Apr 14, 2015

மிருகத்தின் ஆன்மாவை மேவுதல்

குறைந்தபட்சம்
மனிதனான
என்
பழுப்புவண்ணக் கண்கள்
புராதன நீதிகளை தொழுகிறது
ஆனால்
அதன் நீரடியில்
வெளியே கேட்காமலே
அடங்குவதொரு கலகக்குரல்

தெய்வத்திற்கோ
உலகின் சமநிலையை
காக்க வேண்டியிருக்கிறது
தெய்வத்தோடான என் சமர்
இருதயத்தின் தசையளவைக்குள்
நிகழ்கிறது
அப்போதென் கண்ணீர்த்துளிகள் விலையுயர்ந்தவை….
தெய்வம் பிதற்றும் நீதியை
கண்ணீர்த் துளிகள்
முழுக்கவும் மறுக்கின்றன
நானோ முழக்குகிறேன்
தெய்வத்திற்கு எதிரான சங்கீதத்தை
அப்போது ஒரு மிருகம்
தெய்வத்தின் ஆன்மாவை மேவுகிறது
நான்
மிருகத்தின் ஆன்மாவை மேவுகிறேன்
அக்கணம் வரலாற்றில் உலகம் தட்டையாகவிருந்தது
என்னும்
எதிர் கடந்த நிகழ்
காலம்.

No comments: