Jul 13, 2014

புகைப்பதைக் கைவிடுதல்

                                        

சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் கைவிட்ட 272 வது நாளில் அதைப் பற்றிய தன் அனுபவங்களை எழுதியிருக்கிறார் ஓரான் பாமுக். புகைப்பழக்கத்தைக் கைவிடுதல் என்ற அந்தக் கட்டுரை அவருடைய other colours தொகுதியில் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன் அதை வாசிக்கையில் எப்போதாவது புகைப்பழக்கத்தை கைவிட்டால் நாமும் இதைப்போன்ற ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று ஒரு கணம் நினைத்துவிட்டு மறந்துவிட்டேன். “மறந்துவிட்டேன்” என்பதற்குக் காரணம் என்றைக்குமே புகைப்பதை கைவிடமுடியாது என்ற நம்பிக்கை வெகு ஆழமாக எனக்குள் இருந்தது. சிகரெட் இல்லாத வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை.கடந்த பத்துப் பனிரெண்டு ஆண்டுகளில் புகைக்காமல் இருந்த அதிகபட்ச நேரம் துபாயிலிருந்து மாண்டிவீடியோவிற்கு பயணித்த பதினைந்து மணி நேரம்தான்.

சிக்கலானது, கடினமானது என்று நினைக்கும் காரியங்கள் சில ஜஸ்ட் லைக் தட் ஆக நிகழ்ந்துவிடுகின்றன. எவ்வளவு யோசித்தாலும் எப்படி அந்த கணத்தைக் கடந்தோம் என்பது குழப்பமாக இருக்கும். அப்படித்தான் இது நான் புகைப்பதைத் தவிர்க்கும் ஐந்தாவது நாளும். ஒரு நாள்கூட சிகரெட் இல்லாமல் வாழமுடியாது என்று நினைத்தவனுக்கு இந்த ஐந்து நாட்கள் பெரிய மலைப்பாக இருக்கிறது. புகைக்கத் தூண்டும் தாபம் முற்றிலும் நினைவிலிருந்து அழிய ஐந்தாண்டுகள் ஆகும் என்று சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பத்தியில் வாசித்திருக்கிறேன். நியாயப்படி பார்த்தால் ஐந்தாண்டுகள் கழித்துத்தான் இதை எழுதவேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக இருக்கும் சுறுசுறுப்பைப் பற்றி, புதிதாக வெளிச்சப்படும் உலகத்தைப் பற்றி பகிர்ந்தே ஆகவேண்டும். ஒருவேளை நான் ”மறுபடியும் புகைக்க” ஆரம்பித்து, பின்னர் சிகரெட் புகைக்கும் பழக்கம் பற்றி எழுதினால், அப்போது இந்த ஐந்து நாள் புத்துணர்வு ஆறிப்போயிருக்கும். ”மறுபடியும் புகைக்க” என்பதை டபுள் கோட்ஸிற்குள் போட்டிருப்பதற்கான காரணம் புகைப்பதைக் கைவிட முயன்றுகொண்டிருக்கும் செயின் ஸ்மோக்கர்களுக்கும், கைவிட்ட சாதனையாளர்களுக்கும் தெளிவாகப் புரியும்.

                                        

போர் முனையில் நிற்பவன் மட்டும் வீரனல்ல, புகைப்பதைக் கைவிட்டவனும் வீரன்தான் என்றும் அந்த elite club இல் நானும் ஒருவனாகிவிட்டேன் என்றும் நினைக்கும்போது என் நெஞ்சு விம்முகிறது (ஆரோக்கியமாகத்தான்). புகைப்பழக்கம் எப்போது அறிமுகமானது என்று யோசித்துப் பார்க்கையில் இருபத்து இரண்டு ஆண்டுகள் பின்னேகி பனிரெண்டாவது வயதிற்குப் போகவேண்டியிருக்கிறது. அதோ… அந்தக் குட்டிச்சுவர் கண்முன்னால் விரிகிறது. கொறக்கட்டையா அல்லது முழு பத்தாம் நெம்பர் பீடியா என்பது சரியாக நினைவிலில்லை. ஆனால் முதல் இழுப்பில் நாவில் படிந்த கசப்பும் எழுந்த இருமலும் இப்போது யோசிக்கும்போதும் நினைவில் எழுகின்றன. திருட்டுத்தனமாக நண்பர்கள் பழக்கிவிட்டது பின்னர் ஆட்டிப்படைக்கும் பழக்கமாக மாறப்போவது அன்றைக்குத் தெரியவில்லை. முழுக்க நண்பர்களை மட்டும் குற்றம் சொல்லமுடியாது. எனக்கும் ஏதோ ஒரு ஆர்வம் இருந்திருக்கிறது.

தொண்ணூறுகளின் முற்பகுதியில் எங்கள் கிராமத்தில் திருட்டுத்தனமாக பீடி குடிக்காத சிறுவர்களே இல்லை எனலாம். குருவி கூடு கட்டுவதற்கு முன்னரே கொறக்கட்டை குடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். எங்களுக்கு முந்தைய தலைமுறையும் அப்படித்தான். ஒவ்வொரு சிறுவனுக்கும் புகைப்பது என்பது ஏதோ ஒரு ritual ஆக மாறியிருந்தது. பெரியவர்கள் இதைப் பற்றி அறிந்திருந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் நண்பர்கள் யாரும் புகைத்து மாட்டிக்கொண்ட கதைகள் பெரிதாக ஏதுமில்லை. திரைமறைவில் கனஜோர். அதற்கு ஏதுவாக ஊருக்குள் பாழடைந்த வீடுகளும் குட்டிச்சுவர்களும் இருந்தன.

மற்றவர்களின் புகைப்பழக்கத்திற்கான சமூகக் காரணங்களை ஆராய விரும்பவில்லை. அவை எத்தனையோ இருக்கலாம். கிழவிகள் புகைத்துக்கொண்டு நூறாண்டு வாழ்ந்த சமூகம்தான் நம்முடையது. மேனாட்டு ப்ராய்டும் இந்நாட்டு ப்ராய்டுகளும் புகைப்பழக்கத்திற்கான ஆதாரமான காரணங்கள் பலவற்றைச் சொல்லியிருக்கலாம். என்னுடைய புகைப்பழக்கத்திற்கான காரணங்களாக ஆராய்வதாக மட்டும் சுருக்கிக் கொள்ளும்போது சிலவற்றை தொகுக்க முடிகிறது. ஒன்று, கிராமத்தில் எங்களுடைய தந்தைமார்களும் மூத்தோர்களும் புகைத்தார்கள். இரண்டு, சீக்கிரம் பெரியவனாக ஆகவேண்டும் என்ற எண்ணம். மூன்று, திருட்டுத்தனமாக புகைப்பதில் இருந்த சாகச உணர்வு. நான்கு, ஸ்டைலாக சிகரெட் பீடி குடித்த சினிமா கதாநாயகர்களின் வெறிபிடித்த ரசிகனாக இருந்தது. இதனைத் தவிர்த்து எனக்கும் என் நண்பர்களுக்கும் பெரிதாக காரணங்கள் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. இதில் நான்காவது காரணம் மிக முக்கியமானது. நாங்கள் சினிமா கதாநாயகர்களை அப்படியே பிரதியெடுத்தோம். தலையில் கர்ச்சீப் துணியை மடித்துக் கட்டிக்கொள்வது, சட்டை பட்டன்களை கழற்றிவிட்டுக்கொள்ளுதல், பீடியை வாயிற்குள் மடித்து வெளியே எடுத்தல் இதெல்லாம் சிறுவர்களாகிய எங்கள் ஆளுமையின்(!?) சிதறல்கள்.

                                            


பனிரெண்டு வயதில் அறிமுகமானாலும் பதினெட்டு வயதுவரை வாரத்திற்கு ஒன்றிரண்டு முறை மட்டும் புகைப்பவனாக இருந்தேன். பத்தாம் நெம்பர் பீடி அல்லது நார்த் போல் அல்லது கொறக்கட்டை, எங்களுடைய பேவரேட் இவைதான். கொறக்கட்டை பீடி தேடுவது ஒரு பெரிய இயக்கமாகவே நடக்கும். அதாவது புகைப்பவர்களின் வீடுகளுக்குச் சென்று அங்கே புகைத்துப் போடப்பட்டிருக்கும் துண்டுபீடிகளை திருட்டுத்தனமாக பொறுக்கி வந்து குட்டிச்சுவர்களுக்குள் புகைப்போம். வீடுகளில் பொறுக்க வழியில்லாத நாட்களில் வீதியில் பொறுக்குவதும் நிகழும். நிற்க, இதனையொட்டி புனைவிற்கு தகுதிபெறும் சம்பவங்களும் அனுபவங்களும் நிறைய இருப்பதால் இங்கே அ-புனைவில் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

மேல்நிலைப்பள்ளிக் காலத்தில் தினமும் இரண்டு சிகரெட்டுகள் புகைப்பவனாக மாறியிருந்தேன். கோல்டு பில்டர் பருவம். எங்கள் வகுப்பில் நான் மட்டுமே புகைப்பவன். கிராமத்திலிருந்த மேல்நிலைப்பள்ளி. மதியச்சாப்பாடு சாப்பிட தோட்டங்களின் கிணற்றடிக்குப் போவோம். சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிகரெட், பிறகு சாயங்காலம் பள்ளி முடிந்து திரும்பும்போது ஒன்று. எங்கள் வகுப்பில் நான் புகைப்பது சக மாணவர்களுக்கும் சில ஆசிரியர்களுக்கும் தெரியும். ஆனால் மாணவர்கள் மேல் தனித்த அக்கறை கொண்ட அறிவியல் ஆசிரியரைத் தவிர யாரும் நேரிடையாக வகுப்பில் அறிவுறுத்தமாட்டார்கள். ஒருவன் டீன் ஏஜ்ஜில் பழகும் பழக்கங்களை கடைசி வரை விட முடியாது என்றும் ஆகவே இப்பருவத்தில் கெட்ட பழக்கங்களைப் பழகாமலிருப்பது மிக முக்கியமானது என்றும் சொல்லிவிட்டு அறிவியலார் என்னை ஒரு பார்வை பார்ப்பார். நான் தலையைக் குனிந்துகொள்வேன்.

கல்லூரிக் காலத்தில்தான் புகைப்பதற்கான ”தத்துவ காரணங்கள்” மங்கலாக புலப்பட ஆரம்பித்தன. புகைப்பழக்கம் இலக்கியவாதியின் இன்றியமையாத ஒன்றென்றும் மனதில் பதிந்துவிட்டது. சற்றே aloof ஆன என் இயல்பிற்கு மிகச்சிறந்த நண்பனாக சிகரெட்டை உணர ஆரம்பித்தேன். இளங்கலைக் காலத்தில் ஒரு நாளைக்கு மூன்று நான்கு என்ற எண்ணிக்கை முதுகலைக் காலத்தில் ஒரு பாக்கெட் ஆனது. கோல்டு பில்டர் காலம் முடிவடைந்து வில்ஸ் காலம் துவங்கியிருந்தது. ஸ்ரீரங்கம். இளமையும் கனவுகளும் கற்பனைகளும் போதையும் முயங்கிக்கலந்த அந்த இரண்டாண்டுகளில்தான் கைவிடவே முடியாத அளவிற்கு புகைப்பழக்கத்தின் அடிமையானேன் என்று நினைக்கிறேன். இரண்டாயிரத்து ஐந்தில் பெங்களூர் வந்தபின்னால் தினமும் சராசரியாக ஒரு பாக்கெட் கிங்ஸ் புகைத்திருக்கிறேன். கூடக் குறையவும் இருக்கும்.

                                    

உருகுவே சென்றபோது அந்த நாட்டைச் சேர்ந்த எங்கள் அலுவலக நண்பன் சுருட்டு கொடுத்து வரவேற்றான். ஆச்சரியத்தோடு கேட்டபோது அதுதான் புதியவர்களை வரவேற்கும் பண்பாடு என்றான். தோழன், தோழி மற்றும் நான் மூவர் சென்றிருந்தோம். மூவரிடமும் ஆளுக்கொரு சுருட்டைக் கொடுத்தவன் தோழியை மட்டும் அணைத்து வரவேற்க நாங்கள் இருவரும் நமட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டோம். மற்ற இருவருக்கும் புகைப்பழக்கம் இல்லாததால் மற்ற இரண்டும் என்னிடமே வந்து சேர்ந்தன. அவற்றை தனியொருவனாக புகைத்து முடித்தேன். எடுத்துப்போயிருந்த ஒரு கார்ட்டன் கிங்சைஸ் ஒரே மாதத்திற்குள் தீர்ந்துவிட பிறகு மால்பெரோவிற்கு மாறினேன்.விஸ்கி என்றொரு சுருட்டு வகை கிடைக்கும். கிங்ஸைவிட சற்றே நீளமாக இன்னும் கொஞ்சம் தடிமனாக இருக்கும். ஐம்பத்தைந்து பீஸோ, இரண்டு டாலர். வாரயிறுதி இரவுகளில் கடலைப் பார்த்துக்கொண்டே அதைப் புகைத்துக்கொண்டிருப்பேன்.

இளங்கலைப் படிக்கும்போது ஊருக்குப் போகையில் அல்லது வருகையில் திருப்பூரில் மகுடேசுவரனை அவரது அலுவலகத்தில் சிகரெட் வாசனையோடு சந்திப்பேன். கவிதையோடு சேர்த்து ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவர் பேசும்போது கவிதையை மட்டும் காதில் வாங்கிக்கொண்டு மற்றதை காற்றில் விட்டுவிடுவேன். இலக்கியக் கூட்டங்களுக்கு அல்லது சேலம் செல்லும்போது சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் என் நண்பர்கள் வட்டத்தில் என்னளவிற்கு புகைத்தவர்கள் யாருமில்லை என்றுதான் நினைக்கிறேன். ஐந்தாண்டுகளுக்கு முன்னால் தஞ்சாவூரில் ஒரு கூட்டத்தில் சந்தித்த கணேசகுமாரன் நான் புகைக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கையை பார்த்துவிட்டு கவலைப்பட்டான். கவிதையின், பேச்சின், குடியின் போதையோடு சேர்ந்து எனக்குப் புகைப்பதின் போதையும் சேர்ந்துகொள்ளும். என்ன செய்ய? எல்லாமே ஒருவகை மனப்பிராந்திதான். இன்னும் அப்பாவிற்கு தெரியாமல் சிகரெட் குடிக்கும் பயல்டா நீ என்று விளையாட்டாக கோணங்கி சொல்வார். ஒருவகையில் அது உண்மைதான்.

இது எங்கு போய் முடிந்தது என்றால் ஒரு தனித்த கணத்தை எதிர்கொள்ளும்போது, அது மகிழ்ச்சியோ அல்லது துயரமோ, சிகரெட் இல்லாமால் அந்த அனுபவம் பூரணமடைவதில்லை என்று நம்ப ஆரம்பித்துவிட்டேன். ஏதாவது ஒரு புதிய ஊருக்குச் சென்றால் பேருந்திலிருந்து இறங்கியவுடன் முதல் வேலையாக ஒரு டீயும் தம்மும் அடித்து முடிக்கவேண்டும். அதுதான் நான் அந்த ஊருடன் பந்தத்தை ஸ்தாபிக்கும் நிகழ்வு. யாராவது ஸ்ரீவில்லிப்புத்தூர்க்காரர்களை வெளியூரில் எங்கேனும் சந்தித்து அவரின் ஊரை அறியவந்தால் ”ஆ, நான் ஊர் கோவிலின் கோபுரத்தைப் பார்த்துக்கொண்டே கிங் சைஸ் புகைத்திருக்கிறேன்” என்று சொல்லக்கூடும்.ஒரு கட்டத்தில் இந்த மாதிரியான கற்பிதங்கள் ஒரு விதமான மனநோயோ என்று அஞ்சினேன். ஆனாலும் இந்த மனப்போக்கைப் பற்றி தைரியமாக ஆராய்ந்து கொள்ள முடிந்ததால் நிச்சயம் இவை மனநோயின் அறிகுறியல்ல என்றும் தட்டையான வாழ்க்கையை புனைவாக்கிக் கொள்ள என் மனம் செய்யும் தந்திரங்கள் என்றும் நினைத்துக்கொண்டேன்.

மேலும் என்னுடைய வர்க்கப்பார்வையும் மாறிவிட்டது. உலகில் இரண்டே வர்க்கம்தான். புகைப்பவர்கள் மற்றும் புகைக்காதவர்கள்.யாரேனும் புதிய மனிதர்களைச் சந்தித்தால் அவரைப்பற்றி நான் அறியவிரும்பிய முதல் செய்தி அவர் புகைப்பவரா என்பதுதான். ஆம் என்றால் அவரோடு ஒரு சிகரெட் புகைத்து உறவுப்பாலத்தை அமைத்துவிடுவது நிகழ்ந்துவிடும். புகைக்காதவர்களுக்கு வாழ்வின் மகிழ்ச்சிகள் என்னவிதமாக அர்த்தப்படுகின்றன என்று யோசித்துக் குழம்பியதுண்டு. எத்தனையோ பேச்சுவார்த்தைக்கும் பின்னும் முடிவிற்கு வராத பெரிய பெரிய டீல்கள் எல்லாம் கோல்ப் மைதானத்திலும் சிகரெட் புகைக்கும் போதும் சட்டென்று படிந்துவிடும் என்று ஒரு பேச்சு கார்ப்பரேட் உலகில் உண்டு.

வெறியோடு புகைக்கும்போதே அதுகுறித்த குற்றவுணர்வும் இல்லாமலிருந்ததில்லை. இந்தக் குற்றவுணர்வு ஆரோக்கியத்தின் அடிப்படையிலானதா என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும் அப்படித்தான் இருக்கவேண்டும். ஏனெனில் புகைப்பது தவறானது என்ற சமூக சித்திரமே ஆரோக்கியத்தின் அடிப்படையில் அமைந்ததுதானே? எத்தனையோ முறை புகைப்பதைக் கைவிட முயன்றிருக்கிறேன். கையிலிருந்த சிகரெட்டுகளை கசக்கி எறிந்திருக்கிறேன். சாமியின் முன்னால் சத்தியம்(!?) செய்திருக்கிறேன். முடிவுசெய்த ஒன்றிரண்டு மணிநேரத்திற்குள் புகைக்கவேண்டும் என்ற எண்ணக்கழுகு வந்து என்னைத் தன் கால்களில் கொத்திக்கொண்டு போய்விடும். தோல்வியின் கழிவிரக்கத்தில் மறுபடியும் ஒரு சிகரெட். வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை கிரகித்துக்கொள்ள எத்தனையோ ஆரோக்கியமான அலைவரிசைகள் இருக்கும்போது நான் ஏன் சிகரெட்டைத் தேர்ந்துகொண்டேன் என்று குமைந்ததும் உண்டு.

ஒரு நாளின் அற்புதமான சிகரெட் அந்த நாளின் முதல் சிகரெட்தான் என்று புகைப்பவர்களுக்குத் தெரியும். மற்றெல்லாம் பழக்கத்திற்கு அடிமையானதால் எந்திர கதியான புகைத்தல்தான். புகைப்பதையும் குடிப்பதையும் சீரானவகையில் வைத்திருந்து ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்ளாத என் நண்பர்கள் சிலர் உண்டு. ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமானவர்கள். எதிலும் தரை தட்டிவிடும் அளவிற்கு மூழ்குவதுதான் நம் இயல்பாயிறே.

                                            

உதடு கறுத்தல், இருமும்போது சளியும் கோலையும் வெளிவருதல், தொண்டைக்கமறல், மூச்சிளைப்பு, மூக்குத்துவாரத்திலிருந்து ரோமங்கள் தொண்டைக்குள் அடிக்கடி உதிர்த்தல் போன்ற அறிகுறிகள் தொடங்கி கடைசியாக நான் உணர்ந்தது இருதயப்பகுதியில் ஒரு மாதிரியான உறுத்தல். வலி என்று சொல்ல முடியாது. உறுத்தல்தான். புகைப்பதின் தீமைகள் பற்றி நிறைய வாசித்து, நிறைய காணொளிகள், திரையரங்குகளில் செய்திச்சுருள்கள், தொலைக்காட்சியில் புகைக்கும் காட்சிகளின் எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் முகேஷ் இவற்றை எல்லாம் பார்த்து மாறாத மனம் சட்டென்று ஒரு கணத்தில் பூதம்போல் எழுந்து நின்ற மரணபயத்திற்கு அசைந்து கொடுத்துவிட்டது. பலமுறை பார்த்த பூதம்தான். ஆனால் தெம்பு குறையும்போது பயம் அதிகமாகத்தானே செய்யும். சமீபத்தில்தான் வெள்ளிவில் என்றொரு கவிதை எழுதினேன். சிகரெட்டை விட்டதற்கான காரணமாக மரணபயத்தைத் தான் பாமுக்கும் சொல்கிறார். இதனோடு சேர்த்து நான் சமீபத்தில் தொடர்ச்சியாக வாசிக்கும் முரகாமிக்கும் நன்றி சொல்லவேண்டும். ஆம்! நுகர்வையும் ஆரோக்கியத்தையும் இரண்டு கண்களாக கொண்ட அவரது நாயகர்களின் வழியே ஆரோக்கியம் குறித்த பிரக்ஞையை எனக்களித்தார்.

புகைப்பழக்கத்தை கைவிட நினைக்கும்போதெல்லாம் சரி கடைசியாக ஒரு சிகரெட் பிடித்துவிட்டு நிறுத்திவிடலாம் என்று நினைத்து ஒன்றைப் புகைப்பேன். அது எப்போதும் கடைசியாக இருந்ததில்லை.கடைசி சிகரெட் என்று ரொமாண்டிஸசத்தைக் எப்போது கைவிடுகிறேனோ அப்போதுதான் என்னால் முழுமையாக சிகரெட்டை விடமுடியும் என்றும் தோன்றியதுண்டு.புகைப்பதைக் கைவிட்டுவிடவேண்டும் என்று லட்சத்தி ஆறாவது தடவையாக போனவாரம் நினைத்தபோது கடைசி சிகரெட் என்ற ரொமாண்டிஸசத்தை ஒரு வழியாக தாண்டிவிட்டேன். இதோ நெடுநாள் கனவான இக்கட்டுரையையும் எழுதிவிட்டேன்.

நண்பர்களே, நாம் அடுத்தமுறை சந்தித்து தேனீர் அருந்தும்போது சிகரெட்டை நீட்டிவிடாதீர்கள். கவிதையைப் பேசிக்கொண்டே நண்பர்களுடன் புகைப்பது என்பது வாழ்வின் எவ்வளவு மகத்தான கணங்கள் என்பதை நான் உணர்ந்தேயிருக்கிறேன். அக்கணங்கள் இனியில்லை என்றும் தெரியும். என்ன செய்ய, மகத்தானவைகளை காலம் மாற்றிக்கொண்டேயிருக்கிறது.

மனதுக்கு நிறைவான ஒன்றை எழுதி முடித்தவுடன் ஒரு சிகரெட்டைப் புகைப்பது என் வழக்கமாக இருந்திருக்கிறது. இன்றைக்கு அது இல்லை. குளிர்ந்த நீர் ஒரு சொம்பு அருந்துகிறேன்.

6 comments:

தமிழ்நதி said...

அற்புதமான நடை. சிகரெட் பிடித்து அனுபவம் இல்லாவிட்டாலும், அதை விட முடியாமல் தவிப்பவர்களோடு பரிச்சயம் உண்டு. அது உண்மையில் சிரமமான காரியந்தான் போல... புகைத்தலைக் கைவிட்டதற்கு வாழ்த்துக்கள்... தொடரட்டும்.

Unknown said...

Fantastic write up

குணா கந்தசாமி said...

நன்றி தமிழ்நதி/பாரதி தம்பி.

Geetha Narayanan said...

Very nicely written. Hope it reaches all smokers.

Anonymous said...


நல்ல கட்டுரை நண்பரே...வஞ்சக
நண்பனை பிரிந்திருந்த அந்த 5 நாட்களின் மன அவஸ்தை பற்றி ,வெறுமை பாவனை பற்றி, எதையோ இழந்த உணர்வு பற்றி நாலு வரிகள் எழுதி இருக்கலாம்..போற்றி ..போற்றி..புகை போற்றி...என்று..தொழுத கையுள்ளும்
gold filter..உடனுறை உன்மத்தன் அடியேன்..

Anonymous said...

மிக்க மகிழ்ச்சி நான் தினமும் 20 சிகரெட் குடித்துக் கொண்டிருந்தவன்தான் , மால்ப்ரோதான் என்னோட ப்ராண்ட் இப்ப சிகரெட்ட விட்டு 5 வருடங்கள் ஆகிடுச்சு, இந்த பழக்கத்த நிறுத்துரவங்க்களுக்குத்தான் தெரியும் இது எப்படிப்பட்ட சாதனையின்னு. இருக்கட்டும் என்னுடைய வாழ்துக்கள் நிறுத்தியதற்கு.
bahurudeen