Apr 13, 2015

கூகிள் எர்த்

குதிரையில் பயணித்தால்
ஒரு இரவு
ஒரு பகல்
நீளும்
அங்கே
என் உயிர்க்கூடு இருக்கின்றது
பச்சையக்கடலின் அலைகள்
காற்றில் அசைந்துகொண்டிருக்கின்றன
இந்தப் பெருநகரத்தில்
என் கணிப்பொறியில்
கூகிள் எர்த்தை நான் இயக்குகிறேன்
அதில் ஒரு
சிறுநகரத்தை அடையாளங்கண்டு
சிற்றூரை அடையாளங்கண்டு
நகர்மயமாகிக்கொண்டிருக்கும் எனது கிராமத்தின்
கான்கீரிட் உச்சிக்கூரைகளை
காண்கின்றேன் -அங்கேயிருந்து
எனது கிராமத்திற்கு பிரியும்
சாலையைக் காண்கிறேன்
கிராமத்திலிருந்து
தோட்டத்திற்கு நீளும் இட்டேரியை காண்கிறேன்
நடந்த ஒற்றையடிகள்
கோடாய் நீள்கின்றன
கனவுகளின் கூட்டுப்புழுக்கள் நிறைந்த
நிலத்தைக் காண்கிறேன்
வீட்டின் உச்சிக்கூரையை காண்கிறேன்
தென்னைகளின் இலைகளைக் காண்கிறேன்
மாட்டுக்கொட்டிலின் வெண்ணிற ஆஸ்பெஸ்டசைக் காண்கிறேன்.
மலங்கழித்த வேலியோரங்கள்
தெளிவாகத் தெரிகின்றன
காமத்தின் திவலைகள்
சிதறிய மறைவிடங்களும்
ஆனால் எனக்குத் தெரியும்
அங்கே சில துயருற்ற ஆன்மாக்கள்
அலைகின்றன

அவற்றை மட்டும்
கூகிள் எர்த்தால்
மையப்படுத்தமுடியவில்லை.

No comments: