கிட்டத்தட்ட இருபது வருஷங்களுக்கு முன்னால் தீராநதி போன்ற இதழொன்றில் தமிழக அரசியல் குறித்த ஒரு கட்டுரையை வாசித்தேன். எழுதியவரின் பெயரை சரியாக நினைவுகூர முடியவில்லை. அது தமிழக அரசியலின் இருதுருவ அரசியல் மற்றும் அதன் இயங்குமுறை பற்றிய கட்டுரை.
அக்கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த முக்கியமான கருத்து, மேலோட்டமான வெளிப்பார்வைக்கு தமிழக அரசியல் மேல்மட்டத்தில் பிம்ப அரசியல் அடிப்படையிலான இருதுருவமாகத் தோற்றமளித்தாலும் யதார்த்தத்தில் இரு கழகங்களிலும் கட்சி, சட்டமன்றம், உள்ளாட்சி போன்ற தளங்களில் இடைநிலைச் சாதிகளுக்கு உரிய முறையிலான அதிகார பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது, கழகங்களின் வலிமையான கட்டுமானத்துக்கு இடைநிலைச் சாதிகளே ஆதாரமாக இருக்கின்றன, இந்தக் காரணியை இரு கழகங்களின் தலைமைகளும் மிகச்சரியாகப் புரிந்துகொண்டு அரசியல் செய்தார்கள் என்ற அடிப்படையில் அக்கட்டுரை பேசியிருந்தது.
பத்தாண்டுகளுக்கு முன்பு அ-கழகத்தின் தலைமை மறைந்தபோது அடுத்த தலைவர் என்று யாரும் இனங்காணப்படவில்லை, கட்சி மறைந்து காணாமல் போய்விடும் என்றார்கள். ஆனால் இன்று நிலைமை வேறாக இருக்கிறது. கட்சிக்குள் அதிகாரத்துக்கான போட்டி முடிவுற்று ஒற்றைத் தலைமை உருவாகியிருக்கிறது. அ-கழகத்தின் அதிகாரம் பெற்றிருந்த இரண்டு இடைநிலைச் சாதிகளில் ஒன்றிலிருந்து அதன் அடுத்த தலைவர் உருவாகியிருக்கிறார்.
அ-கழகம், பெரியண்ணனின் பிடியில் பலவீனமாக இருக்கிறது, பெரியண்ணன் அதை உண்டு செரிக்கப் போகிறார் போன்றவை இன்றைய அரசியல் பார்வைகளாக இருக்கின்றன. இருப்பினும் அந்த நிகழ்வு வரலாற்றில் இன்னும் நிகழவில்லை, அதன் சாத்தியத்தையும் விகிதாச்சாரத்தையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இன்றைய தேதியில் அ-கழகம் உருவத்தோடும் உயிரோடும் இருக்கிறது. கட்சிக்குள் இடைநிலைச் சாதிகளின் வலுவான அதிகாரக் கட்டுமானம்தான் முந்தைய வெகுமக்கள் செல்வாக்கு பெற்ற தலைமையின் மறைவுக்குப் பிறகும் அ-கழகத்தைக் காப்பாற்றி இருப்பதாகத் தோன்றுகிறது. இன்றைக்கு அ-கழகத்துக்குள் இருப்பதாகச் சொல்லப்படும், அதன் இரண்டு பெரிய இடைநிலைச் சாதிகளுக்கு இடையிலான இடைவெளியை கூட்டணிக்குள் வந்திருக்கும் அம்மா-கழகத்தின் வருகை நிவர்த்தி செய்திருக்கிறது.
தமிழக அரசியலே சாதியின் அரசியல்தான். கூட்டணிக் கணக்கில் இருந்து வேட்பாளர் தேர்வு வரை அடிப்படையாக சாதி இருப்பது தெரிந்ததே. அறிவுஜீவித் தோற்றம், சமுகநீதி போன்ற பாவனைகளை தி-கழகமும் அணிந்திருந்தாலும் நடைமுறை அரசியலில் அது தன் பங்காளியிடமிருந்து பெரிய விதத்தில் மாறுபட்டிருப்பதாகத் தெரியவில்லை. ”அது பூந்துரும்” என்பது அவர்களுக்கு இன்னும் சில சலுகைகளை வழங்குகின்றது.
சாதி ஒழிப்பு என்பது நீண்டகாலப் பிரச்சனை, அதிகாரத்தில் சாதிகளுக்கான குறைந்தபட்ச பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்பதே இன்றைய நடைமுறை அரசியலாக இருக்கிறது. கழகங்களுடைய இந்த இடைநிலைச் சாதிகளின் அதிகாரக் கட்டுமானம்தான் தமிழ்நாட்டுக்குள் இன்றைய தேதி வரை பெரியண்ணனைத் தடுமாற வைக்கிறது. அவர்களும் வெவ்வேறு சாதிகளிலிருந்து சுழற்சி முறையில் மாநிலத் தலைமைகளை நியமித்து பல்வேறு விதமான முயற்சிகளை செய்கிறார்கள். இருப்பினும் அவர்கள் வளர்வதற்கு தேவைப்படும் களங்களை கழகங்கள் ஏற்கெனவே கைகொண்டிருக்கின்றன, சாதிகளின் தேவைகளை பல தசாப்தங்களாக நிறைவு செய்து கொண்டிருக்கின்றன.
தலித் மற்றும் இஸ்லாமிய சமூகங்களின் பிரதிநிதித்துவம் ஏற்கெனவே கழகங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது அல்லது தனி இயக்கங்களின் மூலம் அவை பிரதிநிதித்துவம் பெறுகின்றன. அரசுக்கும் மதம்/கோவில் என்ற நிறுவனத்துக்கும் இடையில், ஒன்றுக்கொன்று பிணக்கு ஏற்படுத்தாத தெளிவான இயங்குமுறை அறநிலையத்துறையின் மூலம் இருக்கிறது.
சுருக்கமாக, கழகங்களைத் தாண்டி மற்றவர்கள் இங்கே வளர்வதற்கான ஆழமான சமூகத் தேவை இன்னும் உருவாகவில்லை. அதனால்தான் பெரியண்ணன் போன்றவர்கள் இடைநிலைச் சாதிக் கட்டுமானத்தை குறிவைத்து வேலை செய்கிறார்கள். அறநிலையத்துறையை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். அதே நேரத்தில் சமீப காலங்களில் இடைநிலைச் சாதிகளின் செல்வந்த வர்க்கம் பெரியண்ணனின் பக்கம் சாய்வதையும் காண முடிகிறது. இந்தத் தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் தன்னுடைய இடைநிலைச் சாதி முதுகெலும்பைக் கொண்டு அ-கழகம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுமா என்பதே தமிழக அரசியலின் அடுத்த பெரும் நிகழ்வாக இருக்கக்கூடும்
இருபத்துநான்கு சாதிக் கட்சிகளோடு கூட்டணி கண்டு போட்டியிட்ட தி-கழகம் தோற்ற வரலாறும் உண்டு. ஆனால் அந்தத் தோல்வி சாதிக் கட்சிகளை, சாதியை தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதற்கான சாட்சியம் அல்ல. ஏனென்றால் தோற்றவரும் எதிர்முனையில் வென்றவரும் ஒரே சாதிக்காரர்களாகத்தான் இருந்திருப்பார்கள்/இருப்பார்கள் (ஒருசில விதிவிலக்குகளைத் தவிர). அனைத்து அதிகார நிறுவனங்களிலும் சாதி ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. சுருக்கமாகத் தமிழகத் தேர்தல் என்பது உண்மையில் கழகங்களுக்கு இடையிலான போட்டி மட்டுமல்ல, மாறாக தங்களுடைய அதிகாரத்தை சாதிகள் (பிரதானமாக இடைநிலைச் சாதிகள்) உறுதிப்படுத்திக் கொள்ளும் நடைமுறையாகவும் இருக்கிறது.
No comments:
Post a Comment