Apr 13, 2015

நாஸ்டாலஜியா தீவு

உறக்கமற்ற பின்னிரவெனும்
பெரும்பறவை
கடல்கள் மலைகள் தாண்டி
தூக்கிப்போகும் நாஸ்டாலஜியா தீவுக்கு

குற்றத்தின் கசப்பு வாசனை
படிந்த சுயரகசியங்கள்
தமது உப்பை வடித்துவிட
துறவமைதி எய்திவிட்ட
நினைவின் ஐம்பூதங்களில்
உயிர்துடிப்பன்றி வேறு சலனங்களில்லை
ஓவியத்தில் நிலைபெற்றுவிட்ட
வசந்தபருவத்தில்
மலர்கள் உதிரப்போவதில்லை
மூப்படையா வண்ணத்துப்பூச்சிகள் சிறகசைக்கும்
குழந்தைகளின் உறக்கப்புன்னகையாக
பேரமைதி கொள்ளும்
காலப்பரப்பில்
திரும்பவும் கருவறையை நோக்கித்
தவழும் என் வேட்கையை
கேட்டலறும்
பறவை
தீவை மறையவைத்து
பகலை
விரித்துவிட்டு
பறந்தோடிவிடுகிறது என்றும்.

No comments: