்க்கிறோம். அவ்வகையில் நிலப்பகுதி என்று எடுத்துக் கொண்டால், டாங்கோ மேலோட்டமாக உருகுவேவை சுட்டிச் செல்கிறது. அந்த நாடு தனிப்பட்ட விதத்தில் ஆனந்திற்கு என்ன செய்கிறது? முழுக்க முழுக்க நுகர்வு கலாசாரம் ஊறியிருக்கும் ஒரு அமெரிக்க நகரத்திற்கு சென்று அங்கிருக்கும் ஒரு மலைப்பகுதியில் ஆனந்திற்கு இதே புரிதல்தான் ஏற்பட்டிருக்குமா.. அல்லது முழுக்க கட்டுப்பாடுகள் நிறைந்திருக்கும் அரபு தேசத்திற்கு சென்று அங்கு பாலைவன மணலில் அவனுக்கு இதே புரிதல் ஏற்பட்டிருக்குமா என்றால் ஆம் என்று சொல்லிவிடக்கூடிய சாத்தியம்தான் இருக்கிறது. ஏனெனில் அவனது குழப்பங்கள் அவனது அகக்குழப்பங்கள். மிகவும் கவனமும் எச்சரிக்கையும் கொண்டவன். ஆனந்த் தனக்குள் இட்டுக்கொண்டிருக்கும் கூண்டு அல்லது தான் அடைப்பட்டிருக்கும் தீவிலிருந்துதான் முதலில் வெளிவர வேண்டும். அவன் தனது ஊரிலேயே இருந்திருந்தாலும் இப்படித்தான் ஆகியிருக்கும் என்று கருத முடிகிறது. ஆகவே அந்நிய தேசத்தின் அரசியலோ சமூகமோ அவனுக்கு ஒரு பாதிப்பை உருவாக்கவில்லை. அவனது ஈர்ப்புமே ஒரு தமிழ்ப் பெண்ணிடம்தான் உருவாகிறது. ஆகவே நாம் இதை ஏசுவின் தோழர்கள் போல ஒரு கலாசார மோதல் என்று சொல்ல முடியாது. அல்லது அந்த தேசத்தைப் பற்றிய அறிதல் என்றும் சொல்லவியலாது. இளம்வயதில் கைவிடப்பட்டவன் என்று கருதி அலைபாய்தல் கொண்ட மற்றொரு நாவலான பசித்த மானிட்டத்தை எடுத்துக் கொண்டால், டாங்கோவில் ஆனந்த் அந்த அளவு வயதாலும் அனுபவத்தாலும் முதிர்ந்து விடவில்லை. அவன் அந்த திசை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பதுதான் நாவலின் இறுதிப் பகுதியாக இருக்கிறது
அப்படியென்றால் இந்நாவலை என்னவென்று சொல்லலாம்
”நுண்ணுணர்வு கொண்டவர்களின் தனிமை” என்று வகைப்படுத்தலாம்.
ஆனந்த், சந்தியா, மத்தியாஸ், ’அமேந்தே என்கிற மார்செலா’’ என இந்நாவலின் கதா பாத்திரங்கள் அனைவருமே தனித்து அலைபவர்கள். தனக்கான சுயம் கொண்டவர்கள். இதில் ஆனந்த் மட்டுமே தனக்கான தேவை என்ன என்பதை அறிய முடியாத ஒரு தத்தளிப்பு கொண்டவனாக இருக்கிறான். பிற அனைவருக்கும் ஒரு உணர்ச்சிப் பிணைப்பும் அதன் வழி பெற்ற அனுபவமும் இருக்கின்றன. சந்தியா ஒரு கொடூரமான திருமண வாழ்க்கையில் இருந்து விலகி ஒரு புரிதலை அடைகிறாள். அவளுக்கு தான் போஷிக்கும் உயிர் போதுமானது. தன்னைப் பார்த்துக்கொள்ளும் உயிர் தேவையில்லை. இந்தியாவில் பெற்றோர்கள், உருகுவேயில் கிளிகள். அவளுக்கு அவற்றுடன் நிலைகொள்ளும் தெளிவு இருக்கிறது. அமந்தே என்னும் மார்செலாவுக்கும் தனது குழந்தைகள் உள்ளன. இத்தகைய உணர்ச்சிப் பிணைப்பு என்பது ஆனந்த் க்கு வாய்க்கவில்லை. பெற்றோர் இல்லை என்றான பின்னர் பெயருக்கு இருக்கும் மாமா. விடுதியிலும் கல்லூரியிலும் அவன் பெறும் ஆசிரியர்களையும் வழிகாட்டி என்று சொல்லமுடிகிறதே யன்றி அவர்களுடன் ஒரு இடைவெளி உள்ளது. அவனுக்கு ஏற்படும் பிணைப்பும் சந்தியாவுடந்தான் என்றாலும் அவன் அதில் ஏமாற்றம் அடைகிறான்.
ஒவ்வொருமுறை அவன் விரும்பி விழுகின்ற நினைவின் பள்ளத்தாக்கு என்றால் அது பெற்றோர்களால் வளர்க்கப் படாமல் அவன் இழந்த அரவணைப்பும் பாதுகாப்பு உணர்வும்தான். அவன் அதையே தனது வாழ்நாளில் தேடிக்கொண்டு இருக்கிறான். சொந்தம் என்று யாரும் இல்லாத ஒருவனுக்கு சொந்த ஊர் சொந்த நாடு என்று ஏதும் இல்லை. ஆகவே அவன் தனது அறிவுத்தளத்தில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கிற எண்ணமும் உணர்வுத்தளத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்கிற ஏக்கமும் கொண்டவனாக இருக்கிறான்.
மனிதர்கள் மீது ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். கடற்கரையில் சுற்றித் திரியும் கார்லோஸ் முதல் வீட்டு உரிமையாளர் டாக்டர் கிற்ஸ்டாஃப் வரை அனைவரிடமும் உரையாடுகிறான்.
அதுநாள் வரை தான் சந்தித்த சுற்றுவட்ட நண்பர்களை வைத்து, தன்னுடைய துயரம் தனித்துவமானது என்று எண்ணி இருந்தவனுடன் அவன் வீட்டு உரிமையாளர் டாக்டர் கிற்ஸ்டாஃப் உரையாடுவது நாவலின் ஒரு மைய அத்தியாயம். ஒருவகையில் அவனை உடைத்து விடுகிறார். அவருக்கு மறதி நோய் உள்ளாது. அவர் அந்தக் கணத்தில் வாழ்பவர். அந்த இடம் கவித்துவமானது. தன் கடந்த கால ஏக்கத்தை சுமந்து நிற்கும் ஒரு இளைஞன் அவன் முன்னால் தொன்னூறு வயதை அடைந்த ஒரு முதியவர், மறதி நோய்க்கு ஆட்பட்டு அந்தக் கணத்தில் வாழ்பவர், முதல் உலகப்போர் முதல் கண்டவர், அவர் சொல்கிறார், ”உன்னுடைய சிக்கல் என்னவோ ஸ்பெஷல்னு நினைச்சுக்காத, இது மாதிரி லட்சம் பேர் உண்டு. இதைவிட கொடுமையை அனுபவிப்பரும் பலர் உண்டு” என்று. தான் கூட்டத்தில் ஒருவன் இல்லை நான் தனித்துவமானவன் என்பதே ஒரு இறுமாப்புதான். அவர் அதை உடைத்து விடுகிறார். மேலும் குடும்பம் பற்றிய அவனுடைய அத்தனை முன் முடிவுகளையும் சிதறடிக்கிறார். அவனறியாமல் அவனுக்கு கிட்டிய ஒரு கீதோபதேசம் அதுதான் என்று வாசகர்கள் கருதும் வண்ணம் அந்த இடம் உணர்த்தப் படுகிறது. இப்பொழுது பார்த்த்தால் அவன் தன் தனிமை நுகர்வை விட்டுவிட்டு வெளியேறுவது அங்கிருந்து துவங்குகிறது என்று கூறலாம். அதை ஒரு காட்சியாக உணரமுடிகிறது,
உள்ளடக்கத்தைத் தாண்டி நாவலில் குறிப்பிட வேண்டிய விஷயங்கள் என்று இம்மூன்றைக் கூறலாம்
1. அதன் காட்சித் தன்மை. நாவலில் கடற்கரை வர்ணிக்கப் படுகிறது. ஒரு அருமையான விண்மீன்கள் காட்சிவருகிறது. அவற்றொடு நான் குறிப்பிட விரும்புவது மேற்சொன்ன காட்சித் தன்மை. கிற்ஸ்டோபருடனான் உரையாடல் அவனுக்கு என்ன உருவாக்கியது என்பதை நாவலில் சொல்லாமல் உணர்த்த முடிகிறது. நாவல் வடிவத்தின் ஒரு முக்கியத்துவம் இது.
ஒரு இடத்தில் அவன் தனது அலுவலகத்திற்கு அன்றக்கான தனது விடுப்பு செய்தியை அறிவிப்பதை சொல்லும்போது அவன் பொருள் வரியில் அதை தட்டச்சு செய்து அனுப்பினான் என்று குறிப்பிடுகிறார். அவன் உடல் நலமின்றி இருப்பதை சட்டென்று சொல்கிறது. அவன் அலுவலகத்தில் அவன் இடம் என்ன என்பதையும் அது சொல்கிறது. அங்கு உள்ள சுதந்திரத்தையும் சொல்கிறது
2. உவமைகள்.. சில உவமைகள் உரையாடல்களில் சட்டென்று விழுகின்றன. சந்தியாவிடம் தனது விருப்பத்தை தெரிவிக்கையில் அவள் அதை மறுத்து பேசி தன் விருப்பத்தைக் கூறூம்போது என்ன ifloop போட்டு பேசற என்பான்
3. அறிதல்- தன் கனவும் தன் எதார்த்தமும் வேறு வேறு என்று அவன் உணரும் இடம். குறிப்பாக மத்தியாஸ் அவனிடம் சொல்லுவார், தம்பி கனவுப் புணர்ச்சியில் நாற்றம் இருக்காது. ஆனால் யதார்த்தத்தில் அப்படியில்லை என்பார். கிட்டத்தட்ட ஆனந்த்ன் வாழ்நாள் கேள்வி அது. அதற்கான பதில் அவன் இறுதி அத்தியாயத்தில் வாய்விட்டு உளறும் வார்த்தைகள். அங்கு அவன் தன் வாய்விட்டு சொல்கிறான்.. ”பிரபஞ்சமே நான் உன்னை ஆரத் தழுவிக் கொள்கிறேன்” என்று.
தற்போது கஞ்சா இயல்பாகிவிட்டது போல அதுகுறித்த செய்திகள் வருகின்றன. பிற போதைப் பொருட்கள் போல கஞ்சா குடித்தவரை வாடையை வைத்து அறிய முடியவில்லை. உள்ளே தேக்கிக்கொண்டு வெளியே சாதரணமாய் இருப்பது அவர்களுக்குப் பழகியிருக்கிறது. அவர்களுக்கு என்று இல்லை இப்பொழுது பொதுவெளி நாகரீகம் என்பதே அதுதான் என்று ஆகிவிட்டது. இந்நாவல் அதை சொல்லுவதோடு நிற்கிறது.
உருகுவே நாட்டில் ரியோ தெ லா பிளாட்டா அட்லாண்டிக்கில் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ள மாண்டிவிடியோவின் தென்பகுதியான லா றாம்ப்லா என்கிற இடத்தில் நிகழ்கிற கதை. முதல் அத்தியாயம் கடலில் மூழ்கி நீந்தி பின் வெளியே வந்து விழுந்து ஈரம் காயும் வரை கரையில் கிடப்பவன் தன்னை அனாதையாக உணர்கிறான். இறுதி அத்தியாயமும் அத்தகையதே. இங்கே அவனது தனிமை நீங்கிவிடவில்லை.. அவனது நட்புக் குழுக்களுடான சந்திப்புகள் முன்போல நடக்கவில்லை. முன்பைவிடவும் தனிமையில்தான் இருக்கிறான். தன் கையில் இருக்கும் போதை பொட்டலத்தை கிழித்து அலைகளில் வீசிவிட்டான். ஆனால் அவன் பிரபஞ்சத்தைத் தழுவிக்கொள்ளும் அளவிற்கு மிதமிஞ்சிய உணர்ச்சிக் குவியலில் இருக்கிறான். இவற்றிற்கிடையிலான நிகழ்வுகளின் தொகுப்புதான் டாங்கோ. பிரபஞ்சமே நான் உன்னைத் தழுவிக் கொள்கிறேன் என்று அவன் வாய்விட்டு சொல்வது இங்கு ஒரு சிறுகதைக்கான முடிவாக இருக்கிறது
***
எழுத்தாளர் போப்பு
தென்னமெரிக்கா, நமக்கு குறிப்பாக ஓரளவு நவீன அரசியலிலும் கலாச்சாரப் பாரம்பரியத்திலும் ஈடுபாடுடையவர்களுக்கு நெருக்கவுணர்வைத் தரக்கூடியதாகும். டாங்கோ" நடனம் குறித்து அறிந்துள்ளோம். அதைத் தலைப்பாகக் கொண்டு குணா கந்தசாமி புதினம் ஒன்றைப் படைத்துள்ளார்.
பக்களவில், கால, நிலவெளியில் குறைவான பகுதியை எடுத்துக் கொண்டு பேசுகிறதென்றாலும் முழுமையான வாழ்வனுபத்தை உள்ளடக்கியுள்ளது. அர்ஜெண்டினா - உருகுவே இருநாடுகளின் எல்லைப் புற நகரான மாண்டிவீடியோவில் தகவல் நுட்ப நிறுவனத்தில் இடைநிலை அதிகாரியாகப் பணிபுரியும் தமிழக இளைஞனைப் பற்றிய அவனது உறவேக்கத்தை, ஏமாற்றத்தை அதன் பொருட்டு லாகிரியில் மூழ்கி உடலை வதைத்துக் கொள்ளவதை, அதனின்று விடுபட முயல்வதை நயமுடன் விரித்துரைக்கும் படைப்பு இது.
ஆனந்த், நினைவு பதியும் வயதிற்கு முன்பே தாய் தந்தையரை இழந்து தாய்மாமன் உறவில் வளர்க்கப்பட்டாலும் அவரது வறுமைப் பின்புலத்தால் கிட்டத்தட்ட அனாதையாகவே வளர்கிறான். சிரத்தை மிகு ஆசிரியர்கள், பொருள் வளமிக்க நண்பர்களின் கைத்தாங்கலோடும் தன் முனைப்பாலும் உழைப்பாலும் படித்து சொல்லிக் கொள்ளும்படியான வேலையில் அமர்கிறான்.
ஆனந்தின் இந்தப் பின்னணி தான் அவனது தாய்மொழியில் அவ்வப்போதாவது உரையாட வாய்க்காத முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரச் சூழலில் தொலைதூர நாட்டில் வசிக்கும் போதும் புலம்பெயர் நினைவேக்கம் ஏதுமின்றி தன்னோடு உறவு கொள்ள வாய்ப்புள்ள மனிதர்களுடன் நெருக்கம் கொள்ள அவனால் தன்னியல்பாக முடிகிறது.
சுமார் இரண்டாண்டு கால புனைவுவெளியில் ஒருமுறை கூட ஊரைப்பற்றிய ஏக்கவுணர்வு அவனுள் எழுவதே இல்லை. வாழும் சூழலில் உள்ள மனிதர்களோடு தன்னோடு கரைத்துக் கொள்கிறான். இன்றைய உலக மயச்சூழலில் தன்னடையாளத்தை இழப்பதும், கலாச்சார மாற்றங்களும் தவிர்க்க முடியாததே. ஆனால் அதனை ஏற்க மறுக்கும் மூடுண்ட போலித்தனமான இந்திய மனம். நம்மிடம் சாதியும், மதமும் இவ்வளவு அழுத்தமான செல்வாக்கு செலுத்துவதற்குக் காரணம் இந்தியக் கலாச்சாரம் குறித்த பெருமை உணர்வே.
இப்பண்பு முற்றிலுமாக உடைக்கப்பட்டுள்ளது இந்நாவலில். சர்வ இயல்பான பாலுறவு, நயமான கண்ணியமான பழகும் பண்புடைய விலைமாதர்கள், உதிரிப் பணியாளர்கள். இரந்து பெறுகிற நிலையிலும் கூட கண்ணியமான மொழிதல் ஆகியவற்றின் ஊடாக புதிய மனிதனுக்குரிய இலக்கணக்களை மிகச்சரியாக நிறுவுகிறார்.
2 ஆம் பாகத்தில் ஆனந்திற்கு பொருத்தமாக அவனுடனே வேலைக்கு வந்து சேரும் தமிழா தெலுங்கா என்று பிரித்தறிய முடியாத சந்தியாவுடன் முதலில் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாகவும் வாழ்விணையாகவும் மலர முடியாத கட்டத்தில் இருவருக்கும் மனவிலக்கமும் முரணும் முற்றுகிறது. ஆனால் அந்நிலையிலும் மனிதப் பண்பு கெடாது இருவரிடையிலும் நிகழும் கொடுக்கல் வாங்கல் உரையாடல் உதவிக்கொள்ளுதல் அனைத்தும் நடந்தேறுகிறது. சிலவற்றைப் பேசியும், சிலவற்றைப் பேசாமலும் உறவு நேர்த்தியாக கையாளப்படுகிறது.
குணாவின் சமூக உலகியல் பார்வை கம்யூனிசம், தமிழ்த்தேசியம், பெண்ணியம், காந்திய நெறிமுறைகள், தன்னொழுக்கம், உடல் பேணல், லௌகீக ஈடுபாடு, பணம் குறித்த மதிப்பீடு, போதையில் கரைதல், ஆண்பெண் உறவு எல்லை என அனைத்தையும் மொழிதல், உரையாடல், நிகழ்வுகள் என சாத்தியமான பல்வேறு வகைகளிலும் திகட்டாத வகையில் சாத்தியமான இடங்களில் சொல்லிச் செல்கிறார். அதற்கென பொருத்தமான பாத்திரங்களாக ஆனந்தின் வீட்டு உரிமையாளர் டாக்டர் கிறிஸ்டப், எழுத்தாளர் மத்தியாஸ், அலுவலக மேலதிகாரி எம்.கே போன்ற பலர் வாய்த்திருந்தாலும் அவர்களை மிகைப்பாத்திரங்களாக மாற்றாமல் வாசகனுக்கு நெருக்கமானவர்களாகவே படைத்துள்ளார் குணா.
நவீன வாழ்க்கைச் சுதந்திரம், கல்வி, வேலை வாய்ப்பு, பொருள் கையாளல், பணியிடத்து ஆளுமை ஆகியவற்றால் பெண்ணானவள், அவளது மனம் முற்றிலும் புதியவொன்றாக உருப்பெற்றுள்ளது. அவ்வுருமாற்றத்திற்கு உரிய பின்னணி இந்நாவலில் வாசகன் ஒப்புக் கொள்ளும் விதமாக நிறுவப்பட்டுள்ளது. குடும்பம் எனும் நிறுவனத்தின் முதன்மை இடத்தைப் பெறுபவள் பெண்தான். ஆனால் இன்றைய நவீன பெண் அதிலிருந்து விலக்கம் பெற்றுக் கொண்டு வருகிறாள். காரணம் ஆண் இன்னும் நவீன மயப்படாமல் இருப்பது தான்.
தனக்கொரு குழந்தை வேண்டாம் மணவுறவு வேண்டாம் என்ற எண்ணவோட்டத்தில் எவ்வித தயக்கமோ, வெறுப்போ இன்றி தன்னில் தங்கிய கருவைக் களைக்கிறாள் சந்தியா. நட்பிலும் கூடுதலான உறவு கொள்ள விரும்பும் ஆனந்தை விட்டு விலகிச் சொல்கிறாள். அதே அலுவலகத்தில் அவனை விட்டு விலகி இருக்க முடியும் என்றாலும் அவனில் இருந்து தன்னை அறுத்துக் கொள்கிறாள்.
ஆனால் அதே சந்தியா தான் எவ்விதத் தடுமாற்றமும் இன்றி அவனோடு பாலுறவும் கொள்கிறாள். பெண்ணுக்குப் பாலுறவு குறித்த எந்த விதமான அதீத மன இறுக்கமும் எப்போதும் இல்லை. அப்படி இருப்பதான படிமமே ஆண்மய உலகம் இதுவரை கட்டி எழுப்பி வைத்திருந்தது. இன்றைய பெண்ணுக்கான வெளி தன்னை நிறுவத் துணிந்து விட்டது. இது இந்நாவலில் பதற்றமில்லாமல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
நவீன எழுத்து என்பது மொழியைத் திருகித் திருகிச் சொல்வதில் இல்லை. மனிதன் மேற்கொள்ள வேண்டிய மேல்நோக்கிய பயணத்தை, மனிதப்பண்பு கெடாமல் புதிய வாழ்வினுள் தன்னைப் பொருத்திக் கொள்ளும் சாத்தியத்தைப் புனைவின் வழியாக உருவாக்கித் தருவதில் இருக்கிறது.
ஆணும் பெண்ணும் காதலுணர்வில் கரைந்தாடுவதே பாரம்பரிய டாங்கோ. அது எப்போதாவது தான் நிகழும். மற்றபடி ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த வாழ்க்கையில் என்னென்னவோ நிறைய இருக்கிறது. அதைத்தான் நிகழ்த்திக் காட்டுகிறார் குணா கந்தசாமி.
***
டாங்கோ -சுயத்தைக் கண்டடைதலின் பயணம் - தாமரைபாரதி
தமிழ் நிலப்பரப்புக்கு வெளியே இந்திய மொழிகளில் அல்லது அயல்நாடுகளின் மொழிகளில் எழுதப்படும் புனைவுப்பிரதிகளைத் தேர்ந்த மொழிபெயர்ப்புகள் வாயிலாகத் தமிழில் வாசிக்கிறோம் .வேற்று நாட்டின் நிலப்பரப்பின் புவியியல் கூறுகளான மலைகள், கடல்கள், ஆறுகள், நகரங்கள், தெருக்கள், மற்றும் பண்பாட்டுக் கூறுகளான மக்கள் வாழ்வு ,பொழுதுபோக்கு,கேளிக்கை ஆகியன பற்றி அறியும் சுவாரஸ்யத்தை மொழிபெயர்ப்பின் வாயிலாக நாம் அறிந்து கொள்வது ஒரு வகை.
அதேபோல அயல் நாடுகளில் முற்றிலுமாகப் புலம்பெயர்ந்து தன் தாய்நாட்டின் நினைவுகளோடு தன் தாய்மொழியில் புனைவிலக்கியத்தில் வெளிப்படுவது மற்றொரு வகை.
தற்காலிகமாக அயல்நாட்டில் பொருளீட்டும் பொருட்டு வாழ்கிறவர்களின் வாழ்கையில் நிகழும் அனுபவங்களைப் புனைவில் கொண்டுவருவது வேறு வகை .இந்த மூன்றாவது வகை புனைவுகளைத் தமிழில் விரல்விட்டு எண்ணலாம் .ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’,’கடலுக்கு அப்பால்’,ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ‘மா-னீ’ ,பாவை சந்திரனின் ‘நல்ல நிலம் ‘ பிரியா விஜயராகவனின் ‘அற்றவைகளால் நிரம்பியவள்’ ரமா சுரேஷின் ‘அம்பரம்’,இன்பா சுப்ரமணியத்தின் ‘வையாசி 19’ கார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘தரூக் ‘ போன்ற நாவல்களை இவ்வகைமையில் அடக்கலாம் .இந்த வகைமையின் புதிய வரவாக குணா கந்தசாமியின் ‘டாங்கோ’நாவலைப் பார்க்கிறேன் .
மேற்சொன்ன நாவல்களெல்லாம் ஆசிய ஆப்பிரிக்க ஐரோப்பிய ஆஸ்திரேலிய நாடுகளைக் கதைக்களமாகப் பெற்றிருக்கின்றன.டாங்கோ மட்டும் லத்தீன் அமெரிக்காவைக் களமாகக் கொண்டுள்ளது.கதை சொல்லும் முறையில் தனித்துவமிக்க கூறுகளைக் கொண்ட நிலப்பரப்பில் கதை நிகழ்வதாக எழுதப்பட்ட இந்த நாவலைத் தனித்துவமாக அணுக நினைத்தேன் .
பொருளாதார நம்பகத்தன்மை மிகுந்துள்ள ஒருவனது வாழ்க்கையில் சர்வதேச கதாபாத்திரங்கள் மற்றும் சூழல்களைப் பற்றி எழுதும் போது, கதாசிரியர் இந்தக் கூறுகளை உண்மையாக அனுபவத்தில் ஆராய்ந்து சித்தரிப்பது சிறப்பாகும். இதில் பண்பாட்டு நுணுக்கங்கள், சமூக இயக்கவியல் மற்றும் உள்ளூர்ப் பழக்கவழக்கங்களைப் புரிந்துகொள்வதும் அடங்கும்.குணா கந்தசாமி இதை நன்குணர்ந்து எழுதியுள்ளார் .
குணா கந்தசாமியின் புலியின் கோடுகள் பயணக்கட்டுரையை ஏற்கனவே படித்திருந்ததால் நாவலுக்குள் எளிதாகப் பிரவேசிக்க முடிந்தது .இடங்கள் இடங்களாகவே இருக்கின்றன .புனைவில் அவை வேருரு கொண்டு வசீகரம் செய்கின்றன.
தனிமையும் நிராதரவும் பால்யத்திலிருந்தே வாய்க்கப்பட்ட ஒருவன் இரு வேறு கலாச்சார சூழல்களில் வாழ நேரும் வாழ்க்கையோட்டம்தான் கதை.விதிக்கப்பட்ட தனிமையில் வறுமையையும், விதித்துக்கொண்ட தனிமையில் செழுமையையும் கொண்ட ஒருவன் லாகிரி வஸ்துகளை நாடி மகிழ்ச்சியில் திளைப்பது இயல்பே .ஆனந்த் லாகிரியைத் தனது தனிமைக்கான துணையாகக் கொள்கிறான் .
.கதையின் முதல் பாகம் இப்படி ஆரம்பிக்கிறது.”மகிழ்ச்சியான காட்சிகள் அரங்கேறும் மேடையாகவே றாம்ப்லாவைக் கண்டான்”.எனக்கு டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவல்தான் ஞாபகம் வந்தது.அந்த நாவலும் மகிழ்ச்சியான குடும்பங்கள் என்றுதான் ஆரம்பிக்கும்.டாங்கோவிலும் அன்னா கரினினாவின் தொடக்க வரிகளைப் பக்கம் 135 ல் கண்ட போது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
எழுத்தாளர் வெவ்வேறு நாடுகளில் பயணம் செய்திருந்தால் அல்லது வாழ்ந்திருந்தால், அவர்கள் தங்கள் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து அதிக உண்மையான மற்றும் தொடர்புடைய கதாபாத்திரங்கள் மற்றும் சூழல்களை உருவாக்க முடியும்.
அத்தகய பாத்திர மற்றும் சூழல் உருவாக்கங்களை நாவலில் காண முடிகிறது.
உலகமயமாக்கலின் தீவிர முடுக்கிக் காலத்தில் பல வாசகர்கள் எல்லைகளைத் தாண்டிய கதைகளை ரசிக்கிறார்கள், எனவே சர்வதேச கூறுகளை இணைப்பது படைப்பின் கவர்ச்சியை விரிவுபடுத்தும்.சர்வதேச கூறுகளை குணா கந்தசாமி சுவாரஸ்யமாக விரிவுபடுத்துகிறார்.லத்தீன் அமெரிக்க நிலத்தில் பல்வேறு இடங்களுக்குப் பயணமாதல் சந்தியாவின் யு.எஸ் வாழ்க்கை.ரெமோன்,சலோமி ,தியாகோ வெரோனிகா ,மார்த்தா,அலெக்சாந்த்ரா,சீக்காக்கள் போன்ற பாத்திரங்கள் சர்வதேச கூறுகளில் வெளிப்படுகின்றன.
நாவலில் கிறிஸ்டாப் ,மத்தியாஸ் போன்ற பாத்திர மாந்தர்கள் ஆணின் வாழ்க்கையில் பெண்ணின் அவசியம் குறித்துத் தத்துவார்த்த ரீதியில் பேசுகிறார்கள்.சமூகம் குறித்து எம்.கே யின் உரையாடல் நவீன மனிதனுக்கானது.குறிப்பாகக் கிறிஸ்டாஃப் கதாபாத்திரம் தனிமனித துயரம் பற்றி ,பெண்ணை அறிதல் பற்றி,பெண்ணின் பரிமாணங்களைப் புரிந்துகொள்ளுதல் பற்றி பேசும் இடங்கள் சுவாரஸ்யமானவை.
காமத்தின் சரடாலும் சங்கிலியாலும்,துணைக்கு ஏங்கும் மனதாலும் அலைக்கழிக்கப்படும் ஆனந்த் சந்திக்கும் பெரும்பாலான நிகழ்வுகளில் பெண்ணே வந்து போகிறாள்.
ஆனந்த் வாழ்க்கையில் தீபாவும், சந்தியாவும், இவர்களுக்கிடையில் சந்திக்க நேரும் விலைமாதுவின் போகிக்க இயலா உடலும் சந்தியாவுக்குப் பிறகு போகிக்கும் சீக்காவும் தற்காலிகத்தின் சாயைகளே .
ஆனந்த் -சந்தியாவின் உறவைக் காதலென நான் கொள்ளவில்லை.ஒருவருக்கொருவர் தேவையான தூரம் வரை துணையாக வருவதற்கான வாய்ப்புகளைக் காலம் வழங்கினாலும்,அதன் எல்லைவரைக்கோட்டைத் தீர்மானிக்கும் காலநொடியில் புரிதலுடன் சந்தியா எடுக்கும் முடிவும் ,அதற்கு ஆனந்த் எதிர்வினையாற்றும் நிலையும் பரஸ்பர புரிதலுக்கு இட்டுச்செல்கிறது .
.
இறுக்கமும் நெகிழ்வுத்தன்மையும் கூடிய எழுத்து நடை குணா கந்தசாமியினுடையது .
நெகிழ்வுத்தன்மை கொண்ட இடங்களைக் கடக்கும் வாசகனொருவன் அதன் சாதாரணத்தன்மையை எளிதாகக் கருதுவது போலவே இறுக்கம் கூடிவரும் இடங்களைக் கடக்கும் போது எழுத்துமுறையின் கறார்த்தன்மையை உள்வாங்கி மீள்வாசிப்புக்கு நகரமுடியும் .அத்தகய இருமய எழுத்து முறையை அவரே பிரதியில் கொண்டு வந்திருக்கிறார் .
ஓர் எழுத்தாளர் தமது படைப்புகளில் சர்வதேச கதாபாத்திரங்கள் மற்றும் சூழல்களைச் சேர்ப்பதைத் தடுக்கும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை, கதாசிரியருக்குக் கதை சொல்லலில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.இந்தக் கட்டுப்பாடின்மை கதைசொல்லலை வளப்படுத்துகிறது.
வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் பிடியில் அலைவுறும் மனத்தின் வெவேறு நிலைகளின் வழியே ஆனந்தின் தன்னுணர்வு ,தன்னைத் தான் அறிதலுக்கான தேடல் தொடர்கிறது.ஒவ்வொரு உயிரியும் துனையைத் தேடித்தவித்துத் துணை வந்த பிறகு கூடிக் கூலாவி பிறகொரு கட்டத்தில் விடுதலையுணர்வைத் தேடுகிறது.சந்தியாவும் ஆனந்த்தும் விடுதலையைத் தேடுபவர்கள்.சந்தியாவின் பாத்திரம் முழுக்க முழுக்க கதாசிரியர் சொல்வதுபோல யதார்த்தத்தில் கால் பாவியது.பாலியல் தேர்வும் சுதந்திரமும் விடுதலையும் அவளது தேடல்கள்.அந்தத் தேடல்களே அவளுக்கான தளையாக மாறும் சூழலில் விலங்காக மாறும் தருணத்திலும்,இக்கட்டான சூழலிலும் தெளிவான முடிவை எடுக்க வழிவகை செய்கிறது.அவளது முடிவுக்கு உந்தியவை அவள் சந்தித்த வாழ்வின் அன்றாடங்களே.பயனளவையாளராகத் (Pragmatist) தெரியும் சந்தியாவின் பாத்திரம் மனதில் நிற்கிறது.
தகத்தகாயம்,பொன்னொளி மார்பினள்,பொற்கணம், கால நதி போன்ற சொற்கள் வாசிப்பிற்குப்பிறகும் நாவிலாடுகின்றன.பாத்திரங்களின் மனவோட்டம் உரையாடல்களாக பல இடங்களில் வந்து வரலாறு,சமுகவியல்,தத்துவம்,உலகமயமாக்கல்,பெண்ணியம் போன்ற துறைகளை தொட்டுப் போகிறது.
பழங்காலப் பொருட்கள் உருவகங்களாகக் கதை சொல்கின்றன.மார்பளவு காந்தியும் கதை சொல்கிறார்,நடராஜர் சிலை ,சைவ சித்தாந்தம் பற்றிச் சொல்லாமல் சொல்கிறது..
இருமய எழுத்து என ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.நாவலின் விவரனைகள் சில இடங்களில் துருத்திக்கொண்டு இருப்பதாக உணரலாம்.சந்தியாவின் முடிவுக்குப் பிறகு நாவல் முடிந்துவிட்டதாக,இப்போது முடிந்துவிடும்,இப்போது முடிந்துவிட்டது என எண்ணுகையில் நாவல் மேலும் நீள்வது, வலிந்து நீட்டிக்கப்பட்டதாகத் தெரிகிறது.பெரும்பாலான நவீன எழுத்தாளர்களைப் போலவே குணா கந்தசாமியும் ‘அருகில்’ எனும் பொருளில் அருகாமை என்னும் சொல்லைச் சில இடங்களில் பயன்படுத்துகிறார்,
நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளல் என்பது கசப்பு மிகுந்த அனுபவங்களைக் கடந்து போக உதவக்கூடிய மாமருந்து.ஆனந்தின் கசப்புகளுக்கு மருந்தாக (லாகிரியும்)போதையும் பெண்ணுடலும் இருந்தாலும் இறுதியில் அவன் சரணடைவது இப்பிரபஞ்சத்திடம்தான்,
தென் அமெரிக்கக் கண்டத்தின் உருகுவே நாட்டில்,ரியோ தெ பிளாட்டா நதியும் அட்லாண்டிக் சமுத்திரமும்,சந்திக்கும் 13 கிலோ மீட்டர் கடற்கரையை ஒட்டிய பகுதியான றாம்ப்லா தான் கதையின் முக்கிய இடக் கதாபாத்திரம்.வாசிக்கும் போது வாசகன் அங்கு போடப்பட்டிருக்கும் திண்ணை பெஞ்சுகளில் அமர்வது நிச்சயம்.
கொஞ்சம் பிசகினாலும் ஒரு தனிமனித வரலாற்றுத் துணுக்குகளைக்(Anecdote) கொண்ட அபுனைவுப் பிரதியாகவோ,பயணக்கட்டுரையாகவோ(Travelogue) மாறிவிடக் கூடிய தன்மை கொண்ட இடங்கள் பல உண்டு நாவலில் .ஆனால் அவற்றை மொழிச் செறிவும் தத்துவார்த்த விசார உரையாடலும் கொண்டு புனைவின் வசீகரமுடைய நாவலாக டாங்கோவை உருமாற்றியிருக்கிறார் குணா கந்தசாமி.
( நன்றி : மணல் வீடு)
***
கோமளா
பொருண்மை வயமானதாகவும் நுகர்வில் இன்பம் அடையக் கூடியதாகவும் புறம் இருக்கையில் அகத்தில் சூனியத்தன்மை எங்கிருந்து கவிழ்கிறது? இந்த முரணை புரிந்து சிக்கலில் இருந்து வெளியேறும் வழி தெரியவில்லை. ஊசலாட்டங்களையும் அபத்தங்களையும் மனதின் கோளாறுகளையும் கண்காணிக்கும் தர்க்கம் மிகுந்த விழிப்புணர்வொன்று தனக்குள் எப்போதும் இயங்குவதால் இந்த சிக்கல் நிச்சயம் மன நோயாக இருக்க வாய்ப்பில்லை.
- டாங்கோ
றாம்ப்லா கடற்கரையும், ரியோ தெ லோ பிளாட்டா ஆற்றினையும் ஒட்டிய. தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான உருகுவேவின் மாண்டிவீடியோ நகரம்தான் கதைக்களம்.கூடுமானவரை தன் எழுத்தின் வழியாக நிலப்பரப்பையும், மக்களின் வாழ்வியலையும், அவர்களின் பழக்கவழக்கங்களையும் காட்சிப்படுத்தியது அழகு.மையக்கதை அதைவிட அழகானபகுதி.
வாழ்க்கையை அதன் வசத்தில் தேடித்தேடி கட்டமைத்து கொண்டவனின் அகத்தை ஆறுதல் படுத்த யார் வேண்டுமானாலும் வரலாம்.அவர்களை அனுசரித்தும், அனுசரித்தும் விலகி சென்றால் அவர்களுக்கு வழிவிட்டும், தனக்குத்தானே ஆற்றுப்படுத்தியும் இருப்பை இயற்கையிடம் ஒப்படைப்பத்தும் வாழ்பவன் தான் ஹீரோ " ஆனந்த்"
இன்றைய சமகால போதாமைகளை, ஆண் - பெண் இருவருக்கிடையேயான எதிர்பார்ப்புகளை, நவீனவாழ்வின் வழியாக வெளிப்படுத்திருக்கிறது "டாங்கோ"
கடல் எல்லோருக்குமே வியப்பானது.அதை தன்னுடைய எழுத்துகளில் அட்டகாசமாக, இதைவிட கடலை இனி வரிகளால் அதன் ஆழத்தையும், அலைகளையும் காட்சிப்படுத்திவிட முடியுமா? இத்தனை தூரம் ஒருவனால் கடலை ரசிக்க முடியுமா என்றும் ஆச்சரியமாக உள்ளது
தேடியது அவ்வளவு எளிதில் கிடைக்காது ,ஆனாலும் பற்றிக்கொண்டு வாழ வேண்டுமே என உணரும் பட்சத்தில் இயற்கையை தழுவிக் கொள்ளும் "ஆனந்த்" இனி என் நினைவில் நிற்கும் மனிதனாகிப் போனான்.
டாங்கோ நல்லதொரு படைப்பு..வாழ்த்துகள் எழுத்தாளருக்கு
***
மஞ்சுநாத்
டாங்கோ தனிப்பட்ட ஒருவரின் டயரியை வாசிக்கும் ஆர்வத்துடன் சலிப்பையும் பிரதிபலிக்கிறது. அயல் மண்ணுக்கு மேலேயிருப்பது ஒரே வானம், அதாவது கதையின் களம் வேறாகயிருந்தாலும் ஆனந்த் வாழ்வோட்டத்தின் சாரம் மாற்றமில்லாத தற்கால நிகழ்வோட்டத்தின் பொதுப்பண்புகளில் ஒன்றியிருக்கிறது.
அவன் இழந்ததின் வலியை மேலோட்டமாக பாவிப்பதால் தேவையின் தெளிவின்மையைக் கொண்டவன். கல்லூரி பருவத்தில் முதல் பியர் சுவைப்பின்போது லாகிரிதான் வாழ்க்கைக்குச் சுவை கூட்டும் உப்பு என்கிற தெளிவு தாராள பொருளாதாரத்திற்கு பிறகு நலிவடைந்து விடுகிறது. குடியும் கஞ்சா இழுப்பும் ஆதார சுருதியாக மாறி விடுகிறது. மிதமிஞ்சிய உப்பு வாழ்க்கையின் சுவையைக் கெடுத்து விடுகிறது.
ஆனந்த் குடியிருக்கும் அபார்ட்மென்ட் உரிமையாளரான 96 வயது டாக்டருடன் நடக்கும் உரையாடல் நுட்பமான சங்கதிகள் கொண்டது. கிழக்கு மேற்கு ஒன்றும் புள்ளியையும் அது விலகி நிற்கும் கோடும் குணா கந்தசாமி தன்னுடைய வலுவான மொழி வளத்தால் சிறப்பாக வரையறுத்திருப்பது அழகு.
புரிதல் என்பது அனுபவத்தின் நீட்சியால் மட்டுமே அடர்த்தியாகும். போதை வஸ்துவுடனான உறவில் அனுபவம் முற்று பெறுவதற்கு முன்பாகவே அதன் வீரியம் தளர்வடைந்து விடும்.
ஆனந்த் வாழ்வின் முத்தொடர் வரிசையில் குடி - கஞ்சா - பிறகு வரக்கூடிய விபச்சாரிகளுடனான களிப்பு மட்டும் நிரப்பப்படாமல் தாமதமாவற்கு காரணம் முன்பின் அமைந்த / அமைத்துகொண்ட நிகழ்வுகள் யாவும் அவமானத்தை துப்புவதலா? ஆனால் குணா கந்தசாமி அதற்கான உளவியல் பின்புலங்களைத் வலுவானதாகக் காட்டவில்லை. ஒருவேளை அவனுடைய இறுக்கம் இயல்பென அர்த்தமாக்கிக் கொள்வதற்கான நிகழ்வுகளையாவது சேர்த்திருக்கலாம். தட்டையான பரப்பில் விவரிப்பும் விவரனையுமாக நகரும் நாவல் ஆனந்த்தின் நிகழ்வாழ்வு சலிப்பை வாசகன் மீதும் கடத்துகிறது.
நாவல் கச்சிதமாக எடிட் செய்யப்பட்டிருக்கும் விதம் அருமை, அழுத்தமான வார்த்தை பிரயோகமும் அழகு. என்றாலும் முதல் பகுதியின் விசாரம் இரண்டாவது பகுதியில் இல்லை. சந்தியாவின் வெளி ஆனந்த்தின் உள்ளடக்கத்தில் வைத்து பாரப்பதால் கே.பாலச்சந்தரின் திரையாக்கத்தின் நகர்வாக முடிந்து விடுகிறது. இது 2024இல் புதுமையான போக்கிற்கான வரிசையிலிருந்து பின்னகர்வு.
***
தேஜு சிவன்
ஒரு புத்தகத்தைப் பார்த்தவுடன் அதன் தலைப்பிற்காக வாங்குவது என்பது மிகவும் அரிதான ஒன்று. Love at first sight. அப்படித்தான் டாங்கோ நாவல் வாங்கப்பட்டது. டாங்கோ என்பது ஆண், பெண் இருவரும் ஆடும் ஜோடி நடனம். இது அர்ஜெண்டினா, உருகுவே நாடுகளின் பிரபலமான நடனம்.
“மகிழ்ச்சியான காட்சிகள் அரங்கேறும் மேடையாகவே றாம்ப்லாவைக் கண்டான்” என்ற நாவலின் முதல் வரிக்கும், ”பிரபஞ்சமே உன்னை ஆரத்தழுவிக் கொள்கிறேன்” என்ற கடைசி வரிக்கும் இடைபட்ட 184 பக்கங்களில் ஒரு மகத்தான நாவலை குணா கந்தசாமி எழுதியிருக்கிறார் என்று சொல்வது இந்த நாவலுக்கு வாசகனாக நான் கொடுக்கும் ஒரு Royal Salute .
இன்றைய நாவல் என்பது நவீன அடுக்கங்கள் போல் உயரமாகவும், TMT முறுக்குக் கம்பிகள் போல் திருகிய நடையில் இருக்க வேண்டும் என்ற புதிய சட்டதிட்டங்களை புறங்கையில் தள்ளிவிட்டு ஒரு பறவையின் இறகு போல் மிகவும் லேசாக, அதே நேரத்தில் அதன் அழகும், நேர்த்தியும் குறையாமல் உயரேப் பறக்கிறது “டாங்கோ”.
நினைவு தெரியும் முன்பே தாயையும், தந்தையையும் இழந்த, மாமாவால் வெறுமென வளர்க்கப்பட்டு, ஆசிரம இல்லத்தில் தங்கி தன்னை தகவமைத்துக் கொண்ட ஆனந்த் என்கிற ஒரு தனியனின் கதை மட்டுமல்ல. அவனின் மனசஞ்சலங்கள், ஆர்வங்கள், ஆர்வமின்மைகள், லாகிரி, காதல், காமம் என அனைத்தையும் மிக அழகாக நேர்த்தியாக blend செய்து கவனமாக நெய்யப்பட்ட ஓர் அழகிய தூய்மையான கம்பளம் என்று சொல்லலாம். தூய்மைக்கே உரிய மென்சோகமும், துயரமும் இதன் உள்ளுறை தன்மைகள்.
நாவல் இரண்டு பகுதிகளகப் பிரிக்கப்பட்டுள்ளன. கதை நாயகி எனச் சொல்லத்தகுந்த சந்தியாவுக்கு முன், சந்தியாவுடன் என ஆனந்தின் வாழ்வியல் சம்பவங்களுக்காகத்தான் இந்த இரண்டு பாகங்கள்.
குண கந்தசாமியின் உரைநடையில் ஒரு கவிஞனும், தத்துவவாதியும் வந்து கொண்டேயிருக்கிறார்கள். ஆமாம். எங்கும் தனிமையைச் சொல்ல கவிதையும், தத்துவமும் தான் முன்வரும் இயல்புடையவன.
உருகுவே நாட்டின் மாண்டிவீடியோவின் உள்விளிம்பில் அட்லாண்டிக் சமுத்திரமும், ரியோ தெ லா பிளாட்டா நதியும் ஒன்று கலக்கும் முகத்துவாரத்தின் கரையில் நீண்டிருக்கும் றாம்ப்லாவில் அவன் வசிக்கும் பொசிட்டோஸ் பகுதியில் கணினி விசைப்பலகையில் இருக்கும் இடது அடைப்புக்குறியின் வடிவத்தை ஒத்திருந்தது கடற்கரை என்ற வரிகளின் மூலம் கதைகளனின் அழகியலை அறிய முடிகிறது.
ஆனந்த் நாவலின் வெளி எங்கும் தந்தைமையைத் தேடியலைகிறான். ஆசிரமப் பள்ளியின் தமிழாசிரியர் ராகவன், கல்லூரி வார்டன் ஆர்.ஜெ.எஸ், அலுவலக ஆசான் எம்.கே, அவன் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளரான டாக்டர், ஆளரவமற்ற கடற்கரையில் எதேச்சையாக சந்தித்த மத்தியாஸ் எல்லோரிடமும் கிடைக்கும் பிரியத்தின் மூலம் தந்தைமையை உணர்கிறான்.
வெரோனிக்கா, சலோமி, ரொமோன் என நண்பர்கள் வந்து விலகிப் போகிறார்கள். அலுவல், போதையென இறுகிக்கிடக்கும் அவன் வாழ்வெனும் பாறையில் சந்தியா ஓர் அழகிய உளியென சில கல்வெட்டுக்களை இனிக்க, இனிக்க , பின் வலிக்க, வலிக்க பொறித்துப் போகிறாள்.
நாவலின் வரிகள் மழையென என் மீது பொழிந்தாலும் அதில் சில தூறல்களை மட்டும் இங்கே குறிப்பிடுவதென்பது ஆசிரியருக்கு நான் செய்யும் பதில் மரியாதை எனக் கொள்கிறேன்.
அவனுக்குள் ஆல்கஹாலின் கிடார் இசை தடதடத்து ஒலிக்கும்.
கடலின் மீது நிலவு எழும் காட்சியை வாழ்க்கையில் முதல் முறையாக கண்டான். தகத்தகாயம். பாலெனச் சுரக்கும் தகத்ததாயம். கண்களின் மீது படரும் தகத்தாயம். காமத்தையும், குருதியையும் கண்ட தகத்ததாயம்.
நினைவு தெரியும் முன்பே அம்மாவும், அப்பாவும் இறந்து விட்டார்கள்> ஒற்றை வரியில் முன்கதை சுருங்கி விட்டது. ஆனால் ஒற்றை வரியில் சொல்லக்கூடிய எதன் ஒற்றிற்குள்ளும் நீண்ட கதை உள்ளுறைந்திருக்கிறது.
வாழ்வில் அன்பையோ, பிரியத்தையோ அல்லது துயரத்தையோ காட்டும் காட்சிகள் ஏதுமில்லை. தேவைகள் எளிய விதத்தில் பூர்த்தி செய்யப்பட்டு முக்கியத்துவமற்ற நீட்சியாக வளர்க்கப்பட்டான்.
அறிவு என்பது முயன்றால் எல்லோரும் சம்பாதித்துவிடக் கூடிய சொத்து.
நீ உனக்குள் இரண்டு மனிதனாக மாறிக்கொள். ஒருவன் இந்த வாழ்க்கைக் கடலை நீந்திக் கடக்க வேண்டிய லெளகீக மனிதன். அந்த லெளகீக மனிதனை ஆற்றுப்படுத்தி ஆன்மாவில் அழிக்க முடியாத கறைகள் படிவதைத் தடுத்து மட்டுறுத்தவேண்டியவன் உன்னுள் இருக்கும் இன்னொரு தூயவன்.
ஒரு மூன்றாம் உலகநாடு என்கிற எண்ணத்துடன் உருகுவேக்கு வந்திருந்தேன். தென்னமெரிக்காவின் சுவிட்சர்லாந்து என்ற பட்டத்தை இந்த நாடு ஒருகாலத்தில் தாங்கியிருக்கின்றது.
சொந்த வீடென்று ஒன்றை உணர வாய்ப்பில்லாதவனுக்கு அதன் நீட்சியாக சொந்த ஊர், சொந்த நாடு என்பதிலும் பிடிப்பற்ற தன்மையே இருந்தது. தான் ஒரு உலக மனிதனாக முதிர வேண்டும் என்று நினைப்பான்.
நிலத்தைக் குறித்தும், இடங்களைக் குறித்தும் எப்போதுமே பெரிய கற்பனைவாதம் இருந்ததில்லை. அப்படியான கற்பனாவாதம் நிலப்பிரபுத்துவ மனநிலையின் எச்சம் என்று அவனுடைய நண்பர் சொல்வார்.
ஒரு மனிதனுக்கு மட்டுமான தனிமாதிரியான துயரமென்று ஒன்று கிடையவே கிடையாது. எல்ல வகையான துயரங்களுக்கும் இந்த பூமியில் உனக்கு பங்காளிகள் இருப்பார்கள்.- வாழ்வின் தாதுக்களை உண்ணாமல் வீணடிப்பது பெரிய பாவம்.
கலாச்சாரத்தின் இடுப்பு துண்ணியை விலக்கிப் பார். உனக்கு எல்லாம் புரியும்.
பெண்ணின் மனதை கலவுவதுதான் லாகிரி.
குடும்பம் என்பது சமூக அமைப்பு. அவைகள் பாலியல் அமைப்புகள் அல்ல.
நான் எந்த வெளிநாடுகளுக்கும் போனதில்லை. இன்றைய திறந்த சந்தைக் காலத்தில் உலகத்தின் கதவுகள் திறக்கப்பட்டு வாய்ப்புகள் எளிமையாகி விட்டன. என்றாலும் என்னைப் போன்றவர்களுக்கு அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் காலம் கடந்து விட்டது-
இன்னொரு நாட்டில் காந்தி வேறொரு மனிதனாக மாறினார். அவனுக்கும் ஒரு தாயிருந்து சத்தியங்களைக் கேட்டிருந்தால் வேறுமாதிரி இருந்திருப்பானோ?
நீ வாழ்க்கையில் வியப்பை இழக்கும் போது உன் வயோதிகம் தொடங்கி விடுகிறது.
நீ விரும்பினாலும், விரும்பா விட்டாலும் குருதிச்சங்கிலி மனிதர்களால் நிராகரிக்க முடியாத ஒரு கடப்பாட்டை உருவாக்குகிறது.
மிருகநிலை, மனிதநிலை, தெய்வநிலை. தெய்வநிலை என்று சொல்வது பக்திபபூர்வ்மானது அல்ல. மனித குணத்தின் அழகை சற்றே உன்னதப்படுத்தி தெய்வநிலை என்றேன்.
ஒரு மனிதனாலே தன்னோட ஒற்றை வாழ்க்கைல உலகத்துல இருக்கிற சிறந்த அழகு அத்தனையையும் அனுபவிக்க முடியுமா?
கலைல கிடைக்கிற அனுபவமும், மகிழ்ச்சியும் ஒரே மாதிரியானது. இசை கேட்கிற ஒருவரால் நிச்சயமாக ஓவியத்தையும், கவிதையும் அணுகமுடியும். ஏன்னா இங்கே இசையோ, கவிதையோ, ஓவியமோ முக்கியமில்லை. சூட்சமம் மனதில் இருக்கிறது.
வாழ்க்கை என்பது மரணம் வரை வாழக்கற்றுக் கொள்வதுதான்.
கார்ப்பரேட்டில் வேலை செய்துகொண்டு கம்யூனிஸம் பேசுவது குற்றவுணர்ச்சியைத் தணித்துக் கொள்ள கோவில் உண்டியலில் காசு போடுவது போல.
குடும்பத்தில மகிழ்ச்சி மட்டுமே இருக்கும்னு சொல்லலை. ஆனா இதவிட பெட்டரான இன்னொன்னை நாம இன்னும் உருவாக்கலையே.
Happy families are all alike; every unhappy family is unhappy in its own way. –Tolstoy- அன்னா கரீனாவில்.
மரிய வர்கஸ் லோஸா வுக்கு விலோரா கொடுத்த ஓவியங்கள்
லெட் செப்பளின் இசை.
டான் கீகாட்டே-செர்வாண்டிஸ்-காற்றாடிகளுடன் சண்டையிடுதல்
சிமோன் தி பூவா- செகண்ட் செக்ஸ்
நெல்லியின் “ ஹாட் இன் ஹியர்”
இசைத் துணுக்குகள், ஓவியங்கள், புத்தகங்களின் பெயர்கள் வெறும் Name dropping ஆக இல்லாமல் கதையோட்டத்தில் தம்மைப் பொருத்திக் கொள்கின்றன.
அம்மா நீ இருந்திருந்தால் இப்படி உணர்ந்திருப்பேனா? நானே என்னை இடுப்பில் தூக்கியவாறு எத்தனை காலம்தான் நடப்பேன் அம்மா? களைப்பாக இருந்தது. அதனால்தான் நான் என்னை இறக்கிவிட்டு விட்ட்ஏன். இந்தப் புழுதியும், அழுக்கும் என்மீது படியட்டும். நான் அழிகிறேன்.
ஆனந்த் என்கிற அந்தத் தனியன் தாய்நாட்டிலிருந்து வெகுதூரத்தில் ஒரு தந்தையை அடைந்து விடுகிறான்.
எப்போதும் கண்கள் மூடிக்குனிந்திருக்கும் காந்தி நேற்று நள்ளிரவில் அவனை நிமிர்ந்து பார்த்து விட்டார்.
ஆம். காந்தியேதான் சிலை வடிவில் றாம்ப்லாவில்
(நன்றி: சொல்வனம்)
***
கலித்தேவன்
மென்பொருள் உலகில் பணி செய்யும் நாவலாசியரின் புதினம்.
எழுத்தாளர் குணா கந்தசாமி தனது இரண்டாவது நாவலாக இதை எழுதியுள்ளார் . நேர் பாணியில் பயணிக்கும் இந்நாவல், எங்கும் தேவையில்லாதவை என்ற எண்ணமே ஏற்படாத வகையில் தோன்றச் செய்வதன் மூலம் தேர்ந்த கதை சொல்லி என தன்னை நிறுவுகிறார்.அர்ஜெண்டினா உருகுவே எல்லையோரம் ரியோ தெ லா பிளாட்டா (ரியோ டி லா பிளாட்டா – நதித்தட்டு) நதியோரம் நடக்கும் நிகழ்ச்சியாகவும் , டாங்கோ என்ற ஆண் பெண் இணைந்து ஆடும் அந்நாட்டின் நடனத்தை குறிப்பிட்டு, அதன் முரண்பாடுகளையும், இணைவையும் நாவலின் குறியீடாக பயன்படுத்தி நாவலை செழுமைப்படுத்தியுள்ளார்.
நதியும், கடற்கரையும் இணையும் இடம் கழிமுகப் பகுதி (காயல்) இயற்கையாகவே அமையும் அற்புதமான இடம் . “ரியோ தெ லா பிளாட்டா” என்ற நதியும் அட்லாண்டிக் பெருங்கடல் இணையும் இடத்தில், மாண்டி வீடியோ என்ற நகரில் மென்பொருள் பணியின் பொருட்டு, ஆனந்த் என்ற இளைஞரின் வாழ்வில் ஏற்படும் மனக்குழப்பங்களும், தெளிவுமே இந்நாவல்.
தந்தையைப் பார்க்காத , தாயின் சிறு வயது புகைப்படம் மட்டுமே வைத்திருக்கும் மாமாவின் ஆதரவில் தங்கி படிக்கும் இல்லங்களில், தன் வாழ்வைத் தனிமையில் வாழ்ந்து, கல்லூரியிலும் விடுமுறையில் மாமாவின் வீட்டிற்கு போக முடியாமல், நன்றாகப் படித்து, கம்யூட்டர் துறையில் மென்பொருள் பிரிவில் நல்ல பயிற்சி பெற்றவனாக இருக்கிறான் ஆனந்த். இந்தியாவில் நட்புவட்டாரங்கள் குறைவு என்றாலும், தனிமை, ஆதரவற்ற நிலையின் காரணமாகப் பள்ளியில் படிக்கும் போது, கல்லூரியில் , ஹாஸ்டலில் தங்கி படிக்கும் போது தன் நிலையுணர்ந்து , கல்வி மட்டுமே தன் விடுதலை என படித்து மென்பொருள் விற்பனன் ஆகிறான்.
உள்ளுர், பெங்களூர் போன்ற இடங்களில் பணிபுரிந்து , அதன் நீட்சியாக வெளி தேசத்திற்குச் சென்று, தனிமையில் வந்து வாழ பழகுகிறான். ரியோ டி லா பிளாட்டா , மாண்டி வீடியோ நகரின் வீதிகளையும், கடற்கரை பகுதிகளையும் உயிரோட்டமாக சித்தரித்தது, அந்நகரில் வசித்து அதை சுற்றி பார்த்ததினாலும் அனுபவித்ததாலும் மிகச்சிறப்பாக துல்லியமாக பதிவு செய்துள்ளார். ஆற்றின் கரையை , தங்கியிருக்கும் கடற்கரையை பார்த்த அறையும் கண்முன்னே தெரிகின்றது.
மிகப்பெரிய ஆச்சரியம் இந்நாட்டில் காந்தி சிலை இருப்பதும், றாம்ப்லா காந்தி சிலை என அழைப்பதும். எழுத்தாளர் காந்தியை பின்தொடருபவர் என்பதும் தெளிவு. நாவலின் பல நிகழ்வுகளில் காந்தியின் சுயசரிதையை, கொள்கைகளை, நடைமுறைகளை கையாள்கிறார்.
தனிமையில் வெளிநாட்டில் வாழும் இந்தியனாக தனக்குள்ளே சுருண்டு கொள்ளும், மனம் தடுமாறும் சாதாரண மனிதனாக , மதுப்பழக்கம், கஞ்சா, சிகரெட், பெண் என திரிந்தாலும், சந்தியாவின் வருகையில் தான் ஒரு நிலைக்கு திரும்பி , இருவருக்குள்ளும் ஏற்படும் மனவிலக்கம் போன்ற தருணங்களில் கையாளும் நாவலாசிரியரின் மொழிநடை , தத்துவங்கள், விவரிப்புகள் இந்நாவலை மேலும் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
மொத்தத்தில் இந்நாவலுக்கு தனக்கு தேவையான இடங்களில் அந்நாடுகளில் வசிக்கும் மத்தியாஸ், வெரோனிகா, மார்செலா போன்றோரும் இந்நாவலை அடுத்தடுத்த நகர்விற்கு எடுத்து செல்கின்றனர்.
ஆனந்த் தனக்கு என்ன தேவை என்பதை சந்தியாவின் வருகை தெளிவுபடுத்துகிறது. சந்தியா இன்னொரு தாயாக மாறும் கணத்தை எதிர் பார்ப்பவன் அப்படி மாறினால் என்னாகும்?, இந்நாவல் சாதாரண கதையாடலாக மாறி வலுவிழந்திருக்கும். பெண்ணின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும், அளவிற்கு தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் சாதாரண இந்தியனாக, அதன் பழக்க வழக்கங்களில் தோய்ந்த மனிதனாக மாறிய ஆனந்திற்கு தெளிவான வாழ்க்கை பாடத்தை சந்தியாவும், காந்தியும் சுட்டிகாட்டுகின்றனர்.
முடிவாக எழுத்தாளர் பிரபஞ்சத்தின் நோக்கமாக குறிப்பது, “உலகம் அன்பையும் ஜீவகாருண்யத்தையும் மட்டும் பயின்றுகொண்டு இருக்கவில்லைதான். அது மாபெரும் வதைக்கூடமாகவும் சில சமயங்களில் புராணங்களில் சித்திரிக்கப்படும் நரகத்தை ஒத்தும் இருக்கிறது. ஆயிரமாயிரம் வருஷங்களாக மனிதனைத் தரப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருந்தாலும் மிருகநிலைக்குக் வீழ்ந்துவிடும் சாத்தியம் எப்போதும் பின்தொடர்கிறது. தன் பலகீனங்களோடு மனிதனுக்கு இடையறாத போராட்டம். ” (நாவலிலிருந்து)
போராட்டம் மட்டுமே வாழ்க்கை ஒவ்வாரு கணமும் மனிதன் வாழ்க்கை பாடத்தையும் , வாழும் முறையையும் கேள்விக்குள்ளாக்கி விடை தேடும் படலமே வாழ்வு.
(நன்றி: அகழ்)
***
சரவணன் மாணிக்கவாசகம்
நாவலின் பெரும்பான்மையான களம், உருகுவே நாட்டின் மாண்டிவீடியோ நகரில் உள்ள ஒரு கடற்கரை பகுதி மற்றும் பிரபலமான நடைபாதை. போதையும், Easy sexம் குவிந்த இடத்தில் மனத்தில் தானே கட்டுகளைப் போட்டுக் கொண்டவன் அவிழ்க்க முடியாமல் திணறுவது ஒரு பகுதி.
தனிமையும், வெறுமையும் ஆனந்தை எதனால் சூழ்கிறது என்பது நாவலில் தெளிவாக வந்திருக்கிறது. நாவலின் களமான றாம்ப்லா அந்தத் தனிமையைக் கூட்டுகிறது. வலியச் சென்று சந்தியா போல் இருக்குமிடத்தை கலகலப்பாக வைத்திருக்கமுடியாத குணாதிசயம் அவனை இன்னும் அந்நியனாக்குகிறது.
காதலில் விழுவது மற்றுமொரு தீம். எல்லாக் காதல்களும் Happily lived ever after ஆக முடிவதில்லை. சூழல் தரும் நெருக்கம் ஒரு ஆணையும் பெண்ணையும் காதல்வசப்படச் செய்கிறது. உலகத்தில் தாங்கள் ஒருவருக்கொருவர் படைக்கப்பட்டவர்கள் என்று கற்பிதம் கொள்பவர்களை குடும்ப அமைப்பு குதிரையின் பின்னங்காலில் வாங்கிய உதையாக உணரச்செய்கிறது.
கதையை எதிர்பார்க்கும் ஆரம்பநிலை வாசகர்களுக்கு பெரிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை. நல்ல வாசிப்பனுபவத்தை எதிர் நோக்குபவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். தர்க்கங்கள் மட்டுமல்ல, வயிற்றில் தழும்பைப் பார்த்தவுடன் கன்னிப்பையனின் காமம் வடியும் நிகழ்வு கூட ஆதவனை நினைவுறுத்துகிறது. விபச்சாரியிடம் பர்ஸின் டாலர்களைக் காட்டியும் மறுப்பது அவனது இந்தியத்தோலால் இருக்கலாம். அவன் அதை அவமானமாகக் கருதுவது முக்கியமான விஷயம். அம்மாவைப் பற்றி சிறுவயதில் கேட்டபோது சொல்லாத மாமா இப்போது நெருங்கி வருகிறார், இவன் தூரத்தில் இருக்கிறான். எல்லாமிருந்தும் எதுவுமில்லாத உணர்வைக் குணா கந்தசாமி இந்த நாவலில் தெளிவாகக் கொண்டு வந்திருக்கிறார். கதையின் Open ending நாவலை மேலும் அழகாக்கி இருக்கிறது.
***
.jpg)
No comments:
Post a Comment