Apr 13, 2015

தஸ்தாவெஸ்கியின் நண்பர்கள்

பகலின்
சிற்றிரைச்சல் மிகுந்த குடிநிலையங்களில்
தஸ்தாவெஸ்கியின் நண்பர்கள்
போதை கனிந்த கண்களோடு
வாழ்வினோடு சூதாடுகிறார்கள்
குற்றமோ
ஒரு நாய்க்குட்டியாய்
காலைச் சுற்றுகிறது
அள்ளியெடுத்து வருடி
அதற்கொரு முத்தமிடுகையில்
கண்ணோரங்களில் துளிர்ப்பது
அறத்தின் நீர்முகம்
மலரைப்போல் நோய்மை
இதயத்தில் பூத்திருக்கையில்
மரணமோ
வரிசையில் நிற்கவைத்துப் பார்த்துவிட்டு
கலைந்துபோகச் சொல்கிறது
தஸ்தாவெஸ்கியின் நண்பர்களுடைய
காதலிகளோ
ஆண்களேயற்ற
வேறொரு பிரதேசத்தில் இருக்கிறார்கள்
ஏதொன்றும் செய்யவியலாமல் வெகுண்டு
குடிநிலையத்தை விட்டு வெளியேறி
பனியாலான
பளிங்குநிற வாள் உயர்த்துகையில்
வெளியே உக்கிரமாக எரிகிறது
வெயில்.

No comments: