Apr 20, 2015

கொக்கரக்கோ

முட்டையிட்டு அடைகாத்து
கோழி குஞ்சு பொறிப்பதை
கண்டிருந்த நாட்களில்
முட்டை உண்ணும் பழக்கமில்லை
கோழிகள் முட்டையிடாத நகரங்களில்
மாறி மாறி
வசிக்கத் தொடங்குகையில்
முட்டைகள் கோழிகளிலிருந்துதான் வருகின்றன
என்பதையே மறந்துவிட்டேன்-அவை
பலசரக்கு மளிகைக்கடையில்
விற்கப்படும் கட்டப்படும்
இன்னொரு பண்டம்
உப்பைப்போல் கோழிமுட்டையும்
உணவிற்குள் மாற
கோழிமுட்டை உடைபடும் ஓசை
நன்சங்கீதமானது
கொதிக்கும் கல்லில் ஒழுகும்
கோழிமுட்டையின் வாசனை
நாசி நிறைக்கும் நன்வாசனையானது
சிறிய பசிய வாழையிலையில் வைத்து
பறிமாறப்படுகையில்
ஆஹா!
அதுவே சோமபண்டம்!!
அதுவே சோமபண்டம்!!!
அடைக்கோழிகள் பற்றிய பிரக்ஞையற்று
ஆயிரக்கணக்கான முட்டைகளை
விழுங்கிய பின்னரே உறைக்கிறது
அத்தாம் பெரிய முட்டை
வயிற்றில் துருத்துவது
முட்டைபோட வழியறியா
இந்த சேவலின் உச்சிநேர கொக்கரக்கோவில்
சூரியன் ’தொப்’பென்று
கீழேயே விழுந்துவிட்டது.

No comments: