நீண்ட நெடுங்காலமாய்
ஒரு முத்தத்தை நெய்துகொண்டிருந்த
பட்டுப்பூச்சி இதயத்தை சுமந்தலைந்தேன்
அன்று-நிலம் இடத்திலும்
காற்று வலதிலும் உடலாக இருந்தது
இடது கண்ணுக்கெதிரே பூச்சிகளென
பகலில் முத்தங்கள் பறந்துகொண்டிருந்தன
இரவிலோ தொட்டால் நழுவும்
மின்மினிகளாய் மிதந்தன
கள்ளியைப் போல் அசைவற்றிருந்த
காலத்தின் உடலில் யாசிப்பின் தவிப்பை
தேய்பிறை நாளிரவில் கீறியபோது
மண்ணுக்குள் குமுறிய
தீண்டப்படாத முத்தங்களின் கண்ணீரோடு
கள்ளியும் அழுதது-அப்போது
வளிமண்டலத்தில் தனியுதடொன்று
மேற்கிலிருந்து நிலம் பாய்ந்து
தற்கொலை பூண்டது
இன்னொரு பாதி முத்தத்தை
நெய்துகொண்டிருந்த பட்டுப்பூச்சியின் திசைமீது
வழிமறித்துக்கிடந்த இருளில்
நானொரு அந்தகப்பட்சியாய் அலைந்தேன்
நடந்து நடந்து நான் அடைந்திருந்த
பூலோகத்தின் தென்துருவ கரையொன்றில்
பின்ஜாமத்தில் இரண்டு புலிகள்
வெகு மென்மையாய் முத்தமிட்டுக்கொண்டதை
கண்டவனுக்கு தன் அத்தனை அலைகளையும்
உதடுகளாய் மாற்றி ஆசிர்வதித்தது பெருங்கடல்
பின்னரே நான் கண்டடைந்தேன்
முத்தத்தின் வலதுபக்கத்தை நெய்துகொண்டிருந்த
இன்னொரு பட்டுப்பூச்சியை-
இரண்டிற்கும் இடையில்
காலம் தொப்பூழ்கொடியை சிருஷ்டிக்கையில்
முத்தத்தின் அகலொளி ஏந்தி
இப்போது துள்ளிப் பறப்பது
அந்தகப்பட்சி அல்ல.
No comments:
Post a Comment