Oct 20, 2024

ஒரான் பாமுக்-கறுப்புப் புத்தகம்

                                      

இன்று காலை அகிலன் எத்திராஜ் அவர்களின் பதிவைப் பார்த்தவுடன் ”இன்ப அதிர்ச்சி” என்று சொல்வார்களே… நிஜமாகவே அதை அடைந்தேன். அவரது மொழிபெயர்ப்பில் தமிழில் காலச்சுவடு உலக கிளாசிக் வரிசையில் வெளியாகும் பாமுக்கின் “The Black Book” நாவலைக் குறித்த அறிவிப்பு. இந்த நாவல் தமிழில் வெளியாகவேண்டும் என்ற நீண்டகால அவாவை நண்பர்கள் பலருடன் பகிர்ந்து கொண்டதுண்டு.

பாதி வாசித்துவிட்டு வைத்த A strangeness in my Mind நாவலுக்கும் பின் இப்போது பாமுக்கை முன்புபோல் தொடர்வதில்லை. அவ்வப்போது அவரது புகைப்படத்தைப் பார்த்துக்கொள்வதோடு சரி. ஆனால் அது எப்போதும் விட்டுப்போகாத வாசக உறவுதான். டால்ஸாயையோ தஸ்தாவெஸ்கியையோ தங்கள் ஆதர்சமாக சென்ற தலைமுறை எழுத்தாளர்கள் சொல்வார்களே, அதுபோல. என்னை பாமுக்கின் double ஆக நினைத்துக்கொண்டு மடிவாலா மாருதி நகரின் பனிரெண்டு பின்தெருக்களில் இரவுகளில் நடைபோயிருக்கிறேன். பெங்களூரு இஸ்தான்புல்லாகத் தோன்றியிருக்கிறது.

பல வருஷங்களுக்கு முன்பு பெங்களூருவில் நண்பர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் மற்றும் சீனிவாசன் ஆகியோரின் முயற்சியில் முருகபூபதியின் ’சூர்ப்பணங்கு’ நாடகம் நிகழ்ந்தது. அன்றைய இரவு விருந்தில் நண்பர் ஒருவர் ”பாமுக் ஒரு துப்பறியும் எழுத்தாளர்” என்று சொல்லிவிட எனக்கும் அவருக்குமிடையே ”விவாதம்” சூடாகி “கைகலப்பில்” முடிந்தது. பிறிதொரு சமயம் கோணங்கியின் இல்லத்தில் சந்திந்தபோது அந்த நண்பரும் நானும் பழைய சம்பவத்தை நினைத்து சிரித்துப்பேசி எங்களுடைய ”சிற்றிதழ் சகோதரத்துவத்தை” மீண்டும் புதுப்பித்துக்கொண்டோம். இரண்டு வருசத்திற்கு முன்பு சேலத்தில் இன்னொரு நண்பர் இதே கருத்தைச் சொன்னார். நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டேன்.

இப்போது பாமுக்கை மதிப்பிட்டால் முன்பைப்போல் அவ்வளவு கிளர்ச்சியடைய மாட்டேன். ஆனால் அவரைத் தொடர்ச்சியாக வாசித்த காலகட்டத்தில் அவருடைய எழுத்து கொடுத்த அனுபவம் அலாதியானது. பாமுக் மற்றும் முராகமியைக் குறித்த ஒரு தவறான பார்வை ’வெகுஜனத்தன்மை’ என்ற கோணத்தில் தமிழ் இலக்கிய உலகத்தில் இருக்கிறது. தெளிவாகச் சொன்னால் பாமுக் நாவல்கள் உள்ள மர்மம் மற்றும் துப்பறிதல், சுஜாதாவோ ஒப்பிட்டுச் சொல்லப்படும் முரகாமியின் lucid prose, ஆங்கிலத்தில் வாசிக்கும் முதல் தலைமுறை தமிழ் வாசகர்களுக்கு இவர்கள் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள் போன்ற காரணங்களே அவை. இந்தக் கருத்துக்களை தமிழ்ச்சூழலில் உருவாக்கியது ஜெயமோகன் (அவருடைய சில கட்டுரைகளின் மூலம்) மற்றும் சிற்றிதழ் மதிப்பீட்டுப் பிடிப்பு கொண்ட சில கவிஞர்களும் எழுத்தாளர்களும் என்பது என்னுடைய அவதானிப்பு.

பாமுக்கைப் பொறுத்தவரை இந்தக் கருத்துக்கள் வெகு எளிமையானவை என்பது என் எண்ணம். ஜெயமோகனைப் போன்றவர்கள் ஒரு கருத்தைச் சொல்லும்போது பெருந்திரளான வாசகர்களால் அது ஆராயப்படாமலேயே ஏற்றுக்கொள்ளப்படும் விபத்து நிகழ்ந்துவிடுகிறது. பாமுக் நாவல்களைக் குறித்த ஒரு விரிவான கட்டுரையை எழுதச்சொல்லி கோணங்கி பலமுறை கேட்டும் முடியாமல் போய்விட்டது. குறைந்தபட்சம் இப்போது இந்தக் குறிப்பு. பாமுக் நாவல்களில் உள்ள மைய அச்சுக்கள் எவை என்று சுருக்கமாக வரிசைப்படுத்திப் பார்க்கலாம்.

1.கிழக்கு/மேற்கு என்ற இருமைக்கிடையில் சிக்கிக்கொண்ட மனிதன் அக மற்றும் புறச்சிக்கல்கள். உலகமயமாக்கம் யாவற்றையும் ஒற்றைக் குடைக்குள் கொண்டுவர முயற்சி செய்கையில் பிரதேச கலாச்சாரங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் குறித்த உள்ளார்ந்த விவாதம்.

2. தன் நிலம் குறித்த இடையறாத விசாரணை. இங்கு நிலம் என்பது இஸ்தான்புல். அதன் வரலாற்றுப் படிமங்கள், வெற்றிகள், சீரழிவுகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றை தொடர்ச்சியாகப் பதிவு செய்வது. என்னைப் பொறுத்தவரை தன் நிலத்தை எழுதும் ஒரு எழுத்தாளனை யாராலும் நிராகரிக்க முடியாது.

3. தன் ஒவ்வொரு நாவல்களிலும் கலைவடிவங்களை கதை சொல்ல ஒரு உத்தியாகப் பயன்படுத்துவது. வெள்ளைக் கோட்டையில் விஞ்ஞான அறிவியல், பனியில் கவிதை/மேடை நாடகம், the new life நாவலில் ஒரு மர்ம வசீகரப் புத்தகம், என் பெயர் சிவப்பில் நுண்ணோவியங்கள், இப்போது தமிழில் வெளியாகப்போகும் கறுப்புப் புத்தகம் நாவலில் பத்தியெழுத்து, Museum of Innocence நாவலில் மரித்தவர்களின் நினைவுகளால் உயிர்பெறும் எளிய பொருட்கள் போன்றவற்றைச் சொல்லலாம்.

4.பாமுக் நாவல்களில் தொடர்ச்சியாக நிகழும் இன்னொரு பண்பு, சுய அடையாளம்(identity) குறித்த விசாரணை. வெள்ளைக் கோட்டை மற்றும் கறுப்புப் புத்தகங்கள் இவற்றை ஆழமாக விசாரணை செய்கின்றன.

5.நாவல்களுக்குத் தேவையான detailing மற்றும் nuances போன்றவற்றை மிகச் செழுமையாக தன்னுடைய நாவல்களில் கொண்டிருப்பது.

6.அவரது நாவல்களில் இயங்கும் பின்நவீனத்துவ பார்வை தனியாக விரிவாக எழுதப்படவேண்டியது. அவர் கையாளும் மர்மம் மற்றும் துப்பறிதல் குறித்த விஷயங்களை பின்நவீனத்துவப் பார்வையில் அணுகவேண்டும். தமிழ் க்ரைம் நாவல்களில் துப்பறிதலைப் போன்ற விஷயங்கள் அல்ல அவை.

பாமுக் நாவல்களை தொடர்ச்சியாக வாசித்த 2009/10 இல் அவரது நாவல்களை காப்பிரைட் பெற்று தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற பேராசை ஏற்பட்டு சிறிய நாவல் என்பதால் வெள்ளைக் கோட்டையில் ஆரம்பித்தேன். அதனையொட்டி நடந்த நிகழ்வுகள் சுவாரசியமானவை. எப்படி காப்பிரைட் வாங்குவது என்ற குழப்பங்கள். ஏஜெண்ட் என்ற விஷயமே தெரியாது. அவருடைய மொழிபெயர்ப்பாளரான மரீன் ஃப்ரீலியில்ன் மின்னஞ்சல் முகவரியை அவர் பணிபுரிந்த பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கண்டுபிடித்து அவருக்கு எழுதினேன். அவர் பாமுக்கின் ஏஜெண்ட்டாக இருக்கும் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளும்படி அறிவுறுத்தி விவரங்களை அளித்தார்.

ஜேம்ஸ் என்பது அவர் பெயர். ஐநூறு டாலரில் ஆரம்பித்து நூறு டாலரில் வந்து நின்றது தொகை. பாமுக், பணத்தை பொருட்டாக மதிப்பவர் அல்ல என்று சுட்டிய ஜேம்ஸ் அந்த நூலை வெளியிடப் போகும் பதிப்பகம் குறித்த விவரங்கள், வெளியிட்டிருக்கும் நூல்களின் முகப்பு அட்டை போன்றவற்றை அளிக்கும்படி கேட்டார். இது ஒரு ஃப்ரீலான்ஸ் முயற்சி என்று நான் விரிவாகச் சொல்லியும் அவர் ஏற்கவில்லை. எனக்குத் தெரிந்த சில சிறிய தமிழ்ப் பதிப்பாளர்களிடம் பேசினேன். ஆனால் காரியமாக எதுவும் சித்தியாகவில்லை. 2010 ஆம் ஆண்டு நான் உருகுவே சென்றுவிட்டேன். அங்கிருந்து காலச்சுவடு கண்ணன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். இந்தியா திரும்பியவுடன் தொடர்புகொள்ளச் சொன்னார். பிறகு நான் அந்த முயற்சியில் ஆர்வமிழந்துவிட்டேன்.

பாமுக்கின் நாவல்களிலேயே மிகச்சிறந்ததும் அடர்த்தியானதும் ”கறுப்புப் புத்தகம்” என்பது என் உறுதியான எண்ணம். மேலும் இது எழுத்தாளர்களுக்கான நாவலுங்கூட. இந்தக் குறிப்பை எழுதுவதுக்கிடையில் அவ்வப்போது என்னிடமிருக்கும் The Black Book நாவலின் பழுப்பேறிய பக்கங்களின் வாசனையை முகர்ந்து பார்த்துக்கொள்கிறேன். ஒரு மொழிபெயர்ப்பு நாவல் வெளியாகும்போது அதன் தரம் குறித்து விவாதங்கள் தமிழில் நடக்கிறது. அது ஆரோக்கியமானதே என்றாலும் இந்த நாவலைப் பொறுத்தவரை நான் அதற்குள் செல்ல விரும்ப மாட்டேன். இந்த முயற்சிக்காக திரு அகிலன் எத்திராஜ் அவர்களுக்கும் காலச்சுவடு பதிப்பகத்தார்க்கும் பாமுக்கின் ஒரு ’மூத்த’ தமிழ் வாசகனாக என்னுடைய நன்றிகள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு க.விக்னேஷ்வரன் புத்தாண்டு புத்தகப் பரிந்துரையைக் கேட்டிருந்தார். The Black Book ஐ நினைத்திருந்து அவருக்குச் சொல்லாமல் விட்டுவிட்டேன். இந்த அறிவிப்பைக் காண்பதற்காகத்தான் அந்தத் தாமதம் போல. என் நண்பர்களுக்கும் தமிழ் வாசகர்களுக்கும் ஒரு சிறுவனின் குதூகலத்தோடு ”கறுப்புப் புத்தகம்” நாவலைப் பரிந்துரைக்கிறேன்.

No comments: