Oct 20, 2024

புனிதன்

புனிதனென்று
உங்களால் பட்டங்கட்டப்பட்டவன்
தன் பாவங்களின் மூட்டையோடு
வெளியெங்கும் அலைகிறான் நிராதரவாய்

ஒளி வட்டத்திற்குள்
சிறை வைக்கப்படுவதின் துயரம்
படர்ந்திருக்கிறது அவன் கண்களில்

தன்னைக் கண்டால்
பூக்கள் சுருங்குவதாகவும்
குளிர்காற்று வேறுதிசை நகர்வதாகவும்
அவன் பாவித்துக் கொள்கிறான்.

வெகு சுதந்திரமாய்
பாவங்கள் புரிகிறவர்களைக் காண்கையில்
ஆச்சரியத்தில் உறையும்
சிறுவனாகவும் ஆகிப்போகிறான்.

நீங்களோ
கோவில் மண்டபத்தில்
கிடக்குமவனுக்காக
கடவுளைக் கைவிடுகிறீர்கள்
தாகத்திற்கு தேனீர்க்கடையோரம் ஒதுங்கினால்
சுத்தப்பாலில் தயாரிக்கிறீர்கள்
அவன் புலம்பல்களை
பிரார்த்தனையென்று பாவிக்கிறீர்கள்

புனிதன் உச்சிக்கரட்டில் திரிவதாய்
நீங்கள் கதைத்துக்கொண்டிருந்த
கோடைகாலப் பகலொன்றில்
ஆடோட்டிப்போன சிறுவர்கள்
அலறித் திரும்புகின்றனர்
பாம்புரித்த சட்டையாய்
புனிதன் கிடப்பதாய்

உங்கள் ஒலங்களை
சுமைகளற்ற செளகரியத்தில்
சங்கீதமென ருசிக்கத் துவங்குகிறான்
புனிதங்களின் பாவனைகளை
விடுத்த ஒருவன்.

No comments: