Oct 20, 2024

மின்மினி

சுவர்கள்
குளுமையேற்றிக் கொண்டிருந்த பொழுதொன்றில்
வாய்த்தது
மெழுகுத்திரியின் மீதிருந்த ஒளியும்
நானும் தனித்திருக்க

பேரொளிப்பரப்பின் சிற்றசைவில்
ஒளித்துகளொன்று தனித்தேகிய பிரம்மகண்த்தில்
அஃதெனக்கு வழங்கத் துவங்கியது
தன் ரூப தரிசனங்களை

கடுவிடங்கொண்ட அரவத்தின்
படமெடுத்த சிரசாய்
முற்றிச் சாய்ந்த நெற்கதிராய்
கூப்பிய கரங்களாய்
பென்சிலின் சீவப்பட்ட முனையாய்
குறிகொள்ள சுரந்த யோனியாய்
பெயர்களற்ற வடிவங்களாய்

நீண்டு தொடர்ந்து

தட்புதைந்த இருளையுங் காட்டி
ஒளி விடைபெற்ற அவ்விரவில்
உன் ஜன்னலின் வழிக்கடந்த
அம்மின்மினி நான்தான்.

No comments: