தென் தமிழக மக்களின் ஒரு நூற்றாண்டு கால வாழ்க்கையை காட்சிப்படுத்தும் பூமணியின் அஞ்ஞாடி நாவலை மூன்று அடுக்காக பிரிக்கலாம்.
அ) பள்ளக்குடியைச் சேர்ந்த ஆண்டி மற்றும் வண்ணாக்குடியைச் சேர்ந்த மாரி இவர்களின் இளம்பிராயம்
ஆ) தென்னக மக்களின் விடுதலைப்போராட்டம் மற்றும் நாடார்கள் தங்களின் உரிமைகளை வென்றெடுக்க நடத்திய உக்கிரமான போராட்டம்
இ) ஆண்டி மற்றும் மாரியின் வம்சவரலாறு.
அஞ்ஞாடியின் தனித்தன்மை என்பது அது வரலாற்றை எளிய மனிதர்களின் வழியே பார்க்கிறது.வரலாறு என்பது பெருங்கதையாடல்களின் தொகுப்பாக நமக்கு அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தில் இந்த நாவல் பெருங்கதையாடலுக்கு எதிரான புள்ளியில் நின்று பேசுகிற காரணத்தால் இந்த நாவலை எளிய மனிதர்களின் வாழ்வைச்சொல்லும் எதிர்வரலாறு என்கலாம்.இதுவே அஞ்ஞாடியின் பின் நவீனத்துவ பண்பாக இருக்கிறது.
பூமணியின் யதார்த்தவாத நடை வாசிப்பதற்கு சொகமாகத்தான் இருக்கிறது.வண்ணாக்குடி பையனான மாரி திருட்டுத்தனமாக கொண்டுவந்து தரும் பல வீட்டுச் சோற்றின் ருசிக்கு அடிமையான ஆண்டி அனுபவிக்கும் சொகம்போல.மண்ணின் மொழிக்கு பலவீட்டுச் சோற்றின் ருசி.இந்த நாவலின் செவ்வியல் தன்மை கொண்ட பல பகுதிகளில் ஒன்றாக சுகமான ஒரு கனவைப்போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் மாரி மற்றும் ஆண்டியின் இளம்பிராய நட்புக்காலத்தைச் சொல்லாம்.கூளமாதாரி நாவலில் இதுபோன்ற நட்பை பெருமாள்முருகன் சொல்லியிருக்கிறார்.இங்கே அஞ்ஞாடியில் இது நுட்பமாக வேறுவிதமான அழகியலோடு உருவாகியிருக்கிறது.குறிப்பாக மாரி அவிழ்த்துவிடும் கதைகள்.மாரி கழுதையோடு நிலவுக்குப் போய்வரும் கதையும் தண்ணிப்பேயி கதையும் வாழ்வு புனைவாக அர்த்தப்படும் சிறுபருவத்தின் கதைகள் இருக்கின்றன.
விஸ்தாரமான நாவலில் முன்பகுதியில் பிரதானமாக பயின்று வரும் சில பண்புகளாக மண்ணின் உணவு, மண் மற்றும் மண்ணின் இசை ஆகியவற்றைச் சொல்லாம்.கொங்குப்பிரதேசத்தில் மசைக்காலம் என்பார்கள்.இது பெரும்பான்மையாக காலனிய காலத்தையும் பின்காலனியத்தின் முதல் ஒரிரு பத்தாண்டுகளையும் உள்ளடக்கிய காலம் என்பது என் அனுமானம்.மசைக்காலம் என்பதற்கு மனிதர்கள் கள்ளமற்றவர்களாக இருந்த காலம் என்பது பொதுவான புரிதல். மசைக்கால மனிதர்களின் வாழ்வென்பது சுழற்சி வடிவிலானது.அதாவது இயற்கையிலிருந்து பெற்றுக்கொள்ளுதல் மற்றும் இயற்கைக்கே திரும்பக்கொடுத்தல்.இந்த மசைக்காலப் மனிதர்கள்தான் நாவலின் ஆரம்பப் படலங்களில் நிறைந்திருக்கிறார்கள்.
மண்ணோடு இணைந்த வாழ்வை நேரிடையாக விவரித்துக்கொண்டு போகும் நாவலின் போக்கில் தாதுவருஷ பஞ்சம் வரும்போது திருப்பம் நிகழ்கிறது.இந்த இடத்தில்தான் நாவல் வரலாற்றுக்குள் நுழைகிறது.பஞ்சத்தை விவரிக்கும் படலங்கள் உக்கிரமாக வெளிவந்திருப்பதற்கு காரணம் நாவலின் முன்பகுதிகளில் பிரதானமாக சொல்லப்படும் சோற்றுக்குறிப்புகள் அல்லது உண்ட பொற்காலங்கள்.இப்படியெல்லாம் உண்ட மனிதர்கள் சோற்றுக்கில்லாமல் செத்தார்கள் பார் என்று சொல்கிறது.பஞ்சம் என்பது ஒருவகையில் இயறகையின் நோய்க்காலம் தானே? அது முதுகைத் திருப்பிகொண்டால் மனிதன் செய்யும் பிரயத்தனங்களுக்கு எவ்வித பலனும் விளையப்போவதில்லை.செத்தவரின் பிணத்தைக் காலையில் சுமந்தவன் மாலையில் பிணமாகும் வாழ்வுதான் தாதுவருஷ பஞ்சத்தின் வாழ்வாக இருந்திருக்கிறது.
கழுகுமலை, எட்டையபுரம்,சிவகாசி ஆகிய பிரதேசங்களை மையம் கொண்டு நகரும் நாவலின் இரண்டாவது அடுக்கு பின்ரும் பல சரடுகளை இணைத்துப் பின்னப்பட்டிருக்கின்றன.
1.சமணக் கழுவேற்றம் மற்றும் கழுகுமலையின் வரலாறு
2.கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர் ஆகியோர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்திய விடுதலைப்போராட்டங்கள்
3.எட்டயபுரம் ஜமீன் வரலாறு
4.நாடார்களுக்கும் ஏனைய ஆதிக்கசாதிகளுக்கும் இடையில் நிகழ்ந்த கலவரங்கள் மற்றும் வழக்குகள்
5.தென்தமிழகத்தில் கிறிஸ்துவம் காலூன்றுதல்
இன்றைய காலத்தில் வரலாற்றை புனைவாகச் சொல்லும்போது அதற்குள் ஒரு சிந்தனைச் செயல்பாடு தேவைப்படுகிறது.வெறும் சம்பவங்கள் நமக்கு தேவையில்லை.அது பாடப்புத்தகத்திலேயே இருக்கிறது அல்லது வேறு வழிகளில் அறிந்துகொள்ள முடிகிறது.மேற்சொன்ன இரண்டாவது அடுக்கில் விவரிப்பின் பலத்தில் நிற்கும் சில பகுதிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வெறும் ஆவணமாக, சிந்தனைச் செயல்பாடு அற்ற சக்கையாக இந்த இரண்டாவது பகுதி வந்திருக்கிறது.யதார்த்தவாத எழுத்தாளரான பூமணியால் வரலாற்றின் சிடுக்குகளை, அதன் உள்ளரசியலை புரிந்துகொள்வதற்கான நுட்பங்களை வாசகனுக்கு கோடிட்டுக்காட்டும் விசாரணைகளை நிகழ்த்த முடியவில்லை. நீதிமன்ற ஆவணங்களாகவும் எண்ணற்ற பெயர்களாகவுமே இப்பகுதி எஞ்சுகிறது.புனைவிற்கு தேவையான சம்பவங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு இன்னபிறவற்றை அவர் சாரப்படுத்தியிருக்க வேண்டும்.
இந்த இரண்டாவது அடுக்கில் புனைவாக்கத்தில் இப்படிப்பட்ட ஒரு குறைபாடு இருந்தபோதும் நிலவுடமை சமூகத்தில் சாதியத்தை தனிநபர்களின் வழியாகவே பார்த்த தமிழ் நாவல் பரப்பில் சாதி மற்றும் சாதிகளுக்கிடையேயான முரண் ஆகியவை குறித்த ஒரு ஒட்டுமொத்தப் பார்வையை அளிப்பதில் இந்த நாவல் முக்கிய பங்களிக்கிறது.சமணக்கழுவேற்றம்/சிவகாசிக் கலவரம் போன்றவற்றை விவரிக்கும் பூமணியின் எழுத்து, மனிதனின் ஆதாரமான மிருக உணர்ச்சிகளில் ஒன்றாக மதமும் சாதியும் ஊறியிருப்பதை கவனப்படுத்துகிறது.
நாவலின் மூன்றாவது அடுக்கு கலிங்கல் கிராமமும் ஆண்டி மற்றும் மாரியின் வம்சாவழி நவீன காலத்திற்குள் நுழைவதாக இருக்கிறது.சினிமாவின் வருகை, கல்வி, மருத்துவம் மற்றும் சிவகாசியின் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் எனப் பரந்து இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று இந்த நாவல் முடிகிறது.
மேற்சொன்ன மூன்று அடுக்குகள் என்ற என்னுடைய பகுப்பு வெகு எளிமையானது.ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டிருக்கும் நாவலில் ஏராளமான உபகதைகள், கதாபாத்திரங்கள் அவர்களின் வாழ்வு என விரிந்து நிற்கும் ஒரு பெரும் ஆலமரமாக அஞ்ஞாடியைச் சொல்லலாம்.
இந்த நாவலில் வரும் இரண்டு காதல்கதைகள் மிக முக்கியமானதாக தோன்றுகிறது.ஒன்று மரபான தன்மை கொண்ட வீரம்மா-கருத்தையன் காதல். இரண்டாவது மரபுக்கு எதிரான தன்மை கொண்ட ஆண்டாள்- அல்லுண்டு காதல்.வீரம்மாளின் வாழ்வு ஒளிந்து வாழும் கணவன் கருத்தையனுக்காக காத்திருந்து கழிகிறது.இறுதிவரை அவளுக்கு குழந்தையில்லை.சற்றே காவியத்தன்மை மேவிய காதல்.ஆனால் கணவனை இழந்த ஆண்டாளுக்கும் அல்லுண்டுக்குமான காதல் யதார்த்தமானது.உறவில் கூடும் கர்ப்பத்தை ஒவ்வொருமுறை கலைக்கும்போது அதன் எச்சங்களை சுமந்து சென்று அல்லுண்டு புதைப்பதும் பிறவாமல் அழிந்த சிசுக்கள் உயிர்த்தெழுந்து ஆண்டாளை வதைப்பதுமான இந்தக் கதையை நாவலின் உச்சமான பகுதிகளில் ஒன்றாக சொல்ல்லாம்.
மனதின் ஆதார உணர்ச்சிகளையும் மனித வாழ்வின் பல்வேறு நிலைகளையும் தொட்டுச் தொட்டுச் செல்லும் அஞ்ஞாடியில் வாசித்துத் துய்ப்பதற்கும் விவாதித்து அறிவதற்கும் திறப்புகள் உள்ளன.
நாவலுக்கு பின்னுரை எழுதியுள்ள என்.சிவராமன் சொல்கிறார்.தமிழில் நல்ல நாவல்கள் இருக்கின்றன.ஆனால் great நாவல் இல்லை.இன்னும் எழுதப்படாத அந்த great நாவலுக்கு மிக அருகில் வந்திருக்கிறது பூமணியின் ‘அஞ்ஞாடி…”
என் மனமும் மூளையும் அஞ்ஞாடியை ”நல்ல நாவல்” என்று மட்டுமே சொல்கின்றன.

1 comment:
நான் எப்போதுமே வரலாற்றை விரும்புகிறவன், அதிலும் நம் தமிழகத்தின் மக்கள் வரலாற்றை அறிந்து கொள்வதில் எனக்கு மிகவும் விருப்பம் கட்டாயம் வாங்கிப் படிக்கவேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன் .
நன்றி ,
கிருஷ்ணசாமி சேகர் ,
கன்னித்தமிழ் நாடு
sekark8@yahoo.com
Post a Comment