என்
மாம்சம்
ஊன்கவிச்சி
வீசும்
வன்விலங்கின்
குகையாகும் போது
வண்ணப்புள்ளிகளை
உதிர்த்தவாறே
பொன்வண்டொன்று
கனவிலிருந்து
நனவுக்குள்
பறக்கிறது
என்
மாம்சம்
ஒருபோதும்
கட்டளைகள் பிறப்பிப்பதில்லை
அதன்
அழைப்பின் குரல்
கிசுகிசுப்பானது
மற்றும் (அ)தட்ட
முடியாத
நாய்க்குட்டியின்
சிறு பிறாண்டல்
சிசுவென
என்னைக் கையிலேந்தி
குற்றவுணர்வின்
கிளுகிளுப்பான போதையை
சங்கில்
புகட்டுகிறது
அறங்களை
மீறும்
நூதன
உத்திகளை
மனனிக்க
வைக்கிறது
ஆனாலும்
அடிமை நான்
விசுவாசியல்லவென்றும்
மினுக்கி
மினுக்கி
மறையும்
பரிசுத்த
ஒளியின் மேல்
ரகசியத்தில்
பெருங்காதல் கொண்டிருப்பதையும்
அதுவறியும்
அதனாலேயே
தான் விரும்பும்போதெல்லாம்
வாதைகளை
பெருகப்பண்ணி
தளைகளை
இறுக்குகிறது
தேங்கும்
அழிவின் நிழல்
கலையாத
ஸ்தலத்தில்
சிறு
கருணைக்காய்
மண்டியிட்டு
யாசிப்பவனிடம்
ஒளியை
போலச்
செய்து
பகடி
செய்கிறது மாம்சம்
நான்
இருள்கிறேன்.
No comments:
Post a Comment