Apr 20, 2015

என் வீட்டிற்கு

என் வீட்டிற்கு நான்கு சுவர்கள்
சில ஜன்னல்கள்
ஒரு கூரை மற்றும் கதவு
அதிலென் உறக்கமோ விருந்தாளியுடையது

வீட்டிற்கு தொலைவான பிரதேசங்களில்
இருளொளியிடையில் அலைகிறேன்
அங்கே ரோகிகளும் யாசகர்களும்
வேசைகளும் அனாதைகளும் இருக்கிறார்கள்
அவர்களுக்கு அன்பின் முத்தங்களை பகிர்பவன்
வீட்டிற்கு வெகு தொலைவானவன்
திரும்புகிறவனோ வீட்டிற்கேயான தனியன்

வெவ்வேறு வாசனைகொண்ட பருவங்களில்
வெவ்வெறு நிறங்கொண்ட நிலவெளிகளில்
தடயங்களை அரவத்தின் சட்டையென்று
உரித்து நகர்ந்துகொண்டிருக்கையில்
நேற்று வீட்டிற்கு மேலிருந்த
இன்று எனக்கு மேலிருக்கும்
நிலவின் வழியே
வெளியேயிருப்பதின் பயங்களை கடத்துகிறேன்

களங்கமற்ற நீதியின் புராதன சொரசொரப்பு
முதுகெங்கும் படரும் தண்டணைச்சவுக்கின் செவ்வரி
வேறுகண்டப் பறவையொன்றின் சிறகு
புளித்துவிட்ட காமத்தின் நுரைத்திரள்
கீழிருந்து மேலாகவும்
வலமிருந்து இடமாகவும் எழுதப்பட்ட
அறியாத மொழியின் கைப்பிரதி
ஆகாயத்தில் வேரும்
தரையில் கிளைகளும் பரப்பும் விதை
முடிதிருத்துபவளின் அக்குள் மணம்
நுண்ணிய கோடுகளாலான வரைபடங்கள்
திரும்பும் வழிநடையில் என்னென்னவே சேர்ந்தாலும்
ஒற்றையடித் தடம் முடியும் இடத்திலிருக்கும்
வீட்டின் மூன்றாம் படியிலிருந்து
உள்ளே தவழப்போவதொரு குழந்தைதான்

அள்ளி அணைக்க யாரேனும்
இருக்கும் இடத்தின் பெயரெல்லாம்
வீடென்று ஆகுக.

No comments: