Apr 20, 2015

எதிர் சங்கீதம்

பொழுது
வைகறையிலா விடிகிறது
விழிப்பெல்லாம்
களைப்படைதல் என்னும் அதிவினோதம்’
இருளும்
மாலைகளில்தான்...
சூடு குறைந்த ரத்தம்
காலடியை தாண்டாத பார்வைத்தூரம்
பிரவகிக்காத சொற்கள்
அப்படியே மெதுவான நடை
களைப்பிலிருந்து தளர்வாய் பார்க்கையில்
பாதி உரிக்கப்பட்ட
வாழைப்பழத் தோலைப்போல்
எல்லா உன்னதத்திலிருந்தும்
மயக்கம் தொங்குகிறது
இரைச்சல் உட்புகாத
செவிப்புலன் வட்டத்திற்குள்
ஒலிக்கும் ஓசைகளோ
எதிர் சங்கீதம்
நோய்மையால் வனையப்பட்ட
கைத்தடி
நிலத்தை மெல்லவே தட்டுவது
விழ வேண்டிய இடத்தை
கண்டறிவதற்காகவும் இருக்கலாம்
முதியவன் நடக்கும்
தெருக்காட்சியில்
அவன் நிழலின் பாதியிலிருந்து
உரிந்து
தொங்குவது

நான் என்னும் அவன்.

No comments: