Oct 20, 2024

கதறல் மிதக்கும் வெளி

கதறல் மிதக்கும் வெளி
பழைய நாட்களின் குளிர்மையில்
தேக்கியிருக்கிறது ஜீவிதம்

சொற்களின் மூலம்
ஆயுதம் செய்யப்பழகிவிட்டவர்கள்
ரகசியமாய் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
வேட்டையாடுதல் பற்றிய குறிப்புகளை

காலமாகிவிட்ட
நீதிக்கதை தேவதைகளின் பிணங்கள்
அழுகிக்கொண்டிருக்கின்றன
குழந்தைகளின் கனவில்

செத்துக் கொண்டிருப்பவனின்
ஆபரணங்களைத் திருடுபவனுக்கு
காத்திருக்கின்றன முத்தங்கள்

இலையுதிர்கால காட்டைப்போல்
காலம் எரிந்துகொண்டிருக்கிறது

எந்த வலிவுமில்லாத
இவன் செய்யத்தக்கது
இனியேதுமில்லை
மிச்சமிருக்கும் மதுவோடு
வடக்கிருத்தல் தவிர

No comments: