என்றோ ஒரு நாள்
பயமூட்டிய அதன் பிரம்மாண்டம்
தசைகளின் ஆழத்தில்
இன்னுமிருக்கிறது
இதுவோ குழந்தையைப் போல
சதாவும்
நினைவின் இடுப்பிலிருந்து
இறங்க மறுக்கிறது
அதன் வசீகரம்
மற்றுமதன் இருட்புறங்களில்
நடமிடும் என் நிழல்
அதனை வகிர்ந்த
வேட்கையின் ராவொன்றில்
அதுவும் நானும்
தம் குழந்தமை மறந்தது
எமக்கொரு ஆறாத்துயர்
அதனில் நான்
கரைத்த குழந்தமை
தன் நிம்மதியைக் குலைத்துக்கொண்டிருப்பதாய்
இப்போது தூரத்தில் நிற்பவனிடம்
இரைந்து கதறுகிறது
நானோ
வாழ்ந்து தணிதலின் வழியில்
துரோகம் என்றொன்று இல்லை
என்ற நீதியை
இயற்றிக்கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment