ஊழின் பிள்ளை
தலையைச் சொறிந்துகொண்டு
நடக்கிறது
தெருவில் கிடக்கும்
வறண்ட இலையொன்றை
எடுத்து வருடுகிறது
அது பச்சையாகி விடுவதால்
திரும்பவும் அதை மரத்தில்
ஒட்டவைத்து விட்டு
அம்மரத்தின் நிழலை
பத்திரப்படுத்திக்கொண்டு நடக்கிறது
பக்கவாட்டில்
கொம்பும் வாலும் கொண்ட
வினோத மிருகங்கள்
இருசக்கர வாகனங்களில்
போவதைப் பார்த்து
வெடித்துச் சிரிக்கிறது
ஊழின் பிள்ளைக்கு
இப்போது பசிக்கிறது
காற்சட்டைப்பையிலிருந்த
மண்ணை அள்ளி விழுங்கி
உப்பு அதிகமென்கிறது
பசியாறிய பிள்ளை
தகிக்கும் வெயிலுக்கு வாகாய்
நிழலை விரிக்க நினைத்து
சட்டைப்பைக்குள் கையை விட
சிக்கும் ரூபாய் நாணயத்தை
குழம்பிப் பார்க்கிறது ஒருகணம்
பின் தலையை ஆட்டியவாறே
நாணயத்திலிருந்த
பூவைப் பறித்துகொண்டு
மூன்று சிங்கங்களை
தெருவுக்குள் விரட்டிவிட்டு
நான்காவது சிங்கத்தின் மீதேறி
ஊழின் பிள்ளை
ஜாம் ஜாம்மென்று போகிறது.
No comments:
Post a Comment