Apr 13, 2015

மகா காதலன்

ஹெல்மெட் அணிந்த
ஸ்கூட்டிப்பெண்ணின்
சிறுஸ்தனப் பூக்கள்
கண் நிறைக்கையில்
செங்கொன்றை சூடிய கோடையின்
நிழற்சாலையில்
மகாகாதலன் இசைக்கும்
நிதம்பங்கள் மீதான பரணியின்
முடிவுறாத சொற்களிலிருந்து
சடசடத்துப் பறக்கும்
புறாக்களின் கால்களில் பொதித்திருக்கிறான்
இருதயத்தின் நறுக்கப்பட்ட துண்டுகளை
புறாக்கள் போகட்டும்...
இவ்வெயிலை தணிக்கும் கண்களிடம்
தம் பாலாடை வாசனையில்
திசைகளை நிறைக்கும்
மிருதுவான தோலணிந்த யுவதிகளால்
கண்ணெதிரே காலம்
வேறு நிறம் பூணுவதை
கண்டவனின்
தாபத்தில் பெருகும்
அன்பின் பெருநதியில்
கால் நனைக்கிறார்கள்
நூறாயிரம் காதலிகள்
கவிழும் கோடை மாலையில்
தாய்மையின் ஈரம்பூசிய கண்களோடு
நிச்சயிக்கப்பட்ட ஸ்வர்க்கத்தை
அவனுக்குக் கையளிக்கையில்
விளக்கணைக்கப்பட்ட படுக்கையறையில்
நூறாயிரம் மின்மினிகள்
நிர்வாணத்தை உண்டொளிர
கோர்வையற்ற கனவுகளில்
காதலிகள்
முகங்களை மாற்றிக்கொண்டேயிருக்கிறார்கள்
மகாகாதலன்
மட்டும் யாவரின் இடுப்பிலும்
குழந்தையாகவே இருக்கிறான்.

No comments: