தி யங் போப் (The Young Pope) என்றொரு நெடுந்தொடர், கிறிஸ்துவ இறையியல், மதம் குறித்த தத்துவார்த்த விவாதங்கள், வாட்டிகனின் கட்டிடக்கலை போன்றவற்றில் ஆர்வம் இருந்தால் இத்தொடர் உங்களுக்குப் பிடிக்கக்கூடும்.
தனக்குத் தொடர்பில்லாத, மற்றவர்களின் உள்ளடிச் சதியினால் லென்னி பெலராடோ இளம் வயதிலேயே போப் பதின்மூன்றாம் பயஸ் ஆகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். போப் பயஸ் துயரார்ந்த பால்யத்தைக் கொண்டவர். ஹிப்பிகளான அவருடைய பெற்றோர் சிறுவனான லென்னியை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு தங்கள் வழியில் போய்விடுகிறார்கள். கிறித்துவ மதத்துக்கு தலைவர் ஆனபிறகும் போப் பயஸுக்கு பெற்றோர்கள் குறித்த ஏக்கமும் தேடலும் ஆழ்மனதில் மறையாமல் இருக்கின்றன.
போப் பயஸ் தான் பதவியேற்றவுடன் மதம் சார்பான தன்னுடைய கொள்கைகளை, வியூகங்களை அதுவரையான வழக்கத்திலிருந்து முற்றிலும் தலைகீழாக்குகிறார். இதுவரை சர்ச், கடவுளை மக்களுக்கு சொகுசாக வழங்கிக்கொண்டிருந்தது, அவற்றை மாற்றும் நேரம் வந்துவிட்டது, இனி மக்கள் இருட்டிலும் கடுமையான நடைமுறைகளின் மூலமுமே கடவுளைத் தேட வேண்டும் என்று தீர்மானிக்கிறார். வெளியே விரிவதற்குப் பதில் சபை உள்ளே சுருங்கவேண்டும் என்கிறார். அவருடைய வியூகத்தின் மிக முக்கிய அம்சம் ”காணப்படாமையே இருப்பு” (absence is presence). ஆகவே அவர் மக்களிடமிருந்தும் ஊடகங்களிடமிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொள்கிறார். நிற்க, இங்கே பேச வருவது தி யங் போப் கதையல்ல, அதில் மையமாக அமைந்த ”காணப்படாமையே இருப்பு” என்ற கருத்தாக்கம்தான்.
ஆனால் இந்த “காணப்படாமையே இருப்பு” என்பது சாதாரண மனிதர்களின் லெளகீக வாழ்க்கைக்குப் பொருந்தாது. அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்பது நம்முடைய தத்துவம். மறைத்துக்கொள்வதின் வழியே எங்கெங்கும் நிறைந்திருப்பதற்கு போப் பயஸைப் போல மக்களால் விழையப்படும் மனிதராக இருக்கவேண்டும். இங்கே காணப்படாமை என்பது பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்ட ஒருவர் பொதுவெளியில் சாதாரணமாகப் புழங்காமல் இருப்பது மட்டுமல்ல. தன் ஆளுமையின் குணவார்ப்புகளை முழுமையாக வெளிப்படுத்தாமல், கட்டுப்படுத்தப்பட்ட ஒரே ஒரு ஒற்றைப் பிம்பத்தை பொதுவெளிக்கு வழங்குவதுங்கூடத்தான். பொதுவாக இந்த யுக்தி ஆளுமைப் பலவீனங்களை மறைக்க உதவுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய்யின் அரசியல், “காணப்படாமையே இருப்பு” என்ற வியூகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. ஒரே வார்ப்பில் அமைந்த பொதுவெளித் தோன்றல்கள், பத்திரிகையாளர்களைச் சந்திக்காமை, மேலோட்டமான ஆளுங்கட்சி எதிர்ப்பு சினிமா வசனங்கள், வலதுசாரி சக்திகளுடன் அணிசேராமையிலிருந்து தப்பித்தது அல்லது தப்பிக்க விடப்பட்டது (குறைந்தபட்சம் இந்த தேர்தலில்) என்று அவருடைய இப்போதைய வியூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதில் மிக முக்கியமானது ”கட்டுப்படுத்தப்பட, குறைவாக காட்சி அளித்தல்”. காணப்படாமையின் மூலம் தன் இருப்பைக் காட்டுதல்.
அப்படிப்பட்ட ஒருவர் காட்சியளிக்கும்போது அவருடைய ஆராதகர்கள் ஸ்கலிதத்திற்கு நிகரான அனுபவத்தைப் பெறுகிறார்கள். காண ”விழைந்து” முண்டியடிக்கிறார்கள். வானில் வைக்கப்பட்டிருக்கும் இறைவன் பூமிக்கு வருவதுபோல திரையில் தெரிந்த நாயகன் தரையில் இறங்குகிறான், மனித உளவியலில் நாயகனைத் தேடும் இயல்பு அழிக்க முடியாத வகையில் பதிக்கப்பட்டிருக்கிறது.
தலைவன் நாயகனாக இருக்கவேண்டும் என்பதும் நாயகன் மார்க்கண்டேயனாக இருக்கவேண்டும் என்பதும் மாறாத விதி. தமிழ்நாட்டில் தொண்ணூறு வயதான அரசியல்வாதிகூட முடிக்கு கறுப்புச் சாயம் பூசிக்கொள்கிறார், தாங்கள் இளமையானவர்கள் என்ற பிம்பத்தை அரசியல்வாதிகள் பல வழிகளிலும் கொடுக்கிறார்கள். தேர்தல் காலம் என்பதால் அரசியல்வாதிகள் காரிலிருந்து இறங்குவது, ஏறுவது, நடப்பது போன்ற காட்சிகளுக்கு நாயகத்தன்மை கொண்ட பின்னணி இசை கோர்க்கப்பட்டு ஏராளமான குறுங்காணொளிகள் விடப்படுகின்றன. இது திராவிட அரசியல் ஊட்டி வளர்த்த larger than life politics என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் பொதுவாக இன்றைய அரசியலில், தலைவன் என்ற பிம்பம் வியூக வகுப்பாளர்களால், அவர்களுடைய வெகுமக்கள் தொடர்பு நிர்வாகிகளால் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. ஒருவர் தனித்த ஆளுமை கொண்ட அரசியல்வாதியாகவோ தலைவனாகவோ கட்டாயமாக இருக்கவேண்டிய அவசியமில்லை, அந்த முகத்துக்கான வெகுமக்கள் ஏற்பை உருவாக்கிவிட்டால் போதும், மீதியை பின்னால் இருக்கும் வியூக வகுப்பாளர்களும் அறிவுக் குழுவினரும் (think tank) பார்த்துக் கொள்வார்கள். தலைவர்கள் உருவாகி வருவதைவிட உருவாக்கப்படுவதுதான் இன்றைய யுக்தியாக இருக்கிறது.
இரண்டாயிரங்களின் பிற்பகுதி. ஒரு அதிகாலை மூன்றரை அல்லது நான்கு மணி இருக்கும். பெங்களூரிலிருந்து வந்து திருப்பூரில் வளர்மதி நிறுத்தத்தில் இறங்கி பழைய பேருந்து நிலையத்துக்கு போய்க் கொண்டிருந்தபோது கருணாநிதியைக் கண்டேன். அந்த அதிகாலையிலும் பார்ப்பவர்களுக்கு முகம் தெளிவாகத் தெரியும்படி தலைக்கு மேலே பளீரென்ற விளக்கு எரிய காரில் சென்றார். இன்னுங்கூட அந்த வியப்பு மறையவில்லை. அது திராவிட அரசியலின் விளம்பர மோகம் என்று சிலர் வாதிடக்கூடும், ஆனால், கருணாநிதிக்கு தலைவனாக இருப்பதின் உளவியல் புரிந்திருந்தது என்றே எனக்குத் தோன்றுகிறது. அதே போல் 2004 ஆம் ஆண்டில் ஒருமுறை, ராயப்பேட்டையாக இருக்குமென்று நினைக்கிறேன். டீக்கடையில் நின்றிருந்தபோது மு.க.ஸ்டாலின் யாரோவொரு கட்சிக்காரரின் இறுதி ஊர்வலத்தில் ஆட்களோடு நடந்து போய்க்கொண்டிருந்தார். தலைவன் என்பவன் காணப்படாமையால் காணச் சலியாதவனாக இருப்பதல்ல, ஆயிரம் முறை கண்டபின்னும் காணச் சலியாதவனாக இருத்தல். மற்ற விஷயங்களை கணக்கில் எடுக்காமல் இந்தக் கோணத்தில் மட்டும் பார்த்தால் தமிழகத்தில் இப்போதைக்கு இருவர் தென்படுகிறார்கள். ஒருவர் திருமாவளவன், இன்னொருவர் சீமான்.



No comments:
Post a Comment