Apr 14, 2015

எறும்பின் பசி

நேற்று முன்னிரவு 11.59 க்கு
நான் எறும்பாவதற்கு
முந்தைய கணம்
யானையாகத்தான் இருந்தேன்
அதுவொரு
பிரக்ஞை குழம்பிய கனவென்று
யானை சமாதானப்படுத்துகிறதென்று நினைத்துக்கொள்கையில்
கிரிகோர் சாம்சா
செவ்வியல் பிரதியாகிவிட்டான்
என்ற எறும்பின் குரல்
இது நிஜமென்று உறுதியாக்கியது
எறும்பின் கண்களுக்கு முன்னால்
ஆயுளில் ஆயிரம் முறை
தென் வட துருவங்கள் தொட்டுவிடக்கூடிய
எறும்பின் எளிய பிரபஞ்சம்
அதை இயக்கும்
மிக எளிய ஒற்றை வரி நீதி
எறும்பின்
இன்னொரு மடங்கு எடையில்
அது வணங்கும் ஒரு கடவுள்
வழிப்போக்கில் நிகழும்
காதலும் அன்பும்
அதற்கென்றே சமைந்த
ஒற்றையடித் திசை
மிக முக்கியமாக
சுகிக்க மீந்திருக்கும் பிரபஞ்சத்தின்
அது அறியாத பருண்மை
உலகம்தான்
எவ்வளவு பெரிய மகிழ்வென்று
எறும்பு அங்குமிங்கும் அலைகையில்
அதன் உடலில்
அங்குமிங்கும் அசைந்து மேலெழுகிறது
ஒரு யானை
அக்கணம் அங்கே எல்லாம்
யானையின் மடங்கில் சுருங்கத் துவங்குகின்றன.

No comments: