Apr 13, 2015

பாதுகாப்பு மண்டலம்

நானொரு மென்பொருள் வல்லுனன்
என் வாழ்வாதரங்களை
எவ்வித குற்றவுணர்வுகளுமின்றி
கடவுச்சொல் வைத்துப் பாதுகாக்கிறேன்

சர்வதேச தொழில்நுட்ப பூங்காவின்
கண்ணாடிக் கட்டிடங்கள்
அழகும் கம்பீரமும் உயரமும் கொண்டவை
அருகிலமர்ந்திருக்கும் வெள்ளைக்கார மாது
வெகு நளினமாய் புகைக்கிறாள்
துப்பாக்கி ஏந்திய காவலர்கள்
தூரத்தில் விறைப்பாய் நடக்கிறார்கள்

என் பாதுகாப்பு மண்டலத்திற்கு வெளியே
நிகழ்ந்துகொண்டிருக்கிறது யுத்தம்
மனிதர்கள் மரிக்கிறார்கள்
மறந்தும் நானென் பார்வையை
சடலங்களின் மீது விடுவதில்லை

ஆயுதங்களுடன் திரிகிறார்கள் அவர்கள்
அதுவென் பயத்தை பெருக்குகிறது
வரும் வரை காத்திருந்து
இரவுகளுக்குள் பாய்ந்தோடி
கன்னிகளின் நிர்வாணத்தை உதறி
கனவில் போர்த்திக்கொள்கிறேன்-அங்கே
இனிய நிமித்திகங்களை
மரப்பல்லியொன்று இசைக்கிறது

வெகு அமைதியில் திளைக்கும்
என் கனவு
ஒரு காற்றுக்குமிழியாய்
இவ்வெளியில் அலைகிறது
இன்னும்.

No comments: