பூனைக்குட்டி மற்றும்
நாய்க்குட்டியோடு வாழ்கையில்
இந்த பூனைக்குட்டியைப் பராமரிப்பது
வெகு சிக்கலாக இருக்கிறது
பாலைக் குடித்துவிட்டு
நாய்க்குட்டி சுவரோரம் ஒண்டிக்கொள்கையில்
சிறிய செந்நிற நாவால்
வளிநோக்கி நீண்டு வளைந்த
ரோமம் நீவியவாறே
தாவி மடியேறிக்கொண்டு
கொட்டாவி விட்டு
நாய்க்குட்டியைச் சீண்டுகிறது பூனைக்குட்டி
நாய்க்குட்டியின் ஏக்கப்பார்வையில்
நூற்றாண்டுகளின் வரலாறு இருப்பது
குற்றவுணர்வின் தீயை மூட்டுகிறது
பூனைக்குட்டியை வருடுவதில்
காமம் சாந்தம் கொள்கையில்
வேறொரு உக்கிரத்தில்தான்
நாய்க்குட்டியால் காலடியை
நெருங்க முடிகிறது-அப்போது
நன்றியுணர்ச்சியில் அது
உடல் குழைந்தாலும்
மடிமீது அமர்ந்திருக்கும்
பூனைக்குட்டியைப் பார்த்து
உறுமுவது பெருந்துயரம்
பூனைக்குட்டி மடியிலிருந்து
இறங்க மறுக்கிறது
விரட்டினாலும் நாய்க்குட்டி
காலடிக்கே திரும்புகிறது
பூனைக்குட்டி மற்றும் நாய்க்குட்டியை
செல்லப்பிராணிகளாகக் கொண்டவனுக்கு
பூனை மீசை
நாய் வால்.
No comments:
Post a Comment