Oct 20, 2024

ஒற்றைப்பூ

சலனமற்றுக் கிடக்கிறது
உப்புக்கடல்

துணுக்களவு மேகமுமின்றி
நீளமாய் கனல்கிறது வானம்

தீராத விடாயில்
திசையெங்கும் வாய்விரித்து
தவிக்கிறது வேர்

கொடியில் வழியும் நிணத்தை
சுமக்கும் காற்று
எரித்தழிக்கிறது வண்ணத்துப்பூச்சிகளை

இன்று மாலை
உதிர்ந்துவிடப் போகும்
ஒற்றைப்பூவில் மட்டும்
குளிர்ந்து கிடக்கிறது
துளியளவு தேன்.

No comments: