அபத்தத்தின்
சிறு தானிய மணியொன்றை
வழிப்போக்கிலிருந்த
பித்து மனதிடமிருந்து
யாசகமாகப் பெற்றேன்
என் இருதயத்தின் மலைச்சரிவொன்றில்
ஊன்றப்பட்ட அது
அடிவேர் பிடித்து வளர்ந்து
சிறுதளிராய்
இளங்கொம்பாய் மாறி
ஆளுயர மரமுமாகிவிட்டது
இராக்களில் அதன் பொன்னிற இலைகள்
சிறுகாற்றில் நடம்புரியும்போது
மெய்மையின் வெக்கை தாளாமல்
ஓடிவந்துவிட்ட எனக்கு அதுவளிப்பது
அபத்தத்தின் சிறுபுனைவு
அல்லதொரு மெல்லிய மயக்கம்
ஆம்!
அபத்தத்தின் இலைகள்
மலைச்சரிவின் இருளிடையே
பொன்னிறமாக ஒளிர்கின்றன
அவை தற்கொலையை மறக்கவைக்கும்
ஒருவித வாசனையை
இரவின் திசைவழிகளில் வெளியேற்றுகின்றன.
இப்படித்தான்
ஒவ்வொரு நாள் காலையிலும்
உயிரோடு கண்விழிக்கிறேன் நான்.
No comments:
Post a Comment