நெடுங்காலம் நீ
புழங்கிய வீட்டின் கதவுகள்
உனக்கெதிராய்
ஒரு பொழுதில்
அறைந்து சாத்தப்படுகின்றன.
அத்தீராத் துயரின் சுடர்
உனக்குள் எரிந்துகொண்டே இருக்கிறது
ஆனால்
மொத்தமாய் சபிக்கப்பட்ட நாளொன்றில்
மீண்டும் நீ
அக்கதவுகளையே தட்டவேண்டியவனாகிறாய்
உன்னை மேலும் துயரப்படுத்த
இப்பொழுது கதவுகள் திறக்கின்றன.
எரியும் கூச்சத்தோடு அமர்கிறாய்
பிளாஸ்டிக் முட்செடியாகிறது
வெளிறிய பச்சைவண்ண சுவர்களிலிருந்து
பூதங்கள் தோன்றி பயமூட்டுகின்றன.
வழக்கமாய் தோளேறிக் குதிக்கும்
அவ்வீட்டுக் குழந்தை
தூரம் காத்து வெறிக்கிறாள்
சற்றே ஆறுதலூட்டுகிறார்
புகைப்படக் கடவுள்
எப்போதும் போல் புன்னகைத்து.
விடைபெற்று வெளியேறுகிறாய்..
உன் பிரியத்தின் பொங்குகள்
கண்ணெதிரே பூச்சிகளாகின்றன.
ஒரு துயரப்பாடல்
உன் குருதியெடுத்தே
தன்னை உனக்குள்
எழுதத் துவங்குகிறது.
No comments:
Post a Comment