ஆடுமேயுங் காடுகளுக்குள்
சிறுபிள்ளைகள் ஐந்தாறுபேர்
ஆர்ப்பாட்டமாய் நுழைவோம்
வேலிகளில் விழிவிட்டு
ஏதெனுமொரு ஓணான் கண்டு
ஓட ஓட
விரட்டியடித்து வீழ்த்துவோம்
வானம் பார்த்துக் கிடக்குமதற்கு
வெற்றிக் கூச்சலோடு நடக்கும்
சிறுநீர் அபிஷேகம்
எவனாவதொருவன் ஓடி
எருக்கலையிலை பறித்து வந்து
பாதி திறந்த
அதன் விழிகளில்
பால் பொழியவிட
கழுவிலேற்றிய வேதனையில்
திசையின்று ஓடும் ஓணானை
ரசித்து நின்றிருந்த நான்
இன்றொரு ஓணான்.
No comments:
Post a Comment