Mar 10, 2026

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence

பல வருஷங்களுக்கு முன்பு, ஓரான் பாமுக் எழுதிய தி மியூசியம் ஆஃப் இன்னசென்ஸ் (வெகுளித்தனத்தின் அருங்காட்சியகம் என்றே இதை மனதில் கொண்டிருக்கிறேன், அறியாமையின் அருங்காட்சியகம் என்றல்ல) நாவலின் ஆங்கிலப் பதிப்பு வெளியானவுடன் உடனடியாக வாசித்தேன். அப்போது நாவல் பெரிதாக ஈர்க்கவில்லை. அது பாமுக்கின் முந்தைய படைப்புகளிலிருந்து சற்று கீழே இறங்கிவிட்டதாகத் தோன்றியது. நாவலின் அடிப்படையான ஆதார உணர்ச்சி பிடிபட்டாலும் அது வெகுஜனத் தன்மை உடைய நாவல் என்று தோன்றியது, இன்றைக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். சங்க இலக்கியம் தொடங்கி நாளது வரையான தமிழர்களின் கலையிலும் வெகுஜனக் கலாச்சாரத்திலும் காதல் ஒரு வதிபட்ட படிமம். நமது திரைப்படங்கள் காதலைத் துவைத்துக் காயப்போட்டிருக்கின்றன. நமது கற்பனையில் இருக்கும் வடிவத்தில், நிஜ வாழ்க்கையில் காதல் இல்லை.




பதினைந்து ஆண்டுகள் கழித்து இப்போது நெட்ப்ளிக்ஸில் ஒன்பது அத்தியாயங்களைக் கொண்ட நெடுந்தொடராக தி மியூசியம் ஆஃப் இன்னசென்ஸ் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் சுவாரசியமான முடிச்சை வைக்கும் வழக்கமான நெடுந்தொடர்களின் இலக்கணத்துக்கு மாறாக, ஒரு காதல் கதை சீரான விதத்தில் திரைக்கதையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கதையைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் நாம் காதலைப் பற்றிப் பேசியே ஆகவேண்டும்.

நண்பரே, நீங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ இளமையிலோ முதுமையிலோ மத்திம வயதிலோ இருக்கக்கூடும். இந்தக் கணத்தில் உங்கள் வாழ்க்கையில் காதல் என்னவாக இருக்கிறது? நீங்கள் அதை எப்படி உணர்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் அதற்கு ஏதேனும் அர்த்தமிருப்பதாகக் கருதுகிறீர்களா? வெகு பழக்கமான வரையறைகள், கற்பனாவாத படிமங்கள், இவற்றைத் தாண்டி, உங்களுடைய அன்றாடத்தின் ஊடே காதல் என்பதை பருவடிவாய் உணர முடிகிறதா? நீங்கள் தினமும் ஸ்பரிசிக்கும் மிருதுவாக அது இன்னும் இருக்கிறதா? அல்லது, அது உங்கள் வாழ்க்கையிலிருந்து நழுவி, எப்போதேனும் தன்னுணர்வு மயங்கும் ஒரு கணத்தில் முகம் காட்டும் ஒரு பழம் நினைவா? நீங்கள் எந்த விதமான காதலில் நம்பிக்கையுடையவர்? தூய்மையான ”ப்ளோடோனிக்” காதலிலா அல்லது உடற்கவர்ச்சியும் வேட்கையும் கலவியும் கலந்த நடைமுறைக் காதலிலா? இல்லை, காதல் என்பது வெட்டி வேலை, ஆதார உணர்ச்சியான “உடலுறவை” மட்டுமே பெறுமதியுடையதாகக் கருதுகிறீர்களா? மேற்கண்ட விதத்தில் சொல்வது நாய்ப்புத்தி, தியாகமும் தூய்மையும் நிரம்பிய காதல் என்ற உணர்வு மனிதர்களுக்குக் கிடைத்த அபூர்வ வரம் என்று வக்காலத்து வாங்குகிறவரா? வாழ்க்கையில் உங்களுக்கு ”இருதலை” காதல் வாய்த்திருக்கிறதா? இன்னொருவர் உங்களிடம் திகட்டத் திகட்டக் காதலைக் கொட்டி அந்த உணர்வில் பாகைப் போல் கரைந்து போயிருக்கிறீர்களா? உங்களுடைய பதில்களை அந்தரங்கமாக நீங்கள் உங்களுக்கே சொல்லிக்கொள்ளுங்கள்.

காதல் போன்ற வலுவான பேருணர்ச்சியை இது இன்னவிதம்தான் என்று ஒற்றையாகத் தீர்த்துச் சொல்லிவிட முடிவதில்லை. அவரவர் மனம் பாடும் தனிப்பாடல் என்று சொல்வது செளகரியமாக இருக்கும். இந்தத் தருணத்தில் எனக்கு இப்படித் தோன்றுகிறது, பருவத்தோடும் இளமையோடும் நேரடித் தொடர்புடையது காதல். வயதும் இளமையும் காதலுக்கு கனவுத்தன்மையைக் கொடுக்கின்றன. பருவத்தின் பேரொளி காதல். பருவம் கடந்தபிறகு அது பெரும்பாலும் வாழ்க்கையின் முன்னுரிமைகளில் பின்வரிசைக்குப் போய்விடுகிறது. காதலின் கனவுத்தன்மை உதிர்ந்து அது பழைய ஆடையாகி விடுகிறது. இளமை முடிந்தவுடன் காதல் குடும்ப நிறுவனத்துக்குள் உள்ளடக்கப்பட்டுவிடுகிறது. இணையுடன் வாழும்போதே தோன்றும் பிற காதல்களுக்கு தமிழர்கள் பிரமாதமாகப் பெயரிட்டிருக்கிறார்கள்: கள்ளக்காதல்.

நெருப்பு என்றால் வாய் சுடாது. ஆனால் காதல் என்றால் உங்கள் மனதில் சட்டென்று ஒரு முகமோ அல்லது பல முகங்களோ தோன்றும், தழும்புகளையோ ஆறாக் காயங்களையோ வருடுவது  நேரிடலாம் என்பதால் காதல் என்ற வஸ்துவுக்கு ஒரு வலு இருக்கும்போலத்தான் தெரிகிறது. நாம் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் காதல் என்பதில் லிபிடோ எனப்படும் பாலுறவு வேட்கைக்கு ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது. ஒரு மனிதர் லிபிடோவை இழப்பதை நல்ல விஷயமாக பிளாட்டோ குறிப்பிடுகிறார். நமக்கு வயதாகும்போது விரும்பியோ விரும்பாமலோ லிபிடோவை இழக்கிறோம். லிபிடோவைப் பற்றி யோசிக்கும்போது அதன் வீரியமான சித்தரிப்பை ஜெயமோகன் எழுதிய “பாடலிபுத்திரம்” சிறுகதையின் தொடக்கத்தில் வாசித்திருக்கிறேன். காதல் என்பது லிபிடோவின் சித்து விளையாட்டு என்பதுதான் இப்போதைக்கு என் கருத்து. ஆனால் தி மியூசியம் ஆஃப் இன்னசென்ஸ் நாவலின் நாயகன் கமாலுக்கு காதல் லிபிடோவாகவும் அதைக் கடந்ததாகவும் இருக்கிறது.

                                                                ***

டால்ஸ்டாயின் அன்னா கரீனா போலவே நாவலின் வழியே காதல், காமம், பாலுறவு, காதலுறவில் நம்பிக்கை, நம்பிக்கை துரோகம் போன்ற விசாரணைகளை மியூசியம் அஃப் இன்னசென்ஸ் நாவலில் செய்திருக்கிறார் பாமுக். காதலில் முக்கோணம் (கவனிக்க, முக்கோணக் காதல் அல்ல) என்பது என்றைக்குமே சுவாரசியத்தை இழக்காத கரு. முக்கோணம் இருந்தால்தான் மோதலும் முரணும் நாடகீயமும் (drama) உருவாகிறது. இந்த நாவலை நாடகீயமாகத்தான் பாமுக்கும் குறிப்பிடுகிறார்.



ஆண் பெண் காதலுறவில் உருவாகிவரும் நவீனமான மாற்றங்கள் குறித்த உரையாடலாக அல்லாமல், காதலின் செவ்வியல் பண்பான ”பித்துநிலை”யை மையமாக வைத்து இந்தக் கதையை எழுதியிருக்கிறார் பாமுக். காதலில் பெண்கள் பித்தாக இருப்பதில்லை, அப்படியான பெண்ணை வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் அரிதாகத்தான் பார்க்க முடியும். அவர்களுடைய சூழ்நிலை அப்படி. ஆனால் ஆண்களுக்கு இது தன்னியல்பாகவே நடந்துவிடுகிறது. சமூகத்தில் பெண்ணை தன்னுடைய உடைமைப்பொருளாகக் (object) ஆண் கருதுவதே பித்துநிலையின் அடிப்படை. காதலனையோ காதலியையோ மனைவியையோ காதலரையோ நாம் ”இணை” என்று நினைப்பதில்லை, ’உரிமையானவர்’, ‘சொந்தமானவர்’ என்றுதான் கருதுகிறோம்.

துருக்கிய சமூகமும் குடும்ப அமைப்பும் ஏறக்குறைய இந்திய சமூக அமைப்புக்கு ஒத்ததுதான். பூகோள ரீதியாக ஐரோப்பாவுக்கு நெருக்கமாக இருப்பதால் அங்கே மேல்தட்டு வர்க்கத்தினரிடையே வாழ்க்கைமுறையில் மேற்கத்திய மயம் எளிதாக நிகழ்ந்துவிட்டது. ஒரு பக்கம் மேற்கத்திய மயமான இஸ்தான்புல், இன்னொரு பக்கம் வேர்களோடு முழுமையாகத் தொடர்பு அறுந்துவிடாத பழமையான இஸ்தான்புல் என்று பாமுக்கின் வழக்கமான “இரு உலகங்கள்” இந்தக் கதையிலும் இருக்கின்றன.

மேற்கத்திய மயமான செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவன் கமால். அதே வர்க்கத்தைச் சேர்ந்த, நிகரான செல்வம் இல்லாவிட்டாலும் அந்தஸ்த்தில் இணையான குடும்பத்தைச் சேர்ந்த சிபெல் உடன் அவனுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. மேல்தட்டு வர்க்கத்தில், திருமணத்துக்கு முன்பே ஜோடிகள் உடலுறவு கொள்வதும் பெண்கள் அத்தகைய மேற்கத்திய நடைமுறைகளைக் கைகொள்வதும் புதிய மோஸ்தராக இருக்கிறது. கமாலும் சிபெல்லும் அதற்கு விதிவிலக்கல்ல. சிபெல்லுக்கு ஒரு கைப்பையை பரிசாக வாங்கச் செல்லும் கமால் அந்தக் கடையில் தன்னோடு சிறுவயதில் ஒன்றாக விளையாடிய, ஒருவகையில் “தூரத்து உறவான” ஃபியூசன் பணியாற்றுவதைக் காண்கிறான். இருவரும் தீவிரமான காதலில் விழுந்துவிடுகிறார்கள்.

சிபெல்லுடனான கமாலின் நிச்சயதார்த்தத்தை அறிந்தவளாக இருந்தாலும் காதலின் காட்டாறில் ஃபியூசனும் அடித்துச் செல்லப்படுகிறாள். அவளுடைய வாழ்க்கையின் முதல் ஆண் கமால் என்பது குறிப்பாகச் சுட்டப்படுகிறது. ஒவ்வொரு மதியமும் கமால் குடும்பத்துக்குச் சொந்தமான அப்பார்ட்மெண்டில் சந்தித்து கமாலும் ஃபியூசனும் காதலும் கலவியும் கொள்கிறார்கள். ஆனால் கமால் இரட்டை மனநிலை கொண்டவனாக இருக்கிறான். சிபெல்லுடனான திருமணமும் வேண்டும், ஃபியூசனுடான காதலும் வேண்டும்.

கமால் இந்தக் காலகட்டத்தில் ஃபியூசனின் வீட்டுக்குச் சென்று அவளுடைய பெற்றோர்களைச் சந்தித்து பழைய உறவைப் புதுப்பித்துக்கொள்கிறான். சிபெல்லுக்கும் அவனுக்குமான நிச்சயதார்த்த அழைப்பை ஃபியூசனின் குடும்பத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறான். அதில் ஃபியூசனின் குடும்பமும் கலந்துகொள்கிறது. ஆனால் நிச்சயதார்த்த நிகழ்வுக்குப் பிறகு ஃபியூசனும் அவளுடைய குடும்பமும் சட்டென்று காணாமல் போய்விடுகிறார்கள்.

மிகப்பெரிய பாழில் விழுகிறான் கமால். காதல் நோயின் வலி உடலில் எப்படிப் பரவும் என்பதை நுட்பமாகச் சொல்கிறார் பாமுக். ஒரு கட்டத்தில் சிபெலிடம் உண்மையை ஒப்புக்கொள்கிறான். அவளுக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தாலும் அவன் அந்த உறவிலிருந்தும் பிரிவேக்கத்திலிருந்தும் தன்னை மீட்டெடுத்துக்கொள்ள கமாலுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறாள். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைய சிபெல் கமாலிடமிருந்து விலகுகிறாள். தன் வாழ்க்கையின் இரண்டு பெண்களையும் இழந்து கமால் பேயைப்போல் இஸ்தான்புல்லின் மூலை முடுக்கெல்லாம் அலைந்து திரிகிறான்.

ஒரு இடைவெளிக்குப் பிறகு தாங்கள் இஸ்தான்புல் திரும்பிவிட்டதாக ஃபியூசனிடமிருந்து கடிதம் வருகிறது. அவளைத் தேடி வீட்டுக்குச் செல்லும்போது துரதிரஷ்டவசமாக அவள் திருமணமானவளாக இருக்கிறாள். நிகழ்விருந்த கமாலின் திருமணம் ஏற்படுத்திய மனப்பாதிப்பிலிருந்து ஃபியூசனைக் காக்கவே குடும்பம் இஸ்தான்புல்லை விட்டு இடம்பெயர்ந்தது என்ற காரணத்தை கமால் தெரிந்துகொள்கிறான். புதிய சூழ்நிலையிலும் குடும்பத் தொடர்பின் காரணமாக கமால் வரவேற்கப்படுகிறவனாகவே இருக்கிறான். ஃபியூசனின் கணவன் ஒரு திரைக்கதாசிரியன். ஃபியூசன் நடிகை ஆகும் வேட்கையுடனும் லட்சியத்துடனும் இருக்கிறாள். பணக்காரனான கமால் அதற்கு உதவுவான் என்ற எண்ணத்தில்தான் ஃபியூசன் உறவைப் புதுப்பித்திருக்கிறாள் என்ற கசப்பான உண்மையைக் கமால் புரிந்துகொண்டாலும் அவனால் அவளைவிட்டு விலக முடிவதில்லை. ஃபியூசனின் கணவன் இயக்குனராவதற்கும் அவள் நடிகை ஆவதற்கும் உதவுவதாக வாக்களிக்கிறான்.

பிறகு நீண்ட எட்டாண்டுகளுக்கு ஏறக்குறைய தினமும் அந்த வீட்டுக்குச் மாலைகளில் சென்று நேரத்தைச் செலவழிக்கிறான். ஆனால் ஃபியூசன் நடிகை ஆவதை ஆழ்மனதில் விரும்பாதவனாக கமால் இருப்பதால் விஷயங்கள் மெதுவாகவே நகர்கின்றன. அவளுடைய வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் ஃபியூசன் பயன்படுத்திய பொருட்களை ஒவ்வொன்றாகத் திருடிக்கொண்டு வந்து பொருட்களின் வழியே அவளையும் அவர்களுடைய காதலுறவையும் நினைவுகூர்கிறான். பிறகு அவர்களுடைய கதை இன்னொரு கோணத்தில் இன்னும் கூடுதலான நாடகீயத்துக்கு நகர்கிறது. இதற்கு மேல் நாம் கதையைக் குறித்து இனி பேசப்போவதில்லை.

கதைக்குள் பாமுக் ஒரு சிறு பாத்திரமாகவும் வருகிறார். தன்னுடைய வாழ்க்கையையும் ஃபியூசனின் நினைவின் பொருட்டு தான் அமைத்த அருங்காட்சியகத்தின் கதையையும் கமால் பாமுக்கிடம் பகிர்ந்துகொண்டு அதை ஒரு நாவலாக எழுதி, தான் ஒரு மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்ந்தேன் என்பதை உலகுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறான்.

ஒரு டிராமாவாக பாமுக் இதைப் படைத்திருந்தாலும் மனிதர்களின் ஆதார உணர்ச்சிகளின் போராட்டம் என்ற விதத்தில் இது தரையில் காலூன்றிய கதைதான். தொடக்கத்தில் ஃபியூசன் உள்ளத்தாலும் உடலாலும் கமாலுக்கு எளிதாக்க கிடைத்துவிடுகிறாள். ஆனால் இரண்டாவது முறை, அவள் நடிகையாவதற்குக் காத்திருப்பது போலவே பல வருஷங்கள் கமாலைக் காத்திருக்க வைக்கிறாள். அவனுடைய காதலை காலத்தைக்கொண்டு அவள் சோதித்துப் பார்க்கையில் கமால் அவளுடைய பொருட்களின் வழியே காதலின் ஆதுரத்தை அடைகிறான். பிறகு இந்தக் கதை எப்படி முடிந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? காவியமாக முயற்சிக்கும் காதல் கதைகள் எப்படி முடிவுறுமோ அப்படித்தான் இந்தக் கதையும் முடிந்திருக்கிறது.

நாவலுக்கும் திரைவடிவத்துக்குமான வேறுபாட்டைப் பார்க்கும்போது, திரைவடிவத்தில் கமாலுக்கும் ஃபியூசனுக்குமான காதலின் நெருக்கம், சிபெல்லுடனான உறவும் பிரிவும் போன்றவை பிரமாதமாக வந்திருக்கின்றன. பொதுவாகவே உறவுகள் மற்றும் உணர்வுகளின் நாடகீயம் மெல்லிய ”கீழைத்தேய மிகை”யுடன் வெளிப்பட்டிருக்கின்றன. இரண்டு மூன்று சிறப்பான விஷயங்களைக் கூறலாம். கமாலுடனான கலவியின்போது, ஒவ்வொருமுறையும் ஃபியூசன் தன் மனவெளியில் சூரியகாந்தித் தோட்டத்தைக் காண்பதாகச் சொல்வது (இந்த சூரியகாந்தி என்னும் படிமம் கதைக்குள் இன்னும் சில அந்தரங்கமான தருணங்களிலும் இறுதிக்காட்சியிலும் முக்கியத்துவம் பெறுகிறது), ஃபியூசனின் மீதான தாபத்தில் ஒரு கண்ணாடிக் கிண்ணத்தின் சிறிய கைப்பிடிக் குமிழை முலையுறிஞ்சுவதுபோல் கமால் உறிஞ்சுவது, கமாலுக்கும் ஃபியூசனுக்குமான இறுதிக் கலவிக் காட்சியும் தொடர்ந்த சம்பவங்களும் படமாக்கப்பட்டிருக்கும் விதம், வீடுகள் மற்றும் பொருட்களின் வளம் ஆகியவை திரைவடிவில் சிறப்பாக இருக்கின்றன.

பொருத்தமான நடிகர்களின் தேர்வும், ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கதைக்கு ஆழங்கூட்டியிருக்கின்றன. பாமுக் கதையுலகத்தின் தனித்துவக் கூறுகள் இதை வழக்கமான காதல் கதையாக ஆக்கிவிடாமல் திரைவடிவத்துக்கும் ஆழத்தை அளித்திருக்கின்றன. ஆனால் ஃபியூசன் இஸ்தான்புல்லில் இல்லாத காலகட்டத்தில் கமால் தன் அலைச்சல்களில் உணரும் இஸ்தன்புல் நகரத்தின் ஆன்மா, கமாலின் அகவயத் தன்னுரையாடல், பாமுக்கின் தனித்துவ மனவுணர்வான melancholy போன்ற நாவலின் தனித்தன்மையான விஷயங்கள் திரைவடிவத்தில் அதிகம் வெளிப்படவில்லை.

தன் மையத்தில் காதல் கதையாக இருந்தாலும் இது பின்னணியில் துருக்கிய சமூகத்தின் ஒரு காலகட்டத்தையும் அதன் வர்க்கங்களைப் பற்றியும் பேசுகிறது. மனித நினைவில் பொருட்களின் பங்களிப்பையும் இந்தக் கதை விவாதிக்கிறது. இந்தக் காணொளியில் பாமுக் நாவலை எழுதிய பின்னணி, பொருட்களைத் தேடிச் சேகரித்த தருணங்கள், மனித நினைவில் பொருட்களின் பங்களிப்பு, இந்த அருங்காட்சியகத்தை தான் அமைத்த விதம், அது பார்வையாளர்களால் என்னவாகப் புரிந்துகொள்ளப்படுகிறது எனப் பலவற்றையும் பேசியிருக்கிறார்.



நவீனமான கூறுமுறையில் சொல்லப்பட்ட கற்பனாவாதக் கதையாக மியூசியம் ஆஃப் இன்னசென்ஸ் நாவலைக் கூறலாம். உள்ளடக்கத்தின் பழகிய தன்மையை பாமுக்கின் மொழியும் கதையாக்க நுட்பமும் நாவலில் மறைத்திருந்தன. திரைவடிவத்தில், காட்சிப்பூர்வம் கொடுக்கும் பலங்கள் இருந்தாலும் சற்றே ”பழகிய தன்மை” இருக்கத்தான் செய்கிறது. காதலுணர்வின் நாடகீயத்தை பொறுமையாக அதன் செவ்வியல் வடிவத்தில் பார்க்க விரும்புவர்களுக்கு திரைவடிவம் பிடிக்கலாம். நம்முடைய நினைவிலிருக்கும் வெகுளித்தனத்தின் அருங்காட்சியகத்துக்கு ஒரு நடை சென்றுவிட்டு வருவது ஒரு இனிமையான விஷயம்தான்.

No comments: