அந்தியின் கண்கள்
மஞ்சள் ஒளியை
தும்பைப் பூக்களில் வந்தமரும்
வண்ணத்துப்பூச்சிகளின் மேல்
வரைகின்ற மாலையில்
தன் காணியில் திரிகிறான்
தவணைகளில் ஊர் வருகிறவன்
தேகம் நனைத்துக் கடக்கிறது
தென்னை இடையூறிய காற்று
ஆடுகள் மேயும்
அரவம் மேய்ந்தவன்
நெருஞ்சி பூத்த வரப்பில்
நினைவழிந்து நடக்கிறான்
குத்திய தாரைகளில்
இதமாய் ஏறுகிறது புழுதிச்சூடு
சுருண்டு வரும் சூலைக்காற்றோ
சருகுகளை சொருகிக்கடக்கிறது.
அரைப்பனை உயரத்தில்
சிறுநிலவு கிடக்க
கவியும் இருளில்
கிறங்குகிறது கானகம்
கட்டித்தாரை சொக்கப்பனையில்
பூச்சிகளும் தெனேசும்
விழுந்து பொரிய
சுடுகொண்டு சுகம் கொள்கின்றன
ஆநிரைகள்
கொக்குகள் வடக்கே போய்விட
பூத்துக்குலுங்கி சாளை திரும்பும்
நினைவில் காடுள்ளவன்
நாளை பெருநகரத்தில்
உங்களைக் உரசிக் கடப்பான்.
No comments:
Post a Comment