உன் மடியில்
கிடந்தவாறே
வருடலுக்கு ஏங்கும்
பூனைதான் நானெனினும்
செல்லம் கொஞ்சத்தக்கவைகளிடம்
அதை மட்டுமே செய்யவேண்டும்
பூனைகள் வேறாய் தெரிவது
வெறும் காட்சிப்பிழையன்று.
**
பணிவிடைகள் செய்து
பவ்வியம் காப்பவனே
நுரைமுழுக்க அவனுக்கு
மது முழுக்கவும்
மஞ்சள் கருவும் எனக்கு
வெறுக்கின்ற வெள்ளைக்கரு
காலடிக் குக்கலுக்கு
பாத்துக்கலாம் போ.
**
நேற்று
கீழ்த்தளத்தில் இழவு
நேற்றே
மேல்த்தளத்தில் முதலிரவு.
**
விசும்பவுந்திராணியற்று
சுருண்டு கிடக்கும்
வாடகைச் சிசுவோடு
கானல் மிதக்கும் சாலையில்
கையேந்துகிறாள் ஒருத்தி
யாரோ ஒருத்தியின்
மார்க்காம்பில்
விஷம் தேங்குகிறது.
No comments:
Post a Comment