Oct 20, 2024

கவிதை

எல்லோராலும் கைவிடப்பட்ட
பசிமிகுந்த இரவொன்றில்
உனக்கு மிச்சமிருக்கிறது வானம்

கைக்குட்டை மேகத்தில்
முகம் துடைத்துவிட்டு
ஒரு தட்டு நட்சத்திரங்களோடும்
ஒரு கோப்பை நிலாசாறோடும்
விருந்து முடித்து

உன்
பசி
பதற்றங்கள்
பரிதவிப்புகள்
அவநம்பிக்கைகள்
யாவற்றையும்
வெகு நிதானமாகப் பகிரலாம்

அதுவுன்னை ஆற்றுப்படுத்த
வேறுகதைகள் நிறையச் சொல்லும்
இடையில் உறங்கிவிட்ட நீ
விழிக்கும் வைகறையில்
அது காத்திருக்கிறது
இரவெல்லாம் கண்விழித்து
உனக்கென்றே செய்தவொரு
சூரியனைப் பரிசளிக்க.

No comments: