Oct 20, 2024

சுவரெங்கும் அசையும் கண்கள்

வேட்டைக்காரன் உனக்கு
நேசம் வழியும் கண்களே
பிரியமானவைகளாக இருக்கின்றன.

அம்புநுனியின் கூர்மையும்
மருண்ட விழிகளின் ஈரமும்
நேர்மோதும் புள்ளி நோக்கிய
உன் நடை
பேருவுகையானதாக இருக்கிறது

நெற்றி பூத்த வியர்வைக்கு
பரணிகள் விசிறியாக
நீ வேட்டையாடிய
உயிர்களின் கண்கள் தனியெடுத்து
பாடம் செய்து பொறிக்கின்றாய்
தினவின் திமில்களாய்

சுவர்கள் கண்களால்
நிரம்பிய காலத்தின்
ஏதோவொரு துர்கணத்தில்
உன் கழுத்தடியில் சுடுகின்றது
ஓர் அருவப் பெருமூச்சு.

மருண்டு திரும்பும் உனக்கு
மெல்ல புலனாகத் துவங்குகின்றன
சுவரெங்கும் அசையும் கண்கள்.

No comments: