முழுக்கக் கவிந்த
முன்னிரவில்
இந்த மாநகரத்திலிருந்து
340 வது கிலோமீட்டரில்
வனத்திற்குள் ஊறும் பாம்பொன்றை
என் ஆறாம் அறிவு
கற்பனை செய்கிறது
அது இல்லாத பாம்புக்கு
என்னைப் பற்றி’
எதுவும் தெரியாது
ஆனாலும் நான்
பாம்பை நினைக்கிறேன்
இரை எடுத்துவிட்ட நான்
பழக்கமற்ற தெருவொன்றின்
நியான் மஞ்சள் பனியில்
நனைந்து கொண்டிருக்க
இரை தேடி உப்பசத்தில்
அலையும் அந்தப் பாம்பு
உறக்கம் வராத எனக்கோ
பாம்பின் உறக்கம் பற்றிய
எந்த அறிவுமில்லை
மேலும்
இந்த நகரத்தில் எரியும்
நியான் விளக்குகளின் எண்ணிக்கையோ
இராக்களில் பிழைப்பவர்கள் பற்றியோ
இருளின் நடுவே உளையும்
உயிர்கள் குறித்தோ
நள்ளிரவில்
வெடிக்க வாய்ப்புள்ள வெடிகுண்டைப் பற்றியோ
அதற்கு தெரிய வேண்டியில்லை
நீதியின் சுமை குறித்த
அவஸ்தைகளும் அதற்கில்லை
இருப்பினும் கூட
பாம்புக்கும் எனக்கும் இடையிருக்கும்
ஒத்த தற்கணத் துயரம்
அதன் நெளிபாதையில்
எதிர்போகாத தவளையொன்று
இந்த விளக்கடியில்
காலுரசி நகர்வதாக இருக்கிறது.
No comments:
Post a Comment